திருப்பாவைப் பாசுரங்களுக்கு அறிவியல் ரீதியில் உரை எழுதி, அதிலுள்ள தொன்மங்களையும் தொட்டுச் சென்றவர் டாக்டர் சசித்ரா தாமோதரன். அவர் எழுதிய 30 பாசுரங்களின் உரையும் 30 நாள் தொடராக விகடனில் வெளிவந்தது. இதனை “மார்கழி உற்சவம்” என்று நூலாகத் தொகுத்து வெளியிடும் நிகழ்வு நேற்று(11-12-2019) கோவையில் நடைபெற்றது.
விழாவில் பிரபல நாவலாசிரியான இந்திரா சௌந்தரராஜன், ‘சின்னக் கலைவாணர்’ என செல்லமாக அழைக்கப்படும் விவேக், மேடைப் பேச்சாளரான ஜெய்ந்த ஶி பாலகிருஷ்ணன், ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற தலைமை தாங்கி வந்திருந்தனர்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம்.கிருஷ்ணன், விஜயா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் விஜயா வேலாயுதம் போன்றோருடன் இப்புத்தகப் பதிப்பாளர் சந்தியா நட்ராஜனும் கலந்து கொண்டார். புத்தகத்தை சின்னக் கலைவாணர் விவேக் வெளியிட, எம்.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நாவலாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசுகையில், “நம் மனதில் பசைபோட்டு ஓட்டிக் கொள்ளும் இசைப்பாடல் இந்தத் திருப்பாவை. சங்கப் பாடல்கள் மொத்தம் 2381. பாடிய புலவர்கள் 475 பேர். அதிலும் பெண்பாற் புலவர்கள் வெறும் 41 பேர் தான். இந்தச் சங்க காலப் பெண்பாற் புலவர்களின் நீட்சி தான் ஆண்டாள். ஆண்டாளின் மற்றொரு பெயர் கோதை. நிலம் கோதப் பெற்றதால் கோதை என்றும், சீதனமாகப் பெற்றதால் சீதை என்றும் பெயர் வந்தது. ஆண்டாள் இட்டுச் சென்ற குறிப்பை ஆராய்கையில் அவளின் பிறந்தநாள் கி.பி 767 – ஜூன் மாதம் 26-ம் தேதி என்று கண்டறியலாம். தெய்வானுபவ பாடல்களுக்கு உருக்கம் தான் முக்கியமானப் பாங்கு. 13 வயதுப் பெண்ணான ஆண்டாளுக்கு இது அரிதில் வந்ததில்லை. அதனால் தான் ராமானுஜர் தன்னை திருப்பாவையின் ஜீயர் என்று அழைத்துக் கொண்டார்” என்றார். மேலும் ஆண்டாள் பக்திப் பெருக்கம் பற்றிப் பாடுகிறாள். தற்போது பக்தி வீக்கம் அதிகரித்து வருகிறது என்று நித்தியானந்தாவை நாவடக்கமாக சாடினார்.
இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் விவேக் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். சிறப்புரையில் தொடர்ந்து பேசிய விவேக், “இன்று மகாகவியின் பிறந்தநாள். பாருக்குள்ள நல்ல நாடு என்ற சொன்ன காலம் போய், பார்(Bar) குள்ளே நல்ல நாடு என்ற நிலை சூழ்ந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு மருத்துவர் தன்னுடைய திருப்பாவை பயணத்தை தொடர்ந்திருக்கிறார். மிக்க ஆராய்ச்சி செய்து, நிறைய கிளைக் கதைகளும் அதற்கான அறிவியல் காரணங்களுமாக இப்புத்தகத்தை நிரப்பியுள்ளார். எனக்கும் திருபாவைக்கும் சம்பந்தமே இல்லை. சம்பந்தப்படுத்திய மருத்துவருக்கு நன்றி. ஆனால் தேவாரத்திற்கும் எனக்கும் சம்பந்தமுண்டு. பெண் வேடமிட்ட என்னை எம்.எஸ்.பாஸ்கர் காதலிப்பதாக ‘குரு என் ஆளு’ திரைப்படத்தில் கதை வரும். அதில் ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்’ என்று நான் பாடியிருக்கிறேன்” என்று சிரிப்புக் கொப்பளிக்க பாடிக்காட்டினார்.
