மீகாங்க் நதியில் வெள்ளம் வந்தால் மீன் எறும்பைத் தின்னும், வெள்ளம் வற்றினால் எறும்பு மீனைத் தின்னும்.
அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம், ஜீன் ஃப்ராங்காய்ஸ் பாஸ்டின் (Jean-Francois Bastin), யெலேனா (Yelena), கிளாய்டு கார்சியா (Claude Garcia) போன்ற அறிஞர்கள் முன்னிலையில் ஓர் ஆய்வு நடத்தியது. கடந்த ஜூன் மாதம், அந்த ஆய்வின் முடிவில் இப்படி ஓர் அறிக்கைய அந்தக் கழகம் தாக்கல் செய்தது, ‘முன்பு எப்போதும் உலகம் பார்த்திராத அளவு காடாக்கும் (Afforestation) நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒழிய, மாறிவரும் பருவநிலையை சீர்செய்ய வேண்டிய அவசரத்தை (Climate Emergency) நம்மால் எதிர்க்க முடியாது.
அதாவது, 900 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை உலகெங்கிலும் மீட்டு, அவற்றை மீண்டும் காடுகளாக்க வேண்டும்.’ இந்த அளவீடானது, அமெரிக்க கண்டத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்போடு நிகர் செய்தலுக்கு ஒப்பாகும். அந்த அளவுக்கு நாம் காடுகளை வளர்த்தால் மட்டுமே பருவநிலை மாற்றத்தைச் சரிக்கட்ட முடியும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளையும் நாம் அனுபவித்தே ஆக வேண்டுமென்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆனால், இது சாத்தியமாகுமா… மீட்டுருவாக்கம் செய்தால்தான் பருவநிலை பாதிப்பிலிருந்து தப்பிக்க இயலுமா?
அதைவிட முக்கியமாக, போர்களால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தலைவர்கள் இதிலாவது ஒன்றிணைவார்களா என்று பல கேள்விகள் எழலாம். அவற்றுக்கு முதல் பதிலாகப் பாகிஸ்தான் செயல்படுத்தும் திட்டத்தையே முன்னிறுத்த வேண்டும்.
பான் (Bonn) என்ற கூட்டாட்சி நகரம், ஜெர்மனியில் அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு ஜெர்மனி அரசும், இயற்கைப் பாதுகாப்பின் சர்வதேச ஒன்றியமும் இணைந்து உலகம் முழுதும் குறைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட 150 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதிகளை மீட்டு, காடாக்கும் சவாலை பான் சவால் (Bonn challenge) என்ற பெயரில் அறிமுகப்படுத்தின. இதை 2020-க்கு உட்பட்ட காலத்தில் முடிக்கவும், 2030-க்குள் 350 மில்லியன் ஹெக்டேர் இலக்கை அடையவும் திட்டமிடப்பட்டது.
பான் சவாலின்படி, திட்டமிட்ட காலத்துக்கு முன்பே, இன்று வரை 160 மில்லியன் ஹெக்டேர் நிலத்தைக் காடாக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பாக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) என்னும் பகுதியில் 2014-ம் ஆண்டு “பில்லியன் மரம் சுனாமி திட்டம் (Billion Tree Tsunami Project)” என்ற புவி வெப்பமயமாதலுக்கு எதிரான ஒரு திட்டம் பான் சவாலினை ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3,50,000 ஹெக்டர் நிலங்களை மீட்டு, காடாக்கியதன் மூலம் வெற்றிகரமாக இத்திட்டத்தை முடித்து வைத்தனர். இந்தத் திட்டம் வெற்றியடைந்த அதே கையோடு, பருவநிலை மாற்றத்துக்கான பிரத்யேக அமைச்சகத்தை முதன் முதலாகப் பாகிஸ்தான் அரசு அமைத்தது. அதே ஆண்டு ‘கிளீன் – கிரீன் – பாகிஸ்தான் (Clean Green Pakistan)’ என்ற திட்டத்தை இம்ரான் கான் அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்காவின் தெற்குச் சமவெளிப் பகுதியில் 1930-களில் புழுதிப் புயலால் தூசிக் கிண்ணம் (Dust bowl) எனப்படும் இயற்கை பேரிடர் ஏற்பட்டது. அது போன்றே 1990-களில் சீனாவிலும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஒன்று நிகழ்ந்தது. இதன் மூலம் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதைச் சீர்செய்ய 100 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டு, காடாக்கியது சீனா.
