“பெரிய ஹோட்டல்ல இட்லி விலையைக் கேட்ட அதிர்ச்சியிலேயே வயிறு நிறைஞ்சிடும். ஆனா, அங்கே நம்ம பில்லுல இருக்கிற வரி காசுல பாட்டி கடையில சுவையான இட்லி சாப்பிடலாம்” என்று இட்லியை விழுங்கியவாறே பதிலளித்தார், வாடிக்கையாளர் ஒருவர்.
தென்றல் தீண்டும் மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தவிழ்ந்து, சிறுவாணி சாரலில் நனைத்தபடியே நம்மை வரவேற்றது வடிவேலாம்பாளையம் கிராமம். கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட இந்தப் பகுதியில்தான், ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலா பாட்டி கடை வைத்திருக்கிறார். 80 வயதைத் தாண்டிய பின்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த பாட்டியிடம் பேசினோம். தட்டில் இட்லியையும் பேச்சில் பதில்களையும் சுவைமாறாமல் அடுக்கினார்.
“30 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு இட்லி 50 பைசாவுக்கு விற்க ஆரம்பிச்சேன். அதுக்கு அப்பறம் எவ்வளவோ விலைவாசி ஏறினாலும் 1 ரூபாய்க்கு மேல விற்கவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படல. கடைசி காலத்துல என்னத்த கொண்டுபோகப் போறோம். எனக்கு 1 ரூபா போதும்” என்று சுருக்கமாகப் பேசினார் பாட்டி.
அவரின் மகனிடம் கேட்டபோது, “நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். அம்மா விடாப்பிடியாக இருக்கிறாங்க. தான் முடிவுசெய்த 1 ரூபாய்க்கு மேல விலை ஏற்றவே மாட்டேன்னு கறாரா சொல்லிட்டாங்க” என்கிறார்.
நாற்காலிகள், மேஜைகள் என்று எதுவும் இல்லை. சௌகரியமான திண்ணையில் அமர்ந்துதான் வாடிக்கையாளர்கள் சாப்பிட வேண்டும். சாப்பிட வருபவர்களும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.
“விலை மலிவாக இருப்பதால், சுவையோ தரமோ குறைவாக இருக்கும் என்று சிலர் கருதலாம். ஆனா, நான் சிறு வயதில் என் பாட்டி கையால் சாப்பிட்ட அதே கைப்பக்குவத்தை கமலா பாட்டி கைகளில் பார்க்கிறேன்” என்றார், சமீபத்தில் பாட்டியின் வாடிக்கையாளரான கார்த்திக். அவர் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள பல் முளைக்காத வாண்டுகள் முதல், பல் விழுந்த தாத்தாக்கள் வரை அனைவரையும் பாட்டி கடை இட்லி மயக்கிவிட்டது எனலாம்.
தேக்கு இலையில் தண்ணீர் தெளித்து வைக்கப்படும். அந்த இட்லியின் சுவை நாவை மட்டுமல்ல, மனத்தையும் நிறைக்கும். இட்லியோடு பரிமாறப்படும் சட்னிக்கு அத்தனை வாசம்! இயற்கை மாறாத அம்மிக்கல்லில்தான் இன்றளவும் வாடிக்கையாளர் விரும்பும் ருசியை அரைத்தெடுக்கிறார் கமலா பாட்டி.
சைக்கிளிங் செய்துவந்த இருவர், “நான் சொன்னேன்ல வடிவேலாம்பாளையம் வந்தா கண்டிப்பா பாட்டி கடைக்கு வரணும்னு” என்று சொல்லிக்கொண்டே நுழைந்தனர். தம் நட்பு வட்டாரம் மூலமாக பாட்டியின் இட்லி மணம், ஊர் தாண்டி வந்து தங்களை அழைத்துவந்ததாகக் கூறி, பூரிப்புடன் இட்லியை விழுங்கினர். ஆம்! தினம் தினம் புதுப்புது வாடிக்கையாளர்களை லாபத்தைவிட அதிகமாகவே சம்பாதிக்கிறார்.
வாடிக்கையாளர் யாரும் பாட்டிக்கு கணக்கு சொல்வதும் இல்லை, இவர் கணக்கு கேட்பதும் இல்லை. சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றனர். வேண்டுமென்றால், தாங்களே இட்லியை எடுத்துக்கொள்கின்றனர். ‘அவ்வளவுதான்’ என்று அவர்கள் கொடுக்கும் விலையை அப்படியே வாங்கிக்கொள்கிறார்.
தன் தாராள விலையின் மூலம் ஊரிலுள்ள ஹோட்டல்களிடம் எல்லாம் பொறாமையைச் சம்பாதித்துள்ளார் என்றாலும், ஊர் மக்கள் மத்தியில் பாட்டிக்கு அத்தனை பிரியம் உண்டு. காலை 6 மணிக்கு அவர் பற்றவைக்கும் விறகு, உச்சி வெயில் எட்டும் 12 மணி வரை அணையாமல் எரிகிறது. இட்லிக்கு துணையாக அவரிடும் கடலைமாவு போண்டா, 2.50 ரூபாய்க்கு மீறிய சுவையை தாராளமாகத் தருகிறது.
சிறுவாணி தண்ணீர், மிருதுவான இட்லி, கடலைமாவு போண்டா, அம்மியில் அரைத்த சட்னி, காற்று வாங்க மேற்குத் தொடர்ச்சி மலை. வேறென்ன வேண்டும்!