நாங்குநேரி அசம்பாவிதத்தை ஒட்டி பல கருத்துகளும் சமூகநீதி அறங்களும் இணையத்திலும் ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டன. குற்றம் இழைத்த மாணவர்களின் சாதியப் பின்னணி முதலாக அவர்களுடைய குடும்பத்தினரின் அரசியல் பின்னணி வரையிலான அலசல்களில் தெரிவிக்கப்பட்ட பல கருத்துகளிலும் எனக்கும் பெரிய மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால், இந்த மாணவர்களையும் இந்தச் சம்பவத்தையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, “இந்த 2கே கிட்ஸே இப்படித்தான்; மிகவும் மோசம்; எவ்விதப் புரிதலும் அற்றவர்கள்” என்றெல்லாம் உருவாக்கப்படும் கருத்துக்கு அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஒருவனாகப் பதில் அளிப்பது முக்கியம் என்று கருதுகிறேன்.
நீங்கள் நன்றாக யோசித்துப் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். நாங்குநேரி சாதியத் தாக்குதல் போன்ற தீவிரப் பிரச்சனைகளில் மட்டுமன்றி இசை, சினிமா, இணையம், அரசியல், கல்வி என எந்தவொரு விஷயத்திலும் அவர்களுக்கு அரைவாசி அறிவுகூட கிடையாது என்று ஒரு தலைமுறையை ஒட்டுமொத்தமாகக் கேவலப்படுத்தும் வன்மம் இன்று சிந்தனை விதைகளாகத் தூவப்படுகின்றன.
முந்தைய தலைமுறையினருக்கு, அரும்பும் தலைமுறை மீது எப்போதும் ஒரு நிறைவின்மை இருக்கும். தந்தை – மகன் உறவில் இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ளலாம். ஆனால், இன்று பேசப்படுவதுபோல, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தினரைக் குறிவைத்துத் தாக்குதல் இதற்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை.
காலம் மாறுகிறது
மனிதச் சமூகம் பரிணாம வளர்ச்சி அடைந்துதான் இந்நிலை அடைந்திருக்கிறது என்பதை நம்ப மறுக்கும் டார்வின் காலத்து அரைவேக்காட்டுச் சமூகம் இப்போது இல்லை என நம்புகிறேன்.
மனிதன் நாளும் பரிணமித்துக்கொண்டுதான் இருக்கிறான் என்பதை 2005இல் ‘ஆர் ஹூமன்ஸ் ஸ்டில் எவோல்விங்?’ (Are humans still evolving? – Michael Balter – Science, 2005) நடந்த தொடக்கக் கால ஆராய்ச்சிகளே மெய்ப்பித்திருக்கின்றன.
அடுத்து வருபவன் நம்மைப் போல் இல்லையே என்று பயம் எழுகிறது. அவ்வகையில் ஒவ்வொரு தலைமுறையும் எதிர்வரும் சந்ததி மீது அச்சம் கலந்த போதாமையைத் திணிக்கின்றன என்றும் இதைக் கருதலாம்.
மனிதகுலம் தொடர்ந்து முன்னகர்கிறது என்றால், அது அடுத்தடுத்த தலைமுறைகளின் வளர்ச்சியால்தானே சாத்தியம் ஆகிறது? கடந்த இரு நூற்றாண்டுகளையே எடுத்துக்கொள்வோம். நிச்சயமாக 1800களில் இருந்ததுபோலான சூழல் 1900களில் இல்லை. 1950 போல் 2000இல் இல்லை. ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்ப்புடன் கூடிய வளர்ச்சிகளைச் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். ஆனால், பேசுகையில் ஏன் நேர் எதிராகப் பெரியவர்கள் பேசுகிறார்கள்?
