இரவு 11.30-க்கு தான் இரயில். இருந்தும் சென்னை செல்லும் ஆர்ப்பரிப்பில் 10.40-க்கே திருப்பூர் இரயில் நிலையம் வந்துவிட்டேன். ஸ்டேஷன் வந்திறங்கியதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து – சென்னை சென்ட்ரல் வரை செல்லும் இரயில் ஒன்று தயார் நிலையில் நின்றது. “பேசாம இதுல புக் பண்ணியிருந்தா, சீக்கிரம் போயிருக்கலாமோ?” என்று திட்டுக்கொண்டே இரண்டாவது ஃப்ளாட்பாரம் நோக்கி நகர்ந்தேன்.
ம்ம். இவர்களெல்லாம் எங்குதான் இருக்கிறார்கள், ராத்திரி நேரத்திலும் எத்தனைப் பெரிய கூட்டமிது! எல்லோருக்கும் ஊருக்குச் செல்ல ஏதோவொரு காரணம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனக்கும். திருத்தம், எங்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது! ஆம். நான் காத்துக் கொண்டிருக்கும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவையிலிருந்து ஒரு கோஷ்டி வந்துகொண்டிருந்தது. அவர்கள் நால்வரையும் சந்திந்து வெகு நாட்கள் ஆனபோதும், “சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு போலாம்ட” என்றதும் மாறுகொள்ளாமல் ஓ.கே சொன்னார்கள். ஆனா, புத்தகம் வாங்க காசு?
ஒரு வாரம் எடுத்துக்கொண்டேன். அக்காவிடமிருந்து அப்பாவிடமிருந்து என கொஞ்சம் கொஞ்சமாக மீட்டர் போட்டு ஒரு நாலாயிரம் தேத்திவிட்டேன். ஆனால் இந்தப் புத்தகம் வாங்கும் சென்னைப் படலம் அவ்வளவு சுலபத்தில் உறுதியாகவில்லை. பயணத்திற்கு முந்தைய நாள்வரை இழுபறியாக நீடித்து, ஒருவழி செய்துவிட்டது.
இத்தனைக்கும் பிறகுதான் இந்த இரயில்நிலைய பிரவேசம். நினைவுகளும் நேரமும் ஓடிக்கொண்டிருக்கையில் கோவையிலிருந்து கிளம்பிய சேரன் திருப்பூர் வந்துவிட்டான். விக்கியிடமிருந்து அழைப்பு, “வந்துட்டோம் ட ஏறு.” இவன் என் யூ.ஜி. நண்பன். முடிந்தவரை பயணச் செலவில் சிக்கனம் பின்பற்றினால் ஒழிய தீட்டிவைத்த திட்டம் நிறைவேறாது என்பதால் Second Sitter-ல் தான் டிக்கெட் போட்டிருந்தோம். D2 கம்பார்ட்மென்ட்டில் உரத்த சத்தத்தோடு வரவேற்றார்கள். நால்வரோடு சென்று நானும் ஐக்கியமாகிக் கொண்டேன்.
கொஞ்ச நேரத்துக்கு பழைய கதைகளைக் கிளறினோம். படித்த புத்தகங்கள், வாங்கப்போகும் புத்தகங்கள் என பலவற்றைப் பேசி மணி 12.30-ஐ நெருங்கியதும் மெல்ல பிரேம் உறங்கப் போனான். அதுதான் அன்றைய கூத்து. செக்கென்ட் சீட்டரை ஸ்லிப்பராக உருவகித்து, பல கோணங்களில் படுத்துப்பார்த்தான். எதுவும் பிரயோஜனப்படவில்லை. அவனுக்கு இது முதல் இரயில் பயணம். நிச்சயம் வெறுத்திருப்பான்.
சீனியும் விக்கியும் புத்துணர்வோடு இருப்பதை பயன்படுத்திக் கொண்டு மேலும் கதைத்தேன். மணி 2-ஐ நெருங்கியது. பூபால் ஏற்கெனவே தூங்கிப்போயிருந்தான். எழுப்பி சென்று சில நினைவுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
3 மணிபோல் சீனியும் உறங்கிடவே, நானும் விக்கியும் மட்டும் வலிந்து பேசிக்கொண்டு வந்தோம். திடீரென்று தூக்கத்தில் ஏதோ மாயாஜால சம்பிரதாயம் போல் விந்தையாக ஏதோ செய்தான் பிரேம். விழுந்து விழுந்து சிரித்தோம். கொஞ்ச நேரம் யௌவனத்தைப் பற்றி எடுத்துச் சொன்னேன். இந்தமுறை விக்கியும் வீழ்ந்துவிட்டான்.
