விக்ரம், துருவ், பாபி சிம்ஹா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம், மஹான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பக்கா கமர்ஷியல் எலிமென்டோடு களமிறங்கியிருந்தாலும் குறியீட்டியல் உத்தியில் காந்தி மஹானாக வரும் விக்ரமை தேசப் பிதாவின் நிழலில் பொருத்தி, கதைச் சொல்லியலில் வேறுதளத்திற்கு முன்னேறியிருக்கிறார் இயக்குநர்.
தன் வாழ்நாளின் 40 ஆண்டுகளை, உத்தமனாகவும் – அஹிம்சைவாதியாகவும் வாழ எத்தனிக்கப்படும் ஒருவனின் அடக்கி வைக்கப்படும் பெருங் கோபம் என்னவெல்லாம் செய்யும் என்ற ஒன்லைனர்தான், மஹான். ஆனால் “தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல” என்ற காந்தியின் பொன்மொழி பதாகையோடு பல கொள்கைகளைக் கேள்விக் கேட்கத் துணிந்திருக்கிறார், இயக்குநர்.
காந்தியின் அஹிம்சை கொள்கைக் குறித்து பல மானுடவியல் திறனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்வந்தவர்களும் அதன் சாதக – பாதகங்களை அவரவருக்கு ஏற்றபடி அணிந்து கொண்டார்கள். அவ்வகையில் கார்த்திக் சுப்பராஜ் விரும்பி அணிந்த சட்டை, காந்தியைக் கொன்ற கும்பல் கொடுத்தது. அதே டைலர், அதே வாடகை. ஆனால் உடுத்திய காரணம் மட்டும் வேறு.
காந்தியை தான் ஏன் கொன்றேன் என்ற வாக்குமூலத்தில் கோட்சே சொல்கிறான்,
“ஆங்கிலேயரின் அநீதிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவது என்பது முறையானது அல்ல என்று அவர் கூறுவதை என்னால் ஒருபோதும் ஏற்கமுடியாது. ஆங்கிலேயரை எதிர்ப்பதே இந்து மதத் தர்மம். அதுவே நம் தார்மீகக் கடமை. தேவைப்படும் இடத்து நம் பலத்தைப் பிரயோகிக்க தயங்கி நின்றால், வெற்றிக்கு நாம் செல்லும் வழி வெகுதூரத்திற்கு போய்விடும்.
குரூரமான ஒரு சண்டையின் மூலம் இரவாணனை தோற்கடித்தப் பின்தான் இராமதேவன் சீதாதேவியை மீட்டார். மகாபாரதத்திலும் கூட தன் கேடுகாலத்தை முடிவுக்குக் கொண்டுவர கிருஷ்ணப் பெருமான், கம்சாவை கொலைசெய்யவே துணிந்திருக்கிறார். தன் நிலங்களை ஆக்கிரமித்த பீஷ்மரை போர்களத்தில் கொல்லுதற்கு அர்ஜூனன் சற்றும் தயங்கவில்லை. அதைத் தடுக்க முற்பட்டது தன் உறவினர்களே ஆயினும் நண்பர்களே ஆயினும் அர்ஜூனன் கொன்று புதைத்தான்.
“ராமர், கிருஷ்ணர், அர்ஜூனர் இவரெல்லோரும் வன்முறையின் வடிவொழுகாக நம் மனதில் பதிந்திருக்கும் போது, அஹிம்சை வழியில் செல்லலாம் என நம்மை அழைத்துச் சென்ற மகாத்மா – பெரும் துரோகப் படுக்கையில் கிடத்திவிட்டார்” என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை.
மிக சமீபத்திய வரலாற்றில் கூட சத்ரபதி சிவாஜியின் வீரம் நிறைந்த சண்டைதான் இஸ்லாமிய கொடுங்கோன்மையை தடுத்தது, பின்னர் அதை முற்றிலுமாக ஒழித்தது. அப்சல் கானின் முரட்டுத்தனங்களை மூட்டைக்கட்ட, சிவாஜியின் போர்த் தந்திரங்கள் இன்றியமையாததாய் இருந்தன. தன் உயிரையே துச்சமாக எண்ணி அப்போரில் அவர் வெற்றிப்பெற்றார். அப்பேர்பட்ட சிவாஜி, ராணா பிரதாப், குரு கோவிந்த் சிங் போன்றோரை வழிதவறிய தேசபக்தர் என்று பிரகடனம் செய்வதன் மூலம் தன் சுய ஆணவத்தை காந்தி வெளிப்படுத்தினார்.
