பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பாக தேசிய தேர்வு முகமை நடப்பித்து தரும் தேசிய தகுதித் தேர்வுக்கான வழிகாட்டுதல்களுக்கு தமிழ் மொழியில் பெரிய வெற்றிடம் இருக்கிறது. முதல் முயற்சியில் தேசிய தகுதித் தேர்வில் வெற்றிப்பெற்று, இரண்டாவது முயற்சியில் இளநிலை ஆராய்ச்சியாளர் நிதிக்கு (ஜே.ஆர்.எஃப்.) தேர்ச்சி பெற்ற அனுபவத்தில் நான் எனது பயணத்தையும் வழித்துணைச் செய்திகளையும் பகிர்வதன் மூலம் ஒரு புதிய வெளியைத் தொடங்க முடியும் எனக் கருதுகிறேன்.
கற்பிதங்களைக் கையாளுங்கள்
தமிழ்ப் பாடத்தில் தேசிய தகுதித் தேர்வு எழுதுவோருக்கு இரண்டு கற்பிதங்களை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிராந்திய மொழி பாடங்களை முதன்மை பாடமாகக் கொண்டு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அறிவியல் மற்றும் பிற கலையியல் புலங்களைச் சார்ந்தவர்களோடு ஒப்பிடுகையில் மிகக் கணிசமாக இருப்பது மாபெரும் பலம் எனச் சிலர் கருதுகின்றனர்.
டிசம்பர் 2022-ல் நடந்த நெட் தேர்வில் தமிழ்ப் பாடத்திற்காக 6000-கும் மேற்பட்டோர் பதிவு செய்து, அதில் ஐயாயிரத்து சொச்சம் மட்டுமே நேரில் வந்து தேர்வு எழுதினர். ஜூன் 2023-ல் அந்த எண்ணிக்கை இன்னும் குறைந்து 3782 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். குறைந்த ஆட்பலத்தோடு மல்லுக்கட்டுவது எளிது என்றாலும், தேசிய தேர்வு முகமையும் பல்கலைக்கழக மானியக் குழுவும் கையாளும் நெறிமுறைகள் குறித்து தெளிவான புரிதல் இருந்தால் இதன் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம்.
40,000 பேர் தேர்வு எழுதினாலும், 400 பேர் தேர்வு எழுதினாலும் யூ.ஜி.சி. கையாளும் முறை ஒன்றுதான். தேர்வு எழுதுவோரில் உயர் மதிப்பெண் பெறும் முதல் 6% பேர் நெட் மட்டும் தேர்ச்சி அடைவார்கள். அதிலும் முதல் 1%-ல் உள்ள மிகச் சொற்பமான நபர்கள் மட்டுமே ஜே.ஆர்.எஃப். பெற தேர்ச்சி பெறுவார்கள்.
ஆகவே பெரிய மைதானத்தில் ஓடினாலும், சிறிய அறைக்குள் ஓடினாலும் வியர்க்கப் போவது உறுதிதான். ஆனால் போட்டியாளர்கள் குறைவு என்பது மதிப்பெண் சதவீதம் குறைந்த விகிதத்தில் கையாளப்படுவதற்கு உதவியாக இருக்கிறது. தமிழைப் பொறுத்தவரை 135-148 என்பது சராசரியான நெட் கட்-ஆஃப் ஆகவும்; 155-க்கு மேற்பட்ட மதிப்பெண் ஜே.ஆர்.எஃப்.-க்கு சராசரி மதிப்பெண்ணாகவும் ஆண்டுக்கணக்காக இருந்து வருவதை நாம் அறிவோம். எனவே மதிப்பெண்ணை மனத்தில் வைத்து படிக்க வேண்டும்.
இரண்டாவது கற்பிதம், தமிழ்ப்பாடத்தின் கடல் போன்ற பாடத்திட்டம் பயமென்னும் பேயாய் உருவெடுத்திருக்கிறது. இதை நமக்கேற்றார் போல் உள்வாங்கிக் கொண்டு தேர்வை அணுகினால் எளிதில் வெற்றிபெறலாம்.