முந்தைய தினம் வெளியான அருஞ்சொல் கட்டுரைகளை வாசித்தேன். குளிர் பொறுக்கவில்லை. எழுந்து நடந்தேன். கம்பார்ட்மென்டே மயான காட்சியளித்தது. திரையில் வருவதுபோல் எந்தப் பெண்ணும் பேசுவதற்கில்லை. நாற்றமெடுத்துவந்த கம்பார்ட்மென்ட் கழிப்பறை, “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாட ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தரவில்லை. மொத்தத்தில் எல்லாம் ஏமாற்றமளிக்க நானும் தூங்குவதற்கு முயற்சி செய்தேன். நேரம் கடந்தது. கடந்த..கடந்..த..து. தூங்கீ..விட்டேன்..zzzz!
அரக்கோணத்திலிருந்து அரவம் கேட்டது. அடடா. வானம் வெளிர்விட்டாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னைதான் என்று விழித்துக் கொண்டேன். பாத்ரூம் போய் ஃப்ரெஷ் ஆகிவிட்டு, முதலாலாய் தயாராகி நின்றேன்! இடைநிறுத்தத்தில் ஏறியவர்களை ஏறெட்டுப் பார்த்தேன். ஒவ்வொருவராய் எழுப்பி அவசரப்படுத்தினேன். திடீரென்று மெரினா செல்லவேண்டும் என்று விக்கி முனைந்தான். பூபாலும் தோள்கொடுக்க, வாதம் வலுப்பெற்றது. “அடேய்.. லேட் ஆகிடுமே ட.. ம்ம்.. சரி போலாம்” என சென்ட்ரலில் இருந்து நடைகட்டினோம்.
இராஜிவ் காந்தி பொது மருத்துவமனை முன்பாக சாலை கடந்துவிட்டு, மதராஸ் மெடிக்கல் காலேஜ் வழியாக நேப்பியர் பிரிட்ஜ் வந்தடைந்தோம். பசி வயிற்றைக் கிள்ளியது. மணி சுமார் 8.00 இருக்கும். தோ கிலோமீட்டர் கணக்குச் சொல்லி – தூரம் நீண்டுகொண்டே இருந்தது. ஹப்பாடா ஒரு கையேந்தி பவனை கண்டடைந்தோம்! சுடச்சுட இருந்தாலும் சுவை இல்லை. திரும்பிப் பார்த்தால் கால்டுவெல் சிலை அனாமத்தாக இருந்தது. அடப்பாவிகளா என நொந்து கொண்டேன். அதுதான் அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தமென்று பின்னர் அறிந்துகொண்ட போது, நெஞ்சு கணத்தது. கைகழுவிவிட்டு கடல் நோக்கி நகர்ந்தோம்.
மண்ணில் நடப்பது ரொம்பவே சிரமமாக இருந்தது. உடைத்துப் போட்ட பாட்டில்கள் சில, சூரிய ஒளியில் மினுமினுத்ததால் ரத்தம் வராமல் காப்பற்றப்பட்டோம். ஷ்ஷ்ஷொப்பா கடல் வந்துட்டு! அடிவயிற்றிலிருந்து கத்தினோம். ம்ம். பார்த்தவர்கள் என்ன நினைத்தார்களோ!
90-களில் வெளிவந்த கடலோர தமிழ் சினிமா பாடல்களின் ஒவ்வொரு வரியையும் முணுமுணுத்தப்படி ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தோம். அதில் சில மிகக் கேவலமாய் இருந்தன. மாற்றுத்துணி இல்லாதபோதும் தன் முழு உடலையும் நனைக்கத் துணிந்த பிரேமின் துணிவு ஆச்சரியப்படுத்தியது. ஒரு சமயத்தில் நீர் சொரிந்து குளிக்கும் யானையைப் போல் தெரிந்தான் 😂. திருட்டுப்பையல், எல்லோரையும் ஈரப்படுத்திவிட்டான். விக்கி மட்டும் உஷாராக ‘சலி’ என்று சொல்லி ஒதுங்கிவிட்டான்.
