Author
இஸ்க்ரா
இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதிநல்கையோடு முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவரின் விருப்பத்துக்குரிய துறைகள்.
இன்றைய திருச்சி மாவட்டத்தில் 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். தொடக்கப்பள்ளியை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சக்தி தேவி மெட்ரிக் பள்ளியில் முடித்து, உயர்நிலைப் படிப்பை மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் பள்ளியில் தொடர்ந்தார். பின்னர் குமார் நகரில் உள்ள இன்பேண்ட் ஜீசஸ் பள்ளியில் மேனிலைப் பள்ளி படிப்பை முடித்து, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாவது இடம் பெற்றது இவர் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.
தன் இளங்கலைப் பட்டத்தை கோவை மாவட்டம் பேரூரில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் பயின்றார். 2018-21 கல்வியாண்டில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்று, தங்கப்பதக்கம் பெற்றார். இளங்கலை பயிலும் போதே விகடன் பத்திரிகைக் குழுமம் நிகழ்த்தும் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றார். கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாள் பற்றிய செய்தி, இவர் வெளிகொண்டுவந்ததுதான். அதற்குப் பின் அந்தப் பாட்டி பற்றிய செய்தி மத்திய அமைச்சர் வரை சென்று பல நலதிட்ட உதவிகள் பெற்றார்.
விகடன் மற்றும் வலைப்பூவில் இவர் எழுதிய கட்டுரைகளைப் பார்த்து, தொகுப்பு நூல் ஒன்றில் கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர் எழுதிய கட்டுரை பிடித்துப் போனதால் நூல் முழுமையும் இவரே எழுதும்படி பதிப்பாசிரியர் கேட்டுக்கொண்டார். கொரோனா முதல் அலையின் போது தொடங்கப்பட்ட இப்பணி 6 மாதங்களில் நிறைவுற்று 14C என்ற புத்தகமாக, கவின் பப்ளிகேஷன்ஸ் உருவாக்கத்தில் வெளிவந்தது. இதற்குப்பின் மொழிபெயர்ப்பு பணிகளில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியவர், வரலாறு வளர்த்த வாய்கள் என்ற பேனரில் நண்பர்களோடு சேர்ந்து உலகப் புகழ்ப்பெற்ற சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்த்தார். அதே பெயரில் அதனை நூலாகக் கொண்டு வந்தார்.
முன்னணி செய்தி நிறுவனமான இந்து தமிழ் திசையின் மாயா பஜார் சிறப்பிதழில் ‘குழந்தை மேதைகள்’ என்ற தொடர் எழுதி முடித்துவிட்டு, தற்போது வெற்றிக்கொடி இதழில் ‘இவரைத் தெரியுமா?‘ என்றொரு சிறார் தொடர் எழுதி வருகிறார்.