`சைக்கிள் கேரியரிலும், மாட்டு வண்டியிலும் ஏவுகணையின் உதிரிப்பாகங்களை வைத்துக்கொண்டு செல்லும் கூட்டம்தானா நீங்க?!’ என்று எலைட் நாடுகளின் ஊடகங்களால் கேலி செய்யப்பட்ட நாடு ஒன்று ஒட்டுமொத்த உலகத்தையும் அண்ணாந்து பார்க்க வா எனத் தற்போது அழைத்திருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி, மதியம் 2.43 மணிக்கு வானைப் பிளந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட். 978 கோடி செலவில் உருவான சந்திரயான் 2 செயற்கைக்கோளை ஏந்தி பறந்தது இது. இந்திய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, 8 நாள்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டிருந்தும் எதிர்பாராத அதிக காற்றழுத்த கசிவால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
இதுவரை நிலவில் தரையிறங்கும் விதம் ராக்கெட் செலுத்திய பெருமை அமெரிக்கா, ரஷ்யா, சீன நாடுகளுக்கு மட்டுமே உரித்தாய் இருந்தது. தற்போது, நிலவின் இருள் அடர்ந்த தென்துருவத்தில் சந்திரயான் 2 தரையிறங்குவதன் மூலம் உலக சாதனையல்ல, பிரபஞ்ச சாதனையே புரிய இருக்கிறது.
ஏனெனில் மேற்கூறிய மூன்று நாடுகளும் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதில்லை. அப்படி யாரும் செல்லாத இடத்தில் ஆராய்ச்சி செய்ய, சந்திரயான் 2-ஐ முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கியிருக்கிறது இஸ்ரோ.
ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று பகுதிகளையும் ஏந்தித்தான் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. சந்திரயான் 2 , ஆகஸ்ட் 14-ல் பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து தப்பித்து நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரமான 3,84,000 கி.மீ தூரத்தை 5 நாள்களில் கடந்து நிலவின் வட்டப்பாதைக்கு ஆகஸ்ட் 20-ல் வந்தடைந்தது. பின்னர் முறையே ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப். 1 தேதிகளில் நிலவையொட்டிய சுற்றுப்பாதையின் திசை நான்கு முறை மாற்றப்பட்டது. திட்டமிட்டபடி செப்.2 ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம்(விக்ரம் சாராபாயின் நினைவாக) எனப் பெயரிடப்பட்டிருக்கும் லேண்டர் பகுதி பிரிந்து நிலவை நோக்கி நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், இஸ்ரேலின் நிலவுக்குச் செல்லும் கனவு இருளில் தொலைந்தது. ஏழு வாரங்களாக பொத்திப் பொத்திப் பார்த்து வந்த `பேரேசீட்’ விண்கலம் சாப்ஃட் லேண்டிங்(soft landing) என்னும் பாதுகாப்பான தரையிறங்கும் முறையில் நிலவில் தடம்பதிக்க முயற்சி செய்த போது தோல்வியடைந்தது. சந்திரயான் 2-ம் இதே முறையைத்தான் பின்பற்றவுள்ளது. ஏற்கெனவே கட்டுப்பாடுயின்றி செய்யப்படும் Crash landing முறையில் நிலவின் பரப்பை அடைந்திருந்தாலும் இப்படிப் பாதுகாப்பாக லேண்டரைத் தரையிறக்குவது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை. இந்த சவால் போதாது என்று மேலும் ஓர் அபாய காரணியை இஸ்ரோ தன் தலைமேல் தூக்கிப் போட்டிருக்கிறது.
ஆம்! சீரான நிலப்பரப்பில்தான் மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளும் சாப்ஃட் லேண்டிங் செய்திருக்கின்றன. ஆனால், நிலவின் தென் துருவமானது இருள் அடர்ந்து, கரடு முரடான மேடு பள்ளங்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் விக்ரமில்(லேண்டர்) இருந்து பிரிந்து வரும் பிரக்யான் எனப் பெயரிடப்பட்ட 6 சக்கர ஊர்தியான ரோவர் நிலவில் தடம்பதிப்பது . இதெல்லாம் நிகழும் அந்த 15 நிமிடங்கள்தான் ஒட்டுமொத்த இஸ்ரோவுக்கும் பிரசவ வழியாக இருக்கப்போகிறது.
செப்டம்பர் 2-ல் ஆர்பிட்டர், நிலவுக்கு அதிகபட்சம் 128 கி.மீ – குறைந்தபட்சம் 114 கி.மீ தொலைவை நெருங்கும் போது, விக்ரமை தன்னிடமிருந்து பிரித்து அனுப்பும். அந்த விக்ரம் நிலவை நீள்வட்டப் பாதையில் குறைந்தபட்சம் 30 கி.மீ – அதிகபட்சம் 100 கி.மீ வரும் வரை சுற்றிக்கொண்டிருக்கும். இதன் பின் செப்டம்பர் 7 இரவு 1 மணியளவில் அந்த 15 நிமிட திக் திக் தரையிறங்கும் படலம் வரும்.
விக்ரம் எனப்படும் லேண்டர் நிலவின் பரப்பிலிருந்து 30 கி.மீ தூரத்திலிருக்கும் வட்டப்பாதையிலிருந்து நிலவின் தரை நோக்கி 7.4 கி.மீ தூரத்தை 10.3 நிமிடங்களில் சென்றடைகிறது. அங்கிருந்து 38 நொடிகளில் 5 கி.மீ வரை பயணிக்கிறது. மேலும் 89 நொடிகள் பயணித்து தரையிலிருந்து 400 மீட்டர் தொலைவில் 12 நொடிகள் மிதந்து கொண்டே நிலவின் நிலப்பரப்பைப் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. 66 நொடிகள் மேலும் பயணித்து 100 மீட்டர் இடைவெளியில் மீண்டும் 25 நொடிகள் மிதந்துகொண்டே தரையிறங்குவதற்கு உகந்த இடமா என நோட்டமிடுகிறது. சரியென்றால் திட்டம் 1-ன் படி 65 நொடிகளில் 10 மீட்டர் இடைவெளி வரை சென்று தரையிறங்கும். இல்லையென்றால் திட்டம் 2-ன்படி 40 நொடிகளில் 60 மீ, 25 நொடிகளில் அடுத்த 10 மீட்டர் என இறுதியாக 13 நொடிகளில் சரியான இடத்தில் தரையிறங்கும்.
பின் விக்ரமிலிருந்து, பிரக்யான் வாகனம் நிலவின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி மூலம் பொறுமையாக ஆய்வுகளை மேற்கொள்ளும்.
பல நாடுகள் முயன்று சில தோல்விகளைச் சந்தித்த பின்புதான் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப முடிந்தது. ஆனால், முதல் முயற்சியிலேயே மங்கல்யானை செவ்வாய்க்கு அனுப்பி வெற்றி கண்டது இந்தியா. அதே போல் தடைகளை உடைத்து வெற்றி அடையும் என நம்புவோம். இது நடந்தால் நிலவின் தென் துருவம் தொட்ட பெருமையும், நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற சாதனையையும் இந்தியாவும், இந்தியர்களும் அடைவோம்!