____
“இவ் இரு பெருந்தகைகையாளரின் திருவுருவங்களும் நமது இளைஞர்கள் எப்பொழுதும் தியானித்துவரத் தக்கன. இவ் இருவரது வாழ்க்கைகளும் நம்நாட்டு இளைஞர்களுக்குப் பயன்படக் கூடிய பல உபதேசங்களைத் தரவல்லன.”
திருவல்லிக்கேணியில் பாரதி மற்றும் உ.வே.சா.வின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டதையொட்டி வையாபுரிப்பிள்ளை உதிர்த்த முத்துக்கள் இவை. நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் அசைக்கமுடியாத ஆதர்ச ஆளுமைகளைப் பற்றி ய.மணிகண்டன் அவர்கள் எழுதிய நூல் வெளிவருகிறது என்று அட்டைப் படம் வெளியான நாள் முதலே எனக்குத் தூக்கமில்லை.
மிகச் சிறிய நூல். 150 பக்கம் ஓடினாலும் 80 பக்கங்களுக்குமேல் பின்னிணைப்புகள்தான். பாரதிக்கும் உ.வே.சா.விற்கும் இடையில் உள்ள தட்டையான உறவை, கண்ணாடிக் குடுவைக்குள் அடக்கும் முயற்சியில் ய.ம. மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஒன்றிரண்டு நிகழ்வுகளின் நீட்சியாக மட்டுமே மொத்தப் புத்தகமும் நகர்கிறது.
‘பாரதியும் உ.வே.சா.வும்’ எனும் இயலில் பாரதி உ.வே.சா. வரலாற்றுத் தொடர்பை எந்தப் புள்ளியிலிருந்து பார்க்க வேண்டும் என்கிற துள்ளியப் பார்வையைத் துலக்கமாக்குகிறார். இராசதானிக் கல்லூரியின் தமிழ் மன்றமே இவ்விருவரையும் இணைத்த பாலம். 1906ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி ஆங்கிலேயே அரசு உ.வே.சா.விற்கு மஹாமஹோபாத்தியாய விருது அறிவித்த வேளையில், இராசதானிக் கல்லூரியின் தமிழ் மன்றம் அவருக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கின்றது.
அக்கூட்டத்தில் பாரதியும் கலந்துகொள்கிறார் / கலந்துகொள்ள வில்லை / நண்பர் மூலம் தன் வாழ்த்துப்பாவை கொடுத்தணுப்புகிறார் எனப் பல கதைகள் ஓடுகின்றன. ஒவ்வொரு கதையையும் நிதானமாக நூல் பிரித்து எடுத்து, அதன் நிறை குறை காரணங்களை அலசி ஆராய்கிறார்.
அவ்விழாவில் கலந்துகொண்ட பாரதி, உ.வே.சா. முன்னிலையில் தன் ‘செம்பரிதி ஒளிபெற்றான்’ கவிதையை வாசித்தாரா? அதைக் கேட்ட உ.வே.சா.வின் மறுமொழி என்னவாக இருந்தது, உ.வே.சா. பாரதியை நிந்தனை செய்தார் எனச் சொல்லும் வையாபுரிப் பிள்ளை, அ.மார்க்ஸ், சிவத்தம்பி போன்றோரின் கூற்று உண்மையா என ‘சில விவாதங்கள்’ இயல் ஆய்கிறது. உள்ளங்கை அளவு தரவுகளுடன் நிதானமாக வாதிடுகிறார்.
மேலும் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல் எழுந்த சூழல் குறித்தான விவாதப் பொட்டலத்தை மீண்டும் பிரித்து கூராய்வு செய்கிறார். வி.கிருஷ்ணசாமி ஐயர் சொற்பொழிவின் தாக்கம்தான் பாடலெழக் காரணம் என பலவிடத்துச் சொல்லும் உ.வே.சா. கூற்றை தொ.மு.சி எங்ஙனம் மறுக்கிறார் என்பதும், அவர் மறுப்புரையில் உள்ள வலிமையற்ற காரணங்களை தரவு பூசி வலுசேர்க்கும் வேலையும் அச்சிறு கட்டுரை செய்யும் பெரும் உபாயம்.
என்னவிருந்தாலும் உ.வே.சா.- பாரதி இருவரும் கில்லி தாண்டு நண்பர்களாய் இருந்திருப்பார்களோ என்று கற்பனைக் கோட்டை கட்டிவைத்திருந்தவனுக்கு, வெறும் தட்டையான தொடர்புகள் ஏமாற்றமளித்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலும் ரத்தமும் சதையுமாய் தமிழுயர்வுக்குப் பணி செய்த ஆளுமைகளை ஒப்புமைப் படுத்தி ஆய்வு செய்வதன் அவசியத்தையும் தேவையையும் ஓரளவேனும் கிடத்தியிருக்கிறது