வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் சிவஞானம் இளையவன்சிவா அவர்கள் ‘காலத்தின் குரல்’ நூல் பற்றி எழுதியவை..
——
வாசிப்புமராத்தான்18/2024
2024RM065
#கட்டுரைத் தொகுப்பு
காலத்தின் குரல்
தமிழில்: இஸ்க்ரா
வெளியீடு கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு டிசம்பர் 2022
பக்கம் 208
விலை ரூ.240
மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். சமுதாயத்தோடு ஒருங்கிணைந்து வாழும் மனிதன் தனது ஒவ்வொரு நகர்விலும் பிறரைச் சார்ந்தும் சமுதாயத்தோடு இணங்கியும் வாழப்பழக ஆரம்பிக்கிறான். அப்படியான சமுதாயத்தில் மனிதர்கள் முழுமையான வாழ்வை வாழ்ந்துவிடத் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு யாரோ ஒருவர் வழிகாட்டியாக பாதை அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் ஆதி மனிதனிலிருந்து இன்றைய நாகரீக யுகம் வரை மனிதன் பலவிதமான பிரச்சனைகளைச் சந்தித்து பலவிதமான இடர்பாடுகளில் உழன்று தமது வாழ்வை ஒரு நேர்கொண்ட பார்வையிலும் நல்லதொரு பாதையிலும் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறான்.
சமுதாயத்தோடு இணங்கி வாழும் மனிதனுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கும் தலைவர்கள் மற்றும் நாயகர்களின் குரல் அவர்களுக்குள் பல மாற்றங்களை நிகழ்த்தும் வளமை வாய்ந்தது. உலகில் பல நாடுகளில் தோன்றிய தலைசிறந்த மனிதர்களின் குரலாக ஒலித்து காலத்தை நம்ம முன் படம் பிடித்துக் காட்டும் இந்த கட்டுரைத் தொகுப்பு வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் புதிய புதிய சிந்தனைகளை விளைவிக்கும். அந்த சிந்தனைகளின் வழி அவர்களுக்குள் எழும் புதுப்புது எண்ணங்கள் நல்லதொரு பாதையைக் கட்டமைப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்யும்.
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் நிலவி வந்த வெவ்வேறு பிரச்சனைகளை மையமாகக் கொண்டு போராடி வெற்றியோ தோல்வியோ அதைப்பற்றி கவலைப்படாமல் மனித குலத்திற்கான தனது சிறந்த பங்களிப்பை வழங்கிய தலைவர்கள் மக்களிடையே ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்திருக்கும் இந்த காலத்தின் குரல் கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்தை அறிந்து கொண்டு எதிர்காலத்தை சிறப்புற அமைத்திட நல்லதொரு வழிகாட்டியாக அமைகிறது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நெல்சன் மண்டேலா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்ட்டின் லூதர் கிங், சேகுவேரா, வின்ஸ்டன் சர்ச்சில், சரோஜினி நாயுடு,ஆபிரகாம் லிங்கன், சூசன் அந்தோணி,பிடல் காஸ்ட்ரோ,லெனின் என பல தலைவர்களின் உரைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
அடிமைத்தனம், ஆண் பெண் சமத்துவமின்மை, இன வெறியில் மனிதர்கள் படும் பாடு, பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத போது நிகழும் விளைவுகள் , மக்களாட்சியின் அடிப்படைத்தத்துவம், விடுதலை அடைந்த வேளையில் இந்தியாவின் கட்டமைப்பும் உறுதிப்பாடும், விண்வெளியில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர், பெண்களுக்கான தொழில்கள், அணுகுண்டு யுகத்தில் அமைதியைத் தேடுவோம், மருத்துவத்தை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு சென்று எல்லோரிடமும் சமத்துவத்தை விதைத்தல், காந்தியடிகளின் மரணத்தின் காரணமாக இந்தியாவில் ஏற்பட்ட சிக்கல்கள், இந்திய விடுதலைக்கான சுபாஷ் சந்திரபோஸ் வழிமுறை என ஒவ்வொரு தலைப்பிலான கட்டுரைகளும் அன்றைய காலகட்டத்தை நமக்கு உணர்த்துகின்றன.
சமுதாய மாற்றத்திற்காகவும் சமுதாயத்தில் நிலவிவரும் பிரச்சனைகளை கண்டு அஞ்சி ஒதுங்கிவிடாமல் தைரியமாக எதிர்கொண்டு மக்களிடையே அதை பிரபலப்படுத்தி எழுச்சி பெற வைத்த குரல்கள் இந்நூலில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இன வெறியின் காரணமாக கருப்பின மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் முற்றிலும் மறுக்கப்பட அதற்காக தனது உயிரையும் கொடுத்து மக்களிடையே சமத்துவத்தை விளைவித்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் குரல் ஆகட்டும் பல ஆண்டுகளாக அகிம்சையை தனது மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தி பிரிட்டிஷ் படையையே நடுங்க வைத்த மகாத்மா காந்தியடிகளும் செய் அல்லது செத்துமடி என்ற குறிக்கோளை நோக்கி தம்மை நகர்த்தியது ஏன் என்ற குரலும் வாசிக்கும் நமக்குள் அன்றைய காலச் சூழ்நிலைகள் அவர்களின் மனங்களை எவ்வளவு தூரம் பாடுபடுத்தி இருக்கும் என்பதை உணர முடிகிறது.
