உலகாயதருக்கு எள்ளி நகையாடும் ஒரு புரட்டுப் புத்தகம். நட்ட நடுநிலையான வரலாற்று ஆசிரியருக்கு – இது ஒரு பவுடர் பூசிய பண்பாட்டுப் பெட்டகம். சைவ சமயப் பிரியருக்கும் – சாதித்துவ அடையாளத்தில் மூழ்கி முத்தெடுப்போருக்கும் – இது ஒரு அசாத்திய ஆன்மீகப் படைப்பு.
பெரியபுராணம் என்ற இவ்வொற்றை நூலின் பரிமாணம் ஏன் இத்தனை வேறுபாட்டுக்கும் – குளறுபடிக்கும் உள்ளாகியிருக்கிறது? ஆண்டுகள் பலகடந்தும் ஏன் ஆராய்ச்சிகள் நின்றபாடில்லை? இதுவரை எழுந்த பெரியபுராண ஆராய்ச்சிகள் எதுவும் ஏன் மத்தியஸ்த பார்வையில் அரங்கேற்றப் படவில்லை? பெரியபுராணக் காலச் சூழலையும் – சேக்கிழார்களின் அடையாளம் வேண்டும் சமயங்களின் எழுச்சி வீழ்ச்சிகளையும் கருத்திற் கொள்ளாமல் இவ்வாய்வு எப்படி முழுமைபெறும்? சமூகவியல் பார்வை கலக்காமல் – யுடோப்பியன் மனப்பான்மையால் என்ன புரிந்து கொண்டோம்? பெரியபுராணம் உண்மையிலேயே சமயநூலா? அல்ல சுயசாதி அடையாளத்தின் அரிதாரம் பூசிய அவதாரமா? விவரமாக அலசுகிறது இக்கட்டுரை.
பெரியபுராணம் நூல் எழுந்த காரண காரியம் அறிய அக்காலம் தொடர்பான சமூக – சமய – அரசியல் நிலைப்பாடு குறித்தான அறிவு அவசியமாகிறது. மிகத் தொடக்கந்தொட்டு இன்றியமையாத கருத்துக்களால் இங்கு ஆய்வுரை மேற்கொள்வோம்.
சேக்கிழான் குடிமரபு
தமிழகத்தின் நிலப்பரப்பை பஞ்சதேசமாகக் கொண்டோம். அவை
-
சேரநாடு
-
சோழநாடு
-
பாண்டிய நாடு
-
நடு நாடு
-
தொண்டை நாடு
ஆகும்.
இவற்றுள் தொண்டை நாட்டுப் புராணத்தை சற்றுப் பார்ப்போம். அழகு கொஞ்சும் மலைகளும் சிறப்புப் பொருந்திய பாலாறும் இத்தேசத்தின் இயற்கை வளத்தை காதுகுளிர மெச்சும். பல பகுதிகளில் பெரிய காடுகளும் சிறிய குன்றுகளுமாக எழில் பொருந்தி அமைந்திருந்தன. தொடக்கக் காலத்தில் ஆடு – மாடு மேய்க்கும் குறும்பர் இன மக்கள் இப்பகுதியில் மிகுதியாக வசித்து வந்தனர். இப்பிரதேசம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தமையால் வாணிபத்திற்கும் இன்னபிற கொள்முதலுக்கும் கீழைத்தேசமான சோழநாட்டையே நாடவேண்டியிருந்தது. இதன் ஊடாக காவிரிப்பூம்பட்டினத்து வணிகரிடம் பெரும் வியாபார உறவு பூண்டது.
பிற்காலத்தில் குறும்பர்களை வென்று ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இந்நாட்டை கவர்ந்தான் என்றும் – அதனால் இத்தேசம் தொண்ட நாடு என வழங்கப்பட்டதென்றும் R.Gopalan என்பார் Pallavas of Kanchi என்ற தந்நூலில் குறிப்பிடுகிறார். இது ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியது. காரணம், வளப்பம் பொருந்திய பிரதேசம் – வலிமை குன்றியவர் இடத்து இருக்குமேயானால் – வலிமை பொருந்திய சக்கரவர்த்தி ஆசைப்படுவதில் ஐயமில்லை.
மற்றொரு சங்கதி கரிகாற் சோழனே தொண்டை நாட்டைக் கைப்பற்றி ‘காடு கெடுத்து நாடாக்கினான்’ என்றும் பின்னர் தொண்டைக் கொடியால் சுற்றி கடல்வழி வந்த நாக கன்னிகையான பீலிவளயின் மகனான இளந்திரையன் இக்குறும்ப நாட்டை ஆண்டதால் – தொண்டை மண்டலம் என பெயர்பெற்றதென கூறுகின்றனர். இதுவும் நம்பித்தகுந்ததாகவே இருக்கிறது.
