காலநிலை மாற்றம் என்பது ஏதோ ஒரு நாட்டில் மட்டும் நடக்கும் பேரழிவு அல்ல. மொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரபாயம். அதன் அறிகுறிகள் அமேசான் முதல் இந்தியா வரை எல்லா இடங்களிலும் தெரிகிறது.
நான் பல கற்பனையான கதாப்பாத்திரங்களில் நடித்து, கற்பனையான பிரச்னைகளிலிருந்து மீள்வதைப்போல, காலநிலை அவசரத்தையும் மக்கள் கற்பனையான ஒன்று எனவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்
– லியோனார்டோ டிகாப்ரியோ
அப்படி என்ன காலநிலை அவசரம் நம்மை பாதிக்கப்போகிறது என்ற கேள்வியே அபத்தமானது. ஏனென்றால் அதன் பாதிப்புகளை மனிதகுலம் ஏற்கெனவே நுகரத் தொடங்கிவிட்டது.
தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில்தான் மொத்த பூமியின் நுரையீரலும் சுவாசம் பெறுகிறது என்பது புகழ்மொழி அல்ல. உலக மக்களின் 20 சதவிகித ஆக்ஸிஜன் தேவையை உலகின் மிகப்பெரிய மழைக்காடான அந்த அமேசான் காடே பூர்த்தி செய்கிறது. ஒன்பது நாடுகளைத் தாண்டியும் அடர்ந்து பரவியிருக்கும் இந்தக் காட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தீ, தகதகவென வளர்ந்து வருகிறது. 10 லட்சம் பழங்குடி மக்கள் வசிக்கும் இக்காட்டில் வேறெங்கும் காணப்படாத 40,000-க்கும் மேற்பட்ட தாவரங்களும் 1,300 இனத்தைச் சார்ந்த பறவைகளும் அழியும் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது.
பிரேசில் நாட்டு அதிபரான ஜேய்ர்போல் சனேரோ தனது வலதுசாரி கொள்கையுடன், கார்ப்பரேட் நிறுவனங்களின் தூண்டுதலால் இக்காட்டுத் தீயை ஏற்படுத்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் போக்கில் பிரேசில் மக்களிடையே எதிர்ப்பு கோஷங்களைப் பெற்றுவருகிறார் சனேரோ.
கிட்டத்தட்ட காட்டுத்தீ எரிந்துவரும் அமேசோனாஸ் மற்றும் ரோண்டானியா பகுதிகளிலிருந்து 2,700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாவ் பாலோ நகரம் சுமார் ஒரு மணிநேரம் வானம் முழுதும் புகைமூட்டத்தால் இருட்டடிப்பைச் சந்தித்துள்ளது. சூரியனே கண்ணில் தெரியாதபடி, அத்தனை தூரம் கடந்துசென்றுள்ள அந்தப் புகை, உலகத்துக்கு முன்வைக்கும் எச்சரிக்கையாகத் தெரிகிறது.
இதன்மூலம் ஆக்ஸிஜன் அளவு முறையே சரிந்து, கார்பன் டை ஆக்சைடை சமன்செய்ய மரங்கள் இல்லாமல் போகலாம். கடந்த எட்டு மாதத்தில் மட்டும் 75,000-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்ட அமேசானில், 2013-க்குப் பின்னர் இதுவே அதிக அளவீடு ஆகும். ஈக்வடோரியன் அமேசானின் பாஸ்டாசா பகுதியைச் சார்ந்த வரானி பழங்குடி இன மக்கள் தீயை அணைக்கக் கோரியும், காலநிலை அவசரத்தை முன்வைத்தும் போராடத் தொடங்கியுள்ளனர்.
சைபீரியா
தன் குழந்தையை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வீடு நோக்கி செல்லும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருந்தார் ஸ்வெட்லனா ட்ஃப்ளையகோவா. சைபீரிய காட்டுத்தீ புகையிலிருந்து தப்பித்து வந்த அவர், “அது என் உடலின் முழுப்பகுதியையும் நிரம்பிக்கொள்ள வருவதுபோல இருந்தது” என்கிறார். அவர் வசித்து வந்த பொகுசானி பகுதி, காட்டுத்தீ எரியும் கிரஸ்னோயார்ஸ்க் பகுதியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. “நான் மூச்சுவிடுவதற்கு ஒன்றுமே இல்லை. என் குழந்தை உட்பட பெரியவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக இருமிக்கொண்டே இருந்தோம்” என்கிறார் அவர்.
ரஷ்யாவுக்கு கோடைக்கால காட்டுத்தீ பழகிய ஒன்றுதான் என்றாலும், இந்த வருடம் சராசரிக்கும் அதிகமாகவே பரவியுள்ளது. கடந்த ஜுலை மாதம் சைபீரிய நாட்டின் கிரஸ்னோயார்ஸ்க் க்ரை, சகா குடியரசு, சபேகால்ஸ்கி க்ரை ஆகிய மாகாணங்கள் நெருப்புக்கே தீ விருந்து படையலிட்டன என்று கூறுவது மிகையல்ல. கிட்டத்தட்ட 2.6 மில்லியன் ஹெக்டேர் நிலம் காட்டுத்தீயால் சின்னாபின்னமானது.