ஒருவேளை முரணாகத் தோன்றினாலும் இதுதான் உண்மை, தன்னையொரு வன்முறை விருப்பற்றவராய் காட்சிப்படுத்திக் கொண்டு உண்மையின் பெயரிலும், அஹிம்சையின் பெயரிலும் எண்ணிலடங்காத பேரிடர்களை இந்நாட்டில் அவர் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தி வந்தார்.”
இதை நாம் காலனித்துவ பார்வையில் இருந்து பார்க்கலாம். இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் அந்நியமான அகிம்சையை ‘சட்டெனப் பழகு’ என்று கையில் இருந்த ஆயுதங்களைப் பிடுங்கிவைத்தவர் காந்தி. சொன்னவர் காந்தி என்பதாலேயே, எல்லோரும் ஏற்றுநடக்க வேண்டியதாயிற்று. இருந்தபோதும் இத்திட்டம் முழுமையாக வெற்றி அடையவில்லை. அஹிம்சை வெற்றியடைந்த வழி என்று சொன்னபோதும், மறுபக்கம் சௌரி-சௌரா போன்ற கலவரங்கள் அஹிம்சையின் வெற்றிடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. குறிப்பாக பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள், அதில் உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களின் கதறல்கள். அங்கு காந்தியின் அஹிம்சை காற்றில் விடப்பட்டது. அவரின் அஹிம்சை இந்தியர்களைவிட பிரித்தானியர்களையே அதிகம் காப்பாற்றியது என்றால் அது பொய்யல்ல!
ஆனால் இதை முன்னிறுத்தி காந்தியையோ காந்தியவாதத்தையோ யாராலும் தவறு சொல்ல முடியாது. காந்தியை எதிர்ப்பது வேறு – விரும்பாதது வேறு. எதிர்த்தவர்கள் கொலை செய்தார்கள் – விரும்பாதவர்கள் தட்டிக் கேட்டார்கள். காந்தியவாதமோ – கம்யூனிசமோ எதிர்ப்பது தவறல்ல, எந்தக் காரணத்திற்காக எதிர்க்கிறோம் என்பதில்தான் விசயம் இருக்கிறது.
கள்ளுக்கடை மறியலில் தீவிரமாய் ஈடுபட்டு, காந்தியின் அறப்போர் இயக்கத்தில் இணைந்துகொண்டவர் விக்ரமின் தந்தையாக வரும் ஆடுகளம் நரேன். காந்திபோல் தன் மகனையும் சத்தியவானாக வளர்க்க சத்தியம் செய்கிறார். காந்தி மஹான் என்று பெயர்சூட்டி, அவன் விரும்பாமலே அவனுக்கு அஹிம்சைவழி போதிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட இந்திய மக்களுக்கு பிதா என்ற ஸ்தானத்தில் இருந்து, அவர்கள் விரும்பியோ – விரும்பாமலோ அஹிம்சைவழியை காந்தி கற்பித்தது மாதிரி. விருப்பமில்லாத கொள்கை, சில பத்தாண்டுகள் கழித்து இந்திய வரலாற்றின் சில தினங்களை இருட்டடித்தது மாதிரி, காந்தி மகானாக வரும் விக்ரமின் வாழ்க்கையையும் கலங்கப்படுத்துகிறது.
ஒரே ஒரு நாள் தான் விரும்பியபடி, ஆட்டம் – பாட்டம் – குடி – கும்மாளம் என்றிருந்துவிட்டு இயல்புக்கு வரும் நொடியில் சூன்யம் பிடித்துக்கொள்கிறது. மனித இயல்பையும் – கொள்கை பீடிப்பையும் காந்தி மகான் ஆழ சிந்திருக்கிறான். ‘தன் இத்தனை ஆண்டுகால தவம், ஒருநாள் சாராயப் போதையில் செல்லரித்துவிடுமா என்ன?’ தேசப்பிதா காந்தி விரும்பிய சிரவண பிதுர்பத்தி நாடகத்தில், தன் மனைவி மக்களை இழந்த பிறகும், அரிச்சந்திரன் சத்தியத்தை கைவிடவில்லை. ஆனால் காந்தி மஹான் கைமீற விரும்புகிறான்.