எது எப்படியோ.. காடுகளை அழித்தாற் பின் வயல்வேலை செய்து வளப்பம் பெருக்க வேண்டுமே! பெரும் அளவில் வேளாண் குடிமக்கள் தொண்டை தேசத்திற்கு குடிபெயர்ந்தனர். அக்குடிகளுள் கூடல்கிழான், புரசைகிழான், வெண்குளப்பாக்க கிழான், சேக்கிழான் போன்றோர் முக்கியஸ்தர்.
சே – காளை ; சேக்கிழான் – காளைக்கு உரியவன். எருதுகளைக் கொண்டு வயல் வேலை செய்கின்ற வேளாளனைக் குறிக்கும் சொல்லாகவே இது வழக்கில் இருந்தது.
அப்போ சேக்கிழார் என்பது தனிப்பெயர் இல்லையா? ஆம். அது தனிப்பெயர் அல்ல, குலப்பெயர் என்பதே திட்டவட்டமான முடிபாகிறது. இக்குடிமரபைச் சேர்ந்தவர்கள் சேக்கிழான் பாலறாவாயன் ; சேக்கிழான் இராமதேவன் என்று குடிப்பெயரோடு அழைக்கப்பட்டனர்.
நாம் அறிந்த பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் என்பது அவரின் இயற்பெயரல்ல. அவரின் இயற்பெயர் அருள்மொழித் தேவரென (சேக்கிழார் அருள்மொழித்தேவர்) சேக்கிழார் புராண ஆசிரியர் உமாபதி சிவம் குறிப்பிடுகிறார். டாக்டர் இராசமாணிக்கனாரோ இராமதேவன் (சேக்கிழார் இராமதேவன்) என்பதே இயற்பெயரென வாதிடுகிறார். சாதித்துவிட்டப் பின்னர் சாதி அடையாளம் கொண்டு உடன்கூட்டம் அமைக்கும் வழக்கம் அப்போதே இருந்திருந்தமை இங்கு புலனாகிறது. பெரியபுராணம் எழுதி – பெரும்பேறு பெற்றவிட்ட பின்னர் – இராமதேவன் என்ற தனிப்பெயர் (அ) அருள்மொழித்தேவர் என்ற தனிப்பெயர் – சேக்கிழான் என்ற குடிப்பெயரின் பின்னால் ஆகுபெயர் என்ற இலக்கணம் பூசிக்கொள்கிறது.
இதுவே சேக்கிழான் குடிமரபினரின் குறுகியகால வரலாறு.
சேக்கிழார் / இராமதேவன் / அருள்மொழித்தேவன் – காலம்
பல்வேறு வரலாற்று முரண்களுக்கு பின்னர் இரண்டாம் குலோத்துங்கனே அநபாயச் சோழன் (கி.பி.1133-1150) என்ற முத்தாய்ப்பான முடிபு அறிஞர் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அம்மன்னன் அரண்மனையில்தான் பிரதம மந்திரியாக பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் பணி செய்து வந்தார்.
ஆனால் இதுதொடர்பான கல்வெட்டுச் சான்றுகள் அநபாயனின் மகனான இரண்டாம் இராசராசனின் (கி.பி. 1146-1173) காலத்தில்தான் நமக்கு கிடைக்கப்பெறுகிறது. முன்சொன்ன செய்தி இலக்கியச் சான்றாகவே ஒளிர்கிறது. இருந்தும் பத்துமுறை அநபாயன் என்ற பெயரைக் குறிப்பிட்டதால் – காலவெளியில் குழப்பம் இல்லை. மேலும் இரண்டாம் குலோத்துங்க மன்னன் ‘உத்தம சோழ பல்லவராயர்’ என்ற அடைமொழியை சேக்கிழாருக்கு சூட்டியிருப்பதாக ஒரு யூகம் உண்டு. அதனால் சேக்கிழார் பெருமான் இரண்டாம் குலோத்துங்கனான அநபாயச் சோழன் காலத்தவனே என்பதில் ஐயமில்லை.
நூலெழுந்த வரலாறு
சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனிடம் பிரதம மந்திரியாக பணி செய்த போது, அரசன் சீவக சிந்தாமணி என்ற சமண காவியம் படிக்கக் கேட்டு மகிழ்ந்து வந்தான். அரசன் இவ்வாறு சமண காவியத்தில் மூழ்கி திளைப்பதைக் கண்டு சேக்கிழார் மனம் வருந்தினார்.
