திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘SRV TIMES’ இதழில் ‘எழுத்தாணி முதல் வி.ஆர். வரை’ எனும் குறுங்கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன்.நன்றி : Parimala Devi
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், இன்றைய பாண்டிச்சேரி நகரில் உள்ள பொம்மையாபாளையம் எனும் சிற்றூரின் கடற்கரையில் தம் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார், சிவப்பிரகாசர். மானுட நன்னெறிகளை உணர்த்தும் 41 பாடல்களை கடற்கரை மணலில் அவர் எழுத, சீடர்கள் அதை அச்சுப்பிசகாமல் அப்படியே எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதி கொண்டனர். ‘நன்னெறி’ எனும் அறநூல் உருவான வரலாறு இது. ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஆசிரியர்கள் இப்படித்தான் பாடம் கற்பித்தார்கள்.
ஆனால் திடீர் பாய்ச்சலாக இன்றையக் கல்வி நிலை அடைந்திருக்கும் விஸ்வரூப வளர்ச்சியைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதேசமயம் தேக்கம் தென்படுகிறதோ எனும் அச்சம் தோன்றாமல் இல்லை. வி.ஆர். உடன் உறவு கொண்டாடும் நாம், எழுத்தாணி காலத்திலிருந்து எப்படி பரிணமித்தோம் என்று நினைவிருக்கிறதா?
அப்போதெல்லாம் காகிதம் இல்லை. பனையோலையில் எழுதினார்கள் என்பதை அறிவோம். ஆனால் எழுதுபொருள் அங்காடியில் இன்று கொட்டிக் கிடக்கும் டஜன் கணக்கான எழுதுகோல்களைப் போல் எழுத்தாணியிலும் பல ரகங்கள் உண்டு. மரத்தாலும் தந்தத்தாலும் உலோகத்தாலும் அவை செய்யப்பட்டன. ஓலையை நறுக்குவதற்காக ஆணியின் பின்பக்கம் கத்தி வைத்த மடக்கெழுத்தாணிகள் உண்டு.
இந்தக் கத்தி வைத்த பழக்கம் பலகாலம் நம்மைப் பீடித்துக் கொண்டது. பறவையின் இறகை மைத்தொட்டு எழுதுகையில் நுனியைக் கூர் தீட்டவும், காகிதப் பென்சிலின் மொன்னையை சீர் செய்யவும் பலகாலம் கத்தியைப் பயன்படுத்தினார்கள். இன்றைய ஃபவுண்டைன் பேனா வருவதற்கு முன்பு எஃகினால் செய்யப்பட்ட பேனா நுனியை மைக்கூட்டில் நனைத்து எழுதுவது பெருவழக்காக இருந்தது.
ஆண்டுக் கணக்கு முழுவதையும், வருடத்தின் ஒரேநாளில் உட்கார்ந்து கணக்குப் பிள்ளைகள் பலர் சூழ்ந்து எழுதி முடிப்பார்களாம். அப்போது அவர்களுக்கு முன்னிருக்கும் ஒரே மைக்கூட்டைத்தான் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். அதனால் அதற்கு ‘ஜமாபந்தி மைக்கூடு’ என்று பெயர். பின்னாளில் பலருக்கும் பயன்படும் பிறிதொருவரின் பொருளை ‘ஜமாபந்தி மைக்கூடு’ எனச் சொல்வது வழக்கம்.
பேனாக்கள் வளர்ந்த சமயம் பென்சில்களும் மெல்லமாய்ப் படையெடுத்தன. காகிதப் பென்சில், சிலேட்டுப் பென்சில் என அவற்றில் இருவகை உண்டு. நீண்ட நெடிய சிலேட்டுப் பென்சில்களை பல துண்டமாக வெட்டி அதை எச்சில் தொட்டு அழுத்தந் திருத்தமாக எழுதிப் பார்ப்பதிலொரு அலாதி இன்பம் இருக்கிறது. எழுத்தாணியில் இருந்து சிலேட்டுப் பென்சில் வரை உருவெடுத்த வளர்ச்சி பூதாகரமானது. ஆசிரியர்கள் கருப்பு வண்ணமடித்த மரப்பலகைகளில் சுண்ணக்கட்டிகளை வைத்து பாடக் குறிப்பு எழுதினர். பின்னாளில் அது பச்சை வண்ணப் பலகையானது.