பாடத்திட்டத்தை உள்வாங்குதல்
தமிழ்த் தாளில் உள்ள பத்து அலகுகளையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதில் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே வாசித்து உறுதியாக ஜே.ஆர்.எஃப். வாங்க முடியும். ஆனால் வாசிக்கும் பகுதிகளை முழுமையாய் உள்வாங்க வேண்டும்.
சான்றாக முதல் அலகில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் அடங்கிய பதிணென்மேல்கணக்கு நூல்களும் (சங்க இலக்கியம்) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் உள்ளன. அவற்றை வாசிக்க தேவி. ராஜேந்திரனின் தமிழ் இலக்கியக் களஞ்சியம், தமிழண்ணல், சிற்பி, சாகித்திய அகாதமியின் மூன்று தொகுப்புகளை வாசித்தாலும் கூட முழு மதிப்பெண் பெற முடியாது.
ஜூலை 2023-ல் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளை இதற்கு முன்னுதாரணமாகச் சுட்டுகிறேன்.
கே. கூதிர் காலம் நிலைபெற்றமையால் எவை பயன்படுத்தப்படாமல் கிடந்தன என நெடுநல்வாடை கூறுகின்றது?
A. சந்தனக் கல்
B. சந்தனக் கட்டை
C. ஆல வட்டம்
D. அகில் கட்டை
இந்தக் கேள்விக்கான பதிலை எந்த இலக்கிய வரலாற்றிலும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. பாடத்திட்டத்தில் நெடுநல்வாடை என்று குறிப்பிட்டிருந்தால், நீங்கள் வாசிக்க வேண்டியது நெடுநல்வாடையே அன்றி, நெடுநல்வாடை பற்றி குறிப்புகள் அல்ல.
இதுபோன்றே மற்றொரு கேள்வி அதே தேர்வில் இடம்பெற்றிருந்தது.
கே. கள் விற்கும் இடத்தில் என்ன கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகப் பெரும்பாணாற்றுப்படை பதிவு செய்துள்ளது?
A. பச்சைக் கொடி
B. சிகப்புக் கொடி
C. நீலக் கொடி
D. வெள்ளைக் கொடி
பெரும்பாணாற்றுப்படையை ஒருமுறையேனும் வாசிக்காமல் இதற்கு விடையளிக்க முடியாது. ஆகவே முதல் அலகைப் பொறுத்தவரை, அதிகப்பட்சம் நேரடியாக பாடல்களை வாசித்துவிட வேண்டும். இதற்குச் சரியான புத்தகம் வேண்டுமென்றால், தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட ‘செவ்வியல் நூல்கள் உரைவரிசை : பத்துப்பாட்டு’ எனும் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம். மொத்தமாகவே ரூ. 700-குள் அடங்கிவிடும்.
இந்தத் தொகுப்பில் வரும் பத்து நூல்களையும் முழுவதுமாக வாசிக்க வேண்டியதில்லை. தேர்ந்த முறையில் ஒவ்வொரு நூலிலும் ‘காட்சியும் மாட்சியும்’ என்று நூலின் பொருள் சுருக்கத்தை 5 முதல் 15 பக்கத்திற்குள் தெளிவாகக் கொடுத்துள்ளனர். எனவே மொத்தமாக 100 பக்கத்திற்குள் பத்துப்பாட்டில் தெளிவு பெற்றுவிடலாம். அதிகப்பட்சம் 3 மணிநேரம் ஆகலாம். அவ்வளவுதான். எட்டுத்தொகை பொறுத்தவரையில் தேர்ந்தெடுத்த பாடல்களை வாசிக்கலாம். பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுக்கு பாக்கிய மேரியின் ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ மற்றும் க.ப. அறவாணனின் ‘புதிய நோக்கில் பதிணென்கீழ்க்கணக்கு’ என்ற நூல்தொகுப்பை வாசிக்கலாம்.