சரக்கு சாம்ராஜ்யத்தின் மோனோபாலியாக உருவெடுக்கிறான். அங்குதான் திரைக்கதையும் சூடுபிடிக்கிறது. காந்தியைப் பிரிந்த அவன் மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ்), படு க்ளாஸாக வந்து இறங்குகிறான். தாதாபாய் நௌரோஜி என்ற பெயர் ஏன்? விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பம்தான். குறிப்பாக ஏன் தாதாபாய்? இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கியத்தில் இந்த ‘க்ரேட் ஓல்டு மேன்’ன் பங்கு பெரியது. இவர் ஒரு ‘பார்ஸி’. காந்திக்கு பார்ஸி என்றால் பிரியம். வெளிநாடுகளில் இருந்தபோது தன்னையொரு பார்ஸியாக காட்டிக்கொள்ள பெரிதும் முயன்றதாய் ‘சத்திய சோதனையில்’ சொல்லியிருக்கிறார். மேலும் காந்தியின் சுயராஜ்ய, சுதேசிய எண்ணங்களின் ஊற்று இந்தத் தாதாபாய் தான்.
ஒருவேளை அதற்காகவும் இருக்கலாம், இல்லை இந்த ஒப்பீடு படுமட்டமாகவும் இருக்கலாம். நேயர் விருப்பம்! ஆனால் தாதாபாய் இங்கு வழி காட்ட வரவில்லை, கோட்சே வடிவில் பழி தீர்க்க வந்திருக்கிறார்.
காந்தியின் மகோன்னதத்தை காந்தி மஹானாக வரும் விக்ரம் வாழ்ந்து காட்டியிருப்பது அவரின் நடிப்பின் உச்சம். தேசம் தூண்டாடப்பட்டு, அஹிம்சைத் தத்துவமே தன் தலையில் துண்டுப்போட்டுக் கொண்டு அல்லோலப்படும் போது, பாக்கிஸ்தான்மேல் பரிவு காட்டினால் இந்து விரோதி என்றும்; இந்தியா மேல் பரிவு காட்டினால் இஸ்லாமிய விரோதி என்றும் பலவாறாய் தூற்றப்பட்டு, முடிவெடுக்க முடியாத விரக்தியின் விழும்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டு துயரப்படும் காந்தியை, ஒரே காட்சியில் படம்பிடிக்கிறார் இயக்குநர்.
அதற்குமுன் ஃப்ளாஷ்பேக் அறிவது உத்தமம். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ புத்தகத்தில் ‘காந்தியின் கடிகாரம்’ கட்டுரைப் படித்தவர்களுக்கு மட்டுமே இது மிகநன்றாய் புரியுமென நினைக்கிறேன். காந்தியைக் கொல்வதற்கென்றே கோட்சே பல நாட்களாய் திட்டமிடுகிறான். தன்னை ஆயுத்தப்படுத்துகிறான். அதற்கான உடல்பலமும் மனபலமும் ஆர்.எஸ்.எஸ் ஊட்டிவிடுகிறது. அதேபோல சிம்ரனும் (மஹானின் மனைவி) அவர் தகப்பனாரும் ‘தாதா’வின் பால்யத்திலிருந்தே மஹான் மீதான குற்றச்சாட்டுக்களை வீசி வீசி – அவன் மனதைத் திடப்படுத்தி இருக்கிறார்கள்.
தந்தைதான், அவர்செய்தது சிறு தவறுதான். அதற்கு கொலை செய்தலும் தகும். அவரையா? காந்தி மஹானையா? விக்ரமையா? இல்லை. அவர் பிடித்துத் தொங்கும் தத்துவத்தை. காந்தி மகானுக்கு சாராயத் தத்துவம் என்றால்; மோகன்தாஸ் காந்திக்கு அஹிம்சை தத்துவம். துருவ் செய்ததும் தத்ததுவ அழிப்பு. கோட்சே செய்ததும் தத்துவ அழிப்பு.