தன்னுடைய பசுமை கலாம் இயக்கம் குறித்து பேசுகையில், “இதுவரை 33,23,000 மரங்கள் நடவு செய்துள்ளோம். எங்களை முதன் முதலில் ஆதரித்த மண் கோவை தான். சிறுதுளி அமைப்பின் வனிதாமோகனே இந்தத் திட்டத்திற்கு முதன் முதலில் எங்களுக்கு கைக் கொடுத்தார். அதனால் கோவைக்கு நான் என்றும் கடன்பட்டுள்ளேன்” என்றார். தன்னுடைய துறை ரீதியாக இந்தப் புத்தகம் எப்படி பாதித்தது என்பதை விளக்கும் போது, ” ஆழிமழைக் கண்ணா என்ற நான்காவது பாடல் கடலால் எப்படி மழை உருவாகுகிறது என்பதை உணர்த்துகிறது. ஒரு தெய்வ அனுபவ நூலில் விஞ்ஞானத்தைப் பொருத்திப் பார்க்கும் முயற்சியில் ஆண்டாளும் முயன்றிருக்கிறார் இந்நூல் ஆசிரியரும் முயன்றிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தமானக் குறள் “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.” அதனால் நான் தீமையென்று தீண்டாமல் விடும் செயல்களில் இருந்து எனக்கு தீமை வருவது இல்லை” என்று முடித்தார். இறுதியாக ஜெயந்த ஶி பாலகிருஷ்ணன், ” ஆண்கள் புலமை உலகறிந்தது. பெண்கள் புலமை இன்னும் வீடே அறியாமல் இருக்கிறது. இந்த வகையில் எழுத்தாளரை பாராட்ட வேண்டும். தான் ஒரு மருத்துவர் என்பதால் திருப்பாவையில் வரும் நோன்பு முதலாக எல்லாவற்றையும் அறிவியல் பார்வையோடு பார்த்திருக்கிறார். ஒருபுறம் ஐன்ஸ்டீனை இழுக்கிறார், மறுபுறம் இதிகாச கதைகளுக்குள் நம்மை கடத்துகிறார். அபூர்வமான செய்தி என்னவென்றால், இவர் ஒரு மருத்துவர். ஆனாலும் மருந்தில்லா வாழ்வை எப்படி வாழ்வதென்றும் மருத்துவமனை இல்லாத சமூகம் பற்றியும் நிறைய பேசியிருக்கிறார். பெண்ணாக சொல்கிறேன் என்னைப் பொறுத்தவரை முதல் பெண்ணியவாதி ஆண்டாள் தான். ஏனென்றால் தான் நினைத்த ஒன்றை தானே வெளிப்படுத்தும் பாங்கு ஆண்டாளிடம் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. சூடிக் கொடுத்த சுடர்கொடியானவள் 30 நாள் கால அளவு நோன்பு இருக்கிறாள். இந்தக் கால அளவின் பின் பொதிந்திருக்கும் எபிஜெனிட்டிக்ஸ் (Epigenetics) தத்துவத்தையும் மருத்துவர் விளக்குகிறார். அதாவது 21 நாட்களுக்கு தொடர்ந்து செய்தால் எந்தப் பழக்கம் வழக்கமாகிவிடும். இதை தான் ஆண்டாளும் செய்தாள். ஆய்வாளர்கள் 7 வயது வரை குழந்தைக்கு நெகிழி மனம் என்று சொல்கிறார்கள். அதனால் நல்ல செய்திகளை மட்டுமே குழந்தை செவிக்கு கொடுங்கள்!” என்று முடித்தார். நூல் அமைந்தமைக்கும், நூல் எழுந்தமைக்கும் நூலாசிரியர் நன்றி நவிலலோடு விழா நிறைவுப் பெற்றது.
Context of this article
சின்னக் கலைவாணர் விவேக் சார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்னு கவர் பண்ணனும், பார்த்துக்குறீங்களா’னு குரு அண்ணா கால் பண்ணதும் எனக்கு தலகால் புரியல. விகடனில் மாணவப் பத்திரிகையாளரா பயிற்சியில் சேர்ந்து பாதி தூரம் கடந்த காலம் அது. மறுநாள் தேர்வு இருக்கே’னு மனசுல ஒரு ஓரமா சோகம் எட்டிப்பார்த்தாலும், “நான் பார்த்துக்குறேன் அண்ணா”னு சொல்லி போனை துண்டிச்சிட்டேன். புத்தக வெளியீட்டு விழாக்கு விவேக் சார் வரதா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கல்லூரி முடிஞ்சதும் அழைப்பிதழ் போட்டோ மட்டும் வச்சிக்கிட்டு தெரியாத அந்த இடத்தை கூகுள் மேப் உதவியோட 2.5 கி.மீ நடந்தே போனேன்.
