பொதுவாக ‘புயலுக்குப் பின் அமைதி’ என்பார்கள். ஆனால், ஆஸ்திரேலியா விஷயத்தில் இது பொய்த்துவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் உட்பட கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் புழுதிப் புயல் அடித்தது. சூரியனை மறைக்கும் அளவு புயற்காற்று உயர்ந்து, பகல் பொழுதையே இரவு நேரம்போல் காட்சியளிக்க வைத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று (திங்கள்கிழமை) மதியம் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அதில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கான்பெரா (Canberra) பகுதியில் மதியம் சுமார் 1 மணி அளவில் தொடங்கிய கனமழை இரவு 7 மணி வரை நீடித்திருக்கிறது. அதனூடாகவே ஆலங்கட்டிகள் மடமடவென வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது விழுந்திருக்கின்றன. ஆலங்கட்டி ஒவ்வொன்றும் கோல்ஃப் (golf) பந்து அளவில் இருந்ததாக அவ்வூர் மக்கள் இணையத்தில் படங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆலங்கட்டி மழையால் அதிக அளவு சேதம் விளைந்துள்ளது. அவசர உதவி எண்ணுக்கு 1,200 பேர் அழைப்பு விடுத்துள்ளனர். கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதால், காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றிருக்கின்றனர். அதீத அழைப்பால், அந்த எண்ணும் சிறிது நேரம் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. சுமார் 20,000 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் பொதுப் போக்குவரத்தான ரயில் பயணம்கூட மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் முக்கியமான நேரங்களில் ரத்து செய்யப்பட்டது எனவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 4.5 செ.மீ அளவு ஆலங்கட்டிகள் பெய்திருக்கின்றன. “அசுரத்தனமான காற்றால் பல மரங்கள் சாலையில் முறிந்து விழுந்து, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட அலுவல் பாதிக்கப்பட்டதோடு நிறைய பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது” என சதர்லேண்ட் (Sutherland) பகுதிவாசி ஒருவர் கூறியுள்ளார்.
மனிதர்கள், வீடுகள் மட்டுமன்றி இதனால் நிறைய பறவைகளும் காயம்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புத்தாண்டு யாருக்கு எப்படியோ, ஆஸ்திரேலியாவுக்குத் துயரம் கலந்த ஆண்டாகவே தொடங்கியிருக்கிறது.
இப்படி ஒரு சூழலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதனால் ஓரளவு சேதம் குறைந்துள்ளது. கேன்பெராவைத் தொடர்ந்து சிட்னிக்கும் ஆலங்கட்டி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.