spot_img
Saturday, December 21, 2024

சம்ஸ்கிருத ஆர்வலரான தமிழறிஞர் ஆர்.நாகசாமியை நினைவு கூறுவோம்

புகழ்ப்பெற்ற தொல்லியல் ஆய்வாளரான ஆர்.நாகசாமியின் முடிபுகள், தொடர்ச்சியாக தமிழ்க் கலாச்சாரத்தின் மீது சம்ஸ்கிருத போர்வையை வீசி வந்தன. இவரின் மேட்டுக்குடி சார் ஆய்வுகள் தமிழ் அறிஞர்களின் எதிர்ப்பை சம்பாதித்ததோடு, பல சர்ச்சைகளிலும் சிக்கவைத்தது.

கல்வெட்டு அறிஞர், தொல்லியல் ஆய்வாளர், சோழர் கால வெண்கலச் சிலைகளின் மீட்பர் என பன்முகம் கொண்ட ஆர்.நாகசாமி, சென்னையில் உள்ள அவர் இல்லத்தில் ஜனவரி 23-ம் தேதி இயற்கை எய்தினார். 91 ஆண்டுகள் வாழ்ந்த மனிதர், கிழக்கும் மேற்குமாய் வாழ்ந்து திரிந்து பல சாதனைகளோடு சர்ச்சைகளும் சம்பாதித்திருக்கிறார்.

அப்போது அவருக்கு 70 வயது இருக்கும். சென்னையில் உள்ள அவர் இல்லத்தில்தான் முதன்முறையாகப் பார்த்தேன். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் படித்த வந்த எனக்கு (2004), தமிழ் பிராமி எழுத்துக்கள் கற்பதற்கும் இடைக்கால கல்வெட்டுக்கள் படிப்பதற்கும் அவரின் அறிமுகம் ஏதுவாய் இருந்தது. சங்க இலக்கியத்தில் நான் மேற்கொண்டு வந்த ஆய்விலிருந்து எங்கள் பேச்சு தொடங்கியது.

ஒரு மாத-காலம் இருக்கும். ஒரு நாள் விடாமல் அவரைச் சந்திந்தேன். தமிழ் பிராமி எழுத்துக்களையும், கல்வெட்டுக்களையும் மிகப் பொறுமையாய் சொல்லிக் கொடுத்தார். எழுத்துக்களை அடையாளம் காண்பதற்கு, நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்து, மறுநாள் வகுப்புக்கு வந்ததும், தன் சிலேட்டில் வார்த்தைகளையும் எழுத்துக்களையும் புதிது புதிதாக எழுதி புதிர் போடுவார். அவரின் அன்றாட பாடவேளைக்கு மத்தியில், இடைக்கால சோழர் மெய்க்கீர்த்திகளை முழுவதுமாய் மனப்பாடம் செய்யச்சொல்லி வற்புறுத்துவது சற்று அந்நியமாய் இருந்தது.

நெடிய மெய்க்கீர்த்திகளை மனப்பாடம் செய்வதற்கு, எதாவது ஒரு பகுத்தறிவான காரணம் சொல்லுங்கள் எனக் கேட்டபோது, “கள ஆய்வில் கல்வெட்டுகளை படியெடுத்து படிக்கும்போது கோயில் சுவற்றிலோ பாறை முகட்டிலோ எங்காவது இந்த மெய்க்கீர்த்தியின் சிறு சிறு வசனங்கள் கைக்கொடுக்கும்” என்றார். இவரின் பயிற்றுவிப்பில் இதுவும் ஒரு அங்கமென புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குநராய் இருந்தபோது, அங்குமிந்த பரிட்சையை பரிசோதித்திருப்பார் என ஊகித்துக் கொண்டேன்.

