spot_img
Monday, December 23, 2024

TANSCHE செய்யும் பெரும் துரோகம்

யார் இந்த TANSCHE?

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் என்றழைக்கப்படும் TANSCHE (Tamil Nadu State Council for Higher Education) அமைப்பு 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தேசிய கல்வி கொள்கைத் திட்டத்தின் பரிந்துரைபடி மாநில அளவிலான கல்வித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பை தமிழ்நாடு அரசு நிறுவியது.

பல்வேறு கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கானப் பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, அதனை இணை கல்விக் குழுவின் முன் சமர்ப்பித்து அதன் தீர்மானங்களை அரசுக்கு அனுப்பும் பணியை இம்மன்றம் மேற்கொண்டு வந்தது.

2016இல் இருந்து இம்மன்றத்தின் துணைத் தலைவர் பதவி நிரப்பப்படாததை தூசித் தட்டியெழுப்பிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அ. ராமசாமியை அப்பதவியில் நியமித்தார். கலைஞரின் ஆட்சிக் காலத்திலேயே இவர் இப்பொறுப்பில் இருந்துள்ளார்.

சமச்சீர் பாடத்திட்டம்

2021ஆம் ஆண்டில் நடந்தேறிய இச்சம்பவங்களை அடுத்து 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பயிற்றுவிக்கும் பெரும்பாலான பாடங்களுக்கு மாதிரிப் பாடத்திட்டத்தை இம்மன்றம் வெளியிட்டது. இங்கிருந்துதான் குழப்பங்கள் தொடங்கின.

அதே ஆண்டு நவம்பர் மாத இறுதியில், “அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சமச்சீரான பாடத் திட்டம் பின்பற்றப்படும். கலை அறிவியல் கல்லூரிகளில் நான்கு பருவங்களுக்கும் மொழி பாடங்கள் கட்டாயமாக்கப்படும்” என்று மேல்பூச்சாக ஒன்றிரண்டு வார்த்தைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உதிர்த்துவிட்டு போனார்.

அதன் முழு முகமும் இந்தாண்டு தெரிய வந்துள்ளது. இரண்டு மாதங்களாகவே தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து சில சலசலப்புகள் கேட்கின்றன. இதற்குக் காரணம் அரசு தரப்பில் இருந்து கட்டாயமாக்கப்பட்ட பாடத்திட்டம்தான். 2022 ஆகஸ்ட்டில் வெளியிட்ட மாதிரிப் பாடத்திட்டங்களை 75% அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

என்னென்ன மாற்றங்கள்?

தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இடம்பிடித்துள்ள பல பிரபல தன்னாட்சி கல்லூரிகள் இந்த சர்வாதிகார முடிவை எப்படி ஏற்றுக்கொள்ளும்? இதன்படி JOC என்று வழங்கப்பட்ட தொழில்முறைசார் பாடங்களுக்கு அனுமதி கிடையாது. Skill Based Studies எனப்படும் திறன்சார் கல்வியை குரோதமாக கொலை செய்து வைத்துள்ளனர். Supportive எனப்படும் Inter Disciplinary துணைப்பாடத் திட்டமும் நீக்கப்பட்டுள்ளது.

இதுநாள்வரை 50:50; 60:40 என்றிருந்த இன்டர்னல் : எக்ஸ்டர்னல் மதிப்பெண் விகிதம், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பேதமின்றி 75:25 என்று முறையில் சீர்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒருவகையில் வரவேற்கத்தக்கது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் 50:50 என்ற முறையின் சீர்கேட்டை எதிர்த்து மாணவ நண்பர்களோடு சேர்ந்து ஒரு கலந்துரையாடல் கூட்டமே நிகழ்த்தியிருக்கிறேன். இன்டர்னல் முறையே ஒழிந்துவிட்டால் நல்லது என்று மூத்த கல்வியாளர்கள் சில ஆண்டுகளாகப் பேசி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

TANSCHE சறுக்கியது எங்கே?

TANSCHE அமைப்பு வெளியிட்ட மாதிரி பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அனைத்துக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களையும் ஓரிடத்தில் ஓய்யாரமாக உட்கார்ந்து கொண்டு, நோகாமல் தரவிறக்கம் செய்து தன் இஷ்டப்படி கத்தரித்து ஒட்டியதுபோல் இருக்கிறது. துறை ரீதியாக, பாட வாரியாக இதற்கென அமைக்கப்பட்ட எக்ஸ்பர்ட் குழுவை TANSCHE அடையாளம் காட்டுமா?