அதிலும் முன் எப்போதையும்விட மிக அழுத்தமான விமரிசனங்களை ஈராயிரம் குழவிகள் கடக்க வேண்டி உள்ளதோ எனச் சிந்திக்கிறேன். ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், “திருடனுங்க இல்லாத ஜாதி இருக்கா நட்ராஜ்?” அதையே நான் மாற்றிக் கேட்கிறேன், “தப்பு செய்யாத தலைமுறை ஏதும் உண்டா?”
தவறிழைக்காத தங்கமான்களே…
தன்னுடைய அரைவேக்காட்டுத்தனங்களைப் பரிசீலனை செய்திராத ஒரு தலைமுறைதான், எதிர்வரும் தலைமுறை மீது வன்மம் வழிந்தோடும் தாக்குதல்களை முன்வைக்கிறது என்று பதிலுக்கு நாங்கள் சொல்லலாமா?
‘ஈராயிரம் குழவிகளுக்கு என்ன தெரியும்’ என்று எள்ளலாகப் பேசும் நீங்கள், உங்கள் பதின் பருவத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
திருநர்களை ‘ஒன்பது’ என்று தரம் தாழ்த்தி விமர்சிக்கும் நச்சு கலந்த நகைச்சுவைத் துணுக்குகளுக்குச் சில்லறைகளை விசிறியெறிந்தீர்கள்.
சாதி துவேஷத்தைத் தூக்கிப் பிடிக்கும் மகா மட்டமான திரைப்படங்களைப் பிளாக்பஸ்டர் ஆக்கி, திரையின் நாயகர்களை நிஜத்தில் கொண்டாடினீர்கள்.
இன்றைய வேங்கைவயல் சம்பவத்திற்கு நாங்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறோம் என்று கேள்வி கேட்கும் முன் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய உங்கள் வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கலமா? 1926ஆம் ஆண்டிலேயே தலித்துகள் நீர் எடுக்கும் ஜோலார்பேட்டை பொதுக் கிணற்றில் மலம் கலந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் நீங்கள் (ஆதாரம்: தலித்துகளும் தண்ணீரும் – கோ.ரகுபதி).
ஜோலார்பேட்டை பொதுக் கிணற்றில் மலம் கலந்த அன்றைக்கே அதற்கு விடை கண்டிருந்தால், வேங்கைவயல் இன்று நடைமுறைச் செயலாகியிருக்குமா?
ஜோலார்பேட்டை விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர விரும்புவதாக, சென்னை மாகாண அவையில் ஜே.ஏ.சல்தன்கா என்ற உறுப்பினர் சொன்னதற்கு, அவையில் இருந்தவர்கள் எல்லோரும் கொள்ளென்று சிரித்தார்களாம்! ஈராயிரம் குழவிகளும் அதே சமூகத்தின் நீட்சிதானே? நீங்கள் உட்செரித்து வைத்த வினையின் பயிர் இது என்பது புரிந்துபடவில்லையா?
அனுபவம் பெற அனுமதியுங்கள்
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏர்.ஆர்.ரகுமான் என்ற காலவரிசையில் அனிருத்தை தங்கள் தலைமுறைக்கான இசைஞராக இவர்கள் தேர்ந்தெடுத்ததில் வியப்பென்ன இருக்கிறது?
உங்கள் சமகாலத்தைப் பிரதிபலித்த கிராமத்துப் பாடல்களையும், கல்லூரி பாடல்களையும் நீங்கள் கொண்டாடித் தீர்த்ததுபோல் அவனைச் சமகாலத்தில் வாழ அனுமதியுங்கள். வயல்வெளிகளும் ஆற்றங்கரைகளும் அருகிவிட்ட சூழலில், இரைச்சலான நகரத்தில் வாழப் பழக்கியவனிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?
அப்படியே அவன் பின்னோக்கிச் சென்று இளையராஜாவின் ‘ராஜராஜ சோழன் நான்’ பாடலை அவனாகக் கண்டறிந்து, குறைத்து மதிப்பிடப்பட்ட பாடலென்று சொல்லி ரசித்தால், அதில்தான் உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது? ‘இளையராஜாவை ஓவர்ரேட்டட் என்கிறான் அசடு’ என்று டஜன் கணக்கில் ரைட்-அப் எழுதாவிடில் உங்கள் தலைமுறைப் பெருமையில் இடிவிழுந்துவிடுமா?