உடனே இளவரசர் இரண்டாம் இராசராசனை தனியே அழைத்துச் சென்று, “ஒழுக்க மற்ற சமணரது காவியம், நம் அரசரை ஒத்த சீவகன் என்பவனது வரலாறு கூறுவதாகும். அதனைப் படிப்பதனாலோ கேட்பதனாலோ அரசர் பெறத்தக்க நன்மை ஒன்றும் இல்லை. அதனை விடுத்து இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாகும் நாயன்மார் வரலாறுகள் கொண்ட சிவகதை படிக்கக் கேட்பது மிகவும் நல்லது” என்று முணுமுணுத்தார் சேக்கிழார் பெருமான்.
இதனை அறிந்த மன்னர் சேக்கிழாரை வரவழைத்து, “ நீர் மொழிந்த சிவகதை நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? சிவனடியாருள் இன்றும் உயிருடர் இருப்பவர் உளரோ?” என்று பலவாறு கேட்க – பெரியபுராணம் எழுதும் பெரும்பேறு பெற்றுவர் ஆகிறார் சேக்கிழார்.
இச்செய்தி சேக்கிழார் புராண நூலில் இடம்பெறுகிறது.
“வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச்சிந்தாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூரஉளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்கஉபயகுல மணிவிளக்காஞ்சேக் கிழான்கண்(டு)இளஅரசன் தனைநோக்கிச் சமணர்பொய்ந்நூல்இதுமறுக்காகா(து) இம்மைக்கு மற்றேவளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும்மறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு”
சேக்கிழார் புராணம்
என்ற பாடலிலும்
“அவகதையாய்ப் பயனற்ற கதையீதாகில்அம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்கசிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார்சிவகசிந்தா மணிபோல் இடையில்வந்தநவகதையோ? புராதனமோ? முன்னிலுண்டோ?நானிலத்து சொன்னவரார்? கேட்பாரார்?தவகதையொ? தவம்பண்ணிப் பேறுபெற்றதனிக்கதையோ? அடைவுபடச் சாற்று” சேக்கிழார் புராணம்
என்ற பாடலும் இதைக் காணலாம்.
ஆனால் முட்டுக்கொடுக்க வந்த சைவப்பிரியர்கள், சேக்கிழார் புராணத்தில் குறிப்பிடப்படும் செய்திகளை ஏற்றுக்கொண்டுவிட்டு – வசதிக்கு ஒவ்வாத வரிகளை மட்டும் இடைச்செருகல் என்று எக்காளமிட்டனர்.
இதை சற்றே ஆய்ந்து பார்த்தால் உண்மை வெளிப்படும்.
1) முட்டு : சேக்கிழார் புராணத்தில் குறிப்பிடும்படி, சேக்கிழார் பெருமான் சீவக சிந்தாமணியை வைதார் இல்லை. ஏக சமய ஏற்பக் கொள்கை உடைய நம்பெருமான், திருட்டுச்சிந்தாமணி என்று கூறியிருக்க மாட்டார். எனவே சீவக சிந்தாமணிக்கு எதிராகவெல்லாம் இயற்றப்பட்ட நூலல்ல பெரியபுராணம்.
பதில் : சீவக சிந்தாமணியின் காலம் குறித்த ஐயப்பாடு இன்றளவும் இருந்துவருகிறது. இருப்பினும் பொதுக்கருத்தான 9-ம் நூற்றாண்டையே ஏற்றுக் கொள்வோம். அதாவது இரண்டாம் குலோத்துங்கனுக்கு இருநூறு ஆண்டுக்கு முன்தோன்றிய நூல். திருத்தக்க தேவர் இயற்றிய இதனை அனைத்துச் சமயத்தாரும் விரும்பிக் கற்றனர். இந்நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்க்கினியர் உரை எழுதியதே இதற்கு போதுமான சான்றாகிறது. பின்னாட்களில் இந்தியா வந்த கிறிஸ்தவ மதப்போதகர் ஜி.யு.போப் – இதனை கிரேக்க இலக்கியங்களான இலியட் – ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்க் கவிஞர்களுள் இளவரசன் – திருத்தக்க தேவர் என்ற சிறப்பு அடைமொழியும் அவருக்குச் சூட்டினார். இத்தகு சிறப்பு பொருந்திய நூல்மேல் சைவ வம்சாவழி மன்னன் மையல் கொண்டதில் பெரிய வியப்பு இல்லை. எனவே சைவ மாட்சியை மீட்டுக் கொணரும் பொறுப்பு சேக்கிழார் தலைமேல் வீழ்ந்ததை நாம் மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்ள முற்படுகிறோம்.
2) முட்டு : இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சமண மதம் எழுச்சியில் இல்லை. எனவே சேக்கிழாருக்கு சைவ காப்பாற்ற வேண்டி – பெரியபுராணம் இயற்றவேண்டிய கடமை இல்லை. எனவே பெரியபுராணம் அடியார் வரலாறு கூறவந்த மெய்புராணமே அன்றி அவசரபுராணம் அல்ல.