இத்தனை மேதாவிதனத்தோடு செயல்படும் எக்ஸ்பர்ட் குழுவின் கடைக்கண் பார்வையை நம் மீது அள்ளி வீசுவார்களா? வேறெதுவும் வேண்டாம், வெறும் இரண்டு பாடங்களுக்கு. அதுவும், நான் சார்ந்த தமிழ்த்துறை இளங்கலை – முதுகலை பாடத்திட்டங்களின் சில விசித்திரங்களை மட்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பெண் படைப்பாளிகள் பொங்கி எழுவார்களா?

இளங்கலை, முதுகலைத் தமிழ் பாடத்திட்டத்தில் ‘இக்கால இலக்கியம்’ என்றொரு தாள் உள்ளது. இதன் கால வகைமையை தயவுசெய்து யாரேனும் எனக்கு புரிய வையுங்கள். TANSCHE எக்ஸ்பர்ட் குழு 50 ஆண்டுகளாக கோமாவில் உள்ளதா? இவர்கள் பட்டியிலிட்டுள்ள கவிஞர்களுள் மு. மேத்தாதான் நவீன கவிஞராக இருக்கிறார். அவருக்குப்பின் யாருமே கவிதை எழுதவில்லையா?

அதிலும் இளங்கலை பாடத்திட்டத்தில் ஒரேயொரு பெண் படைப்பாளி பெயர்கூட இல்லை. முதுகலைப் பாடத்தில் மட்டும் அம்பையின் ஒரேயொரு சிறுகதை உள்ளது. இளங்கலை பாடத்திட்டம் குழப்பத்தின் உச்சம். கவிதை அலகில் கவிஞர்களின் பெயர் மட்டுமே உள்ளது. பாடல்களை அரசு கொடுத்த 25% ஆஃபர் கொண்டு நிரப்பினால், இவர்கள் சறுக்கிய மீதி இடங்களை என்ன செய்வது? அள்ளவும் முடியாத, மெல்லவும் முடியாத நரகல் இது.

மு.வ.-வை விட்டு வெளியே வாருங்கள்

தமிழ் இலக்கிய வரலாறு எனும் டெம்ப்ளேட்டான பாடத்திட்டத்தில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. சாகித்திய அகாதமி நிறுவனத்துக்காக மு. வரதராசன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு நூல் மிக மிக அடிப்படையானது. அதில் பல விஷயங்கள் விட்ட கொறை – தொட்ட கொறை சங்கதிதான். அந்நூலின் அடிப்படையில் பாடத்திட்டத்தை அலகு பிரித்திருப்பதும், மூலநூலாக தெரிவு செய்திருப்பதும் தமிழியல் பயிற்றுவிப்பை இன்னும் பின்னுக்குத் தள்ளும் முயற்சி.

சிவத்தம்பி எழுதிய ‘தமிழில் இலக்கிய வரலாறு’ எனும் நூலை வாசித்து, அதனடிப்படையில் முறையான தமிழ் இலக்கிய வரலாறு எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மொத்தப் பாடத்திட்டத்தையும் பார்க்கும்போது, தமிழ் பயிற்றுவிப்புக்கான பாடப் புத்தகங்களில் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் என்று தெரிகிறது. இதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, தமிழக அரசின் நிதியுதவியோடு 60,70களில் பாடநூல் கழகம் புத்தகம் எழுதும் பணியை நடத்தித் தந்ததுபோல் மீண்டும் அதை உயிர்ப்பிக்க வேண்டியதன் தேவை புரியும்.

சிற்றிலக்கியத்தின் சாபக்கேடு

தமிழில் ஏராளமான சிற்றிலக்கியங்கள் மலிந்து கிடக்கின்றன. சங்க இலக்கியத்தின் சில பகுதிகளில் தோற்றம் பெற்று, பக்தி இலக்கியத்தில் செழுமையடைந்து, பிற்காலத்தில் பூத்துக் குலுங்கிய சிற்றிலக்கியப் பயிரில் ஏன் இந்த அலட்சியம்?

