கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி இன்றுவரை ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகள் காட்டுத்தீ கொடுமையில் தவித்து வருகிறது. அதிலும் தென்கிழக்குப் பகுதியில் உள்ள நியூ சௌத் வேல்ஸ் மாகாணமே அதிக அளவில் இடர்பாடுகளை சந்தித்திருக்கிறது. தீயை அணைக்க எண்ணற்ற தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன செய்வது என்ற திகைப்பில் இருக்கையில்தான் அடுத்த சோகமும் நடந்துள்ளது.
டிசம்பர் மாதம் 19-ம் தேதி அதிகாலை. நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஊரக தீயணைப்புத் துறையினருக்கு அவசர அழைப்பு ஒன்று வருகிறது. உடனே கிளம்பி வெந்து கொண்டிருந்த காடுகளுக்கு நடுவே விரைந்தது ஒரு குழு. பாதுகாப்பான பாதையில் செல்வதையும் உறுதி செய்திருந்தனர். ஆனால், பக்ஸ்டோன் நகரைக் கடக்கும்போது, சரிந்திருந்த மரத்தில் எதிர்பாராமல் மோதியது அந்த ஜீப். ஓட்டி வந்தவரும் அருகில் இருந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆண்ட்ரூ டிவைர், ஜுயாப்ரே கேட்டன் ஆகிய இரண்டு தீயணைப்பு வீரர்களின் இழப்பால், ஆஸ்திரேலிய தேசமே கண்ணீர் சிந்தியது.“தங்கள் நரம்பில் ஓடும் ரத்தத்தில் எல்லாம் தீயணைப்புத் துறை மீது கொண்ட அன்பை நிரப்பி வைத்த இருவரை இழந்திருக்கிறோம். ஓதுவைர் பிறர் நலனுக்காக தன் உயிரையும் கொடுப்பவர். அதையே இன்று நிகழ்த்திக் காட்டியும் உள்ளார்” என்று ஹார்ஸிலி பார்க் நகர தீயணைப்புத் துறை இயக்குநர் டேரன் நேசன் குறிப்பிட்டிருந்தார்.
ஆண்ட்ரூவின் தந்தை எரால், “ஊரக தீயணைப்புத் துறையில் சேர்ந்ததும் அதை தன்னுடைய இரண்டாவது குடும்பமாகப் பார்த்தான். அவனுடைய ஆன்மா, அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும்” என்றார். இவரின் இறுதி ஊர்வலம் அரசு சார்பில் நடத்தப்பட்டது. சவப்பெட்டியைச் சுற்றி சிவப்பு நிற தீயணைப்புத் துறை கொடி போர்த்தப்பட்டிருந்தது. இந்தப் பெட்டியை தீயணைப்பு வாகனத்தில், `ஆண்ட்ரூ டிவைரின் நினைவாக’ என்றெழுதி எடுத்துச் சென்றனர். இந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் ஸ்காட் மோரிசனும் அவருடைய மனைவி ஜெனி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இறப்புக்குப் பின் வீர தீரப் பட்டம் ஓதுவைருக்கு ஆணையரால் வழங்கப்பட்டது. இது இந்நாட்டில் தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும். இதை அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
36 வயதான ஆண்ட்ரூ டிவைர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர்கூட. இதெல்லாம் தவிர்த்து ஆண்ட்ரூ ஒரு நல்ல தந்தை. தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக 19 மாதப் பெண் குழந்தை கார்லெட்டை கருதினார். குழந்தை கார்லெட், மனைவி மெல்லிசா, தீயணைப்புத் துறை என இந்த மூன்று வட்டத்துக்குள்ளே வாழ்ந்து வந்தார்.
இந்த உயிரிழப்பு நாட்டுக்காக என்றாலும், ஆண்ட்ரூவின் மகள் கார்லெட்போல யாரும் துன்பம் அடையப் போவதில்லை. தன் தந்தை வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியையே சுற்றிச் சுற்றி வந்தார் கார்லெட். தன் தாய் அழைத்தபோதும், அங்கிருந்து வர மறுத்துவிட்டாள். தந்தையின் ஹெல்மெட்டை அணிந்து விளையாடிய அவளுக்கு எப்படி புரியவைப்பது என அருகில் இருந்தவர்களும் கலங்கினர்.
இவருடன் இறந்த ஜுயாப்ரே கேட்டனுக்கும் 19 மாதக் குழந்தை ஒன்று இருக்கிறது. சரியாக கார்லெட் பிறந்த இரண்டாவது நாள்தான் கேட்டனும் தந்தை ஆனார்.
தீ விபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றச் சென்றவர்களின் குடும்பத்தின் சோகம், ஆஸ்திரேலியா மக்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.