பதில் : இல்லை. போதுமான வரலாற்று சான்றுதான் இல்லையே ஒழிய – இலக்கியச் சான்றுகள் பல இருக்கின்றன. ஐஞ்சிறு காப்பியங்கள் யாவும் சமண இலக்கியமே. அவை யாவும் முறையே 10,13,15,16 – நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டவை. காப்பியங்கள் சமணத்தை முன்னிறுத்தியவை என்றால் – சமயப் பூசல் இல்லாத காலத்திலா இவை இயற்றப்பெற்றிருக்கும்?இதை தவிர்த்து இலக்கண நூல்களான யாப்பருங்கலம் (கி.பி.11) ; வெண்பாப் பாட்டியல் (கி.பி.13) ; நேமிநாதம் (கி.பி.12) ; நன்னூல் (கி.பி.13) சுற்றுச்சுற்றி இதே காலகட்டத்தில் பல்வேறு சமண நூல்கள் இயற்றப்பெற – அட நிகண்டுகள் வேற.. இவையெல்லாம் சமணம் மங்கிய காலத்தில் இயற்றப்பெற்றவையா என்ன? எனவே சேக்கிழாருக்கு சமய நெருடிக்கடி இருந்தமை தெள்ளத்தெளிவாக புலனாகிறது.
3) முட்டு : அடப்போங்கய்யா. எப்படிச் சொன்னாலும் உண்மையைப் போட்டு உடக்கிறீங்க. பேசாம இந்த உண்மையெல்லாம் சொல்லுற சேக்கிழார் புராணமே உமாபதியார் எழுதினது இல்ல’னு சொல்லிட்டா? ஆம். மா.இரா உட்பட பல மூத்த தமிழறிஞர் + சைவ வாதிகள் உமாபதியார் எழுதினது அல்ல சேக்கிழார் புராணம் என்ற கருத்தை வழியுறுத்துகிறார்கள்.
பதில் : இங்க பொறுத்தவரைக்கும் முட்டு’லயே பதிலும் இருக்கு. சேக்கிழார் புராணம் சொல்ற இவங்க சார்பு கருத்தை ஏத்துக்கும் போது உமாபதி எழுதுன இந்நூல் – கசப்பான உண்மையை சொல்லும்போதுமட்டும் அவர் இல்லன்னு சொல்ல தெகட்டுதோ?
ரைட்டு.. முட்டுக்கெல்லாம் பதில் சொல்லியாச்சு. உண்மைக்கு வருவோம். சேக்கிழாருக்கு என்ன இம்புட்டு பெரிய கடமை வேண்டியிருக்கு? ஏன் அவர் சைவத்தை தூக்கி நிறுத்தணும்? இதை புரிஞ்சிக்க நாம மீண்டும் பழைய கதைக்கே போகணும்.
இருண்ட காலமா – இருட்டடித்த காலமா?
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முந்துநூலாக்கி – நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியை துணைநூலாக்கி மாக்கதை ஒன்றை கற்பனா ஷக்தி மூலம் பிசைந்து பிசைந்து நூலாக்க விழைந்தார் சேக்கிழார். ஸோ.. பெரிய புராணம் பார்க்கும் முன்னாடி இந்த நம்பியார் பற்றியும் ; சுந்தரர் பற்றியும் ; அவர்தம் முன்னோர் பற்றியும் க்ரிஸ்பாக பார்த்துவிடலாம்.
தமிழகத்தின் இருண்டகாலமாக பாவிக்கப்படும் களப்பிரர் காலமே இவ்வாய்விற்கு வெளிச்சம் அளிக்கிறது.
களப்பிரர் முதலில் பௌத்தராகவும் பிறகு சமணராகவும் சமயச் சார்புற்றிருந்தனர். களப குலத்தைச் சார்ந்த அச்சுத விக்கிராந்தன் என்றொரு மன்னன் சோழ நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தான் என அறிகிறோம். இவன் காலத்தில் புத்ததத்தர் என்ற பௌத்த பேரறிஞர் ‘விநய விநிச்சயம்‘ என்ற நூலை எழுதினார்.