காப்பியங்கள் பொறுத்தவரை நான் சாகித்திய அகாதமி வெளியிட்ட ‘புதிய தமிழ் இலக்கிய வரலாறு’ நூலை வாசித்தேன். அயலகத் தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளுக்கு இந்தத் தொகுப்பு பெரிதும் துணை நின்றது. தனித்தனிக் கட்டுரையில் மேலோட்டமான செய்திகளைப் புரிந்துகொள்ள நல்ல துணை!
பக்தி இலக்கியங்களில் எனக்கு பெரிய ஈர்ப்பு கிடையாது. பேரூர் தமிழ்க் கல்லூரியில் பயின்றதால், அவை குறித்த அடிப்படை அறிவும், புரிதலும் கிடைத்தன. அவற்றைத் தாண்டி பாக்கிய மேரியின் நூல் மட்டும் மூன்றாம் அலகுக்கு வாசித்தேன். சிற்றிலக்கியங்களுக்கு ந.வீ. செயராமன் எழுதிய ‘சிற்றிலக்கியச் செல்வங்கள்’ நூலும் ‘சிற்றிலக்கியத் திறனாய்வு’ நூலும் வாசிக்கலாம். மேலதிக செய்திகளுக்கு சிலம்பு நா. செல்வராசு எழுதிய ‘20ஆம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்’ நூலில் வரும் பட்டியலைப் பார்த்துக் கொள்ளுதல் நலம்.
பாடத்திட்டத்தில் அளவில்லாமல் நீளும் பகுதி, நான்காவது அலகு. இக்கால இலக்கியங்கள் பெருங்கடல் என்பதால், ஜெயமோகன் எழுதி விஷ்ணுபுரம் வெளியிட்ட (விஷ்ணுபுர வெளியீட்டில் மட்டும்தான் பட்டியல் பார்த்ததாக ஞாபகம்) ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’ நூலின் பின்னிணைப்பு பட்டியலை முடிந்தவரை மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அதில் நவீன கால சிறுகதை, நாவல், கவிதைகள் குறித்த நூலாசிரியர் – நூல் பெயர் தெரிந்துகொள்ளலாம். அது தவிர்த்து சாகித்திய அகாதமியின் ‘புதிய தமிழ் இலக்கிய வரலாற்றின்’ மூன்றாம் தொகுதியை வாசிக்க வேண்டும்.
நூலாசிரியர் குறிப்புகளுக்காக தேவிரா, பாக்கிய மேரி நூல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இலக்கண அலகைப் பொறுத்தவரை, தமிழண்ணலின் நூல்கள்தான் எனக்கு பெருந்துணை. தேர்வுக்கு முந்தைய நாள் மணிக்கணக்காக நூற்பாக்களை படித்துக் கொண்டிருக்க முடியாது. தமிழண்ணலின் நூல்கள் எல்லாம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவரின் நன்னூல் மற்றும் தொல்காப்பிய உரைநூல்களின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் நுதலிப் புகுவார். அதில் சொல்லப்படும் முத்தான கருத்துக்களை உரைநடைத் தமிழில் இலக்கமிட்டு தெளிவுபடுத்திவிடுவார். அதை மட்டுமே வாசித்து நூற்பாவோடு பொறுத்திப் பார்க்கும் ஆற்றல் பெற்றிருந்தால் போதுமானது.
புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப் பொருள், தண்டியலங்காரம் நூல்களை முழுவதும் ஒருமுறை பார்த்துவிடுதல் சிறப்பு. பாட்டியல் நூல்கள் பற்றித் தெரிந்துகொள்ள ந.வீ. செயராமனின் ‘சிற்றிலக்கியத் திறனாய்வு’ நூலின் முதல் அலகே போதுமானதாக இருந்தது.
இலக்கண உரையாசிரியர்கள் பற்றி ஒரே அமர்வில் தெரிந்துகொள்ள தி.சு. நடரான் எழுதிய ‘உரைகளும் உரையாசிரியர்களும்’ என்ற குறுநூல் போதும். 70 பக்கங்களில் தனித்தனியாக காலவரிசைப்படி உரையாசிரியர்களின் பணியைச் சுட்டிக்காட்டிச் சென்றுள்ளார். உரையாசிரியர் பகுதிக்கு இதை மட்டுமே படித்தால் போதும்.