ஆனால் இப்போது சுண்ணக்கட்டிகளை மார்க்கர் பேனாக்களும், சிலேட்டுக் குச்சிகளை பால் பாய்ண்ட் பேனாக்களும் பெயர்த்துவிட்டன. ‘வெள்ளைத்தாளில் பேனா இயங்குவதைப் பார்த்தால் வெண் பளிங்கு மேடையில் குதிரை ஓடி வருவதைப் போல அல்லவா இருக்கிறது?’ என்று கி.வா.ஜ. வியந்து சொன்னது நினைவில் இருக்கட்டும்.
இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து, சூரியக் குடும்பத்தின் வரைபடத்தைச் பல்வேறு நிற சுண்ணக்கட்டிகளைக் கொண்டு அரும்பாடுபட்டு கரும்பலகையில் வரையும் ஆசிரியர்கள் அப்போதிருந்தார்கள் எனச் சொன்னால் ஆச்சரியம் பீறிட்டுப் பார்ப்பார்களோ என்னவோ. ஏனென்றால் இந்நிலை இப்போது மெல்லமாக மாறியிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலேயே ஸ்மார்ட் போர்ட் கொண்டு பாடம் கற்பிக்கும் முறை நம்மூர் பள்ளிக்கூடங்களில் பெருக்கம் கண்டது.
பாடத்திட்டத்திற்கு ஏற்ற பிரத்தியேக காணொளிகளும் இதற்கென்று விமர்சையாக உருவாக்கப்பட்டன. ‘காற்று மாசு’ குறித்த பாடமொன்றிற்கு ‘மீனாவும் டீனாவும்’ மார்கெட் சென்றுவருவதற்குள் தாம் கண்ட வெவ்வேறு வகையான காற்று மாசுவை ‘டோரா’வைப் போல் இனம்கண்டு சொன்ன குறும்படத்தின் ஞாபகம் பத்தாண்டு கழித்தும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
புத்தகத்தில் இரட்டைப் பரிமாணத்தில் கண்ட காட்சிகள் திரையில் அங்குமிங்கும் ஓடி பாடம் சொல்வது யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் காணொளிக் காட்சியிலிருந்து வி.ஆர். நுட்பத்திற்கு அடியெடுத்து வைக்கும் அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பத்தை நாம் இப்போதே சுவீகரித்துக் கொள்ள வேண்டும். தலைமுறைதோறும் நவீனத்தை உள்வாங்கித்தான் இத்தனைத்தூரம் நடை பயின்றிருக்கிறோம் என்பது வெள்ளிடை மலை.
‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என பாரதி சொன்னார். ஆனால் இந்த எழுதுகோலும் எழுத்தும் வேண்டாம் எனச் சொல்கின்றனர் வி.ஆர். நுட்பம் அறிந்தவர்கள். வரலாற்றுப் பாடத்தில் சோழப் பேரரசின் பட்டைத் தீட்டப்பட்ட நகர நிர்வாகமும், தஞ்சைப் பெரிய கோயிலின் பிரம்மாண்டமும் வார்த்தைகளால் மட்டும் விவரிக்கப்படுகின்றன. ஆனால் சோழப் பேரரசின் எல்லைக்குள் நின்று அதன் நிர்வாகத்தையும், தஞ்சைக் கோயிலின் விமானத்தில் ஏறி நின்றுகொண்டு அதன் நீள அகலங்களையும் வியந்து பார்க்கும் அனுபவத்தையல்லவா வி.ஆர். வழங்குகிறது. இயற்பியல் படிக்கும் மாணவன், ஏ.சி & டி.சி. மோட்டார் இயங்குவதை வகுப்பறையில் உட்கார்ந்து கொண்டே நேரடியாக காண முடியும். கண்டத்தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு இமயமலை உருவானதை ஒய்யாரமாய் காபி குடித்துக் கொண்டே கண்ணெதிரில் காணலாம். கீழடி, மொகஞ்சதாரோ போன்ற வரலாற்றுச் சிறப்பிடங்களை விர்ச்சுவலாக சுற்றிப் பார்க்கலாம்.
