நாட்டின் பரபரப்பான பல தேர்வுகளை நடப்பித்து தரும் முக்கிய இயந்திரமாகச் செயல்பட்டு வரும் தேசியத் தேர்வு முகமை (NTA) மீது பல விமரிசனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளே நிறைவு பெற்றிருந்தாலும், இதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் கடலளவு பரந்தவை. பாரம் தாங்காமல் தத்தளிக்கும் துறையாகத் தோன்றும் என்.டி.ஏ. மீது எழுந்துள்ள விமரிசனங்கள் என்னென்ன? அதற்கு அதிகாரிகள் தரப்பில் சொல்லும் பதில்கள் உவப்பளிக்கிறதா என்று சுருக்கமாகப் பார்ப்போம்.
என்.டி.ஏ.வின் கதை
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்காக பலதரப்பட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்திவருகின்றன. மத்தியக் கல்விக்கூடங்கள் போன்ற தேசிய நிறுவனங்களுக்கான பொது நுழைவுத்தேர்வை நாடு தழுவிய அளவில் நடப்பித்து தரும் பொருட்டு ஓர் அரசு நிறுவனத்தை தொடங்க விரும்பினர். ஐஐடி இயக்குநர்கள் கொண்ட வல்லுநர் குழு அதற்கான சட்டதிட்ட வரைவுகளை 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. 2017இல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் என்.டி.ஏ. பற்றிய அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் நாடாளுமன்ற சட்டமியற்றும் அதிகாரத்தால் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசியத் தேர்வு முகமை தொடங்கப்பட்டது.
என்.டி.ஏ. நடப்பித்து தரும் தேர்வுகள்
2018இல் இருந்து பலவித நுழைவுத் தேர்வுகள் தேர்வு முகமையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. தேசியத் தொழில்நுட்ப கழகம் போன்ற ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களின் கீழ் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE), மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வு மாணவருக்கான தேசியத் தகுதித் தேர்வு (NET), எம்.பி.ஏ., பட்டப் படிப்பிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (CMAT), பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET) என்று தொடங்கி நாட்டின் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளை இன்று இவர்கள்தான் நடப்பித்து தருகிறார்கள்.
தேசிய அங்கீகாரம் பெற்ற அரசு பல்கலைக்கழகங்களும் தன்னிச்சையாக தேர்வு நடத்த முடியாமல் என்.டி.ஏ.வுடன் கைக்கோர்த்து உள்ளன. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் போன்றவை அதில் அடக்கம்.
என்.டி.ஏ.வால் ஏற்பட்ட மாற்றங்கள்
உலகின் மிகப்பெரிய தேர்வு முகமை என்று பெயரெடுத்துள்ள என்.டி.ஏ.வின் வருகைக்குப் பிறகு, நுழைவுத்தேர்வுகளில் பல சௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. நெட் உட்பட பல தேர்வுகள் முதன்முறையாக கணினிமயமானது. பக்கம் பக்கமாக விவரித்து எழுதிய பாடத்திட்ட அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு, அனைத்தும் கொள்குறி வினாக்களாக அமைந்தன. தேர்வு மையங்கள் அதிகரித்தன. முன்பைக் காட்டிலும் பல மாணவர்கள் தேர்வெழுத வந்தனர்.
ஆரம்பக்காலச் சிக்கல்கள்
2020இல் நடந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) நீல் நக்ஷத்திர தாஸ் என்பவர் ஆள் மாறாட்டம் செய்து, அசாம் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றது அம்பலமானது. அதைத்தொடர்ந்து அதே ஆண்டு இளநிலை நீட் தேர்வில் மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த மாணவி ஒருவர் வெறும் 6 மதிப்பெண் பெற்றதாக முடிவு வெளியிட்டு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது தேர்வு முகமை. இதனால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில், அம்மாணவி 590 மதிப்பெண் பெற்றது தெரியவந்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மிர்துல் ராவத் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவு வெளியிட்டு, மேல்முறையீட்டில் அதே மாணவர் அனைத்திந்திய பழங்குடியினர் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றவர் என தெரியவந்த சோகமும் என்.டி.ஏ.வால் அரங்கேற்றப்பட்டது.
தொடர்ச்சியாக பல தேர்வுகளை நடத்திவந்தும் என்.டி.ஏ. தரப்பால் தன் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை.
தோல்விகளால் ஒரு தங்கப் பதக்கம்
தன் தவறான தேர்வு முடிவினால் மாணவர்களின் உயிரைக் காவு வாங்கியும் என்.டி.ஏ. திருந்தவில்லை. JEE தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் குழப்பத்திற்கு பஞ்சமிருக்காது. தொழில்நுட்ப கோளாறுகளும் எக்கச்சக்கம். தேர்வு நோக்கிய பணிகளில்தான் இத்தனை மெத்தனம் என்றால், தேர்வு அறிவிக்கையிலும் முடிவு அறிவிக்கையிலும் அத்தனைக் கள்ள மௌனம் சாதிக்கிறது.