அன்றிலிருந்து அவரை நெருக்கமாய் கவனித்தேன். மார்பிலும் நெற்றியிலும் விபூதி பூசிக்கொண்டு, வேட்டி அணிந்தபடி வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருக்கும் அவர் கையில் எப்போதும் ஒரு வரலாற்று புத்தகமோ, கல்வெட்டியல் புத்தகமோ இருக்கும். ஒரு நாள் நினைவிருக்கிறது. பாடம் சம்பந்தப்பட்டு அண்மையில் படித்த சில புத்தகங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். குறிப்பாக இடைக்காலத் தென்னிந்தியா குறித்து பூர்டன் ஸ்டெய்ன், நொபொரு கராஷிமா, சுப்பராயலு, செம்பகலக்ஷமியின் எழுத்துக்களை மேற்கோளிட்டப்படி உரையாடல் நீண்டது. பேச்சு வாக்கில், கே.ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற தொடக்கக் கால வரலாற்றாளர்கள் வெறுமனே அரசியல் வரலாற்றை மையப்படுத்திவிட்டு, சமூகப் பொருளாதார மாற்றங்களை ஓரங்கட்டிவிட்டனர் என சொல்லிவிட்டேன். இதை அவர் தணிக்க முடியாதவராய், முதல் தளத்திற்கு விரைந்து ஓடினார்.

தன் புத்தக அலமாரியில் இருந்து, நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர் வரலாற்றின் இரண்டு தொகுப்புகளையும் எடுத்து வந்தார். என் கண்ணில் படும்படி மேசையில் வைத்துவிட்டு, “இதை எல்லாம் கவனமாகப் படித்தாயா?” என்றார். திடீரென ஒரு பக்கத்தைப் புரட்டி, அதிலிருந்த சோழர் வரிவிதிப்பு முறைமையை சத்தமாக வாசித்தார். என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

தென்னிந்தியாவின் ஆரம்ப, இடைக்கால, மத்திய காலங்களைப் பற்றி புதுப் புதுக் கேள்விகளைக் கேட்கும் புதிய வரலாற்றியல் நெறிமுறையில், நீண்டகாலமாய் கைவிடப்பட்ட ஓர் வரலாற்றியல் நெறிமுறையோடு அவர் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள விரும்பினார்.

மற்றொரு முறை இடைக்காலத்திய கல்வெட்டு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தபோது, “கல்வெட்டில் உள்ள சடங்கு சம்பந்தமான சமாச்சாரங்களை தர்மசாஸ்த்திரம் துணை இல்லாமல் படிக்க முடியாது” என வாதிட்டார். கல்வெட்டு, இலக்கியம், இலக்கணச் சுவடி, நாணயம் என தான் பார்க்கும் எல்லா தொல்லியல் படிமங்களிலும் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மூலங்களுக்கு இடையே அவர்தன் உலகில் வசதியாகப் பயணிப்பதை நான் கண்டேன். எங்களின் பெரும்பாலான உரையாடலில், தமிழ் மொழிமீது சம்ஸ்கிருதத்தின் தாக்கம் பற்றியும் – முற்காலத்திலிருந்தே அவை இரண்டிம் பிரிக்கமுடியாத தன்மைப் பொருந்தியன என்றும் பெருமைக் கொள்ளப் பேசுவார். தமிழைவிட பிராமணியத்தின் சம்ஸ்கிருத மொழியை முன்னிலைப்படுத்துவதால், தமிழறிஞர்களின் கண்டனத்திற்கு உள்ளான நாகசாமி – ஏகோபித்த சர்ச்சைகளுக்கும் ஆட்பட்டிருக்கிறார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, எனது M.Phil-ல் ஆய்வேட்டை சமர்பித்த தருவாயில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். சங்க இலக்கியங்களின் காலவகைப்பாட்டில் அவர் கொண்டிருந்த வியூகம் பற்றியும், அவ்விலக்கியத் தொகுப்பின் பன்முக அடுக்குகளை அலசி ஆராய்ந்து – சொல்லாராய்ச்சி அடிப்படையில்; உள்ளடக்கம் அடிப்படையில் தற்காலிகமாய் அதன் பாடற்திரட்டுகளை பகுக்க வேண்டியதன் அவசியத்தையும் விரிவாக எழுதியிருந்தேன். கமில் சுவெலபில், ஜார்ஜ் ஹார்ட், ஏ.கே.ராமானுஜம் எழுத்துக்களை சான்றுகாட்டியும் அவர் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். சாஸ்திரி கையாண்டது போல, ஆசிரியர் – மையப்பட்ட வழக்கமான காலப்பகுப்பையே அவர் விரும்புகிறார்.