களப்பிரர் காலத்தில் ஆக்கத் துறைகள் பலவற்றில் வளர்ச்சி காணப்பட்டது. பௌத்த சமய ஒழுக்கங்கட்குச் செல்வாக்கு உயர்ந்தது. பௌத்தரும் சமணரும் வைதீக சடங்குகளையும் வேள்விகளையும் ஆரிய சமய தத்துவங்களையும் மறுத்தவர்கள். கொல்லாமை – புலால் உண்ணாமை – பொய்யாமை – பிறப்பினால் உயர்வு தாழ்வு காணாமை என்னும் உயர்ந்த அறங்களை ஓம்பி வளர்த்தவர்கள். ஆயிரம் வேள்விகள் வேட்பதினும் ஓர் உயிரைக் கொல்லாமையே மேலான அறமாகும் என்று புத்தர் போதித்த அறத்தை வலியுறுத்தி வந்தனர். மக்களுக்குள் ஒழுக்கத்தையும் – அமைதியையும் பிற உயிர்களின் மாட்டு அன்பையும் வளர்ப்பதில் சமண பௌத்த துறவிகள் முனைந்து வந்தனர் என டாக்டர் கே.கே. பிள்ளை எழுதுகிறார். இக்காரணங்களால் வேள்விகளையும் – குலவேறுபாடுகளையும் படிகளாகக் கொண்டு உயர்ந்து வந்த வைதிக சமயம் தன் செல்வாக்கை இழந்து வந்தது.
இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர் காலம் வைதீகத்திற்கு இருண்ட காலமே ஒழிய – மனித மாண்பிற்கு கிடைத்தற்கரிய பொற்காலம் என அறியலாம். சமண பௌத்தர்களின் தத்துவ வாதங்களால் விரிசல் விடத்தொடங்கிய வேதாந்தவாதங்கள் – தன் தத்துவ கோட்பாடுகளின் செங்கற்களை பெயர்த்தமைக்க முற்பட்டது.
அதுவே பக்தி எழுச்சி காலமானது. வடநாட்டில் ஏற்பட்ட குப்த பேரரசின் – ஹிந்து மத எழுச்சியும் இதற்கு ஓரளவு துணை புரிந்தது. சைவ சமய பக்தி இயக்கத்தின் பெரும்புள்ளியான திருநாவுக்கரசர் – நாம் மேற்பார்த்த தொண்டை நாட்டில் வாழ்ந்தவர் மட்டுமல்ல சேக்கிழார்களின் அதே வேளாண் சமூகத்தைச் சார்ந்தவரும் கூட.
எனவே சமண – பௌத்தம் செழித்தோங்கிய பகுதியின்றும் பொறுக்கமாட்டாமல் சைவ (மறு) மலர்ச்சிக்கு வழிசெய்தார். இருப்பினும் சைவ சமயத்தின் குறைப்பாடுகளான குலத்தாழ்ச்சியை முற்றிலுமாக விட்டாரல்லர்.
சமணத்திலிருந்து வெளிவந்த அப்பர் பல்வேறு இன்னலுக்கு உள்ளானதாக பெரிய புராணம் சான்று பகர்கிறது. இன்னுலுக்குப் பிற்பாடும் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனை சைவம் தழுவ வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நிற்க.
இதே காலவெளியில் பாண்டிய நாட்டின் அந்தணர் குலத்தில் ஒரு பிதாமகன் அவதரிக்கிறான். சமணத்தில் அல்லோலப்படும் (?) தேசத்தை சைவ மயமாக்க துடிதுடிக்கிறான். அனல்வாதம் – புனல்வாதம் செய்தி வெற்றிக் கனி எய்ததாக பெரியபுராணம் பாடுகிறது.
ஞானசம்பந்தரின் அனைத்துப் பதிகங்களிலும் 8-வது பாடல் இராவணனை எதிர்ப்பதில் இவரின் ஆரியை மாயை புலப்படும். 9-வது பாடலில் திருமாலையும் நான்முகனையும் கீழிறக்கி பாடுவதன் மூலம் இவர்தன் சிவ நெறி தெரியும். 10வது பாடலில் பௌத்த – சமண எதிர்ப்பு வலுவாக அமைந்தமையில் இவர்தன் சமய வெறி அப்பட்டமாகத் தெரியும்.