இளங்கலை மற்றும் முதுகலைப் பாடத்தில் ‘தமிழ்விடு தூது, முக்கூடற்பள்ளு’ நூல்கள் இரண்டும் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ளன. அதே நூலை இரண்டு நிலையிலும் ரிபீட் செய்யும் அளவுக்கு சிற்றிலக்கிய வெளி வறண்டுபோய் உள்ளதா? குறவஞ்சி என்றால் குற்றாலக் குறவஞ்சி, பரணி என்றால் கலிங்கத்துப் பரணி, கலம்பகம் என்றால் நந்திக் கலம்பகம் என்று Fixed மைண்ட் செட்டில்தான் பாடத்திட்டம் எழுத உட்கார்வார்களா? இவர்களின் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்தே இந்நூல்கள் உள்ளனவே. மாற்றுவதில் என்ன சிக்கல்?

சிற்றிலக்கியத் தாளில் இளங்கலை முதுகலைப் பாடத்திற்கு இடையான 5 வித்தியாங்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுதும் இலவசமாக பெட்ரோல் வழங்குகிறேன்.

இலக்கணம் கசந்துபோனதா?

தமிழிலக்கியப் படிப்பு என்றாலே சில இலக்கண நூல்களில் தேர்ச்சிப் பெறுவது அத்தியாவசியம்.

1. தொல்காப்பியம்
2. நன்னூல்
3. நம்பியகப் பொருள்
4. புறப்பொருள் வெண்பாமாலை
5. யாப்பருங்கலக் காரிகை
6. தண்டியலங்காரம்

இந்த ஆறு நூலில் தொல்காப்பியம் தவிர்த்து ஏனைய ஐந்தும் இளங்கலையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. பி.லிட். தமிழில் மட்டும் ஆறும் நூல்களுமே இளங்கலையில் பயிற்றுவிக்கிறார்கள். இதில் யார்மேல் யாருக்கு பொல்லாப்போ? இளங்கலை இலக்கணப் பாடத்தையும் முதுகலை இலக்கணப் பாடத்தையும் கரடியிடம் அகப்பட்டார்போல் உடல் முழுவதும் கீறி வைத்துள்ளனர்.‌

நம்பியகப் பொருளையும் புறப்பொருள் வெண்பாமாலையையும் தொல்காப்பியத்தையும் இவர்களாகவே அங்கங்கு கத்தரித்து ‘பொருள் இலக்கணம்’ என்ற பெயரில் ஒரே தாளாக ஒட்டுப்போட்டுள்ளனர்.

யாப்பையும் தண்டியலங்காரத்தையும் கண்டபடி மேய்ந்து மிக்ஸியில் அடித்து ‘யாப்பும் அணியும்’ என்றொரு தாளை யாத்துள்ளனர். இது இளங்கலையில் மட்டுமே செய்த அமானுஷ்யம். முதுகலையில் வேறொரு ஐட்டம் வைத்துள்ளனர்.

பொருளதிகாரப் புலிகள்

தொல்காப்பியம் நூல்தான் தமிழின் Authenticated பிரதி. எதையாவது எழுதிவிட்டு தொல்காப்பிய நூற்பா இதற்கு விதிவகுக்கிறது என்று சொல்லிவிட்டால் அதற்குமேல் பேச்சு கிடையாது. அத்தகைய தொல்காப்பியத்தை முதுகலை முழுதும் சிரத்தையெடுத்து பயிற்றுவிப்பார்கள். தொடர்ச்சியாக படிக்காமல், பலர் கோட்டைவிடும் ‘தாளு’ம் இதுதான்.

அத்தகைய தொல்காப்பியத்தை எழுத்து, சொல், பொருள் என 3 வால்யூம்களாக தொல்காப்பியர் பிரித்துள்ளார். இந்தமுறையில்தான் ஆண்டாண்டு காலமாக பயிற்றுவித்து வந்துள்ளனர். ஆனால் TANSCHE மன்றத்தில் உள்ள பொருளதிகாரப் புலி எக்ஸ்பர்ட் குழுவினர், முதலிரண்டு பருவத்தில் பொருளதிகாரத்தையும்; மூன்றாவது பருவத்தில் எழுத்ததிகாரத்தையும்; நான்காவது பருவத்தில் சொல்லதிகாரத்தையும் முறைமாற்றி வைத்துள்ளனர்.

