spot_img
Monday, December 23, 2024

அமெரிக்கா -இரான் மோதல் எப்போது, எதற்காகத் தொடங்கியது?

1973-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதியை சாதாரண நாளாக வரலாறு எழுதவில்லை. அரசியல், பொருளாதாரம் என்று வந்தாலும் மதத்தைப் பிரிக்க முடியாது என்று ஏகாதிபத்திய நாடுகளுக்கு மத்தியக் கிழக்கு நாடுகள் செவியில் அறைந்த நாள் அது. எகிப்து மற்றும் சிரியா நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது நான்காவது போரை தொடுத்திருந்தது. மாபெரும் சேதம் விளைவித்த, உலகம் முழுவதும் அதிக பாதிப்புகளை உண்டாக்கிய ‘யோம் கீப்பூர் போர்’ தான் அது. உடனே எகிப்தின் ஜனாதிபதி சாதத், எண்ணெயை ஆயுதமாகப் பயன்படுத்தி இஸ்ரேலின் பங்காளியான அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்படி சவுதி மன்னரான ஃபைசலை வற்புறுத்தினார். இஸ்ரேலை நேரடியாக எதிர்க்க முடியாததால், சவுதி அரேபியா மூலம் அமெரிக்காவை ஆட்டம் காணவைத்து, அதன்மூலம் இஸ்ரேலை ஸ்தம்பிக்கவைக்க கனவுகண்டது, எகிப்து. சாதத்தின் வற்புறுத்தலை வலிந்து ஏற்றுக்கொள்ள சவுதியிடம் ஒரு கண்டிப்பான காரணம் இருந்தது. அது, எகிப்தின் மொத்த மக்கள் தொகையில் 94.9% பேர் முஸ்லிம் என்பதே.

எகிப்தின் வேண்டுகோளின்படி, அக்டோபர் மாதம் 16-ம் தேதி சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து அரபு நாடுகள் எண்ணெய் விலையை 70% உயர்த்தின. அரபு நாடுகளின் பெட்ரோலியத் துறை அமைச்சர்கள் குவைத் நகரில் கூட்டிய அவையொன்றில், ”அமெரிக்காவை நாம் குறிவைக்க வேண்டும். அரபு நாட்டிலுள்ள அனைத்து அமெரிக்க வணிக நிறுவனங்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள மற்ற நாடுகள்மீது முழுமையான எண்ணெய்த் தடையைச் செயல்படுத்த வேண்டும்” என்று இராக் பிரதிநிதி வாதிட்டார்.

இதனால் 1929-ல் ஏற்பட்ட பணவீக்கத்தைப் போன்ற நெருக்கடியையும் பீதியையும் அமெரிக்கா சந்திக்கும் என்று அவர் முன்மொழிந்தார். பல எதிர்ப்புகளைத் தாண்டி, அடுத்த நாளே வரையறைக்குட்பட்ட தடையைச் செயல்படுத்தியது அரேபிய நாடுகள். இதன்படி, எண்ணெய் உற்பத்தியில் 5 சதவிகிதம் துண்டிப்பதில் தொடங்கி, தங்களது அரசியல் நோக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை அடுத்தடுத்த மாதம், மேலும் 5 சதவிகித உற்பத்திக் குறைப்பு செய்யவும் முடிவெடுத்தனர். இது, அமெரிக்காவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முத்தாய்ப்பாக 1974, மார்ச் 18-ம் தேதி இந்தத் தடை முடிவுக்குவந்தது. இதன் பாதிப்பை விளக்க வேண்டுமென்றால்,1970-ம் ஆண்டு 1.39 டாலருக்கு விற்றுவந்த 1 பீப்பாயின் விலை, 1974-ல் 8.32 டாலராக உயர்ந்திருந்ததை கருத்தில்கொள்ளலாம்.

“தொழில்நுட்ப உதவியும் ராணுவத்திற்குத் தேவையான ஆயுத உதவியும் நாங்கள் அளிக்கிறோம், பதிலுக்கு இதுபோன்ற ஒரு எண்ணெய்த் தடை இனி வராது என்ற உறுதியை மட்டும் தாருங்கள்” என்று சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்க அரசு சவுதியிடம் மண்டியிட்டது. தனக்கு எதிராகக் குரல் உயர்த்துபவர்களை எல்லாம் ராணுவ அதிகாரத்தால் நசுக்கித் தள்ளியே பழகிப்போன அமெரிக்காவுக்கு, இது பேரிடி. ஆனால், இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே இது அமெரிக்கா கற்ற பாடம். கற்றுக்கொடுத்த நாடு இரான். இங்கிருந்தே இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புகைச்சல் தொடங்கியது.

1908-ம் ஆண்டு, ஆங்கிலோ – பெர்சியன் ஆயில் கம்பெனியை இரானில் பிரிட்டன் கம்பெனி தொடங்கியது. இரானில் எண்ணெய் எடுப்பதற்காகத் தொடங்கப்பட்ட முதல் எண்ணெய்க் கிணறு இதுதான். ஆனால் நாள்கள் செல்லச்செல்ல, இரானியர்கள் அதை அரசுடைமையாக்க முற்பட்டனர். அதன் விளைவுதான் 1953-ல் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் அஜாக்ஸ்’. இரானின் பிரதம மந்திரி முகமது மொஸாடெக், பெட்ரோலியம் தொடர்பான நிறுவனங்களையும் அவற்றின் சொத்துக்களையும் தேசிய உடைமையாக்கினார். ‘டைம்’ பத்திரிகை, அவரை அந்த ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது. கோபமடைந்த இங்கிலாந்து, தனித்து எதிர்க்க முடியாது என துணைக்கு அமெரிக்காவையும் அழைத்தது. 