வி.ஆர். என சுருக்கமாக வழங்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி நுட்பமானது, பெயருக்கேற்றார் போல் கணினியில் உருவாக்கப்படும் தோற்றங்களை மெய்யுருவங்களாய் காட்டும் திறன் பெற்றது. சமகாலத்தில் இந்நுட்பத்தை விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் இராணுவம் போன்ற துறைகளில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, நார்வே, பின்லாந்து, சிங்கப்பூர் முதலான சில நாடுகள் மட்டுமே கல்விப்புலத்தில் இந்நுட்பத்தை வெற்றிகரமாகச் சோதித்துள்ளன.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) முதலான துறைகளில் மாணவர்களின் அடிப்படைப் புரிதலை மேம்படுத்த வி.ஆர். ஒன்றே எதிர்காலத்தின் வழி என உலகின் முன்னணி கல்வியாளர்கள் கருதுகின்றனர். புத்தகம் இரட்டைப் பரிமாணம் உடையது. ஆனால் பாடத்திற்கு உட்பட்ட எதுவொன்றையும் 360° கோணத்தில் முப்பரிமாண காட்சியாய் வி.ஆர். நுட்பத்தில் காணும்போது புரிதலுடன் தெளிவும் பிறக்கும்.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார் கல்விப் பிரிவின் துணைத் தலைவராக 15 ஆண்டுகளுக்குமேல் பணிசெய்த அந்தோணி சால்சிடோ பேசுகையில், “ இவ்வுலகில் திறன் குறைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. வாய்ப்புகளுக்குத்தான் பஞ்சம் இருக்கிறது. நாம் அந்த இடைவெளியை [வி.ஆர்.] தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு நிரப்பவேண்டும். இதுவரையிலும் இல்லாதபடி அசாத்திய திறன்மிக்க ஆசிரியர்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள்” என கல்வி சார் தொழில்நுட்பக் கூடுகை ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஹார்வார்ட் கல்வியியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேரா. கிறிஸ் டீடே அவர்கள், 22 வருடங்களுக்கு மேலாக 21ஆம் நூற்றாண்டின் கல்வி வளர்ச்சியில் தொழில்நுட்பங்களின் பங்கை ஆய்ந்து வருகிறார். வி.ஆர். நுட்பம் தலையில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு, கை – கால்களை அசைத்து ஆடும் விளையாட்டு போல் அல்லவா இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “கல்வி கற்பதற்கு விளையாட்டு மாதிரிதான் உகந்தது என நான் உறுதியாகச் சொல்ல மாட்டேன். ஆனால் வெற்றியாளர், தோல்வியாளர் எனப் பாகுபாடு காட்டும் மதிப்பெண் முறை கல்விப் பயிற்றுவதற்கு உகந்ததல்ல என்பது என் ஆதர்ச முடிவு. வி.ஆர். போன்ற போலச் செய்தல் நுட்பங்களில் ஆச்சரியமூட்டும் பல உருவகச் செயல்களில் மாணவர் ஈடுபடுகின்றனர். கல்விப் பயில்தல் சாகசச் செயலாக மாறுகிறது. தலைகால் புரியாத வகுப்பறையின் தரிசுச் சுழலைக் காட்டிலும் வி.ஆர். நுட்பம் பலமடங்கு மேலானது” என்கிறார்.