மொழி வரலாற்றுக்கு காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சு. சக்திவேல் எழுதிய ‘தமிழ்மொழி வரலாறு’ நூலின் முதல்பாதி முக்கியமானது. அதிலுள்ள திராவிட மொழிகளின் பகுப்பு அட்டவணையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நிகண்டுகள் பற்றிய தமிழ் இணைய நூலகத்தில் ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன.
இலக்கியத்திறனாய்வுக்கு நான் பயன்படுத்திய நூல்கள் நான்கைந்து இருக்கும். தி.சு. நடராசனின் ‘திறனாய்வுக் கலை : கொள்கைகளும் அணுகுமுறைகளும்’ அடிப்படையான நூல். எம். வேதசகாயகுமாரின் ‘இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்’ கலைச்சொல் அகராதிபோல் ஒவ்வொரு வார்த்தைகளாக அகரவரிசைப்படி விளக்கம் கொடுக்கும் பிரமாதமான நூல். இ.எஸ்.டி.யின் ‘இலக்கிய இசங்கள்’ நூலும் tamilvuவின் இணையப் பாடக் குறிப்பும் இவ்வலகு குறித்து தெளிவான செய்திகள் பெற உதவும்.
திறனாய்வு நூல்களை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வகையில் க.பஞ்சாங்கம் எழுதிய ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு’ சிறப்பம்சம் பொருந்திய நூல்.
தமிழக வரலாறு அலகுக்கு கே.கே.பிள்ளை எழுதிய நூல் அசைக்கமுடியாத துணை. நிச்சயம் அதை வாசித்து விடவேண்டும். அதைவிட்டுவிட்டு மா. ராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு, தி.வை.ச. மற்றும் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு என்று தனித்தனியாக கோதாவில் குதித்தால் நேரம் முழுங்கிவிடும். சோழர் காலம் பற்றியும் பாண்டியர் காலம் பற்றியும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகப் படிக்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை பாடநூல்கள் அதிகளவு உதவிப்புரியும். நான் அவற்றைத்தான் வாசித்தேன்.
தமிழகப்பண்பாடு அலகுக்காக தனிப்பட்ட முறையில் நான் எதுவும் வாசிக்கவில்லை. இதழியல் பொறுத்தவரை மா.பா. குருசாமியின் ‘இதழியல் கலை’ என்ற நூல் முக்கியமானது. இவற்றைத் தவிர நான் அவ்வப்போது வாசித்த ஆய்வுநூல்கள் பேருதவி புரிந்தன.
படித்ததை எங்ஙனம் பயன்படுத்துவது?
இவற்றை மட்டும் படித்தால் போதும், நேரடி கேள்விகள் அப்படியே தேர்வில் பிரதிபலிக்கும் என்றிருக்கக் கூடாது. அவை ஒருபோதும் நிகழாது. தேர்வில் ஆஃப்ஷன்களை தவிர்க்க இவை பயன்படும். ‘நெட்’ போன்ற தேர்வுகளில் சரியான பதிலைத் தேர்வு செய்வதைக் காட்டிலும் தவறான பதிலை தவிர்க்கப் பழகி பதிலளிக்கக் கற்றுக் கொள்வதே மிகச் சரியான வழிமுறை.
சான்றாக, ஜூலை 2023-ல் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பின்வருமாறு கவனியுங்கள்.