அமெரிக்கா அதில் இணைந்ததற்கு இரண்டு முக்கியக் காரணம், “எண்ணெய் வளத்தை இரானியர்கள் தன்வசப்படுத்தினால், பின்னர் அவர்கள் சொல்வதுதான் விலை என்ற நிலை வரும். இவர்களை இப்படியே விட்டால், அரபு நாடுகளில் அமெரிக்காவின் பெயர் அடிபட்டுவிடும்.” நேரடியாக ராணுவ நடவடிக்கை எடுத்தால், ரஷ்யாவும் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளும். அதனால் சி.ஐ.ஏ ஏஜென்ட் கெர்மிட் ரூஸ்வெல்ட் மூலம் இலகுவாகக் காய்நகர்த்தி, மொஸாடெக்கை பதவி விலகவைத்து, தனக்கு தலையாட்டும் முகமது ரேஸாஷாவை ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா. அது நாள் முதல் எண்ணெய் விஷயத்தை மிகக் கவனமாகவே கையாண்டுவந்தனர்.

அமெரிக்காவுக்கு அடிபணிந்து வரும் ஷாவுக்கு எதிராக, இரானில் 1979-ம் ஆண்டு மக்கள் புரட்சி வெடித்தது. இதில் 50 – க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு, இரானிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் அடைக்கப்பட்டனர். மதத் தலைவர் ஹையத்துல்லா, அந்நாட்டின் தலைவரானார். இது, மீண்டும் அமெரிக்க – இரான் உறவில் திருப்பத்தைக் கொண்டுவந்தது. இரான் மீது எண்ணெய்த் தடையை அமல்படுத்துவதாக அமெரிக்கா மிரட்டியது. இந்த மிரட்டலுக்குப் பின், சவுதி போன்ற நாடுகள் நம் கையில் என்ற நம்பிக்கை இருந்தது. மத்தியக் கிழக்கு நாடுகிலேயே இரானும் இராக்கும் தான் அமெரிக்காவுக்கு அடங்காமல் இருந்துவந்தன. என்னதான் இரான் இஸ்லாமிய நாடானாலும், அரபு நாடு அல்ல. அது இரானை மேலும் தனிமைப்படுத்தியது.

பயந்த இரான், சுமார் 400 நாள்களுக்குப் பிறகு பிணைக்கைதிகளை விடுவித்தது. சவுதி அரேபியா செய்த துரோகத்தால், இரானின் பொருளாதார நிலை மேலும் மோசமானது. 1979 – க்கு முந்தைய ஷாவின் ஆட்சிக் காலத்தில் அணுஆயுதங்கள், அணுமின் நிலையங்கள், அணுச்செறிவூட்டும் தொழில்நுட்பம் பகிர்தல் போன்ற பல திட்டங்களை அமெரிக்கா இங்கு அமல்படுத்தியது. தற்போது, தங்களுக்கு எதிராகவே மக்கள் புரட்சி செய்ததால், அதே காரணத்தை முன்னிறுத்தி குற்றம் சுமத்தியது. அதிக அளவில் அணுஆயுதங்கள் தயாரிப்பதாகக் கூறி, உலக அளவில் கடுமையான பொருளாதாரத் தடையை விதித்தது.

தங்கள் நாட்டு எண்ணெயைத் தாங்களே உரிமைகொள்ளப் போராடியதற்காக வாழ்வியலையே இழந்து, பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்கு அழைத்துச்செல்ல நேரிட்டது. நாள்கள் சென்றன, அமெரிக்க அதிபர் ஒபாமா 2015-ம் ஆண்டு இரான் நாட்டுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நிபந்தனைக்கு உட்பட்டு தளர்த்தினார். ஓரளவு முன்னேறி வந்த இரானை மீண்டும் சிக்கலுக்கு உள்ளாக்கியது, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு. இரானுக்கு எதிராக மும்மரமாக வேலைசெய்தார் ட்ரம்ப். மேலும், 2015-ம் ஆண்டு தளர்த்தப்பட்ட பொருளாதாரத் தடையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தார். உலக நாடுகள் பல இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ட்ரம்ப் உறுதியாக நின்றார். இரானின் பொருளாதார நிலைமை மீண்டும் மோசமானது.

இந்த நிலையில்தான், இரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமான், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தார். “சுலைமான் அமெரிக்காவின் ராணுவ அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதைத் தடுத்துநிறுத்தவே இந்த நடவடிக்கை” என்கிறார் ட்ரம்ப். மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்ட விதையென இதைப் பலர் கூற, ட்ரம்ப் மறுத்துள்ளார். முதலாம் உலகப் போருக்குக் காரணமான பிரான்சிஸ் பெர்டினாண்டின் படுகொலையை இது ஒத்திருக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். எண்ணெய் என்ற வியாபாரப் பொருளை, தங்கள் உரிமையைப் பெறத்துடித்த இரானியர்களுக்கு, மரணமே மிச்சமாய் இருக்கிறது.

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்