spot_img
Saturday, December 21, 2024

மங்கத் தொடங்கும் மாநிலப் பல்கலைக்கழகங்கள்

‘கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பின்’ (NIRF) 2024ஆம் ஆண்டிற்கான அறிக்கை கடந்த வாரம் வெளியானது. கல்வி வட்டாரம் சார்ந்த எந்தவொரு தகவலும் புழுதி கிளப்பாமல் மண்ணுக்குள் புதைவது இந்நாட்டுச் சம்பிரதாயம். அதே மூடுவிழா இதற்கும் எடுக்கப்பட்டது. NIRF தரவரிசைப் பட்டியலை விலாவரியகப் பார்க்கும் முன்பு, ஆகஸ்ட் இரண்டாவது வாரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பைப் பகிர்வது புரிதலை வசதியாக்கும் : No vice chancellors in five Tamil Nadu universities. ‘தமிழ்நாட்டின் ஐந்து மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லை’ என இக்குறிப்புச் சொல்கிறது.

மதராஸ் பல்கலைக்கழகத்தில் 2023ஆம் ஆண்டிலிருந்தும்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2022ஆம் ஆண்டிலிருந்தும்; மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 2024இல் இருந்தும் (இதற்கும் முன்பும் சீராக இருந்ததில்லை) துணைவேந்தர்கள் கிடையாது. இவைபோக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தர் இல்லை. மாநில பல்கலைக்கழகங்களின் மேம்போக்கான நிலவரம் மட்டும் இது. பாரதியார் பல்கலைக்கழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 2016இல் இருந்து பதிவாளர் கிடையாது; தேர்வுக் கண்காணிப்பாளர் கிடையாது; 2009இல் இருந்து நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநர் கிடையாது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019இல் இருந்து பதிவாளர் கிடையாது.

மாநிலப் பல்கலைக்கழகங்களின் முக்கியப் பொறுப்புகளில் சில தற்காலிக ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புச் சேர்த்தி, சில பத்தாண்டுகளாக உயர்க்கல்வியை ஆமை வேகத்தில் நகர்த்தி வருவது எப்பேற்பட்ட அவலம் என்று இந்தாண்டு வெளியான NIRF பட்டியல் கொண்டு பார்த்தால் ஓரளவு தெளிவு பிறக்கும்.

முதலில் கோவையில் இயங்கிவரும் பாரதியார் பல்கலைக்கழம் பற்றி ஒரு சித்திரம் வரைவோம். 2022ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவரை இங்கு துணைவேந்தர் இருந்தார். இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்நிறுவனம் பெற்ற இடங்களை ஆண்டுவாரியாகக் கொடுக்கிறேன். 2021 – 14ஆம் இடம்; 2022 – 15ஆம் இடம்; 2023 – 21ஆம் இடம்; 2024 – 26ஆவது  இடம். தொடர்ச்சியாகச் சரிந்துள்ளது. துணைவேந்தர் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு கோப்பு நகர்வதற்கும் சராசரியாக மூன்று மாதக் காலம் தேவைப்படுகிறது. துறையில் 5 மாதம் கழித்து ஒரு கருத்தரங்கரம் நிகழ்த்த அனுமதி பெற வேண்டுமென்றால், இப்போதிருந்தே வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அந்தக் கோப்பு நிச்சயம் கையெழுத்தாகும் எனச் சொல்வதற்கில்லை.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் 2022இல் 52ஆவது இடத்தில் இருந்தது. 2023இல் 53ஆவது இடம். இந்தாண்டு அகல பாதாளத்தில் 63ஆவது இடத்திற்கு எட்டி உதைக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று, மதுரை வட்டாரத்தைச் சார்ந்த சுய உதவிப் பெறும் பல தனியார் கல்லூரிகள், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தைவிட மிகத் திறமையாகச் செயல்பட்டு, பட்டியலில் முன்னிடம் பெற்றதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை குறிப்பிட்ட செய்திகள் எல்லாம், இந்தியப் பல்கலைக்கழகங்களின் (அரசு & தனியார்) தரவரிசைப் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தாண்டு இப்பட்டியலில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையைக் காணச் சென்றபோது, 4 (தமிழ்நாட்டு) தனியார் பல்கலைக்கழகங்களுக்குப் பிறகே இம்மாநிலப் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் தென்பட ஆரம்பித்தன. தனியார் நிறுவனங்களின் எழுச்சிக் குறித்து எனக்கு எவ்விதக் காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால் அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால், ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த ஆஹா ஓஹோ நிறுவனங்கள் இன்றைக்குக் கவலைக்கிடமாக உள்ளன.

பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலைத்தாண்டி ஒட்டுமொத்த (கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சட்டம் – மருத்துவம் – வேளாண்மை முதலான அனைத்துவித கல்வி நிறுவனங்கள் உட்பட) தரவரிசைப் பட்டியலைக் காணச் சென்றால் முதல் 16 இடங்களில் 15 நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. 14ஆவது இடத்தைத் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று பிடித்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த மாநிலப் பல்கலைக்கழகம் என்றால் அண்ணா பல்கலைக்கழகம், 20ஆவது இடத்தில் நீந்தித் தவிக்கிறது. தமிழ்நாட்டைச் சார்ந்த கலை அறிவியல் மாநிலப் பல்கலைக்கழகமாக 44ஆவது இடத்தில் பாரதியார் பல்கலை. உதயமாகிறது. மதுரைக் காமராசர் இப்பட்டியலில் இல்லவே இல்லை.

இந்தியா தழுவிய அளவில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வீழ்ச்சியாக நான் இதைப் பார்க்கிறேன். மாநிலப் பல்கலைக்கழகங்கள் அதிகார வரம்பில் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்துச் செயல்படுவதால், உண்மையில் அதிகம் பாதிக்கப்படுவது மாணவர்களும் ஆசிரியர்களுமே. மத்திய அரசின் அதிகார இயந்திரங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். தமிழகச் சூழலில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிலவரத்தை குறித்த ஒரு புள்ளிவிவரம்.

பல்கலைக்கழகம் பெயர் – 2024இல் பெற்ற இடம்  – 2023இல் பெற்ற இடம்

  1. மதராஸ் பல்கலைக்கழகம்            – 39 – 50
  2. அண்ணா பல்கலைக்கழகம்         – 13 – 14
  3. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்   –  பட்டியலில் வருவதே இல்லை
  4. பெரியார் பல்கலைக்கழகம்         – 56 – 59
  5. பாரதிதாசன் பல்கலைக்கழகம்    – 36 – 41
  6. பாரதியார் பல்கலைக்கழகம்       – 26 – 21
  7. TNAU                                            – 84 – 72
  8. ம.சு.ப.                                         – 93 – 83
  9. அழகப்பா பல்கலைக்கழகம்        – 47 – 30
  10. மதுரைக் காமராசர் பல்கலை.     – 63 – 53

கணக்கில் எடுத்துக்கொண்ட ஒன்பது நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் மட்டுமே முன்னேற்றம் பெற்றுள்ளன. அதுவும் சொற்ப அளவில். மீதமுள்ள 5 நிறுவனங்கள் பலமாக அடிவாங்கியுள்ளன. இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் ‘அதிகக் கல்வி நிறுவனங்கள் (22) இடம்பெற்ற மாநிலம் தமிழகம்’ என்ற பெருமையைத் தமிழ்நாட்டு அரசு மெச்சிக் கொண்டாடுகிறது. ஆனால் அப்பெருமை மலர்களைத் தம் மாலையில் சூட்டிக்கொள்ள உண்மையில் அவர்கள் மேற்கொண்ட பிரயத்தனம் என்ன? எண்ணிக்கையே வெற்றி என்றால் தமிழ்நாட்டை விடவும் 88 மடங்கு சிறிய பிரதேசமான தில்லியில் 16 நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது அப்பிரதேசத்திற்குத்தானே சிறப்பு.

22 நிறுவனங்களிலும் 9 நிறுவனங்களே மாநிலப் பல்கலைக்கழகங்கள். இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மட்டுமே பாதிப்படையும் எனச் சொல்வதற்கு இல்லை. இந்திய அளவிலான கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சார்ந்த 37 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் 5 நிறுவனங்கள் மட்டுமே அரசு நிறுவனங்கள்!

மத்திய மாநில அரசுகளின் முரண்பாடுகளைத் தாண்டி ஒவ்வொரு மாநிலப் பல்கலைக்கழகமும் இத்தனைத்தூரம் மூச்சுப்பிடித்து செயல்படுவதே ஆச்சரியம். அதைச் சார்ந்த அரசு கல்லூரிகளின் நிலையும் அதுவே. கல்வியை ஒருங்கிணைந்த பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனக் குரல் கொடுப்பதன் பின்னணியிலும், மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையோடு மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் பெறும் மாநியத்தைப் பொறுத்திப் பார்த்து பெருத்த வித்தியாசத்தைக் காண்பதோடும், நிரப்பப்படாத பதவிகளை முன்னிறுத்தி கேள்வி எழுப்புவதோடும், நாம் இந்த விளைவுகளைச் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்