spot_img
Saturday, December 21, 2024

நூலறிமுகம் – பாரதி : கவிஞனும் காப்புரிமையும்

Hereafter the cry that Bharathiar’s works are not available in any of the bookshops will not be made. I’m sure the spirit of Bharathi will pervade the entire Tamilnadu and will be infused into our children – our young boys and girls – and that they will live up to the ideals put forward by poet Bharathi.

இந்தச் சொற்களை 14-03-1955’ல் நிதியமைச்சர் சி. சுப்பரமணியம் தமிழக சட்டமன்றத்தில் உதிர்த்தபோது, கிட்டத்தட்ட மிக நெடுங்காலப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார். இதுவரை எந்தவொரு எழுத்தாளனின் படைப்புக்கும் நாட்டுடைமையாக்கம் என்ற நடைமுறையை உலகில் எந்த நாடும் முன்னெடுத்ததில்லை.

இது படைப்புலகில் எந்த வகையிலும் நேருவின் Tryst with Destiny என்ற தன்னுணர்ச்சி அரசியல் பேச்சுக்கு சளைத்த உரையல்ல.

இந்திய விடுதலைக்காகப் பாடிய கவிஞனின் எழுத்துக்கள், சிலரொருவரின் ஆதாயத்திற்காய் விலங்கு பூட்டி அடைபட்டுக்கிடந்தது. இன்று நாம் சர்வ சாதாரணமாய் பயன்படுத்தும்படி, ’பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டக்கூட உரிமையில்லாதபடி’ கடுமையான விதிகள் இருந்தன‌. மேற்கோளில் வரி ஒன்றுக்கு காலணா கப்பம் கட்ட வேண்டிய அவசியம் இருந்த நிலையிலிருந்து 600-700 பக்கம் உள்ள பாரதியின் முழுத்தொகுப்பும் 100-150 ரூபாய்க்குள் அடக்கி மலிவுப் பதிப்பாய் மக்கள் கையில் புரளச் செய்ததில் பல பெரியோர்களின் பங்கு பேசப்படாமலேயே இருக்கிறது.

தி.க. சண்முகம் தொடங்கிய இந்தப் போராட்டம் உலகில் முன்மாதிரியான ஒரு அரசியல் சட்டத்தை தமிழகம் முன்னெடுக்க வழிவகுத்தது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் சி. விஸ்வநாத ஐயரும் நெகிழ்ந்து கொண்டு இசைவு தந்ததும் – செல்லம்மாள் பாரதியின் குடும்ப வறுமையும் அவினாசிலிங்கம் செட்டியாரின் பாரதி பற்றுமே இவை எல்லாவற்றிற்கும் காரணம்.

வேறெந்த இந்திய மொழியிலும் இல்லாதபடி நாட்டுமையாக்கப்பட்ட 2,000-கும் மேற்பட்ட புத்தகங்களை ஒருங்கே மின்னூல் வடிவில் tamildigitallibrary.in என்ற அரசின் பிரத்தியேக வலைத்தளத்தில் இத்தனை இலாவகமாக நாம் பார்த்துவிட முடியாது. காந்தியின் எழுத்துக்களே 2009-ல் தான் நாட்டுடைமை ஆகின. அம்பேத்கரின் எழுத்துக்கள் அரசுடைமை ஆனபோதும் நாட்டுடைமை ஆகுவதில் இன்னும் சிக்கல் உள்ளது. அந்த வழக்கு இன்றளவும் நடந்துவருகிறது. பொதுவுடைமைப் பூமியில் பிறந்த தாகூரின் எழுத்துக்கள் மீதான காப்புரிமை சிக்கல்களும் இன்றளவும் நாட்டுடைமையாக்கப்படாமல் ஒருசிலர் கைவசத்தில் உள்ளன.

இந்த வகையில் தமிழகத்தின் பங்கு பெருமுன்னோடித் தனமானது. முதலில் பாரதியார், பின் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அறிஞர் அண்ணாதுரை என அன்றுதொட்டு தொ.பரமசிவன் எழுத்து வரை இன்றுவரைக்கும் 100-கும் மேற்பட்ட படைப்பாளிகளின் எழுத்துக்கள் நாட்டுடைமை ஆகியுள்ளன.

இதற்கெல்லாம் முன்னோடியாய் உள்ள, பாரதியின் எழுத்துக்குப் பின் உள்ள அரசியல் சமாச்சாரங்களும் – நாட்டுடைமையான கதைக் கோவையும் தனக்கே உரித்தான டிடெக்டிவ் பாணியில் ஆ.இரா. வேங்கடாசலபதி இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பாரதி இறந்தும் பாடுகள் குறையவில்லை. சுந்தர ராமசாமி, கண்ணதாசன், மு. வரதராசன் என தமிழகத்தில் இன்றளவும் சூடுபிடிக்கும் காப்புரிமை – நாட்டுடைமை பிரச்சனையை சூடு குறையாமல் புரிந்துகொள்ள அனல் பறக்கும் இந்தப் புத்தகத்தின் துணை மிக இன்றியமையாத் தேவை!

நூலின் முதல் அத்தியாயத்தில் பதிப்புரிமைக்கும் காப்புரிமைக்கும் வித்தியாசம் சொல்லத் தொடங்கி, இறுதி அத்தியாயத்தில் நாட்டுடைமை அரசுடைமை வித்தியாசம் வரை நுணுக்கமான விஷயங்களை சலபதி பேசிச் செல்கிறார்.

மெய்யப்ப செட்டியாரின் தன் – வரலாற்றிலிருந்து அடிகோலிடும் வரிகள், தன்னை எந்த அளவிற்கு உண்மைக்கு தூரத்தில் வைத்து அழகு பார்க்க விரும்பினார் என்றும்; பாரதியின் பாடலுக்கு 10,000 ரூபாய் விலைகொடுத்து வாங்கி அம்போ’வென காப்புரிமை இழந்தபோதும் இருமாப்போடு கோர்ட் வாசல் ஏறி அலைந்த கதை பாரதி ஆய்வாளர்கள் தொடாத பக்கங்கள்.

கல்கி. இரா. கிருஷ்ணமூர்த்தி, கி.வா. ஜெகநாதன், மு.வரதராசன், ரா.பி. சேதுப்பிள்ளை, சீனி. விசுவநாதன், ஓமந்தூரார், நாரண. துரைக்கண்ணன், ப. ஜீவானந்தம், மண்டயம் ஶீநிவாஸாச்சாரி போன்றோரின் பங்கு இதிலெல்லாம் என்னவாக இருந்தது என்றறிய விறுவிறுப்பு குறையாத இந்நூலை அனைவரும் வாசிக்கலாம்!

பதிப்பகம் : காலச்சுவடு
ஆசிரியர் : ஆ. இரா. வேங்கடாசலபதி
விலை : ரூ. 120/- மட்டும்.

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்