இந்திய மொழிகளைக் கற்றல்
தன் 24ஆவது வயதில் இந்தியா வந்தடையும் கால்டுவெல், மதராஸ் நகரில் 3 ஆண்டுகள் தங்கி ஓர் ஆங்கிலேயரின் உதவியோடு தமிழ் பயில்கிறார். வில்லியம் ஜோன்ஸ் தன் 37ஆவது வயதில் கல்கத்தா வந்தடையும் போது, அவருக்கு சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஆசையிருந்தது.
ஆனால் அவருக்கு முன்பே இந்தியா வந்தடைந்த சார்ல்ஸ் வில்கின்ஸ் (பகவத் கீதை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – 1785) சம்ஸ்கிருதப் பாண்டித்தியம் பெற்றிருந்ததால் அவரை நம்பி சம்ஸ்கிருந்தப் பாடங்கள் கற்காமல் காலம் கழித்தார், ஜோன்ஸ். வில்கின்ஸ் உடல்நிலை நலிவடைந்து போனதால் அவர் இலண்டனுக்குச் செல்ல, வேறு வழியின்றி சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ளும் கோதாவில் குதிக்கிறார் ஜோன்ஸ்.
ஆனால் ஒரு மிலேச்சருக்கு சம்ஸ்கிருதம் கற்றுக்கொடுப்பதா என்று உள்ளூர் பிராமணப் பண்டிதர்கள் முட்டுக்கட்டை இடுகின்றனர். ஜோன்ஸ் பலரை நாடி அலைகிறார். இறுதியில் வைத்தியர் வகுப்பைச் சார்ந்த ராம்லோச்சன் கவிபூஷனா என்பவரின் உதவியோடு சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்கிறார். ஜோன்ஸின் முன்னோடி சார்ல்ஸ் வில்கின்ஸ் மற்றுமொரு விஷயத்திற்கு பெயர் பெற்றவர். 1788ஆம் ஆண்டுதான் வங்காள மொழி முதன் முதலாக அச்சேறுகிறது.
வங்க மொழியில் அமைந்த ‘வங்கமொழியின் இலக்கணம்’ எனும் நூலை எழுதியவர் வில்கின்ஸின் நண்பர், நத்தானியல் பிரேசி. இந்நூலில் அமைந்துள்ள வங்கமொழி எழுத்துருக்களை (Typefaces) வடிவமைத்தவர்தான் சார்ல்ஸ் வில்கின்ஸ். இதற்காக ஜோசப் ஷெப்பர்டு மற்றும் பஞ்சனன் கர்மாக்கர் எனும் இரும்புக் கொல்லரின் உதவியை நாடுகிறார். வங்கமொழி வரலாற்றின் அதிமுக்கியமான அடிக்கலை நாட்டியபோது வில்கின்ஸின் வயது வெறும் 28.
இந்த இளைஞர்தான இங்கிலாந்தின் முதல் சம்ஸ்கிருதப் பண்டிதர் எனும் பெருமையைப் பெற்றார். இவர் சம்ஸ்கிருத கற்ற கதை தெரியுமா உங்களுக்கு? இவரும் மிலேச்சர் என்ற காரணத்தால் துரத்தியடிக்கப்பட்டார். இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல், வாரன் ஹேஸ்டிங்ஸ்-ன் உதவியால் பெனாரஸ் சென்று புகழ்பெற்ற சம்ஸ்கிருதப் பண்டிதர் காசிநாத் பட்டாச்சாரியாவின் உதவியால் படித்துத் தேர்ந்தார்.
இங்ஙனம் இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளவும் அவற்றை அச்சேற்றவும் வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த இடியாப்பச் சிக்கலைத் தீர்க்க அவர்கள் வழிகாணாமல் இருந்திருப்பார்களா என்ன? இங்கிருந்துதான் என் கேள்வி தொடங்கியது. வங்கமொழி எழுத்துருக்களால் ஆன ‘வங்கமொழியின் இலக்கணம்’ நூல் வெளிவருவதற்கு முன்பே சில வங்கமொழி நூல்கள் அச்சில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை வங்க எழுத்துருக்களில் இல்லை. அப்படியானால் எவை என்ன எழுத்துருவில் அச்சேறின? ரோமன் எழுத்துருக்களில். ஆம்.