எனக்கு முன்னாடியே ரூத் ஜான் அக்கா (போட்டோகிராபர்) வந்துட்டாங்க. நிகழ்ச்சியும் தொடங்கி,.. நேரம் ஓடிக்கிட்டே இருந்துச்சு.. வீட்ல இருந்து அழைப்பு. எப்பவும் வர நேரத்துக்கு ஆள காணோமே’னு பதற, காரணத்த சொல்லி கட் பண்ணிட்டேன்.. மணி ஒன்பதுக்கும் மேல ஆகிடுச்சு.. இறுதியா 9.30க்கு ஏகபோகமா முடிஞ்சிடுச்சு. விவேக் சாரை தனியா சந்திச்சு பேசனும்னு கடைசிவரை காத்துட்டு கிடந்தும் வாய்ப்பில்லாமலே போயிடுச்சு! சரி திருப்பூர் கிளம்பலாம்’னு மண்டபத்தை விட்டு வெளிய வந்தா ஒரு பஸ்ஸ காணோம். அப்பறம் அங்க இருந்து அண்ணாசிலைக்கு பஸ் புடிச்சு திருப்பூர் பஸ்’கு வெயிட் பண்ணி நின்னா.. நின்னா.. நின்னா.. ஒரு பஸ்ஸூம் காணோம். நேரம் பத்தை கடந்துடுச்சு.
எனக்கோ தூக்கம், பசி, தேர்வு, கவர் பண்ண ஈவென்ட் கட்டுரையை மார்னிங் அனுப்பனுமே’னு டென்ஷன், பஸ்’ஸ காணோமே’னு கடுப்பு, விவேக் சாரை பார்த்து பேச தானே இவ்ளோவும் பண்ணோம் இருந்தும் முடியலேனு வெறுப்பு.. எல்லாம் சேர்ந்து வராத பஸ் மேல வெறியா திரும்புச்சு.. 20 நிமிஷம் அப்பறந்தான் தெரிஞ்சுது. இராத்திரி நேரம் திருப்பூர் பஸ்ஸெல்லாம் அண்ணா சிலை வழி வராதாம், லட்சுமி மில்ஸ் வழியா போனதான் உண்டுன்னு ஒரு நடுத்தர அண்ணா சொன்னாரு. கிட்டத்தட்ட 2 கி.மீ மேல இருக்கும். நைட் 10.30 ஆச்சு. வழியே இல்ல.. நடந்தே போனேன். கடைசில பஸ்ஸூம் வந்துச்சு.. ஏறி திருப்பூர் வந்தா.. ஸ்டேண்ட் பூட்டிட்டாங்க! ங்ங்ப்பா.. வீட்டுக்கு 5 கி.மீ ட! மிட்-நைட் ஆச்சு! யாரும் கூட இல்ல.. சரி நட ராசா’னு நடந்தே போனா.. வழியில ஆப்பு! வீட்டுக்கு போற ஷார்ட்கட் வழியில 9-10 நாயிங்க ஒன்னு சேர்ந்து கத்தி கொடூரமா பயப்படுத்திடுச்சுங்க! ஒரு அடி எடுத்து வச்சா.. 10-ம் குலைக்குதுங்க.. குலை நடுங்கிடுச்சு. மறுபடியும் வேற வழியில்ல..
அந்த நடுராத்திரியில 3 கி.மீ சுத்தி.. 1.30-2.00 மணிபோல வீட்டுக்கு போய், காலையில 4.30 எழுந்து மறுபடி காலேஜ் கிளம்பி.. பஸ்’ல போகும்போது கட்டுரை எழுதி விகடனுக்கு அனுப்பி.. காலேஜுக்கு போயி நாலு பக்கம் புரட்டு எக்ஸாம் எழுதி ஷப்பா…னு மூச்சு விட்டா.. கடைசி வரை அந்தக் கட்டுரை வெளிவரவே இல்ல.. 😅😛. 1.5 வருஷம் முன்னாடி நடந்த இத்தனைக் கூத்தும் நேத்து மாரி நெனவிருக்கு. விவேக் சார்.. அன்னைக்கு நீங்க என்கிட்ட பேசியிருக்கலாம். இந்த நடுராத்திரியாச்சு நான் நிம்மதியா தூங்கியிருப்பேன். இப்ப பாருங்க, வெளிவராத உங்க கட்டுரையை.. உங்க நெனப்போட இவங்க எல்லாத்துக்கும் வாசிக்க அனுப்பி வைக்கிறேன்..