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள சஹாரா மற்றும் சாகேல் நெடும் பச்சைச் சுவர் (Great green wall) என்ற திட்டம் காடாக்கும் முயற்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எத்தியோப்பியா மாகாணத்தில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ஒரே நாளில் 353 மில்லியன் செடிகள் நடவு செய்யப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.
எனவே, காடாக்கும் திட்டம் என்பது கட்டுக்கதையும் இல்லை, பொறுமையாக அமர்ந்து யோசிக்கும் தூரத்திலும் இல்லை. உலக மக்கள்தொகை 7.7 பில்லியனிலிருந்து 10 பில்லியனை 2050-ல் எளிதில் அடைத்துவிடும். 70% மக்கள் நகரங்களில் வசிப்பர் என்றும், அதனால் காடுகளைச் செயற்கையாக உருவாக்கும் சூழலுக்கு உந்தப்படுவர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா-வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐரோப்பாவில் 2000 – 2015 இடைப்பட்ட காலத்தில் மட்டும், ஆண்டு ஒன்றுக்கு 2.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் காடாக்கப்பட்டுள்ளதையும், ஸ்பெயின் நாட்டில் 1900-ல் 8% ஆக இருந்த வனப்பகுதி இன்று 25% ஆக உயர்ந்துள்ளதையும் குறிப்பிடுகிறது.
பான் சவாலில் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, உருகுவே, தான்சானியா, ஜார்ஜியா, நைஜீரியா, மங்கோலியா உள்ளிட்ட 43 நாடுகள் கையெழுத்திட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆனால், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம் சொன்னபடி 900 மில்லியன் ஹெக்டேர் நிலமென்பது இத்திட்டத்தைவிட 10 மடங்கு பெரியதாகும். இதைச் செயல்படுத்துவதன் மூலம் 205 பில்லியன் டன் கார்பனை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இது காற்று மண்டலத்தில் இருக்கும் கார்பனில் 2/3 பங்கு. எனவே, இதைத் தவிர சரியான திட்டம் வேறேதும் இப்போது நம் கைவசம் இல்லை. படிம எரிபொருள் நிலத்தில் நிரம்பினாலும் கார்பனை உறிஞ்சினால் மட்டுமே புவி வெப்பமடைதலை 1.5°C-யை விடக் குறைவாகத் தக்கவைத்து ஆபத்தைத் தவிர்க்க முடியும்.
கார்பன் அதிகரிப்பதால் ஏற்படும் தீங்கு ஒருபுறமிருக்க, இதன் மூலம் பயிர்கள் லாபமடைவதாக ட்ரவர் கீனன் (Trevor Keenan) , ரிச்சர்ட் நார்பி (Richard Norby) போன்ற ஆய்வாளர்கள் வியக்கத்தக்க வாதம் ஒன்றை முன்வைக்கின்றனர். கார்பன் உர விளைவு எனச் சொல்லப்படும் இதன் மூலம் கார்பனின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, ஒளிச்சேர்க்கையின் வேகமும் அதிகரிப்பதாக நிறுவுகின்றனர்.
மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து சுமார் 3 டிரில்லியன் மரங்கள், மனிதனால் அழிக்கப்பட்டுள்ளதாக மர அடர்த்தி படமிடல் மூலமாகக் கணக்கிட்டுள்ளனர். அதாவது பூமியின் 46% மரங்கள், விவசாயம் தோன்றிய பிறகு அழிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆண்டு ஒன்றுக்குச் சுமார் 15 பில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன.
இந்தக் கணக்கிடப்பட்ட திட்டம் வெற்றியடைய வேண்டுமானால், காடாக்கும் அதே சமயத்தில் காடுகளை அழிக்காமலும் இருத்தல் அவசியம். முதிர்ச்சியடைந்த ஒரு காடு தன்னுள் அதிகக் கார்பனை உறிஞ்சி வைத்துக்கொள்ளும். ஆனால், அதற்குச் சில பல நூற்றாண்டுகளாவது ஆகும். ஆகவே, இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி மாற்றம் மிக வேகமாகவும் நடக்கப்போவதில்லை எனவும் அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்றக் குழு எச்சரித்துள்ளது.