பிராமணிய கருத்தில் வேரூன்றி, தன் வாசிப்பிலும் – விளக்கத்திலும் சம்ஸ்கிருதப் பண்பாட்டை வலியுறுத்தி வரும் நாகசாமியின் அணுகுமுறை மரபுவழியிலான ஆச்சாரியக் கொள்கையை ஒத்ததாக இருக்கிறது. இதில் துளி சந்தேகம் இல்லை. திருக்குறள் போன்ற சங்கம் மருவியகால இலக்கியமாக இருந்தாலும் சரி, கம்பராமாயணம் போன்ற இடைக்கால இலக்கியமாக இருந்தாலும் சரி, நாகசாமியைப் பொருத்தவரை இவையெல்லாம் பிராமணியப் பண்பாட்டின் மொழிமாற்று வடிவங்கள் அவ்வளவுதான்.  

“Those who are not well versed in Tamil and who have a great desire to study Tirukkural, need not worry. If you read what is in your Dharma sastra in your own language or in Sanskrit, you have read the Tamil Tirukkural as it contains the same concept”.

(திருக்குறளைப் படிக்க ஆசை இருந்தாலும் தமிழில் புலமை இல்லாதோர் வருத்தப்படேல். உங்கள் தர்ம சாஸ்திரத்தை உங்கள் மொழியிலோ சமஸ்கிருதத்திலோ படித்தீர்களேயானால் அவற்றின் கருத்தியலே திருக்குறளில் இருக்கிறது).

Source : Tirukkural – An Abridgement of Vedas ( தர்ம சாஸ்திரங்களின் எளிமையாக்கம் – திருக்குறள் ) ஆசிரியர் : பத்மபூஷன் டாக்டர். ஆர். நாகசாமி.  

முற்கால தமிழக வரலாற்றில் வேத நாகரிகத்தின் செல்வாக்கு மிகுந்தியாய் இருக்கிறதென விஷமத்தனமாய் ஒரு கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இலக்கிய முரண்பாடுகளைச் சான்றுகாட்டி, திராவிட நிலப்பரப்பு எனும் கொள்கையையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். பூலாங்குறிச்சியில் உள்ள முற்கால கல்வெட்டு குறித்து அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை 1980-களின் தொடக்கத்தில் வெளியானது. அதில் பிராமணர்களுக்கு கொடையளிக்கப்பட்ட மிகத் தொன்மையான நிலப்பரப்பு என கி.பி.3-ம் நூற்றாண்டு வரை பின்னோக்கி செல்கிறார். ‘தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வெட்டியல் கண்டுபிடிப்பு’ என அவர் தலைப்பிட்டிருக்கும் தந்திரமே, பிராமணிய பண்பாட்டை பண்டையத் தமிழ்ச் சமூகத்தோடு ஒன்றிணைத்துவிட வேண்டுமென்ற அவர் அரிப்பு தென்பட போதுமானதாகிறது.

அவர் வெளியீடுகளில் உள்ள இந்த விஷமத்தனம், நான் பேசிப் பழகிய உரையாடல்களில் மிகத் தெளிவாய் தென்பட்டது. அனைத்திந்திய, தமிழ்ச் சமூக வரலாற்றை பிராமணிய விளக்கங்களால் அவர் அவதானிக்க விரும்பினார்.

