2024ஆம் ஆண்டின் முதல் சுழற்சியில் நடைபெறவிருக்கும் தேசிய தகுதித் தேர்வு (UGC NET) பல எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது. இவ்வாண்டுமுதல் அமலுக்கு வரும் சில மாற்றங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அதைப் பார்க்கும் நண்பர்கள் அவ்வப்போது அனுப்பி வைத்து பகீர் பகீர் என அதிர்ச்சி அடைகின்றனர். இன்ஸ்டால்மெண்ட் முறையில் மயங்குவதற்குப் பதில் ஒரேயடியாக மயங்கி எழுந்து தேர்வுக்குத் தயாராகலாமே, எனச் சொல்லி இப்பதிவை எழுதுகிறேன்.
இத்தேர்வில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்களை இங்குப் பட்டியலிடுகிறேன். இயன்றவரை அதிர்ச்சியூட்டும் நடையைத் தவிர்க்கிறேன். நண்பர்கள் கவனமாகப் படிக்கவும்.
1. 2018 முதல் கணினி முறையில் நடைப்பெற்று வந்த இத்தேர்வு, இவ்வாண்டு முதல் ஒளிக் குறி உணரி எனும் OMR ஷீட் வாயிலாக நடைபெற இருக்கிறது.
2. இவ்வாண்டு முதல் முதுகலை / முதுநிலை மாணவர்கள் மட்டுமன்றி, நான்காண்டு இளநிலைப் படிக்கும் மாணவர்களும் நெட் தேர்வு எழுதலாம். தாங்கள் இளநிலையில் படித்த பாடம் சார்ந்து மட்டுமல்லாமல், அதன் தொடர்புடைய / தொடர்பற்ற பாடப் பிரிவுகளிலும் நெட் தேர்வு எழுத பல்கலைக்கழக மானியக் குழு வழிவகுத்திருக்கிறது. ஆனால் Equivalence, Relativeness தொடர்பான பாடநிலை பட்டியலோ, தெளிவான விளக்கமோ வழங்கவில்லை. இதன் வாயிலாக முதுநிலை பட்டம் பயிலாமலே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழுவின் புதிய கல்விக் கொள்கைத் திட்டம் அப்பட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
3. உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வுக்கும், இளநிலை ஆய்வு உதவியாளருக்கும் நடைபெற்று வந்த இத்தேர்வு, இவ்வாண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக நடத்திவந்த முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான பொது நுழைவுத் தேர்வையும் தம் குடைக்குள் கொண்டு வந்திருக்கிறது. எனவே பல்கலைக்கழகங்கள் நடத்தி வந்த பொது நுழைவுத் தேர்வு காணாமல் போகும்.* இதன்மூலம் என் முந்தையப் பதிவுகளில் குறிப்பிட்டது போல, மூன்று படிநிலைகளில் இத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
• இளநிலை ஆய்வு உதவியாளர் (JRF)
• உதவிப்பேராசிரியர் தகுதி (Assist. Professor Eligibility)
• முனைவர் பட்ட ஆய்வு செய்யும் தகுதி (Admission to Ph.D.)
4. உதவிப்பேராசிரியர் தகுதி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.
5. இளநிலை ஆய்வு உதவியாளருக்கு தகுதி பெற்ற தாங்கள் முதுநிலைப் படித்துக் கொண்டிருப்பவர் என்றால், 3 ஆண்டுகளுக்குள் முனைவர் பட்ட ஆய்வாளராக நீங்கள் பதிவு செய்தால் ஒழிய உதவித்தொகை பெற இயலாது. ஒருவேளை நீங்கள் இளநிலை படித்துக் கொண்டிருப்பவர் என்றால் 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும். தவரும் பட்சத்தில் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.