வி.ஆர். நுட்பம் குறித்து பேச்சு அதிகரிக்கையில் கல்விச் சூழலில் ஆசிரியர்களின் பங்கு குறைந்துவிடுமோ என அச்சம் எழுகிறது. ஆனால் உண்மை அப்படியல்ல. இவையெல்லாம் பயிற்றுவிக்கும் உபகரங்கணங்கள் மட்டுமே. “வி.ஆர். என்பது ஸ்மார்ட் போனின் பரிணாமம் அல்ல. காலை எழுந்ததும் வி.ஆர். ஹெட்போனை மாட்டிக்கொண்டு மெயில் பார்க்கத் தொடங்குவதாக நம் அன்றாடம் மாறக்கூடாது” என்று எச்சரிக்கிறார் ஜெரமி பெயிலன்சன். 25 ஆண்டுகளுக்கும் மேலாக விர்ச்சுவல் ரியாலிட்டி குறிந்து ஆய்ந்து வரும் இவர், 30 நிமிடங்களுக்குமேல் தொடர்ச்சியாக வி.ஆர் பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்போடு இருக்கிறார்.
வி.ஆர். நுட்பத்தின் பலன்கள் உவப்பானவை. ஆய்வக வசதி இல்லாத பள்ளிக்கூடங்களில் கூட மெய்நிகர் உண்மையின் மூலம் அருவமான ஆய்வகச் சோதனைகளை மாணவர்கள் கண்முன் செய்து பார்க்க வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தனை வசதிகரமான திட்டத்தை சுவீகரிப்பதில் சில சிக்கல்களும் உண்டு. நம் நாட்டிற்கும் கல்வித்திட்டத்திற்கும் தேவையான வி.ஆர். பாடத்திட்டங்களை உருவாக்கும் பெரும் சவால் நம்முன் இருக்கிறது. ஆசிரியர்கள் இதைக் கையாளும் நுட்பத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தரம் குறைந்த இயந்திரங்களைப் பயன்படுத்தினால் கழுத்து வலி, கண் வலி முதலான உபாதைகள் ஏற்படலாம்.
இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி, நாம் இந்த வி.ஆர். நுட்பத்தில் தேர்ச்சி பெற்று அமல்படுத்தவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
உலகின் வளர்ந்த நாடுகள் இந்த அசாத்தியத்தை எட்டிப்பிடிக்க இருபது ஆண்டுகால உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற தேசத்தில் இந்நுட்பங்கள் கரும்பலகை போல் முழுமைபெற சில பத்தாண்டுகள் ஆகும். ஆனால் அதற்கு தொடர்ச்சியான வேலைப்பாடுகள் அவசியம். புனேவைச் சார்ந்த ஃபயர்பேர்ட் வி.ஆர். நிறுவனம் கிராமப்புற கல்விக்கூடங்களில் இச்சோதனையைப் பரிசோதித்திருக்கிறது. சென்னையைச் சார்ந்த ‘மெய்நிகரா’ நிறுவனம் 5 அரசுப்பள்ளியில் வி.ஆர். ‘மெட்டா கல்வி’ என்றழைக்கப்படும் வி.ஆர். ஆய்வகங்களை நிறுவியுள்ளது.
சூரிய ஒளியை நிலா பிரதிபலிக்கிறது என்பதை இனியும் புத்தக வரிகளுக்கிடையில் வாசிக்காமல் கண்ணெதிரில் காணும் காலம் வாய்க்கும்போது நாம் தொடக்கநிலை கல்வியில் பல தூரம் முன்னோக்கிச் சென்றிருப்போம். புகழ்பெற்ற கல்வியாளர் ஜார்ஜ் கௌரோஸ் சொல்வதுபோல், “தொழில்நுட்பங்களால் ஆசிரியப் பணியைப் பெயர்க்க முடியாது. ஆனால் ஒரு மிகச் சரியான ஆசிரியரிடம் ஒப்படைக்கும்படும் தொழில்நுட்பம் மாணவனின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்.”