“அதிக அளவில் கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகியுள்ளது பிரச்னை அல்ல, அவற்றை மறுசுழற்சி செய்ய போதிய மரங்கள் இல்லை என்பதே பிரச்சனை” என்கிறது கிரீன்பீஸ் அமைப்பு. மக்கள் அதிகம் புழங்காத பகுதிகளிலும், உட்புக முடியாத பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டதால் அதை அணைப்பது பெறும் சவாலாக இருந்ததாக ரஷியாவின் வனப்பாதுகாப்புத் துறையின் விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி வரை 161 காட்டுத்தீ சம்பவங்களுடன் போராடி 1,40,000 ஹெக்டேர் நிலத்தைக் காப்பாற்றி, மீதி நிலங்களை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
கிரீன்லாந்து
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் காற்று மற்றும் கடல்சார் ஆய்வு நடத்திவரும் அறிவியலாளர் டேவிட் ஹாலண்ட், கிரீன்லாந்தில் நடந்துவரும் இயற்கை மாற்றங்களை ஆய்வுசெய்து இப்படி குறிப்பிடுகிறார், “இந்தக் கிரகத்தின் முடிவு நெருங்குகிறது.”
இந்த ஆண்டு கோடைக்காலம், கிரீன்லாந்தில் வரலாறு படைத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் சட்டையைக் கழற்றிவீசும் அளவுக்கு 52 டிகிரி வரைக்கும் வெப்பம் படர்ந்து பனிப்பாறைகள் எல்லாம் உருகத் தொடங்கின. ஜுலை 31-ல் தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை, குறிப்பிட்ட இந்த ஐந்து நாள்களில் மட்டும் 58 பில்லியன் டன் பனி உருகியுள்ளது.
கோடைக்காலம் முழுவதிலும் சுமார் 440 பில்லியன் டன் பனி கிரீன்லாந்தில் மட்டும் உருகியுள்ளதாகத் தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் குறிப்பிடுகிறது. இது கிட்டத்தட்ட தெலங்கானா மாநிலத்தையே மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அளவு ஆகும்.
கானரித் தீவு, ஸ்பெயின்
“வெப்ப அலைகளால் ஏற்பட்ட இந்த தீ, மிகவும் மோசமாக, கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது” என்று பத்திரிகையாளர்களிடம் கடந்த ஆகஸ்ட் 19 அன்று அறிக்கை விடுத்தார் கானரித் தீவின் அதிபர் ஏஞ்சல் விக்டர் டோரஸ். ஸ்பெயின் நாட்டு எல்லைக்கு உட்பட்ட இந்தத் தீவு, சுற்றுலாவாசிகளுக்கு மட்டுமல்லாமல் பண்டைய லத்தீன் எழுத்தாளர்களுக்கும் பிரியமான பகுதியாகும்.
ஆயிரம் தீயணைப்பு வீரர்களும், 14 தீயணைப்பு ஹெலிகாப்டர்களும், விமானங்களும், ஏனைய குழுக்கள் முயன்றும் 10,000 ஹெக்டேர் காடு எரிந்து சாம்பலானது. இது குறித்து அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் லூயிஸ் பிளானஸ், “கானரித் தீவில் இதுவரை இப்படிப்பட்ட காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதில்லை. ஸ்பெயின் நாட்டில் கூட சமீபத்திய ஆண்டுகளில் இவ்வளவு கொடூரமான தீவிபத்து நிகழவில்லை” என்றிருக்கிறார்.
யுனஸ்கோவில் கிரான் கானரி பகுதிக்கான அவசரநிலை பாதுகாப்பு துறையின் தலைவராக விளங்கும் ஃபெடரிக்கோ கிரில்லோ, “இது அழிவுக்கும் அப்பாற்பட்டது” என்று எச்சரித்துள்ளார்.
சீனா
சராசரியாகப் பொழியும் மழை அளவை, 51 சதவிகிதம் தாண்டியபின்னும் மீண்டும் மழை வருமென எதிர்பார்க்கப்படுகிறது என்று சீன மாகாண தொலைக்காட்சி வெள்ளத்தின்போது அறிவித்தது. 1961-ம் ஆண்டுக்குப் பின்னர், அதிக அளவு மழைப்பொழிவை பதிவு செய்து வெள்ளம் நீர் வாழும் நாடானது சீனா. “குறிப்பாக, கிழக்கு மற்றும் தென் சீனாவில் 80,000 மக்கள் வீடுகளை இழந்து, பயிரை இழந்து வெளியேற்றப்பட்டனர்” என்று அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் எதிர்பாராத வானிலை மாற்றம் திடீர் திடீரென பதிவு செய்யப்படுகிறது. தீவிர மழைபொழிந்த இதே ஆண்டு வரலாறு காணாத வெப்பமும் கணக்கிடப்பட்டுள்ளது. 1,26,100 ஹெக்டேர் விவசாய நிலமும், 1,600 வீடுகளும் வெள்ளத்தில் சின்னாபின்னமாயின. இதனால் 392 மில்லியன் டாலர் பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தால் தத்தளித்த நாடுகள்
ஆஸ்திரியா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ஆண்டு மட்டும் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய-மேற்கு அமெரிக்காவில் மார்ச் மத்தியில் மிசோரி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் சேதமாகியுள்ளன. ஆண்டுத் தொடக்கத்திலிருந்து மார்ச் தொடக்கம் வரை சீராக 20 – 30 டிகிரியில் சீராக இருந்த வெப்பநிலை மார்ச் 11-ல் திடீரென 60 டிகிரியைத் தொட்டது. இதனால் இல்லினோஸ், லோவா, மிசோரி ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இந்தியாவிலும்கூட ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கேரளாவில் வெள்ளத்தால் 121 பேர் இறந்துள்ளனர். ஒடிசாவில் 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்படி உலகம் முழுவதுமே பருவநிலை மாற்றம் சூழலியலில் பல்வேறு இன்னல்களைக் கொண்டுவந்திருக்கிறது. உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காமல் போனால், எதிர்காலத்தில் இந்தப் பூவுலகு இப்படியே இருக்காது.