JEE உட்பட பல தேர்வுகளை நாடு தழுவிய அளவில் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுவதால், ஷிப்ட் முறையைப் பின்பற்றத் தொடங்கியது, என்.டி.ஏ. அதனால் JEE தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஷிப்ட் முறைக்கு ஏற்ப வெவ்வேறு வினாத்தாள்களை எதிர்கொள்வர். சான்றாக காலையில் தேர்வு எழுதும் ஒருவரும் மாலையில் தேர்வு எழுதும் மற்றொருவரும் ஒரே தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் வினாத்தாள் ஒன்றல்ல.
அப்போ அது சமச்சீரான தேர்வு முறையாக இருக்காதே என்று நீங்கள் கேட்டால், இரண்டு வினாத்தாள்களையும் ஒரே அளவு கடினத்தன்மையுடன் தயாரிக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள். மாணவர்கள் கொஞ்சம் உஷாராகி, இரண்டு தாள்களையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பியபோது, என்.டி.ஏ. தரப்பு தடுமாறியது. அப்போதுதான் நார்மலிசேஷன், பர்சென்டைல் போன்ற திட்டங்களை என்.டி.ஏ. முன்மொழிந்தது. தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் என்று பார்த்தால், மென்மேலும் சறுக்கியது. அதன் தோல்விகளுக்கே ஒரு தங்கப் பதக்கம் கொடுக்கலாம்.
சம்பிரதாயத்திற்கு ஒரு மதிப்பீடு
ஜேஇஇ தேர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட ஷிப்ட்-ல் தேர்வு எழுதும் மாணவர்களின் மதிப்பெண்ணைக் கொண்டுகூட்டி சீர்செய்ய நார்மலிசேஷன் என்றொரு மதிப்பீட்டு முறையை என்.டி.ஏ. அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் தேர்வில் பெறும் மதிப்பெண் ரா ஸ்கோர் (Raw Score) என்று வழங்கப்படும். அதற்குப்பின் ரா ஸ்கோரை பர்சென்டைலாக மாற்ற வேண்டும் (இந்த வழிமுறையைப் பின்னர் சொல்கிறேன்)
இப்போது அந்தந்த ஷிப்ட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரின் பர்சென்டைலும் ஏற்ற இறக்க வரிசையில் நிரல்படுத்தி இன்டர்போலேஷன் முறையில் மதிப்பெண்களை சமச்சீர் செய்கிறேன் என்ற பெயரில் குத்தலும் கொலையும் செய்கின்றனர். அதனால் ரா ஸ்கோரில் 90% மதிப்பெண் பெறும் மாணவன், நார்மலிசேஷனுக்குப் பிறகு 55-60% மதிப்பெண் மட்டுமே பெறுகிறான்.
கடந்த மாதம் (ஜூலை) வெளியான கியூட் (CUET) தேர்வு முடிவிலும் இதே குழப்பம் வெடித்துள்ளது. யூஜிசி தலைவரின் டிவிட்டர் பக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த முறையற்ற நார்மலிசேஷன் முறை பற்றி சோகக் கண்ணீர் வடித்துள்ளனர்.
பர்சென்டைல் எனும் படும்பாதகன்
தேர்வரின் ஷிப்ட்டில் அவரோடு சேர்ந்து மொத்தமாக தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையை N என்று குறிப்பிடலாம். அதே ஷிப்ட்டில் கலந்துகொண்ட தேர்வர்களின் மதிப்பெண்ணை இறங்கு வரிசையில் நிரல்படுத்திக் கொண்டு, குறிப்பிட்ட தேர்வரின் மதிப்பெண்ணைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையை M என்று குறிப்பிடலாம்.
இப்போது பர்சென்டைல் கணக்கீட்டிற்கு P = M / N × 100 எனும் சூத்திரம் கொண்டு விடைகாணலாம். ஆகவே நாம் மதிப்பெண் பெறுவது நம் கையில் மட்டுமில்லை, நம்மோடு சேர்ந்து தேர்வு எழுதும் ஒவ்வொருவரின் கரங்களிலும் உள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
இதில் ஒரு கொடுமையான சங்கதி என்னவென்றால், இருவேறு ஷிப்ட்டில் ஒரே மதிப்பெண் பெற்றாலும் உங்கள் இருவரின் பர்சென்டைல் ஸ்கோர் வெவ்வேறாக வரும். இதனால் பெரிதாக என்ன பாதிப்பு என்று கேட்டால், 0.5% சதவீதத்தில் நான் எனது JRF வாய்ப்பை முதல் முயற்சியில் இழந்திருக்கிறேன். இங்ஙனம் மறைமுகமான மதிப்பீட்டு முறைகளால் இன்னும் பலரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரிய தேர்வு முகமை என்று பெருமை பேசிக் கொள்வதெல்லாம் பின்னர் இருக்கட்டும். தேர்வு நடத்துவதிலும் மதிப்பீடு செய்வதிலும் கையாளாகத் தனமாகத் திரியாமல் லட்சணமாக நடப்பித்து, மாணவர் நலனுக்காக இனியேனும் செயல்படட்டும். தவறும் பட்சத்தில் அதன் தற்குறித் தனங்களை அவ்வப்போது அம்பலப்படுத்துவோம்.
Cartoon Credits: Satish Acharya