6. இளநிலையோ, முதுநிலையோ எவ்வகைப் படிப்பை மேற்கொள்பவராக இருந்தாலும் பி.எச்.டி அட்மிசனுக்குத் தகுதி பெற்றால் அடுத்த ஓராண்டுக்குள், முனைவர் பட்ட ஆய்வாளராக பதிவு செய்ய வேண்டும். தவரும் பட்சத்தில் மீண்டுமொரு தேர்வெழுதி தகுதியைத் தக்கவைக்க வேண்டும்.
7. அவ்வாறு பி.எச்.டி அட்மிசனுக்குத் தகுதி பெற்றாலும், இதில் பெறும் மதிப்பெண்கள் 70% மட்டுமே பி.எச்.டி நேர்முகத்தேர்வில் எடுத்துக்கொள்ளப்படும். மீதம் 30% நேர்முகம் மேற்கொள்ளும் குழுவினர் வழங்க வழிவகைச் செய்யச் சொல்லி யூ.ஜி.சி வற்புறுத்துகிறது.
8. இதற்கு ஏதுவாக நெட் தேர்வு முடிவுகள் இவ்வாண்டு முதல் Percentile மற்றும் மதிப்பெண் என இருவகையிலும் வெளியாகும்.
9. இந்தமுறை நெகட்டிவ் மார்க் இல்லை. பாடத்திட்டத்திலும் மாற்றம் இல்லை.
10. தேர்ச்சி பெறும் மாணவர்களில் 6% நபர்கள் உதவிப் பேராசிரியர் தகுதி பெறுவர். 1% இளநிலை ஆய்வு உதவியாளருக்கான தகுதி பெறுவர். அப்போ, பி.எச்.டி அட்மிசன்? ஆம். யூ.ஜி.சி இங்கு இக்கு வைத்திருக்கிறது. பி.எச்டி அட்மிசன் பெறும் நபர்களின் புள்ளிவிவரத்தையோ, எண்ணிக்கையையோ தேர்வு முடிவுகள் வெளியிடும் கமிட்டி உறுப்பினர்கள்தான் முடிவு செய்வார்கள் என விளக்கம் கொடுத்திருக்கிறது.
11. NFOBC மற்றும் NFSC உதவித்தொகைக்கான தேர்ச்சி, தகவல், உதவி குறித்து முன்னர் UGC தளத்தில் காண்பதற்கு வழிவகை இருந்தது. இனி அந்தந்த அமைச்சகத்தின் இணையதளத்தை மட்டுமே நாட முடியும் என கைவிரித்திருக்கிறது.
12. தேர்வெழுதும் நபர்களின் தகுதிகாண் வழிகாட்டுதலில் முதுநிலை மாணவர்கள் 55% மதிப்பெண்களும், இளநிலை மாணவர்கள் 75% மதிப்பெண்களும் வைத்திருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கின்றனர்.
13. கடந்த ஆண்டுவரை ரிசர்வேஷன், நார்மலிசேஷன், தேர்ச்சி முறை குறித்து யூ.ஜி.சி. வெளியிடும் INFORMATION BULLETIN மட்டுமே ஆதாரமாக விளங்கியது. இவ்வாண்டு அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைத் தாண்டியோ மீறியோ செயல்படும் உரிமை அதற்குண்டு என்பதை மிக இலாவகமாக ஒற்றை வரியில் சேர்த்துள்ளனர். என்.டி.ஏ.வின் அபத்தமான தேர்வு முடிவுகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் நாம் புலம்பிவருவது குறிப்பிடத்தக்கது. RTI வாயிலாகக் கூட நம் Answer Script-ஐ காண முடியாதபடி பாதுகாப்புப் பெட்டகத்துக்குள் ஜம்போவாக பூட்டிவைத்திருக்கும் இந்நிறுவனத்தின் சர்வாதிகாரப் போக்கு மேலும் ஓங்குகிறது.
* சில மாநில பல்கலைக்கழகங்கள் இவ்வாண்டு பி.எச்டி பொதுநுழைவுத் தேர்வு நடத்த வாய்ப்பிருக்கிறது. நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும்.