உலக நாடுகளைக் கைக்குள் வைத்திருக்கும் அமெரிக்க அதிபரை நோக்கி, “கடல் கடந்துள்ள என் பள்ளியில், நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. இதில், இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியும்?” என்று 16 வயதுப் பெண் கண்ணீருடன் கர்ஜித்தார். கிரெட்டா தன்பெர்க் போன்ற பலரின் இந்தக் கண்ணீரை பன்னெடுங்காலமாக உலக அரசியல் தலைவர்கள் எரிவாயு ஊற்றி ஊற்றி எரித்து வருவது அற்ப அரசியல் லாபத்துக்குத்தான்!
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கட்டமைப்பு மாநாடு, 2015-ம் ஆண்டு நியூயார்க்கில் கூடியது. அமெரிக்கா உட்பட அங்கு கலந்து ஆலோசித்த 195 நாடுகளின் பிரதிநிதிகள், காலநிலை அவசரத்தை ஒன்றுகூடி எதிர்கொள்ள 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி கையெழுத்திட்டனர். அது பாரிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
தொழிற்சாலையால் அதிகரித்துவரும் உலக வெப்பத்தின் சராசரியை 2°C வரை குறைக்கவும் அதைத் தொடர்ந்து 1.5°C ஆக நிலைப்படுத்தவும் தங்கள் உச்சவரம்பை நிர்ணயித்துக் கொண்டனர். ஒபாமாவின் ஆட்சிக்கு உட்பட்ட அமெரிக்காவின் சார்பில் செயலர் ஜான் கெரி (John Kerry) கையெழுத்திட்டார்.
உலகெங்கிலும் உள்ள காலநிலை ஆராய்ச்சியாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் பாரிஸ் ஒப்பந்தத்தைத் தூக்கிக் கொண்டாடினர். மறுமுனையில் பிரசார மேடை ஒன்றில், “பாரிஸ் ஒப்பந்தத்தை உதறி எறிவேன்” என்று முன்மொழிந்தார் அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். 2016-ல் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல், உலக வரலாற்றையே தீர்மானிக்கும் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. அதனால் வாரி வீசிய தீர்மானங்களும் வானளாவிய அளவில்தான் இருந்தன.
ஆபிரகாம் லிங்கன் வழிவந்த குடியரசுக் கட்சி சமூக நலன் சார்ந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பது பலருக்கு வியப்பாக இருந்தபோதிலும், ட்ரம்ப்பிடம் இதற்கென வலுவான காரணம் இருந்தது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டுத் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பனின் அளவை ஆண்டறிக்கையாக சமர்ப்பிக்க பாரிஸ் ஒப்பந்தம் வலியுறுத்தியது. எனவே, இதை எதிர்ப்பதன் மூலம் பெருமுதலாளிகளைத் தன்வசப்படுத்த எண்ணினார், வலதுசாரிக் கொள்கை கொண்ட டொனால்ட் ட்ரம்ப்.
ட்ரம்ப்பின் சூளுரை எல்லாம் வாக்காக மாறியது. பலரின் ஆச்சர்யத்துக்கு மத்தியில் வெள்ளை மாளிகையில் குடிபுகுந்தார் ட்ரம்ப்.
அதன்பின், “நான் பிட்ஸ்பர்க் மக்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், பாரிஸ் மக்களுக்காக இல்லை!” என்று அவர் வார்த்தைகளும் தடிக்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இப்படியிருந்தது, “ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.” ஒப்பந்த விதிப்படி நடைமுறைப்படுத்திய மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 2020 நவம்பரில்தான் வெளியேற முடியும். இருந்தும் அமெரிக்கா வலுக்கட்டாயமாக 2017-ம் ஆண்டே வெளியே சென்றது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உள்நாட்டுக் கலகங்களும் மூண்டன.