கழித்த மலத்தை இலையால் அள்ளி, அந்த இலையை அலசி உணவு உண்பதுபோல் அதிமுட்டாள்தனமான செயல் இது. எழுத்து புரிந்தால்தான் சொல்லிலக்கணத்திற்கு நகர முடியும்; சொல் புரிந்தபாடே பொருளிலக்கணத்திற்குச் செல்ல முடியும். ஆனால் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று BOARD முடிவு செய்திருக்கிறது.

எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் துணையின்றி பொருளதிகாரத்தின் மரபியல் முதல் நூற்பாவை ஒரு வரியேனும் கடக்க முடியுமா? இத்தனை அரிதான வித்தைக்காரர்களை அரசு மெச்ச வேண்டும்.

ஒட்டுமொத்தமாக தமிழ் இலக்கியம் பாடத்திட்டத்தில் இலக்கணம் சாகக் கிடக்கிறது.

ஹலோ பாஸ், திறனாய்வு பாடம் எங்க?

முதுகலையில் முதல் முறையாக ஆய்வு செய்து ஆய்வேடு சமர்பிக்கும் பணியில் மாணவர்கள் இறங்குகிறார்கள். அதற்குத் துணையாக முதுகலைப் பாடத்தில் ‘திறனாய்வு’ தாள் Descriptive ஆக இடம்பெறும். ஆனால் TANSCHEஇன் மாடலில் இலக்கியத் திறனாய்வு என்றொரு பாடமே இல்லை.

இளங்கலையில் மட்டும் மிக அடிப்படையான திறனாய்வு தாள் ஒன்று வைத்துள்ளார்கள். ஆய்வுப் புலத்தில் நுழையும் மாணவர்களை தன் வயப்படுத்தாமல் தூர துரத்தும் பாடத்திட்டம் என்று சொல்வதற்கான அத்தனைத் தகுதிபாடுகளும் இதற்கு உண்டு.

திறனாய்வு தாள் இல்லாமல், முதுகலை பாடம் எப்படி அமையும் என்று இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

பதிணென்கீழ்க்கணக்கு மட்டுந்தான் அற இலக்கியமா?

முதுகலைப் பாடத்தின்‌ அற இலக்கியத் தாளில் ஏன் இத்தனை காட்டுமிராண்டித்தனம் என்று எல்லோரும் கேட்பீர்கள். முதலிரண்டு அலகில் திருக்குறளின் 40 அதிகாரங்களை குவித்துள்ளனர். மூன்று நான்காவது இயலில் நாலடியார் பாடல்கள். கடைசி இயலில் பிற பதிணென்கீழ்க்கணக்கு அற நூல்கள் என்று சில பாடல்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கின்றனர்.

இவற்றைத் தாண்டி பிற்கால அற நூல்கள் பற்றி சிறு அளவிலான அறிமுகம்கூட இல்லை. ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதிதான்.’ அதற்காக முழு தாளையும் அர்ப்பணிக்க முடியுமா?

விருப்பமில்லாத விருப்பப் பாடங்கள்

திராவிட இயக்கத்தின் பிரச்சார நெடியில் பல ELECTIVE பேப்பர்களை சேர்த்துள்ளனர். ‘சமூகநீதி இயக்கங்களும் இலக்கியங்களும்’ என்றொரு தாள் உள்ளது. அதன் முழுப் பாடத்திட்டத்தையும் பலமுறை அலசி பார்த்துவிட்டேன், ஓர் இலக்கியப் பிரதியின் பெயர் கூட இல்லை. பின் பெயரில் மட்டும் ஏன் இலக்கியங்கள்?

பார்வை நூல்கள் எல்லாம் 15, 20 என்று இஷ்டப்படி குறித்திருக்கிறார்கள். இலக்கணம் தாள் போன்ற ஒற்றை மூலப் பிரதியே வாங்க முடியாத கல்விப் பின்புலம் உடைய மாணவர்களை கருத்தில் கொள்ளாமல், இத்தனை நூல்களை Text book ஆகக் கொடுப்பது, இத்தாளின் மீதான வசீகரத்தை கெடுக்காதா?

இன்றியமையாத தாள் ஆயின், இதே பொருண்மையில் பாடநூல் கழகம் கொண்டு ஒரு நூலை உருவாக்கினால் என்ன?