அண்ணா சமாதிக்கு நேர் பின்பகுதியில் ஒரு பெரிய மணல்திட்டு இருந்தது. அங்கு ஏறி துணிகளை உலர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.
தூரத்திலிருந்து பார்த்தால் கூட அவ்வளவாக கூச்சம் இருக்காது என்பதன் பேரில் இந்த முடிவு. அந்த இடம் மிகப் பிரமாதமான ஒன்று என பின்னர்தான் தெரிந்தது. அதன் வடக்கில் சென்னை துறைமுகமும் மேற்கில் கூவம் வங்கக் கடலில் கலக்கும் சந்தியும் இருந்தன. அந்த மணற்திட்டில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்த ஒருவர் மீன்பிடித்துவிட்டு மீண்டுமதே மீனை மறுபக்க திட்டின் வழியாக கடலில் விட்டார். “யாருடா இந்தக் கிறுக்கன்?” என்று எச்சில் ஊறியது. துணி காயும் வரை துண்டணிந்து வலம்வந்தேன். அங்கிருந்து கடல் முழுமையும் தெரிந்ததாய் சில வேதாந்தங்கள் பேசிக் கொண்டோம்.
கையேந்தி பவன் கைக்கொடுக்காததால், மீண்டும் பசியெடுத்தது. ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை.
அண்ணா சமாதி செல்வதென்று முன்னரே திட்டமிட்டிருந்தோம். விக்கியின் நச்சரிப்பால் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா சமாதிக்கும் செல்ல நேர்ந்தது. திட்டிலிருந்து இறங்கும் வழியில் சரியாக ஜெயா. சமாதிக்கு பின்புறம் மெரினா மருங்கில் ஒருசிறுவன் காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்தான். அவன் மனதைரியத்தை மெச்சியபடி நகர்ந்தோம். அன்றைக்கு அண்ணா சமாதியில் அவ்வளவு கூட்டமில்லை. அவரின் சிலையைத் திகைத்துப்போய் பார்த்தேன். எத்தனைப் பெரிய மனிதர் அண்ணா நீ! மனம் இறுக்கமானது. அவரின் சமாதியை தொட்டுப் பார்த்து, ஆசைத்தீர புகைப்படம் எடுத்துவிட்டு வந்தோம்.
அண்ணா சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த டிரைவரிடம் கேட்டு, அதன்படி பேருந்திற்குக் காத்திருந்தோம். நேரம் விரயமாகிக் கொண்டே இருந்தது. வழியில்லை என்று ஓலாவை ஓபன் செய்த கணம், ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில் நெருங்கும் காரைப் போல ஒரு ஆட்டோக்காரர் வந்தார். 150 என்று முடித்துக்கொண்டு கொஞ்ச தூரம் சென்றதும், “ராயாபுரம் எம்.சி.ஏ தானே” என்றார். “அட இல்லண்ணே. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.” என்றேன். அவருக்கு வழிதெரியாமல் இன்னொரு ஆட்டோக்காரரை அணுகி, எங்கெங்கோ சென்று கடைசியில் ஒய்.எம்.சி.ஏ. விற்கு 1.0 கி.மு முன்பு வழிமாறிப்போய் ஒய்யாரமாய் ஓரங்கட்டிவிட்டார்.
“தம்பி. இதுக்கு மேல போன 5 கி.மீ சுத்திப் போணும். இப்படியே போன ஒன்-வே. நீங்க பேசாம நடந்துபோயிருங்க. அது ரொம்ப பக்கம்” என்றார். கோபம் கொப்பளித்து வந்தது. ஆளுக்கு 50 என்று 250 வாங்கிக்கொண்டும் சரியாகக் கொண்டு சேர்க்கவில்லை. மீண்டும் நடந்தோம். இடையில் அவர்கள் சர்பத்தும் ஜூஸும் உள்ளே இறக்கினார்கள். இப்படித்தான் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தோம்.