கே. இராவண காவியம் குறித்த சரியான கூற்றுகள்
A. இராவண காவியம் புலவர் குழந்தையால் இயற்றப்பட்டது.
B. இக்காவியம் 1971ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
C. இராவண காவியம் 1946-ல் வெளிவந்தது.
D. இராவணனைக் காவியத்தலைவனாகக் கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.
இவற்றுள் எது சரியானது:
1. A,B,C
2. B,A,D
3. A,C,D
4. B,C,D
பாக்கியமேரியின் ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ நூலின் ஆறாம் பதிப்பில் 240ஆம் பக்கத்தில் இதற்கான பதில் உள்ளது. ஆனால் இது பற்றிய மேலோட்டமான புரிதலை வைத்தே நாம் இதற்குச் சரியாகப் பதிலளிக்கலாம்.
A. மற்றும் D. கூற்று சரியானது என்று நாமெல்லோருக்கும் தெரியும். B மற்றும் C இல்தான் சந்தேகம் வலுக்கும். எனவே A மற்றும் D அடக்கிய ஆப்ஷன்களை மட்டும் வட்டமிடுங்கள் (2 மற்றும் 3) இதில் இப்போது B சரியா, C சரியா என்று சிந்திக்க தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியை வைத்து முடிவுசெய்யலாம். 1971-ல் திமுக ஆட்சியில் இருந்தது. திமுகவின் கொள்கை விளக்கமாக விளங்கும் இராவண காவியத்திற்கு நிச்சயம் 1971ஆம் ஆண்டு தடை வந்திருக்காது. எனவே Cதான் சரியான கூற்று. ஆக ACD என்று வரும் (3)தான் சரியான பதில் என்று எலிமினேஷன் முறையில் பதில் தேட வேண்டும்.
பொது வாசிப்பு
இவைத் தவிர்த்து சில பொதுவான நூல்களை வாசித்தால் மதிப்பெண்கள் அள்ளலாம். அ.கா. பெருமாள் எழுதிய ‘தமிழ்ச் சான்றோர்கள்’ மற்றும் ‘தமிழறிஞர்கள்’ நூல் ஆளுமை குறித்த புரிதலோடு நிரம்ப அறிவூட்டும் செய்திகளை வாரிக் கொடுக்கிறது. பல்கலைக்கழகங்களின் அமைவிடம், அதன் சிறப்பம்சம், அதனதன் பதிப்பு பணிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
நெட் தேர்வின் வினாத்தாள் ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஒரு சிறப்புச் சங்கதி சார்ந்து ஒருபக்கம் சாய்வாக அமைவதுண்டு. ஒருமுறை மொழியியல் சார்ந்த கேள்விகள் அதிகம் வரும், மறுமுறை கல்வெட்டியல், மன்னர்களின் பட்டப்பெயர் என்று மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் படித்த தலைப்பிலிருந்து அதிகம் வாய்த்தால் ஜோராக சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனாலும் ஒவ்வொரு அலகிற்கும் குறிப்பிட்ட கேள்விதான் என்ற வரன்முறை இருக்கிறது. பெரும்பாலும் அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. டிவிட்டரின் நிறுவனர் பெயரைக் கேட்பதெல்லாம் எந்த அலகின் அம்சத்தில் வருமென்று யாருக்கும் தெரியாது. இதழியல், தமிழும் பிற துறையும் என்று சொல்லி சமாதானம் அடையலாம்.
முதல் தாளுக்கு என்ன செய்வது?
மற்றபடி இரண்டாம் தாளுக்கு இதுகாறும் நான் சொன்னவையே போதும். இரண்டாம் தாளுக்கு வழங்கும் அதே கவனத்தை முதல் தாளுக்கும் செலுத்த வேண்டும். இரண்டையும் வெவ்வேறாகப் பார்ப்பது நிச்சயம் மதிப்பெண்ணை பாதிக்கும். நான் முன்பு சொன்னதுபோல் மதிப்பெண் மனத்திலிருத்தி படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
முதல் தாளில் கணிதம் சார்ந்த கேள்விகள், ரத்த உறவு சார்ந்த கேள்விகள், விளக்கப்படம் சார்ந்த கேள்விகள், பத்தி வினாக்கள் போன்ற பகுதிகளில் தவறிக்கூட ஒரு மதிப்பெண்ணும் விட்டுவிடக்கூடாது. இவற்றைச் சரியாகச் செய்தாலே 30 மதிப்பெண் பெற்றுவிடலாம். அடுத்ததாக Research Methodology, Teaching Aptitude போன்ற பகுதிகளை மனதார வாசித்து கலைச் சொற்களை அப்படியே உள்வாங்க வேண்டும். Higher Education Institution, Communication, ICT, People Development and Environment பகுதிகளுக்கு Oxford நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகமும், Arpita Karwa-வின் காணொளிகளும் இன்றியமையாதது. அவற்றின் துணைகொண்டுதான் முதல் தாளில் 37/50 பதில்களை வென்றெடுத்தேன்.