ஆறு. ராமநாதனை ஏன் சீண்டுகிறீர்கள்?

மற்றொரு ஷாக்கிங் நியூஸ் சொல்லவா? முதுகலையிலும் இளங்கலையிலும் CORE பேப்பராக நாட்டுப்புறவியல் இடம்பெறவில்லை. Elective பேப்பர் வரிசையில் ‘நாட்டார் மரபுகள்’ என்ற பெயரில் ஒரு தாள் இருக்கிறது. தேடிப்பார்த்தால் ஆறு. ராமநாதன் எழுதிய புத்தகத்தையும் தே. லூர்து எழுதிய புத்தகத்தையும் மூலப் பிரதியாக வைத்திருந்தனர். ஆனால் இவ்விருவருமே ‘நாட்டார் மரபுகள்’ என்ற Term-ஐ கையாளவில்லை.

ஆறு. ராமநாதன் – நாட்டுப்புறவியல் என்றும், தே. லூர்து – நாட்டார் வழக்காற்றியல் என்றும் பேசுகின்றனர். இதன் அடிப்படை புரிந்தவர்கூட தாளுக்கு இப்படியொரு பெயர் வைத்திருக்க மாட்டார். TANSCHE டீம் யாருய்யா நீங்க, எனக்கே உங்களைப் பார்க்கணும் போல இருக்கே!

பிண்டத்தில் அண்டம்

கோயிற்கலை தாளில் இரண்டாவது அலகை நீங்கள் பார்க்கவேண்டுமே! அதுமட்டுமே தனியொரு தாளாக இடம்பெற வேண்டிய நீள அகலம் உடையது. புத்தகத்தின் Index-ஐ பார்த்து யூனிட் பிரித்திருப்பார்கள் போல.

‘தமிழ் பண்பாட்டு வரலாறு’ என்ற தாளில் Text Bookயே இல்லை. வெறும் Reference Book மட்டும் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் பல தொகுப்பு நூல்கள்.

அண்ணாயியம் / அண்ணாவியம் / பெரியாரியல்

அண்ணாயியம் என்று எழுதுவதா அண்ணாவியம் என்று எழுதுவதா என்ற குழப்பத்தில் இரண்டுமாதிரியும் எழுதி ஒரு பேப்பரை இணைத்துள்ளனர். இதேபோல் கலைஞருக்கும் பெரியாருக்கும் ஒரு பேப்பர் உண்டு. இந்த மூன்று தாளிலும் உள்ள பொதுவான சிக்கல் என்னவென்றால் எதுவொன்றுக்கும் நிலையான Text Book கிடையாது.

வெறும் Reference புத்தகங்கள் மட்டும்தான். அவையும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிட்டு வாங்கும் தொகுதி நூல்களாக உள்ளன. பின் இவற்றை என்ன தைரியத்தில் சேர்த்துள்ளனர். உண்மையிலேயே திராவிடக் கருத்தியலை மாணவர்களிடத்து சேர்க்கும் முயற்சியா இது? இல்லை அரசியல் நெடிக்கு ஊறுகாய் பதமா? நாளைக்கே ஆட்சி மாறினால் ஜெயலலிதாவியம் என்றொரு தாள் முளைக்குமா? இப்படி பல கேள்விகள் உறுத்துகின்றன.

திறன் மேம்பாட்டுப் பாடங்கள் வரிசையில் ‘மொழிபெயர்ப்பியல்’ என்றும் ‘மொழிபெயர்ப்புக் கலை’ என்றும் இரண்டு வெவ்வேறு தாள்கள் உள்ளன. அறிஞர் குழு கூட்டி இதற்குள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

தொழில் முனைவுத் தமிழ் என்றொரு தாள் இருக்கிறது. அதில் text book இல்லாதது கூட கவலை இல்லை. கொடுத்திருக்கும் reference bookஉம் ஆங்கிலத்தில் மட்டுந்தான் உள்ளது. என்னவொரு அரைகுறையான பாடத்திட்டம் இது.