அதன் பின்னர், பொதுமேடை ஒன்றில், “முதலில் கார்பன் அளவை வெளியிடச் சொல்வார்கள். பின்னர் அளவைக் குறைக்க, தொழிற்சாலையை இழுத்து மூடவும் கட்டளையிடுவார்கள். நம்முடைய பொருளாதாரத்தைக் கீழிறக்க பாரிஸ் கையாளும் வித்தையே இந்த ஒப்பந்தம். இது நம் நாட்டை நிரந்தரப் பாதாளத்துக்குக் கொண்டு செல்லும்” என்று போலியாகச் சமாதானம் செய்தார். மத்திய அளவில் வெற்றிபெற்ற போதிலும் பிராந்திய அளவிலான அதிகாரத்தை ட்ரம்ப்பால் கைப்பற்ற முடியவில்லை. ஆகவே, அவரால் மத்தியில் கொண்டுவந்த மாற்றங்களை, மாகாணங்களில் கொண்டுவர முடியவில்லை. இதனால் மத்திய அளவில் மட்டுமே ட்ரம்ப்பால் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முடிந்தது, மாகாண அளவில் முடியவில்லை.
பிராந்திய ஆளுநர்கள் கைகோத்துக்கொண்டு ‘ஒன்றிணைந்த மாகாணங்களின் காலநிலை கூட்டணி’ என்ற அமைப்பைத் தொடங்கினர். பெயரளவில் தொடங்கினாலும் மாற்றத்ததுக்கான சாவி ட்ரம்ப்பின் பிடியில்தான் இருந்தது. உலக நாட்டுத் தலைவர்களும் காலநிலை அவசரத்தின் வீரியத்தை உணர்ந்தவர்களும் ட்ரம்ப்பை கூட்டணிக்குள் கொண்டு வர அரும்பாடுபட்டு வருகின்றனர். உலகவாசிகளின் எதிர்காலத்துக்கு அந்த ஒற்றை மனிதனின் இசைவு அத்தனை முக்கியமானதா?
ஆம்! உலகளவில் அதிக கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. அதாவது, உலகின் மொத்த கார்பன் வெளியீட்டில் அமெரிக்கா மட்டும் 14.58%. இதனால் கடந்த ஆண்டுகளில் மட்டும் 47.7% அமெரிக்கர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்துள்ளனர். ஒப்பந்தம் கையெழுத்தான நாளன்றே சீனா – அமெரிக்கா ஒன்றிணைந்து கார்பன் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர தனிப்பேச்சுவார்த்தைகள் நடத்தின.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 3) கூடும் 2019 நேட்டோ உச்சிமாநாட்டில் (NATO summit) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனைத்தான் (Boris Johnson) ஒட்டுமொத்த காலநிலை ஆய்வாளர்களும், தங்கள் கடைசி ஆயுதமாக நம்பியுள்ளனர். லண்டனில் கூடும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளார். எனவே, காலநிலை அவசரத்தில் அமெரிக்காவின் ‘அபாயகரமான, பொறுப்பற்ற’ நிலையை மாற்றிக் கொள்ளுமாறு பேச பிரிட்டன் பிரதமரை உலகெங்கிலும் உள்ள 350 ஆய்வாளர்கள் கடிதம் வாயிலாகக் கேட்டுக்கொண்டனர். கடிதத்தில் அவர்கள், “அறிவியலுக்கு ஒவ்வாத அரசியலை ட்ரம்ப் திரும்பப் பெற்றுக்கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி கார்பன் அளவை குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு இயக்குநர், “காலநிலையால் ஏற்படும் மாற்றம் சமூகத்தையும் சமூகத்தால் ஏற்படும் மாற்றம் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது” என்றதையும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர். காலநிலை அவசரத்துக்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 120 கோடி யூரோ ஒதுக்கியுள்ள போரிஸ் ஜான்சனிடம் காலநிலையின் தேவை குறித்தான புரிதல் இருக்கிறது என்றபோதும் பிரிட்டனின் முதல் பொதுத்தேர்தலின்போது காலநிலை விவாதத்தில் ஜான்சன் கலந்து கொள்ளவில்லை.
இவர் இருக்கையில் பனிக்கட்டியால் செய்யப்பட்ட சிலையை வைத்து விவாதம் செய்ததும் 5 – 6 நாள்களுக்கு முன் நடந்த அசம்பாவிதம்தான். டிசம்பரில் நடக்கவிருக்கும் பிரிட்டன் பிரதமர் தேர்தலை முன்னிறுத்தியாவது ட்ரம்ப்புடன் ஜான்சன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வார் என்று நம்பலாம். உலகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இன்றைய பொழுதில் கூடும் இவ்விருநாட்டுத் தலைவர்களிடம்தான் உள்ளது. காலநிலை மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!