நிச்சயம் இதற்கு சரளமான ஆங்கில வாசிப்பு தேவை. தினந்தோறும் ஐந்து பத்தி வினா கேள்விகளை (Comprehension) பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். Harpreet Kaur எழுதி Oxford வெளியிட்ட புத்தகத்தில் ஒவ்வொரு அலகையும் எளிதாகப் புரிந்துகொள்ள நிறைய விவரணைகள் உள்ளன. இதுமட்டும் படித்தாலே முதல் தாளில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறலாம்.
முதல் தாள் பற்றிய நான் இங்கு அதிகம் பேசாவிட்டாலும், அதில் படிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் மின்னஞ்சல் செய்யுங்கள் பதிலளிக்கிறேன்.
மதிப்பெண் திட்டமிடல்
ஒவ்வொருவரும் தான் சார்ந்த பிரிவின் நெட் மற்றும் ஜே.ஆர்.எஃப். கட்-ஆஃபை கடந்த ஐந்தாண்டுகளுக்கு பார்த்துக் கொள்ளுங்கள். முதல் தாளிலும் இரண்டாம் தாளிலும் குறைந்தபட்ச மதிப்பெண் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதைத்தாண்டி மதிப்பெண் பெறும்போதுதான் நாம் தேர்ச்சி அடைவோம். கட்-ஆஃப் மதிப்பெண்ணைத் தாண்டினால்தான் நெட் மற்றும் ஜே.ஆர்.எஃப். சலுகை எல்லாம்.
எனவே முதல் தாளில் 30-35 கேள்விகள் சரியாக விடையளிக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதிலொரு 60 – 65 மதிப்பெண் பெற்றுவிட்டால் சிறப்பு. இரண்டாம் தாளில் 100 வினாக்கள் கேட்கப்படும். அதில் பாதிக்குப் பாதி சரியான விடை அளித்தால் போதும். 50×2 = 100 மதிப்பெண். ஆகமொத்தம் 160-165 மதிப்பெண்களை அழகாக அள்ளினால் ஜே.ஆர்.எஃப். பெற்று வாகைப்பூ சூடலாம். இதில் விடுபட்டவை ஏராளம். ஒரே மூச்சில் ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன். நினைவு வரும்போது அவ்வப்போது புதுப்பிக்கிறேன்.
முதல் முயற்சியில் நான் ஒன்றரை நாள் மட்டுமே படித்தேன். இரண்டாவது முயற்சியில் இரண்டு நாள் படித்தேன். ஒன்றரை நாளில் நெட்; இரண்டு நாளில் ஜே.ஆர்.எஃப் என்பது கேட்பதற்கு வேடிக்கையாகவும் தற்புகழ்ச்சி வாசகமாகவும் தோன்றலாம். ஆனால் அதற்குப்பின் தொடர்ச்சியான வாசிப்பு இருந்தது. நான் இதில் குறிப்பிட்ட பல புத்தகங்கள் தேர்வுக்காக அன்றி தனிப்பட்ட முறையில் பல நேரங்களில் வாசித்தவை. தேர்வின் போது ஒருமுறை புரட்டிப் பார்த்தேன், அவ்வளவுதான்.
தேர்வுக்காக அன்றி அறிவுப் பசியுடன் தினந்தோறும் வாசித்து வாருங்கள். உங்கள் எல்லோருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
Tq sir for ur best experience
மகிழ்ச்சி 🙂