இவரிவரை மட்டும் துலாக்கோலில் ஏற்றிப்பார்த்தால் – புற சமயத்தார் ஆக்கிரமித்த பல்லவ; பாண்டிய பிரேதசத்தின்கண் இவர்கள் எழுச்சி பெற்றதை காணலாம். (சோழர்கள் அப்போது சிற்றரசராய் வீழ்ச்சி அடைந்தனர்) அப்பர் – சம்பந்தருடன் அடியார் பலர் கூடித் தலயாத்திரை செய்து நாடெங்கும் பக்தியைப் பரப்பி வந்தமை கடந்த கால பாரதிய ஜனதா கட்சி செய்து வரும் விநாயகர் ஊர்வலம் – வேல் யாத்திரை – ரத யாத்திரை வகையறாத்தான் என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
இனி இவர்களுக்குப் பின்வந்த சுந்தரமூர்த்தி நாயனாரை ஒப்புநோக்குவோம். அந்தணர் குலத்தில் பிறந்தவர். இறைவன் வேடம் தரித்து வந்து, “ஆரூரான் என் அடிமை” எனக் கூறிய போது, “ஓர் அந்தணர் மற்றோர் அந்தணருக்கு அடிமையாதல் எவ்வாறு?” என மனுதர்ம கேள்விக் கேட்டார். செய்தொழில் அடிப்படையில்தான் குலம் தோன்றியதென்பதே இவர்தான் வாழ்க்கைச் செய்தி. சங்கிலி நாச்சியார் என்ற தொழிற்குல வேளாளப் பெண்ணை மணம் செய்து – சிவபதம் அடையப்பெற்று நூலொன்றை எழுதி தீர்த்தார். அதுவே திருத்தொண்டத் தொகை.
அந்நூலே பெரியபுராணத்தின் முதல் நூலாக விளங்குகிறது. அதிலுள்ள சிக்கல்களை பின்னர் ஆய்வோம். அதற்குமுன் இந்நூலெழுந்த வரலாற்றை அறிவோம். தொழிற்குலப் பிள்ளைமாரான விறல்மிண்ட நாயனார் – சிவனடியார்களை வணங்கி சேவை செய்தபிறகே ஈசனை வணங்கச் செல்லும் அத்தனை பண்பாளராம். திருவாரூர் வந்த சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் – அருகில் நின்ற திரு அடியார்களை கவனிக்காமல் நேரடியாக இறைவனை வழிபட சென்றதால் – சுந்தரரையும் – அவரின் அணுக்குமான சிவபெருமானையும் ‘புறம்பானவர்கள்’ என ஒதுக்கினார்.
இதைக் கண்டு மனம் வருந்திய சிவபெருமான், “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் எனத் தொடங்கி அடியாளர் புராணத்தை பாடுக” என்று சுந்தரரை பணிய வைத்தாராம். இதுவே இந்நூலெழுந்த வரலாறு. இந்தப் புள்ளியில்தான் சிவனடியார்கள் சிவனாகப் பாவிக்கபட தொடங்கினர். இதில் மறைந்துள்ள சாதித்துவ அழுக்குகளை கீழ்வரும் பத்திகளில் நாம் விளக்கப்போகுமுன் – சுந்தரர் தொடங்கி சேக்கிழார் இடையிலான காலவெளியை சற்று ஆசுபடுத்திவிட்டு வருவோம்.
திருத்தொண்டத் தொகை எழுதிப்பட்டாயிற்று. பல அடியார்கள் தம்மின் சமகாலத்தவராக இருந்ததாக அவர் சொல்லும் அற்புத மாக்கதைகள் முகம் சுழிக்க வைக்கிறது. (இவற்றைப் பின்னர் தொகுத்துள்ளேன்). நம்பியாண்டார் நம்பி என்பார் முதல் ஏழு திருமுறைகளை மட்டும் தொகுத்ததாக சேக்கிழார் ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறது. இவர் எழுதிய மற்றொரு முக்கியகரமான நூல் திருத்தொண்டர் திருவந்தாதி. இதுவும் சேக்கிழாருக்கு பெருந்துணை செய்வதோடு உசாத்துணையாக விளங்கியிருக்கும்.
ஹா.. சேக்கிழாருக்கு வருவோம். இவர் தலைமேல் சுமத்தப்பட்ட சமய நெருக்கடி குறித்து முன்னரே பார்த்தோம். ஆனால் சேக்கிழார் இதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? சேக்கிழாருக்கு என்ன கடமை இருக்கிறது என்ற கேள்விகளோடு பழங்கதைக்கு மடைமாறினோம். இங்கே தொடர்வோம்.
பௌத்தம் ஏற்படுத்திய குலநாசத்தை சைவம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக ஆதரித்தது. ஒருவேளை குலத் தாழ்ச்சிகளை ஆதாரித்தால்தான் ஒரு சமயம் உயிர்ப்புற்று விளங்குமுடியுமென போலி வாதத்தை அது நம்பியிருக்கலாம். சைவத்தின் குலத் தாழ்ச்சிகளை பெரிய புராணம் கொண்டு விரிவாக ஆராயலாம்.
வேளாளர் – பிராமணர் – ஆதிசைவர் என மேற்குலத்தோர் செய்த அற்புதங்களை கீழ் குலத்தாரென இவர்கள் பட்டியலிடும் வேடர், பரதவர், குறுவணிகரிடம் ஒப்புநோக்கி பார்த்தால் மிக அபத்தமாக இருக்கிறது.
இதுபற்றியான தெளிந்த பட்டியலை இங்குக் காட்சிபடுத்துகிறேன்.