ஒவ்வொரு உரையும் அழகான மொழியில் எளிமையான நடையில் வாசிக்கும் நமக்கு எந்த இடத்திலும் சிக்கலையோ இடர்பாடுகளையோ உருவாக்கி விடாமல் தெளிந்த நீரோடை போல வாசிக்கத் தூண்டுகிறது. அந்த வகையில் மொழிபெயர்ப்பு என்பதைத் தாண்டி தலைவர்களின் மீதான எழுத்தாளரின் ஆர்வமும் அவர்களின் உணர்வுகளை தனக்குள் உள்வாங்கிக் கொண்ட உழைப்பும் நூலில் திறம்பட வெளிச்சமிடுகின்றன.
இஸ்க்ரா அவர்களின் மொழிபெயர்ப்பில் செயற்கைத்தன்மையோ வலிந்து திணிக்கும்படியான கருத்துகளோ இல்லாமல் இயல்பான வாசிக்கும் தன்மையுடன் நம்மை வசீகரிக்கும் எழுத்துகளே மிளிர்கின்றன.
“”உரிமையின் பொருட்டு நாம் அடையவிருக்கும் இந்த மாபெரும் லட்சியத்தின் பெயரால் எந்தவித குற்றத்திற்கும் நாம் ஆட்பட்டு விடல் ஆகாது. சுதந்திர தாகத்தைத் தணிக்கமுடியாமல் போகும்போது குவளை நிறைய கசப்பும் வெறுப்பும் பருக நேரலாம் உடன்படாதீர்கள் தோழர்களே. நம் நெடிய போராட்டத்தின் பயணம் முழுக்க கண்ணியமும் கட்டுப்பாடுமே கடிவாளமாய் கட்டியமைக்க அரிதில் முயல வேண்டும். நம் ஆக்கப்பூர்வமான எதிர்ப்பைப் பதிவு செய்ய எந்தவிதமான வன்முறைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. உடல் ரீதியான உணர்ச்சிகள் வன்முறைக்கு மேலோங்கும்போதெல்லாம் ஆன்ம சக்தியோடு ஒன்றிணைந்து அமைதியான வழியில் கம்பீரமான உயரத்திற்கு நாம் சென்றடைய வேண்டும்”” மார்ட்டின் லூதர் கிங்.
“”உலகத் தேசங்களுக்கு நம் அளவற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் அனுப்பி வைப்போம். அமைதி, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை முன்னெடுக்கும் பணிகளில் அவர்களுக்கு துணை நிற்போம். நாம் பெரிதும் விரும்பும் தாய்நாட்டுக்கு பழைமையும் பாரம்பரியமும் பின்னிப்பிணைந்திருக்கும் இந்தியாவுக்கு எப்போதும் இளமையாக தோற்றமளிக்கும் தேசத்துக்கு நம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குவோம். தேச சேவைக்கு நம்மை அர்ப்பணிப்போம்.”” முதல் சுதந்திர தின விழாவில் ஜவஹர்லால் நேரு .
இந்து மதத்தில் இருந்து மாறி புத்த மதத்தை பின்பற்றிய இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த பி ஆர் அம்பேத்கர் அவர்கள் மக்களிடையே ஆற்றிய உரையும் அவரின் அன்றைய நோக்கத்தை வெகு சிறப்பாக எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் பாரம்பரிய சின்னங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பது பற்றியும் பாரம்பரியச் சின்னங்கள் பற்றி மக்களிடையே இருந்த அறியாமையையும் மன்னர்கள் சிலரிடம் இருந்த அலட்சிய மனப்பாங்கும் எப்படி பல அரிய புராதனச் சின்னங்களை அழித்துவிட்டன என்பது பற்றியும் பிரிட்டிஷ் பிரதிநிதியாக ஆட்சி செய்த கர்சன் பிரபு அவர்களின் குரலாக ஒலிக்கும் புராதனச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கட்டுரையும் நம்மை வெகுவாக வியப்பில் ஆழ்த்துகின்றது. நமது நாட்டை அடிமைப்படுத்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளை இட்டுச் செல்ல வந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் மீது வைத்திருக்கும் அக்கறையை இக்கட்டுரை அருமையாக விளக்கிச் சொல்கிறது.
22 தலைப்பிலான கட்டுரைகள் அடங்கிய இந்த நூலின் வழியே கால ஓட்டத்தின் வேகத்தையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களிடையே எழுச்சியை உண்டாக்கி பிரச்சனைகளை அடையாளப்படுத்தி அதற்கான தீர்வுகளை நோக்கி மக்களை நகர்த்த ஏதேனும் ஒரு தலைவர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
ஆண் பெண் சமத்துவம் இல்லாத சூழலில் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடும் காலகட்டத்தில் அரசு அவர்களை எவ்விதமான சட்டங்களின் வழியாக நசுக்க பார்க்கிறது என்பது பற்றியும் விண்வெளி யுகம் 1960 களிலேயே தொடங்கி விட்டது என்பதையும் காந்தியின் மரணம் அகிம்சையைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா என்பது குறித்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நிலவிய சூழலை ஜவஹர்லால் நேருவும் சரோஜினி நாயுடுவும் எப்படி மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர் என்பது பற்றிய கட்டுரையும் காலத்தை முன்நிறுத்துகின்றன.
ஒவ்வொரு மனதிலும் மனிதத்தை நினைத்து தேசத்தின் மீதான ஈடுபாட்டை வளர்த்து சக மனிதர்கள் மீதான கருணையை விதைத்து எல்லா காலகட்டத்திலும் உலகம் சிறப்புற வாழ மனிதர்கள் தமக்கான கடமையை முழு அர்ப்பணிப்புடனும் பேரன்பின் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை காலத்தின் குரல் நமக்கு அறிவுறுத்துகிறது.❤️