இந்திய மொழிகளுக்கு ரோமன் எழுத்துருக்கள்
இன்றையக் காலத்தில் ‘நல்லா இருக்கீங்களா?’ எனக் கேட்பதற்கு ‘Nalla Irukkeengala?’ என அரட்டைமொழியில் எழுதுகிறோமே, அதைத்தான் அந்நிய மொழிக்காரர்களும் அன்றைக்குச் செய்தார்கள். வின்ஸ்லோ அகராதி கூட தமிழ் வார்த்தைகளை ரோமன் எழுத்துருக்களுடன் சேர்த்து அச்சேற்றியது. சான்றாக, Abdomen எனும் வார்த்தைக்குப் பொருள் சொல்ல வரும் வின்ஸ்லோ ’அடிவயிறு’ எனச் சொல்லிவிட்டு அதன் அருகிலேயே adivayiru என்றும்; கீழ்வயிறு எனச் சொல்லிவிட்ட்டு kizhvayiru என்றும் எழுதினார். வின்ஸ்லோ அகராதி வெளியான ஆண்டு 1862. ஆனால் ரோமன் எழுத்துருக்களைப் பயன்படுத்தும் இம்மரபு பல்லாண்டுகளாக நீடித்திருக்கிறது.
மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்ட வில்லியம் ஜோன்ஸ் அவர்களும் ரோமன் எழுத்துருக்களைப் பயன்படுத்தினார். தேவனாகிரி எழுத்துக்களுக்கு நிகரான ரோமன் எழுத்து அட்டவணையை வடிவமைத்து வெளியிட்டார். இவையொருபுறம் வளர்ச்சி கண்டாலும் உள்ளூர் எழுத்துரு வடிவமைப்பின் வளர்ச்சியும் மெல்லமாக மலர்ந்தது. (இதுகுறித்து தனியே பேச வேண்டும். மற்றொரு பதிவில் காண்போம்.)
தென்னாட்டில் (குறிப்பாக மதராஸ் மாகாணம்) வாழ்ந்த இருவர் 1850 வாக்கில் தடாலடியாக ஒரு கருத்தை முன்வைத்து மாபெரும் வேண்டுதல் வைக்கின்றனர். அதன்சாரமாவது, ”இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே எழுத்துருக்கள் மற்றும் அகரநிரல்கள் (Alphabets) தேவைப்படுகின்றன. எனவே இம்மொழிகளைக் கற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் நிகழ்கிறது. இவற்றைத் தீர்ப்பதற்கு ஒரே வழிமுறைதான் உண்டு. இந்தியா முழுமைக்கும் ‘ஒரே அகரநிரல்’ – One Alphabet for All India திட்டத்தை கொண்டுவர வேண்டும். அதற்கான தகுதி ரோமன் எழுத்துக்களுக்குத்தான் உண்டு. தற்போதுள்ள இந்திய மொழி எழுத்துக்களையெல்லாம் பெயர்த்துவிட்டு ரோமன் எழுத்துருக்களை கொண்டுவர வேண்டும்.”
இக்கோரிக்கை 1859ஆம் ஆண்டு அச்சேறியுள்ளது. தென்னாட்டில் வாழ்ந்து, அனைவராலும் அறியப்பட்ட அவ்விரு வெளிநாட்டு அறிஞர்கள் யார்? அவர்கள் வைத்த கோரிக்கையின் தேவை என்ன? ஒருவேளை நிறைவேறியிருந்தால் தமிழ் எழுத்துக்களைக் காணாத தலைமுறையாக நாம் இருந்திருப்போம் என்று எண்ணக் கூடிய அளவில், பெரும் மாற்றங்களை உட்செறித்த அக்கோரிக்கையின் மறைமுக அரசியல் என்ன? அதற்காக தயார் செய்த வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
அவ்விருவர் யார் என்பதற்கான சில துப்பு கொடுக்கிறேன்.
- முதாலாமவர் கல்லறையில் ’இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதவில்லை.
- இரண்டாமவர் பெயர் எல்லீஸுக்குப் பிறகு ‘திராவிடம்’ எனும் வார்த்தையோடு அதிகம் அறியப்படுவது.
தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தில் இருந்து வேறானது என்று எல்லீசனார் முன்மொழிந்தார். அவரை அடுத்து அக்கருத்தை ஆய்வுப் பூர்வமாக வெளிக்கொணர்ந்தவர் கால்டுவெல். அதே கால்டுவெல் அவர்கள்தான் இந்திய எழுத்துருக்கள் அனைத்திற்கும் மாற்றாக ரோம எழுத்துருக்கள் அமைய வேண்டும் எனும் கருத்தை தென்னகத்தில் முதன்மையாகக் கொண்டிவந்திருக்க வேண்டும். (உறுதிப்பாடு தேவைப்படுகிறது)
ஏனெனில் கால்டுவெல்லும் தானும் ஒரே காலக்கட்டத்தில் இக்கருத்தோட்டம் குறித்து சிந்தித்ததாக ஜி.யு.போப் எழுதுகிறார். எனினும் தொடக்கநிலையில் அகரநிரல் சீர்த்திருத்தம் குறித்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை. 1859இல் ஜி.யு.போப் இவ்வேண்டுதலைப் புத்தகமாகக் கொண்டுவரும்போது, ‘On the Substitution of the Roman for the Indian Characters’ என்று கால்டுவெல் எழுதிய கட்டுரை ஒன்றை அதன் பின்னிணைப்பில் சேர்க்கிறார். கால்டுவெல் குறிப்பிடும் சமாச்சாரங்கள் சில காலம் எடுத்து ஆய்வு செய்ததன் பின்னணியைக் காட்டுகின்றது. இதன்மூலம் கால்டுவெல் முன்னவராக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
வடக்கில் தோன்றிய இச்சீர்திருத்த எண்ணம் தெற்கு நோக்கி வந்த கதையை போப் எழுதுகிறார். Charles Trevelyan எனும் பிரிட்டிஷ் கலெக்டர் மொழியியல் துறையில் ஈடுபாடு கொண்டவர். அவர் ‘The Application of the Roman Alphabet to All the Oriental Languages’ எனும் புத்தகத்தை ஜேம்ஸ் பிரின்செப் ( ஆசியச் சமூக நிறுவன இதழாசிரியர், கல்வெட்டுக்களில் உள்ள பிராமி எழுத்து வடிவத்தைப் படிப்பித்துச் சொன்னவர்), அலெக்சாண்டர் டஃப் (கல்கத்தா பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்) முதலியவர்களோடு சேர்ந்து எழுதுகிறார். இந்நூலின் அடிநாதத்தை போப் அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றை தென்னிந்திய மொழிகளுக்கும் பொருத்திக்காட்ட விரும்பி ‘One Alphabet for All India’ எனும் நூலை எழுதுகிறார். (எனினும் கால்டுவெல்லுக்கு இக்கருத்தோட்டம் வந்தவழி அறிவது எதிர்கால ஆய்வுக்கு வழிவகுக்கலாம்)
அதில் ரோம எழுத்துருக்கள்தான் இந்திய மொழிகள் அனைத்திற்குமான எழுத்துரு மாற்றாக விளங்க முடியும் என பல கருத்துக்களை முன்வைத்து வாதிடுகிறார், போப். அவர் குறிப்பிடும் செய்திகளை இனி ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம்.
1. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் இன்று பெரும்பாலும் மிகக் குறைவாகவே எழுதப் பயன்படுகின்றன. பலர் இன்று அம்மொழிகளில் எழுதுவதில்லை.
2. அப்படியே எழுதினாலும் அதில் பல குழப்பம் உள்ளன. த, ட, ப முதலிய எழுத்துக்கள் வார்த்தைகளின் முதல், இறுதி, கடை என பயின்றுவரும் இடத்திற்கு ஏற்ப உச்சரிப்பில் மாற்றம் கொள்கின்றன. அவற்றை முறைப்படுத்திக் காட்ட வெவ்வேறு எழுத்து வடிவங்களைத் தமிழ் மொழி கையாள்வதில்லை.
3. சம்ஸ்கிருதத்தில் வழங்கப்படும் கடின உச்சரிப்பு நிறைந்த எழுத்துக்களை, தமிழ் மொழி பேசும் இனத்தவர்கள், தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப எளிமைப்படுத்தி வழங்குகிறார்கள்.
4. இதன் காரணமாகத்தான் கிரந்த எழுத்துக்கள் அதிக அளவில் தமிழ் மொழியில் கொண்டுவரப்பட்டன.
5. தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றாக, ரோம எழுத்துக்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும்போது ஆங்கிலேயர்களுக்கு மிகுந்தப் பயன் தரும்.
6. தமிழில் உள்ள 216 எழுத்துக்களும், பார்த்த மாத்திரத்திலேயே ஆங்கிலேயர்களை நடுக்குறும் அளவுக்கு அச்சமூட்டுகின்றன.
7. (ஜி.யு.போப் இப்புத்தகத்தை எழுதி வெளியிட்ட போது, உதகமண்டலம் இலக்கணப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.) இப்பகுதியில் என் பல்லாண்டு கால ஆசிரிய அனுபவத்தில் கண்டடைந்த விஷயம் என்னவென்றால், உள்ளூர் மக்கள் பலருக்கு அவர்தம் பாஷையில் எழுதப் படிக்கத் தெரியவில்லை. எழுத்துக்களின் எண்ணிக்கையே இதற்குக் காரணம்.