நாகசாமியின் மரணத்திற்கு இந்துத்துவ கும்பல் உள்ளடங்கிய பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் வாசகம், பிராமணிய சாதிக் குணத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்துகிறது. இந்திய வரலாற்றையும் அதன் பாரம்பரியத்தையும் பிராமண சம்ஸ்கிருத வாசிப்புக் களமாய் அமைக்க மன்றாடி நிற்கும் குரல்கள் நம் காதில் கேட்கின்றன. திராவிடக் கட்சித் தலைமையிலான தமிழ்நாட்டில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களாலும் ஆதரவாளர்களாலும் தமிழ்த் தூய்மைக்கான பெரும் முட்டுக்கட்டையாய் நாகசாமி விளங்கினார். தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றிலும் பிராமணிய வேத கலாச்சாரத்தை தொடர்ந்து திணிப்பவராய், இவரை அடையாளம் காண்கிறார்கள்.

ஆனால் ரவிக்குமார் இதற்கொரு விதிவிலக்கு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆஸ்தான பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல எழுத்தாளருமான இவர் நாகசாமிக்கு பரிவு காட்டியிருக்கிறார். அவரின் சம்ஸ்கிருத முதனிலைப்பாட்டை ஓரங்கட்டியவராய் டிவிட்டரில் இரங்கல் பதிவிட்ட கையோடு, ‘தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்து கல்வெட்டையும் மிகச் சிரத்தையோடு இவர் படியெடுத்துள்ளார். கோவை செம்மொழி மாநாட்டில் டச்சு இந்தியவியலாளர் ஹெர்மன் டைகன் வாசித்தளித்த கட்டுரை ஒன்றில் – சங்க இலக்கியத்தின் காலதாமதத்தை எதிர்கொள்வதில் நாகசாமி மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்’ என வாதிட்டுள்ளார். எனவே மறைந்த தொல்லியல் ஆய்வாளரின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு ஏற்று நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகசாமியின் ஒட்டுமொத்த வாழ்க்கையைக் வெளிக்கொணரும் போது, அவரின் பங்களிப்பை மட்டும் பறைசாற்றாமல், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் தமிழக வரலாற்றின மீதும் வேத சாயம் பூச வந்த கதையும் சொல்லப்பட வேண்டும். அதனால்தான் பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிரான வரலாற்று போக்கிற்கும் – சிந்தனை மரபிற்கும் – பிற தத்துவங்களின் இருப்பு குறித்தும் அவர் பெருத்த மௌனம் சாதித்தார்.

என் வகுப்பு மாணவர்களிடம் நான் அடிக்கடிச் சொல்வது உண்டு. வேதத்திற்கு எதிராய் குரல்கொடுப்பதும் என்பது இந்திய நாகரிகத்தில் வேதத்தைப் போன்றே பழைமையானது. ஒன்றை நினைவு கூர்வது பூர்வ பொருத்தமாய் இருக்கும். நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் தலைவராய் பொறுப்பேற்றுக்கொண்டு, கல்வெட்டுச் சான்றுகளை ஆழ வாசித்து – ஆவணப்படுத்தி, வேத நாகரிகத்தை தமிழ்ச் சூழலோடு கிடத்துவிட முயன்றபோது – தென் தமிழகத்தில் மற்றொரு ஆய்வாளர் புறப்பட்டார். நா.வா எனச் ஆசையாய் அழைக்கும் நாராயணன் வானமாமலை, இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். நட்டார் பாடல்களையும் – வாய்மொழி இலக்கியங்களையும் தெருதோறும் தேடி அலைந்து, அதிகாரத்தை அசைத்துப் பார்க்கும் வரலாற்று கலாச்சாரத்தை ஆவணப்படுத்தினார்.

ஈ.எச்.கார் தன் புகழ்பெற்ற, ‘வரலாறு என்றால் என்ன?’ நூலில் பதிவு செய்வது போல ‘வரலாறு ஒரு விளக்கமாக இருப்பின்’ அதில் நாகசாமியின் கருத்து முழுமுடிவானது அல்ல எனக் கொள்வோம்.

Written by Rajesh Venkatasubramanian. He is the author of Manuscripts, Memory and History: Classical Tamil Literature in Colonial India and teaches history at the Department of Humanities and Social Sciences, IISER Mohali. Officially released in The Wire Website.

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்