கோவை மாவட்டம் பேரூர் பகுதியை யொட்டிய வடிவேலாம்பாளையம் கிராமத்தின் பெயரைச் சொன்னால் பலருக்கு கமலாத்தாள் பாட்டிதான் நினைவுக்கு வருவார். ஒரு ரூபாய்க்கு அவர் விற்கும் ஆவி பறக்கின்ற இட்லி எல்லோரையும் வசீகரித்துவிட்டது.
கமலாத்தாள் பாட்டி குறித்த செய்திகள் வெளிவரத்தொடங்கிய நாளிலிருந்து, வடிவேலாம்பாளையத்தைச் சுற்றி வலம் வருகிறார்கள் உணவுப் பிரியர்கள். `அத்தனை அலாதியான ருசியை, பாக்கெட்டை பதம் பார்க்காத விலையில் இத்தனை வருடங்களாக இவரால் எப்படிக் கொடுக்க முடிகிறது’ என்று எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.
கமலாத்தாள் பற்றி கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்பின் சமூக ஊடகங்களில் பலரும் பாட்டியின் இட்லிக் கடை பற்றி எழுத பிரபலமாகிவிட்டார். பல தொழிலதிபர்கள் அவரின் வீட்டிற்கே வந்து பாராட்டி வருகின்றனர். சில யூடியூபர்கள் சமையல் உபகரணங்களைப் பரிசளித்துள்ளார்கள்
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தன் முகாம் அலுவலகத்துக்குப் பாட்டியை அழைத்துள்ளார். 80 வயதிலும் லாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் பலரின் பசியாற்றிவரும் பாட்டியை வாழ்த்தியதுடன், அவருக்கான தேவைகளையும் கேட்டறிந்தார். ஆனால், கமலாத்தாள் “எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
ஆனால், ஆட்சியர் அவரை விடுவதாயில்லை. பாரதப் பிரதமரின் `பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்’ கீழ் அவருக்கு வீடு கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
ஆட்சியரிடம் பேசினோம். “கமலாத்தாள் பாட்டி 30 வருடங்களாக குறைந்த விலையில் பசியாற்றுகிறார். அவருக்கு உதவி செய்ய முற்பட்டாலும் தீர்க்கமாக மறுக்கிறார். இருந்தும், அவரைக் கௌரவிக்கும் வகையில் அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும்” என்றார்.