முகநூல் நினைவுச் சுவற்றில் பழைய பதிவுகளைப் பார்த்து எப்படியெல்லாம் இருந்திருக்கிறேன் என்று சுயவிமர்சனம் செய்யும் நீங்கள், ஈராயிரம் குழவிகள் இன்னும் பதின் பருவத்தைத் தாண்டவில்லை என்று மறந்துவிடாதீர்கள்.
ஹேண்டில் வித் கேர்
ஈராயிரம் குழவிகள் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டவர்கள் அல்ல. உங்கள் வீட்டிலும் வளர்கிறார்கள். முந்தைய காலக்கட்டம் போலல்லாமல் நிறைய மூலங்களில் செய்திகளை உள்வாங்குகிறார்கள்.
வெறும் முப்பது நொடி யூட்யூப் ஷார்ட்ஸ் வீடியோவால், ஓர் பதின் பிள்ளையின் அரசியல் புரிதலை முற்றிலுமாக மாற்ற முடியும். ஆகவே, உங்களைக்காட்டிலும் எளிதில் தவறிழைக்க உந்தப்படும் தலைமுறையை, கண்ணாடிப் பாத்திரம்போல் பதிவிசாகக் கையாளாமல், எந்நேரமும் குச்சி வைத்து குடைவதால் யாருக்கு லாபம்?
கூட்டுப் புரிதல்
நாம் எல்லோரும் சமூக வலைத்தளத்தின் கூட்டுப் புரிதல் என்ற முடிவிலியில் மாட்டிக்கொண்டுள்ளோம். பிரபலம் சொல்லும் கருத்து எப்போதும் சரியென்று குழம்பிக்கொள்கிறோம். ‘ஜெயிலர்’ திரைப்படம் ரஜினியின் கம்-பேக் என்று ஒருவர் சொன்னால், ஆம் என்று எல்லோரும் அவர் பக்கம் செல்கிறோம். நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்றோர் திரைமொழியை வன்முறைக் களமாக மாற்றியுள்ளனர் என மற்றொருவர் சொன்னால் அதற்கும் ஆமாம் போடுகிறோம்.
இதுபோன்றதொரு சமூகக் கட்டமைப்பில் ஈராயிரம் குழவிகள் அதிகமாகவே சிக்கிக்கொண்டுள்ளனர்.
மனிதன் நாளும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான். அவன் ஒருபோதும் வாழ்வதில்லை என்று ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. ஈராயிரம் குழவிகள் மட்டும் 15 வயதிலேயே புத்தராக வேண்டும் என்றால் எப்படி? “என்னுடைய நண்பர்கள் ஏழெட்டுப் பேர்கள் சொல்லி வைத்ததுபோல, தொடர்ந்து அவரவரின் 42வது வயதிலே ஒருவர்பின் ஒருவராக செத்துக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் 42 வயதில் இறந்துவிடுகிறார்கள். நாமும் 42வது வயதில் இறந்துவிடப்போகிறோம் என்று எண்ணினேன். ஆனால், எனக்கு 43 – 44 ஆகியும்கூட நான் சாகவில்லை. பிறகுதான், நான் பொதுத் தொண்டில் இறங்க ஆரம்பித்தேன்” என்று பெரியார் சொல்கிறார்.
அனுபவங்களைச் சேகரம்செய்யும்போது தப்பெண்ணங்களால் அவர்களை உடைத்தெறியாமல், மடைமாற்றத்திற்கான வழி என்ன என்பதைச் சிந்திக்கத் தொடங்குங்கள்!
ஆகஸ்ட் 22, 2023 அன்று அருஞ்சொல் தளத்தில் வெளியான கட்டுரை