spot_img
Monday, December 23, 2024

நீலகிரிப் பெருமழையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை என்னென்ன?

நீலகிரியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது அண்மையில் அங்கு பெய்த மழை. திடீரென அதிகமாகப் பெய்த மழை, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் போன்றவற்றால் திணறிப்போனது நீலகிரி. இப்படி மிகக் குறுகிய காலத்தில் அதிகமான மழைப்பொழிவிற்குப் பல்வேறு காரணங்களைப் பட்டியலிடுகின்றனர் சூழலியலாளர்கள்.

இதுகுறித்து ஓசை அமைப்பின் சார்பில் நடத்தப்படும் சூழல் சந்திப்பு நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் ‘நீலகிரியின் பெரும் மழை கற்றுத் தரும் பாடங்கள்’ என்ற தலைப்பில் உதகையின் இந்திய மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் கூ.கண்ணன் உரையாற்றினார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கிய விஷயங்கள் இங்கே.

“தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்று சொல்வோமானால், ‘தமிழ்நாட்டின் தண்ணீர்த் தொட்டி’ என மேற்குத் தொடர்ச்சி மலையையே கூறவேண்டும். சமீப காலங்களில் மழைநீரின் வரத்து அதிகரித்திருந்தாலும், மழைபெய்யும் நாள்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதாவது 1960-களில் நீலகிரியில் மழைப்பொழிவு நாள்களின் எண்ணிக்கை 270 ஆக இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக வெறும் 20 நாள்கள்தான் சராசரியாக மழைபொழிகிறது. 2016-ம் ஆண்டு மட்டும் இது 45 நாள்கள் என ஆறுதல் அளித்தது. இருந்தாலும், 270 நாள்களில் பெய்யும் மழையை வெறும் 20 நாள்களிலேயே மழைமேகம் கொட்டித் தீர்த்துவிடுகிறது. இதற்கெல்லாம் புவி வெப்பமயமாதலே காரணம் என்று கூறலாம். குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்வதற்கு மேகவெடிப்பு அல்லது நீரிடியே காரணம்.

அதாவது, ஒருமணி நேரத்தில் 25 மி.மீ மழை பெய்யவேண்டிய இடத்தில் சுமார் 40 மி.மீ வரை வரை பதிவாகி இருக்கிறது. இது அவலாஞ்சியில் நிகழ்ந்துள்ளது. இதற்கு மேகவெடிப்பே காரணமாகும். ஒரே வாரத்தில் நீலகிரி முழுதும் 3000 மி.மீ மழை பெய்ததை திருநெல்வேலியின் 3 ஆண்டுக்கால சராசரியான 2500 மி.மீ உடனும் சென்னையின் ஓராண்டுக்கால சராசரியான 1383 மி.மீ உடனும் ஒப்புநோக்கல் தகும். 10 மி.மீ மழை பெய்தாலே மண் அரிப்பு ஏற்படுவது சாதாரணமாகப் பார்க்கப்படும் ஊர் நீலகிரி. இத்தகைய தாண்டவத்திற்குப் பின்னும் பெரும் பகுதிகள் எஞ்சியிருப்பது அதிசயமே! அதிலும் நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் வெள்ளநீர் மலையை விட்டு வழிந்தோடுதலே மரபு. ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல தேயிலைத் தோட்டத்திலும், விவசாய நிலங்களிலும் நீர் தேங்கி இருந்ததைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. தவறான விவசாய முறையே இதற்குக் காரணம் எனலாம்.

தேயிலை விவசாயத்தில் தண்ணீர் வெளியேற்றும் கால்வாய் நிச்சயம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் இருப்பதில்லை. அதைபோல 35 மீ அகலமுடைய ஓடைகளை 5 மீ அளவுக்குச் சுருக்கிவிடுகின்றனர்.

9 சதவிகிதத்திற்கும் மேல் சரிவாக உள்ள பகுதிகள் விவசாயம் செய்ய உகந்ததல்ல எனப் பலமுறை சொல்லியாயிற்று. ஆனால் இன்னும் மக்கள் மீட்சி பெறவில்லை. காடுகளை அழித்து விவசாயம் செய்வது, கால்களை வெட்டி நடக்க முற்படுவது போன்றதொரு முயற்சி. மலை உச்சிப்பகுதியில் இயற்கையாக வளர்ந்துள்ள காட்டு மரங்களும், நடுப்பகுதியில் தேயிலைச் செடிகளும் இருக்க… இறுதியாக அடிவாரத்தில் மட்டும்தான் விவசாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நிலச்சரிவிலிருந்து விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். அதுமட்டுமன்றி எந்தவகையான பயிர்களை நாம் நடவுசெய்கிறோம் என்பதும் முக்கியம். வேலித்தட்டு, யூகலிப்டஸ் போன்ற மரங்கள் சமூகவியல் சார்ந்து அதிக பாதிப்புகளை உண்டாக்குகின்றன. குறிப்பாக, உருளைக்கிழங்கு மண் வளத்தை பெரிதளவு குறைத்திருக்கிறது. இதற்கான தக்க நடவடிக்கைகள் மூலம், விவசாயத்தில் சூழலியலைப் பாதுகாக்கலாம்.

நீலகிரியில் மழை பெய்தால், அதையொட்டிய மாவட்டங்கள் குடைப்பிடிக்க வேண்டிய சூழல் இருந்தது ஒரு‌காலம். மலையிலிருந்து வழிந்து பவானி வழியே‌ பயணத்தை தொடங்கும் மழைநீர், இந்த ஆகஸ்டில் நீலகிரியிலேயே தன் பயணத்தை முடக்கிக்கொண்டது. பெரும்பாலும் விவசாய நிலத்திலேயே தங்கிவிட்டது. நாங்கள் செய்த ஆய்வின் மூலம் யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த பகுதியானது காட்டுப் பகுதியிலிருந்து பவானிசாகர் அணைக்குச் செல்வதை விட 22 சதவிகிதம் குறைவான நீர்வரத்தையே கொடுத்தது. நம்மை அதிகம் அச்சுறுத்துவது தீவிரவாதம் கூட அல்ல. நம் நாட்டில் எங்கெங்கும் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக்தான். அவை நிலம் எங்கும் மண்டிக்கிடப்பதால் மழைநீர் கீழே செல்ல வழியில்லாமல் போகிறது.

செங்குத்தான சாலைகள்தான், சரிவுக்கு மிக முக்கிய காரணம். சாலைகளுக்காக மலைகளை வெட்டும்போது சிறு சரிவுடன் வெட்டி, வலைகளிட்டு பாறைகள் விழாமல் கட்டுப்படுத்தலாம். சுற்றுலாப் பயணிகளின் கவனமுடைய பகுதியாதலால், வணிக நிறுவனங்களின் போட்டி ஆரோக்கியமற்று வனப்பகுதிகளைச் சீர்கெடுக்கிறது.” என நிறைய காரணங்களைப் பட்டியலிடுகிறார் கண்ணன்.

ஊட்டி மாமழை ஊட்டிவிட்ட பாடத்தை, உலகத்துக்கு எடுத்துச் செல்வோம்!

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்