உயர்சாதி அற்புதங்கள். Ref. பெரியபுராண ஆராய்ச்சி (டாக்டர் இரா.மா)
உருத்திர பசுபதியார் எனும் பிராமணர் – கழுத்தளவு நீரில் மந்திரம் செபித்ததால் சிவனடி சேர்ந்தாராம். கண்ணப்ப நாயனார் எனும் பரதவன் கண்ணை இடந்து அப்பியதால் சிவனடி சேர்ந்தாராம். முதல் மீன் சிவனுக்கே என்றிருந்த போது – பொன்மீன் கிடைத்தபோதும் அதை சிவனுக்கு வழங்கிய பரதவ குல அதிபத்த நாயனார் ஒருபக்கம் — சிவாகம முறைப்படி அர்ச்சனை செய்தலால், தினமொரு காசை சிவபெருமானிடமிருந்தே ஈந்த ஆதிசைவர் – புகழ்த்துணை நாயனார் மறுபக்கம். இதில் சமத்துவம் எங்கு இருக்கிறது?
தாழ்த்தப்பட்ட சாதியினர் செய்த அற்புதங்கள்
தாழ்த்தப்பட்ட குலத்தினராதலால் கோவிலுள் வரவிடாதபடி செய்வித்து – தாழ்வு மனப்பான்மையால் வெளிநின்று சிவனை வேண்டினார் என்னும் திருநாளைப்போவார் புராணத்தில் என்ன நீதி இருக்கிறது?
வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த அப்பர் பெருமான் இரண்டிலும் குறைந்த ஞானசம்பந்தரின் பல்லக்கு தூக்குவது – வேளாள அந்தண குல வேறுபாடே அன்றி வேறென்ன? இதை ஆய்வு நோக்கில் முன்வைத்தால் – இதெல்லாம் சுவர்கபுரியில் நிகழ்ந்தது போலவும் – பக்தி நனிச் சொட்ட அடிமைப் பணி செய்தததாகவும் யுடோப்பியன் மனப்பான்மையால் கம்பி கட்டும் கதையெல்லாம் அவிழ்த்து விடுவார்கள். நம் தமிழ்வெளியில் பக்தி இலக்கியத்தை வரலாற்றுப் பூர்வமாக பார்க்காத வரையில் – அடிமைச் சங்கிலி அகலாது!
சேக்கிழாரின் சாதிய அமைப்பு
ஆய்வின் இறுதி அத்தியாத்தை நெருங்கி விட்டோம். இதெல்லாம் செய்ய வேண்டிய கடமை என சேக்கிழாருக்கு என்ன இருக்கிறது? சேக்கிழார் முன்வைக்கும் முட்டுகள் என்ன?
1. சேக்கிழாரின் பிற சமய நெருக்கடிகள் – அவரை சைவம் சார்ந்த பக்தி நனிச்சொட்டும் இலக்கியம் ஒன்றை எழுதித் தள்ளும்படி வற்புறுத்தியது.
2. சேக்கிழான் குலத்தோர் அரசு உத்தியோகத்தின் உயர் பதவிகளை வகித்து வந்த காலத்தில் – சமண எழுச்சியால் – சமணத் துறவியால் தம் குலத்திற்கு இழக்கு ஏற்பட்டு மீண்டும் பின்தங்கிவிடுவோமோ என்ற அச்சப்பாடி நிலவியிருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
3. சமணத்தின் வெற்றியை உற்று நோக்கிய சைவர்கள். குலவேறுபாட்டை – சாதி ஏற்றத்தாழ்வை – தொட்டுக் கொள்வதா? வெட்டிக் கொள்வதா? என்ற ஐயத்தில் உழன்றிருப்பர். இதை வெட்டிவிட்டால் சைவ சமயம் இருக்காது – தொட்டுக் கொண்டால் பின்பற்றநர் இருக்கமாட்டர். அப்போ என்ன செய்வது? அனைத்து சமயத்தாரும் விரும்பிக் கற்ற சீவக சிந்தாமணி போல் – அனைத்துச் சாதியினரும் விரும்பி ஏற்கும் பக்குவத்தை சைவத்தில் புகுத்தினர். அதை காலத்திற்கு ஏற்ப உணர்ந்த பெருமகன் சேக்கிழான் இராமதேவன் ஆனான்.
4. அனைவரும் ஏற்கும் பக்குவமா? அது என்ன? நான்கு வர்ணத்தாரும் நாயன்மார் ஆன கதை உண்டென்றால் – அனைத்துச் சாதியினரும் சிவனடி பொற்பாதம் அடைந்தவரென உண்மை நிரூபணம் ஆனால் – ஏகபோக சமயமாவதை இனி யாரால் தடுக்க முடியும்?