8. ரோம எழுத்துருக்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், உள்ளூர் மக்களும் எளிமையாக தம் மொழியைக் கற்றுக்கொள்வார்கள். ஏனெனில் அதில் இருப்பது வெறும் 26 எழுத்துக்கள்தான்.
9. இந்தியக் குழந்தைகளைக் காட்டிலும் ஐரோப்பியக் குழந்தைகள் விரைவில் அகரநிரல் மனப்பாடம் செய்து விடுகின்றனர். (ஆங்கில மொழி ரோம எழுத்துருக்களைத்தான் பயன்படுத்துகின்றது)
10. இம்மாற்றம் மதகுருமார்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நிரம்ப உதவுசெய்ய வல்லது.
11. உள்ளூர் எழுத்துருக்கள் அச்சுக்கு உகந்தவையாக இல்லை. ஒரு புத்தகத்தை அச்சிட, மிக அதிக அளவிலான எழுத்துருக்கள் வேண்டியுள்ளன. (பின்னாளில் பெரியார் கொண்டுவந்த எழுத்துச் சீர்த்திருத்தை இங்கு எண்ணிப் பார்க்க)
12. ரோம எழுத்துருக்களை Capital, Small, Italic, Bold செய்து பலதரப்பட்ட பொருளை மறைமுகமாக கடத்த முடியும். முதலெழுத்தை Capital செய்து, பெயர்ச்சொல் என்று அடையாளம் காட்டிவிடலாம். ஆனால் தமிழ் அதற்குப் பாத்தியப்படாது. மேலும் தமிழ் எழுத்துருக்களை Underline செய்வது கூட இயலாத காரியம்.
13. தமிழ் எழுத்துருக்களை அச்சிட்டால், அவை அதிகப் பக்கத்தை விழுங்குகின்றன.
13. பைபிள் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து பல ஆண்டுகள் ஆகியும், நம்மால் ஒரு கையடக்கப் பதிப்பு கொண்டுவர இயலவில்லை. இன்னும் நான்கு தொகுதிகள் கொண்ட பெரும் பதிப்புதான் கைவசம் இருக்கிறது.
14. தென்னிந்திய எழுத்துருக்கள் காகிதத்தில் எழுதுவதற்கோ, அச்சில் வார்ப்பதற்கோ உகந்தவை அல்ல. அவை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு ஏற்ப உருவானவை. கச்சேரி எழுத்தாளர்கள் Cursive எழுத்துமுறையில் வேகமாக எழுத ரோமன் எழுத்துருக்களே பாத்தியப்படும். தமிழில் Cursive முறை கிடையாது.
15. ரோமன் எழுத்துருக்கள் பயன்பாட்டிற்கு வந்தால், உள்ளூர் மக்களுக்கு ஒப்பியல் அறிவும் உலக மொழிகள் குறித்த பார்வையும் விசாலமாகும்.
16. மின்காந்த தந்தி முறைக்கு குறைந்த எழுத்துருக்கள் கொண்ட ரோம மொழியே உகந்தது.
17. நீதி மற்றும் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்த இதுவொன்றே வழி எனச் சொல்லிகொண்டே போகும் ஜி.யு.போப், சம்ஸ்கிருத மொழியிடம் இருந்து தமிழ் கடன் வாங்கியிருப்பதையும் இத்திட்டத்தின் அந்நியத் தன்மையையும் பேசுகிறார். இருப்பினும் தென்னிந்தியா முழுமைக்கும் ஒரே மொழி அமைவதற்கு இதுதான் முதல்படி என்பதில் திண்ணமாக இருந்தார்.
மேலும் இத்திட்டத்தின் நடைமுறைத்தன்மை குறித்து பேசும்போது, “தென்னிந்திய மொழிகள் குறித்து திட்டமிட்டு ஒரு காரியத்தைச் செயல்படுத்துவதற்கு தென் பிராந்தியத்தில் வசிக்கும் 150 பேரின் ஒப்புதல் இருந்தாலும் போதும்” என்று ஓரிடத்தில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.