கவனம் செலுத்தவேண்டிய பொதுவானச் சிக்கல்கள்

தனிப்பாடலை தூண்டில் மீனாகப் பயன்படுத்தி இலக்கியச் சுவைக்கு மாணவனைப் பழக்கப்படுத்த வேண்டுமென்று பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். சோகம் என்னவென்றால் தனிப்பாடல் என்றால் என்னவென்று இப்பாடத்திட்டம் அவனுக்கு அறிமுகம் கொடுக்காது. சிற்றிலக்கியத் தாளில் ஏதோவொரு இயலில் தனிப்பாடல்களுக்கு கொஞ்சம் அங்கீகாரம் இருந்தது. அதுவும் இப்போது போய்விட்டது.

இதிலிருந்து நாம் ஒரு பொதுவானச் சிக்கலைப் புரிந்துகொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் அமைவிடத்திற்கும் துறையின் பெருமைக்கும் ஏற்ப ஒவ்வொரு பாடப்பிரிவுகளும் அந்தந்த Geography-ல் பிரசித்திப் பெற்று இருந்தன.

சான்றாக ‘நாட்டுப்புறவியல்’ என்றால் தென் பகுதிக் கல்லூரியிலோ, மேற்கே பாரதியார் போன்ற நிறுவனத்திலோ பயின்றிருக்க வேண்டும். நவீன இலக்கியம் என்றால் ஒருசில கல்லூரி, இலக்கணம் என்றால் ஒருசில இடம், சைவ சித்தாந்தம் என்றால் ஒன்றிரண்டு இடம் என்று Native Specific ஆகச் சில பாடங்களை அந்தந்தப் பகுதிகளில் பயிற்றுவித்து வந்தனர். அந்தமுறைக்கு இழுத்து சீல் வைத்திருக்கிறது TANSCHE சிலபஸ்.

கோவையில் பாடம் பயின்றுவரும் எனக்கு ‘கொங்கு நாட்டின் இயற்கையை’ புரிந்துகொள்ளும் வண்ணம் கொங்கு நாட்டு வரலாறு என்றொரு தாள் இருந்தது. இனி அது இல்லாமல் போகும். பாரதிதாசன் பல்கலை.-ல் பாரதிதாசன் பற்றிய தாளும்; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.-ல் அதுபோன்றதொரு தாளும் காணாமல் போகும்.

போட்டியில் முதலாவதாக ஓடி உலக அரங்கில் பெயர் வாங்கிக் கொடுத்தவனுக்கு அங்கீகாரம் கொடுத்து, அதே பயிற்சி முறைகளை பின்தங்கி ஓடுபவனுக்கும் வழங்காமல், முன்னால் செல்பவனை கட்டைக் கொண்டு தாக்கி பின்னால் செல்லடா என்று வம்படியாக அடித்து நொறுக்கும் சாபக்கேடான சிலபஸ் இது.

மெட்ரிக் பாடங்களுக்குப் பதிலாக சமச்சீர் பாடங்களை கொண்டுவருகிறேன் என்று கலைஞர் சொன்னது சரியான முடிவு. ஆனால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட சிலபஸின் தரம் விவாதத்திற்கு உரியது. அதே தவறான முடிவைத்தான் உயர்கல்வித் துறை இன்று கைக்கொண்டிருக்கிறது.

ஆண்டுக்கொருமுறை சிலபஸை அப்கிரேட் செய்து Up to date ஆக இருக்கும் பல தனியார் கல்லூரிகளும், தன்னாட்சி நிறுவனங்களும் இதில் பலத்த அடியைச் சந்திக்கும். 90% குறை உள்ள சிலபஸில் 75% சதவீதத்தை அப்படியே வைத்துக்கொண்டு 25% வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்வது கண்மூடித் தனத்தின் கடைசி நிலை முட்டாள்த்தனம்.

இதில் ஒன்றிரண்டு மாற்றங்களை மட்டும் உட்படுத்தி வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த, ஏற்கனவே சில பல்கலைக்கழகங்கள் ஒப்புதல் வழங்கிவிட்டன. பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஒரு சில துறைகள் கடந்த வாரம் இதற்கான ஒப்புதலை வழங்கியதன் பின்னணியில்தான் இத்தக் கொடிய பதிவை எழுதுகிறேன்.

வரும் கல்வியாண்டில் இளங்கலை முதுகலை கல்விப் பயிலபோகும் உங்கள் வீட்டுக் குழந்தைகளின் பாதுகாப்பில் நலன் கொண்டிருந்தால், விரைந்து சிந்தியுங்கள்.
References
இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்