5. ஆனால் அதிலும் மிக நுட்பமாக ஆராய்ந்தால் – குலத்தாழ்ச்சியை சைவம் விட்டொழிக்காத கதை முந்தைய தலையங்கத்தில் மூலம் தெளிவுபெறும்.
6. இன்று வரை வேளாள குடிகளிடம் – சைவ மதம் செழிப்புற்று இருப்பதை நாம் காணலாம். சில குறிப்பிடத்தகுந்தோர் :
-
வ.உ.சிதம்பரனார்.
-
எம்.பக்தவச்சலம்.
-
பி.டி.ராஜன்.
-
பி.டி.ஆர். பழனிவேல்.
-
கே.எஸ்.ரவிக்குமார்.
-
கா.சு.பிள்ளை. ***(நபர் பட்டியல் விக்கீப்பிடியா தரவு மட்டுமே. மேலதிக சான்று தேவைப்படுகிறது)
“கங்க அரசனான இராசமல்லன் கீழ்த் தலைவனாய் இருந்த சாவுந்தராயன் சிரவண பெள்குளத்தில் கோமடேசுவரர் சிலை அமைத்தான். அவன் சாவுந்தராய புராணம் என்றும் திரிசஷ்டி லக்ஷண மகாபுராணம் என்றும் பெயர் வழங்கிய ஒரு கன்னட புராணத்தை கன்னட மொழியில் பாடினான். அது 24 தீர்த்தங்கர், 12 சக்கரவர்த்திகள், 9 பலபத்திரர், 9 வாசுதேவர், 9 பிரதிவாசுதேவர் ஆக 63 பேர் வரலாறு கூறுவது. இதைச் சேக்கிழாரின் பெரியபுராணம் நினைவூட்டுகிறது” என நல்.முருகேச முதலியார் கூறுவது சேக்கிழாரின் சமய நெருக்கடி குறித்து இங்கு குறிப்பிடத் தகுந்தது.
சைவர்களுக்கு சைவ நாயன்மார்கள் கதையாகப் பெரியபுராணம் இருப்பதுபோல, வைணவர்களுக்கு வைணவ ஆழ்வார்கள் கதைகளைத் தொகுத்து ‘பக்த லீலாமிருதம்’ என்ற நூல் இருந்துவருகிறது.
பெரியபுராணத்தில் 63 நாயன்மார்க் என்றால் – பக்த லீலாமிருதத்தில் 82 ஆழ்வார்கள். சைவ – வைணவத்தில் , நால்வர்களைப்போல – ஆழ்வாராதிகளும் வேறு புத்தகங்களில் (குருபரம்பரை) இருக்கின்றனர். நாயன்மார்களால் பாடப்பெற்ற சிவத்தலங்களைப் போலவே – ஆழ்வாராதிகளின் மங்களாசாசனம் பெற்ற விஷ்ணு தளங்கள் பல இருக்கின்றன. சைவ மடாதிபதிகளைப் போல – வைணவ மடாதிபதிகளும் பலர் உள்ளனர். எனவே சமயப் போட்டி நிலவியமை மேலும் வலுவாகிறது.
முடிவு
பெரியபுராணம் சமய நெருடிக்கடியில் இயற்றப்பட்ட நூல் என்பது திண்ணம். மக்களை தன்பால் ஈர்க்கும் பொருட்டு அனைத்து சாதி கதையாடல்களை – சூசகமாக வெளிகொண்டுவரும் வேளையில் மண்டைமேல் இருந்த கொண்டையை (சாதி – குல வேறுபாடு) மறைக்க மறந்த சோகம் அம்பலமாகிறது.
ஆதார நூல்வரிசை
-
சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) – டாக்டர் மா. இராசமாணிக்கனார்
-
பெரியபுராண ஆராய்ச்சி – டாக்டர் மா. இராசமாணிக்கனார்
-
இலக்கிய அறிமுகம் – டாக்டர். மா. இராசமாணிக்கனார்
-
தமிழ் இலக்கிய வரலாறு – 12ம் நூற்றாண்டு – பாகம் 1 – மு. அருணாசலம்
-
சேக்கிழார் புராணம் – உமாபதி சிவம்
-
தேவாரம் – அப்பர்
-
பெரியபுராணம் – சேக்கிழார்
-
கதையல்ல நிஜம் – தமிழ்ச் சமய பிரச்சார் பாரதி வெளியீடு.
-
Pazhasulapudhusu.in – Vicky Kannan
-
Pallavas of Kanchi – R. Gopalan
-
தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் – டாக்டர். கே.கே. பிள்ளை
-
பெரியார் இன்றும் என்றும் – விடியல் பதிப்பகம்.