இரவோடு இரவாக கட்டுரை எழுதவேண்டிய கட்டாயத்திற்கு சூழல் நம்மை நெருக்கும் போது, பொது நூலகத்திலோ நண்பர் வீட்டிலோ இரவல் புத்தகம் வாங்க வாய்ப்பில்லாத போது என்ன கேட்டாலும் குடுக்கும் அலாவுதீனின் அற்புத விளக்காக இருப்பது ‘Internet archive’ தளம்தான்.
அவசரத்திற்காக மட்டுமின்றி அரிய, விலை உயர்ந்த புத்தகங்களையும் எல்லோரும் படிக்கும் வண்ணம் இலவசமாக இரவல் கொடுத்து, தரவிறக்க வசதிகளோடு உதவியிருக்கிறது.
கிழக்கு டுடே’ல் நான் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ‘நான் கண்ட இந்தியா’ தொடருக்கான மூலப் புத்தகம் Archives தளத்தில் இருந்தது எடுத்ததுதான். அதன் அச்சுப் புத்தகத்தை சில ஆயிரங்களுக்கு அமேசானில் விற்பனை செய்கிறார்கள்.
இந்து தமிழ் திசையின் மாயா பஜார் இணைப்பிதழுக்கு அரிய குழந்தை ஆளுமைகளைத் தோண்டித் துளாவி எழுதுவதற்கு ‘Archives’ தளம் நிறைய உதவியிருக்கிறது. நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அரிய காணொளிகளும் இதில் அடக்கம்.
உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு திக்குத் தெரியாத காட்டில் யாரோ ஒருவர் எழுதிய ஓரிரண்டு வரிகள் வேற்றுத் திசையில் இருக்கும் யாரோ ஒருவனுக்கு புதையலாக இருக்கிறது. அந்தப் புதையலை இராப்பகலாக காக்கும் பூதம் தான் Archives தளம். (அவர்கள் நூலை டிஜிட்டல் செய்யும் காணொளிக்கான இணைப்பு ஒன்றை கமெண்ட் பாக்ஸில் இணைத்திருக்கிறேன்)
இத்தகைய Archives தளத்தின் மேல் பேரிடி விழுந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய இணைய நூலகத்தை இழுத்துமூடச் சொல்லி வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கில் Archives தளம் தோற்றுப் போனதுதான் இன்றைய நெருக்கடிக்கு காரணம்!
Internt archive-ன் Fair Usage வாதம் தோற்றுப்போயிருக்கிறது. Hachette, HarperCollins, Penguin Random House, Wiley போன்ற உலகின் முன்னணிப் பதிப்பு நிறுவனங்கள் Archives மீது வழக்குத் தொடுத்து வென்றிருக்கிறார்கள்.
இதையொட்டி ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மீள கேட்க வேண்டும். நூலகத்தில் இருக்கும் அச்சுப் புத்தகங்கள் நேரில் செல்லும் எல்லோருக்கும் படிப்பதற்கான சம வாய்ப்பை ஏற்படுத்துவது போல, இணையத்தில் கிடைக்கும் புத்தகங்களுக்கும் அந்த விதியை நாம் பொறுத்திப் பார்க்கலாமா?
எழுத்தாளர் மற்றும் பதிப்பாளருக்கு பங்கம் ஏற்படாமல் இன்டர்நெட் ஆர்கிவ்ஸ் போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்கள் எல்லோருக்கும் உதவி செய்வது சாத்தியமாகுமா?
தமிழ்ச் சூழலில் நான் பார்த்தவரையில் Vijay Varadharaj மட்டும்தான் மெட்டா மங்கீஸ் யூடியூப் சானலில் இது குறித்துப் பேசியிருக்கிறார்.
இது எத்தனைப் பெரிய துன்பகரமான நிலைக்கு நம்மை அழைத்துப்போகும் என்று என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தரவுகளுக்கு தாகமெடுத்து அலைபவர்கள் இனி விக்கிச் சாக வேண்டியதுதான்!
இன்டர்நெட் ஆர்கிவ்ஸ் மேல்முறையீடு செய்ய இருக்கிறது, ஆனால் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
(சில முக்கிய இணைப்புகள்)
The Internet Archive has lost its first fight to scan and lend e-books like a library.
Internet Archive faces skeptical judge in publishers’ copyright lawsuit.
Here’s What Could Happen to Your Digital Books If the Internet Archive Loses Its Lawsuit