தமிழ் மொழியின் பழைய எழுத்துருக்கள், ரோமன் எழுத்துருக்களோடு ஒத்துப்போவதாகச் சொல்லி அதற்கு நியாயம் சேர்க்கிறார். ‘தமிழர்கள் அறிவுஜீவிகள் – புத்திசாலிகள்.’ எனவே தமக்கு நல்லது விளைவிக்கும் திட்டங்களுக்கு ஒருபோதும் தடங்கலாக இருக்க மாட்டார்கள். இத்திட்டத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வார்கள் எனச் சொல்லி முடிக்கிறார்.
இறுதியாக இத்திட்டத்தை அமல்படுத்த சில பரிந்துரைகள் முன்வைக்கிறார். அவை பின்வருமாறு:
1. தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான புத்தகத்தில் தமிழ் எழுத்துருவில் அமைந்த பக்கம் ஒருபுறமும், ரோமன் எழுத்துருவில் அமைந்த பக்கம் மறுபுறமும் அமைய வேண்டும்.
2. இரண்டு எழுத்துருக்களையும் மாணவர்களுக்குப் பயன்படுத்தக் கற்றுத்தர வேண்டும். ரோமன் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகளை தனியே எடுத்துச் சொல்ல வேண்டும்.
3. பள்ளி ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி ரோமன் எழுத்துருக்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
4. அரசு சார்ந்த கடிதங்களும், ஆணைகளும் இனி ரோமன் எழுத்துருக்களில் இடம்பெற வேண்டும்.
5. பிராந்திய எழுத்தொலிகளுக்கு நிகரான ரோமன் எழுத்துரு அட்டவணையை அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள்தோறும் காட்சிக்கு வைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து டாக்டர் ராபர்ட் கால்டுவெல் எழுதிய கட்டுரை ஒன்று பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கால்டுவெல் குறிப்பிடுவதன் சாரத்தை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன்.
1. தேவனாகிரி, இந்துஸ்தானி எழுத்து வடிவங்களுக்கு மாறாக, ரோம எழுத்துருக்களே இச்சீர்த்திருத்தத்திற்கு மிகவும் சால்புடையது.
2. தமிழ் மொழியில் உள்ள 216 எழுத்துக்கள், உபாத்தியாயர்களையே திக்குமுக்காடச் செய்கிறது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள்கூட தமிழ் படிக்கச் சிரமப் படுகிறார்கள். ஆற்றொழுக்குபோல் தமிழ் படிப்பவரைக் காண்பது மிகவும் அரிது.
3. தமிழ் மொழியில் உள்ள 200-500 குறியீடுகளைப் படிப்பதென்பது உலகெங்கிலும் உள்ள அப்பாவிக் குழந்தைகளுக்கு மிகவும் கடினமான காரியம்.
4. வெளியூர் வாசிகளை விடுங்கள். இந்தியாவில் இருக்கும் பழங்குடி மக்களுக்கு, இத்தனைக் குறியீடுகளைக் கொண்ட தென்னிந்திய மொழிகளைப் பயிற்றுவிக்க முடியுமா?
5. நான் சொல்லும் இந்த எழுத்துரு மாற்றம் இன்று நேற்று நடப்பதல்ல, தமிழ் மொழிக்கு இம்மாற்றம் புதிதுமல்ல. ஏற்கனவே பலமுறை நிகழ்ந்த இம்மாற்றத்தை, மொழியின் மேன்மைக்காகவும் படிப்பவர்களின் நலனிற்காகவும் மீண்டும் நாம் ஒருமுறை நிகழ்த்திக் காட்ட விரும்புகிறோம்.
இவ்வாறாகச் சொல்லி, போப் குறிப்பிட்டதுபோன்ற ‘பிராந்திய எழுத்தொலிகளுக்கு நிகரான ரோமன் எழுத்துரு அட்டவணை’ ஒன்றை கட்டுரையின் இறுதியில் சேர்த்து நிறைவு செய்திருக்கிறார்.
தமிழ் மொழி வரலாற்றின் குறிப்பிடத்தகுந்த இமாலய மாற்றமாக நிகழ வேண்டிய இச்சீர்த்திருத்த திட்டத்திற்கு என்னவானது? தமிழ் நாட்டினர் இதை எங்ஙனம் எதிர்கொண்டனர். இரும்புக்கரம் கொண்ட ஆங்கிலேய அரசு இத்திட்டத்தை சிரத்தையெடுத்து அமல்படுத்தியதா? இல்லை என்றால் ஏன்? ஆம் என்றால் எப்படி என்பதெல்லாம் மேலதிக ஆய்வில் தெரியவரும்.
1.ஜி.யு.போப்
2.கால்டுவெல்
மிகச்சரி. கட்டுரை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வாசிக்க.