இத்தனை அரிதாரமும் பூசிக் கொண்ட திரைக்கதை, சோடிக்காமல் மேலும் நகர்கிறது.
மஹானின் வளர்ப்பு மகனை கொல்ல வருகிறான் பெற்ற மகன். (இசுலாமியர்கள் வளர்ப்பு மகன் என்றும், பெற்ற மகன் இந்துக்கள் என்றும் கொள்க.) தன் வளர்ப்பு மகனைக் காப்பாற்ற பெற்ற மகனிடம் சரணாகதியடைந்து அழுது தீர்க்கிறார் மஹான். இரக்கம் காட்டவே இல்லை அவன். தன் நாட்டிற்குள் (படத்தில் ஒரு பில்டிங்) வந்த வளர்ப்பு மகனை, மஹான் பெற்ற மகன் சுட்டுக் கொல்கிறான். மஹானால் வெறுமனே வேடிக்கைதான் பார்க்க முடிகிறது.
இதன் இறுதி அத்தியாயம் என்ன? நமக்கும் மூளைச் சுத்துகிறது. பெற்ற மகனைக் காப்பாற்றுவதாய் சில காட்சிகள் நகர்கின்றன. அதுவும் பொய்யென்று துருத்திக் கொண்டிருக்கும் சில வசனங்களில் வெளிப்படுகிறது. “பையன்’னு பாசம்-லாம் இல்ல. போட்டுத்தள்ளிருவேன். ஏதோ ஒண்ணு தடுக்குது.” மஹான் அழிக்க நினைத்தது ஆர்.எஸ்.எஸ். போன்றதொரு தத்துவத் தொட்டியைதான், அதன் கணைகளை அல்ல. ஏற்கும்படியான நியாயங்களோடு ஞானத்தை கொல்ல மஹான் விக்ரம் கிளம்புகிறார்.
திரைக்கதையாடலில் சுவாரஸ்யங்கள் ஏற்ற சிற்சில காட்சிகள் நகர்கின்றன. மீண்டும் கதை தொடங்கிய அதே இடத்தில் விக்ரம் அமர்ந்திருக்க துருவ் வருகிறான். அங்குதான் ‘மஹான்’ வெளிப்படுகிறார். சத்தியவானை கொல்லவைத்தது தன் திட்டமென்று வெளிப்படுத்திய துருவ்’ன் கண்ணில் தத்தவ அழிப்பு வெறியை மஹான் காண்கிறான். ஆம் காந்திக்கு அஹிம்சை மாதிரி; மஹானுக்கு சாராய மாதிரி, முன்சொன்ன அதே தத்துவ அழிப்பு!
இந்தமுறை கோட்சேவின் துப்பாக்கி காந்தியைச் சுடவில்லை, மதப் பயங்கவரவாதிகளின் கூடாரத்தை சுட்டிருக்கிறது. துருவ்’ன் துப்பாக்கி ஞானத்தைக் கொன்று; கோட்சேவின் துப்பாக்கி ஆர்.எஸ்.எஸை கொல்வதாய் படம் நிறைவடைகிறது. உண்மையில் இரண்டையும் சுட்டவர் காந்தி. இறுதியில் ஆச்சாரமான துருவ் சாராயத்தை அருந்துகிறான். சாராயம் என்றால் சாராயம் அல்ல, மஹான் விதைத்த தத்துவத்தை. அதனால்தான் அவர் மஹான்!
சுப்பராஜ் மீண்டும் நினைவு படுத்தலாம், “தவறுகள் செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல.” தனக்கென்று ஒரு தத்துவம் வரையறுத்துக் கொண்டு, அதன்வழிபடி யாரையும் துன்புறுத்தாமல் வாழ எல்லோருக்கும் சம உரிமையைக் கொடுப்பதுதான் சுதந்திரமே அன்றி, ஏதோ ஒரு தத்துவத்தின் வழி சுதந்திரம் பெற்றதால், அத்தத்துவமே சுதந்திரம் என்றழைவது அல்ல. மஹான் படமல்ல. பாடம். காந்தியவாதப் பாடம். தத்துவவியல் பாடம்.