இரண்டு நாட்களுக்கு முன்பு கவிஞர் மகுடேசுவரன் கீழ்க்காணும் படத்தை முகநூலில் பதிவிட்டு, ஒவ்வொரு பழக்கத்தைப் பற்றியும் தலா ஒரு பத்தி எழுதியிருந்தார்.
அவர் எழுத்துக்களால் தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சில வார்த்தைகளை ஆழ ரசித்திருக்கிறேன். சில பத்திகளை திரும்பத் திரும்பப் படித்து லயித்திருக்கிறேன்.
ஆனால் இந்தப் பதிவில் Branded உடைகளுக்கு அவர் பயன்படுத்திய வார்த்தை, தூக்கி வாரிப்போட்டது. ‘விற்பேர் ஆடைகள்’ என்று வறட்டு மொழியில் பெயர்த்து எழுதியிருந்தார்.
விற்பேர் என்றால் விற்பனையில் முன்னிறுத்தும் பெயர் என்று அவர் அர்த்தப்படுத்துகிறாரா என்பது என் முதல் குழப்பம். அவ்வாறு இருப்பின் எல்லாப் பண்டங்களும் நிறுவனப் பெயர் தாங்கித்தானே வருகின்றன? Branded என்றால் நிறுவனப் பெயர் என்பதைத் தாண்டி, பண்டத்தின் புகழ் மற்றும் தரத்திற்கான அங்கீகாரச் சொல் இல்லையா? அவ்வகையில் விற்பேர் என்பது சிந்தை குலுங்க வைக்கிறதே!
இரண்டாவது குழப்பம். விற்பேர் என்று சொல்வதன் மூலம் விற்பனை அல்லாத வேறொரு பெயர் மர்மமாக மறைந்திருப்பது போலொரு கருத்து தொக்கி நிற்கிறதே? விற்பனையின் போது விற்பேர் தாங்கிக் கொண்டு, கிடங்கு போய் சேர்ந்ததும் வேறொரு பெயர் ஏற்றுக் கொள்ளுமா? பிராண்டட் என்பதற்கு வேறு என்ன வார்த்தை சரியாக இருக்கும். இல்லை, விற்பேர் என்பதே ஏற்புடையதா?