8வது நுழைவாயிலில்தான் உள்ளேற வேண்டும் என்ற பதாகை கொஞ்சம் அலுப்பூட்டியது. முதல் நுழைவாயிலில் உள்ள நீலம் பதிப்பகத்திற்கே முன்னர் செல்லவேண்டும் என்று எத்தணித்திருந்தோம். வந்ததில் மூவருக்கு இது முதல் அனுபவம் என்பதால், எனக்கே உண்டான அனுபவ மிடுக்கோடு சில சாமர்த்தியங்களைச் சொல்லிப் புகுந்தேன்.
1. கையில ஒரு நோட் எடுத்துக்கோ.
2. பென்சிலோ – பேனாவோ வெச்சு, புடிச்ச புக்கெல்லாம் நோட் பண்ணிக்கோ.
3. கண்டிப்பா வாங்கனும்’னு தோணுச்சு’னா மட்டும் எடுத்துடு, இல்லாட்டி லிஸ்ட்-ல நோட் பண்ணிக்கோ.
4. அதேமாதிரி சைடு-ல ஒரு பேலன்ஸ் ஷீட் போட்டுக்கோ. ஒவ்வொரு புக்கும் வாங்கும்போது, அதோட விலையை மொத்தப் பணத்துல இருந்து கழிச்சிட்டே வா. பசியோடு இரு. ஒவ்வொரு புத்தகத்தையும் கண்ணும் கருத்துமா உத்துப் பாரு. இந்த நாள் உனக்கு. சாப்டு!
அப்போது மேய ஆரம்பித்தோம். சுமார் 7.30 வரை எந்தவொரு தொல்லையும் இல்லாமல் திருப்தியாக பர்ச்சேஸ் பண்ணுவதாகத்தான் ப்ளான். ஆனால் 8வது ரோ முடியும் முன்பே பசிப்பதாய் அனத்தினான், விக்கி. பொறுடா – பொறுடா – என்றவன் பொறுமையை தின்றுவிட்டு 2.30 போல் சாப்பிடச் சென்றோம்.
மீண்டும் நுழைந்து கிழக்கு, சூரியன், நக்கீரன், பாரி நிலையம், தமிழக அரசு பாடநூல் கழகம், எதிர், நீலம், யாவரும், டிஸ்கவரி, சிக்ஸ்த்சென்ஸ் என்று சகட்டுமேனிக்கு சுத்தி 12 புத்தகங்களை அடுக்கி விட்டேன். அவர்களும் ரஸத்திற்கு ஏற்றார்போல் வாங்கித் தள்ளினார்கள். அப்போதுதான் அவர் என் கண்ணில் பட்டார்.
தேசாந்திரி ஸ்டால்-ன் முன் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார், எஸ்.ராமகிருஷ்ணன். அவர் எழுதிய “மண்டியிடுங்கள் தந்தையே” குறித்து தேசாந்திரி யூடியூப் பக்கத்தில் அவரே பேசிய காணொளியை சில நாட்களுக்கு முன்பே பார்த்திருந்தேன். நான் ஒரு ஃபிக்ஷன் விரும்பி இல்லை என்றாலும், அந்தக் காணொளி என்னை உருகச் செய்திருந்தது. உடனே அந்நூலையும் காந்தியின் நிழலில் என்ற நூலையும் வாங்கிவிட்டு, அவரிடம் ஒப்பம் பெற்று அறிமுகமானேன். மனம் நிறைவாய் இருந்தது.
இதையெல்லாம் நினைவுகூறி அவரை சந்தித்ததில், அத்தனை அலாதியான மகிழ்ச்சி இருந்தது. ஆனால் நிறைய பேசமுடியவில்லை. உள்ளுக்குள் அவர் கவிதை நூல் தலைப்பையே மீண்டுமொருமுறை சொல்லிக்கொண்டேன். “மிஸ் யூ. இந்த முறையும் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது”
பிரேமிற்கு கால் செய்து மனுஷுடன் ஃபோட்டோ எடுக்க அனுப்பிவைத்தேன். அவனும் மகிழ்ச்சியோடு பெற்றுவந்தான். அகனிற்கும் – மேகாவிற்கும் ஏதாவது வாங்க வேண்டுமென்ற தேடல் சென்ட்ரல் டூ மெரினாவை விட நீண்டதாய் இருந்தது. அலைந்து திரிந்தும் ஓரிளவே சமரசம் செய்ய முடிந்தது. இத்தனைப் பெரிய புத்தகக் கண்காட்சியில் ஒரு 2.5 வயது சின்னக் குழந்தையை சமாதானம் செய்து சிரிக்க வைக்கும்படி ஒரு ஸ்டால் இல்லையே!
கீழடி என்ற பெயரில் தொல்லியல் துறையினர் கண்காட்சி ஒன்றினை அமைத்திருந்தனர். அத்தனை நேர்த்தியாய் அமைக்கப்பட்டதுடன், தொல்லியல் துறை ஊழியர்களும் பணவுடன் நடந்து கொண்டார்கள்.
பெருவிருந்து உண்ட மயக்கத்தில், நாற்காலி அமைக்கப்பட்டிருக்கும் அரங்கில் மெல்ல வந்து குடியேறினோம். அப்பாடா. பெரிய ஓட்டம் நிறைவடைந்ததாய் இருந்தது. வாங்கிய புத்தகங்களை எடுத்துக் காண்பித்துக் கொண்டோம். உடனே ஒரு அழைப்பு வந்தது. “அங்கதான் இருக்கீங்களா? இருக்கேன் வாங்க அஜய்” என்று துண்டித்தேன். அஜய்-ம் நானும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் ஒரே பேட்ஜ்-ல் பயிற்சி பெற்றோம். இப்போது அவன் விகடனிலேயே News Sense TN பணியில் முழுநேர ஊழியராக பணிசெய்து வருகிறான்.
அவன் வருகிற வரை புத்தகக் கண்காட்சி பேமஸ், அப்பளக் கடைக்கு ஒரு விசிட் அடித்தோம். பொடி பறக்க பறக்க தின்று தீர்த்துவிட்டு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன்.
“இது வெறும் புத்தகக் காட்சியில்லைப்பா. இங்கு எத்தனை பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன பார். சென்னைவாசிகள் ஏன் தோழி விஷயத்தில் இத்தனை உறுதியாக ஏங்கித் தவிக்கிறார்கள் என அப்போதுதான் புரிந்தது. தோழிகள் இல்லாத ஏகாந்த உலகில் வாழ்ந்த ஒரு மொட்டைப் பையனாய் இந்தச் சென்னை நம்மை உருகவைக்கிறதே என வாலிபம் குத்தலெடுத்தது.”
அதற்குள் அஜய் வந்துவிட, அவனுடன் மீண்டும் ஒரு விசிட். அங்கு அவன் எழுத்தாளர் அகரமுதல்வனை அறிமுகம் செய்து வைத்தான். தேசாந்திரியில் இரண்டொரு புத்தகங்களை பொறுக்கிக் கொண்டு வெளியே வரும்போதுதான் தெரிந்தது, “ரிட்டன் ட்ரெயின் 11.40-க்கு அல்ல, 10.00 மணிக்கு.” கடைசி நேரத்தில் போட்டுவைத்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி டின்னர் ப்ளான் க்ளோஸ்!
அவசர அவசரமாக ஓடி சென்ட்ரல் வந்தடைந்து, அங்கேயே ஒரு ஹோட்டலில் பிரியானியும் பெப்பர் சிக்கனும் தின்றுவிட்டு ரயில் ஏறினோம். இந்தமுறை ஒவ்வொருவராக இல்லாமல் எல்லோரும் ஒரேடியாய் மட்டையாகி விட்டார்கள். இலவு காத்த கிளியாக நான் மட்டும் கொட்ட கொட்ட விழித்திருந்தேன். இந்த முறையும் ரயிலில் எந்த அதிசயமும் நடக்கவில்லை. அதிகாலை 4.30-கு திருப்பூர் வந்துடைந்தபோது ஒன்றை மட்டும் ஊர்ஜிதம் படுத்திக் கொள்ள விரும்பினேன், “இனி எங்கு சென்றாலும், ப்ரஸோடு பேஸ்ட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தமுறை போல் எல்லா தடவையும் மாஸ்க் கைக்குடுக்காது”