கலிஃபோர்னியா மாகாணத்தைச் சார்ந்தவர் கெய்லன் வார்ட் (Kaylen Ward) என்ற மாடல் அழகி தன் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விற்று, அதன் மூலம் கிடைத்த $700,000 (₹5 கோடி) ரூபாயை ஆஸ்திரேலிய தீவிபத்துக்கு நிவாரணமாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் கெய்லன், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாக நிர்வாணப் புகைப்பட மாடலாக இருந்து வருகிறார். தன்னுடைய விடுமுறை நாளில் கரீபியன் தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது, “ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயைப் பற்றி படிக்க நேரிட்டது, நான் அங்ஙனமே நிலைக்குலைந்து போய்விட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், செய்தியாளர்களிடம் அவர், “உடனே என்னால் இயன்ற $1000 (₹70,000) ரூபாயை நிவாரணமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தேன். அதன்பின் செய்வதறியாது யோசித்தபோது, ஒரு வழி தோன்றியது. இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் சுமார் 30,000 பேர் என்னைப் பின்தொடர்கின்றனர். இந்தக் கணிசமான நபர்களை நிவாரணம் அளிக்க வைத்தால் என்ன, என்பதுதான் அது!” என்றார். அதன்பின் அவர் செய்ததுதான் அசாதாரணமானது. அன்றிரவு 10 மணிபோல, தன் புகைப்படம் ஒன்றையும் அதன் அருகிலேயே தொண்டு நிறுவனங்களின் பெயர், விவரங்களையும் வெளியிட்டிருந்தார். மேலும், $10 (₹715) மேல் நிவாரணம் அளிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் ஆடை களைந்தப் புகைப்படத்தை அனுப்புவதாகப் பதிவு செய்திருந்தார். அந்த இரவு வரை $7000 (₹5,00,000) ரூபாய்க்கும் மேல், அவர் நிவாரணத் தொகையை சேமித்திருந்தார்.
மறுநாள் காலை அவர் எழுந்து பார்த்தபோது, அந்த ட்வீட் வைரலாகிவிட்டது! அவருடைய இன்பாக்ஸ் முழுவதும் நிவாரணம் அளித்த ரசீதின் நகல்களாகக் குவிந்து இருந்தன. உறக்கத்தில் இருந்தபோதே, அவர் அறியாமல் $100,000 (₹71.4 லட்சம்) வரை நிவாரணத் தொகை உயர்ந்திருந்ததைக் கண்டு குதூகலித்தார். அவரின் ட்வீட் 77,000 முறை வரை ரீ-ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதுமுதல் தன்னை ஒரு நிர்வாண கொடையாளி என அழைத்துக் கொண்டார். இதேபோல் ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு பல பிரபலங்களும் தங்கள் நிவாரணத்தை அளித்திருக்கின்றனர். பிரபல ஆஸ்திரேலிய நகைச்சுவையாளரான செலஸ்டி பார்பர் (Celeste Barber) A$40M (₹119 கோடி) ரூபாய் பணத்தை தன்னை பின்தொடர்பவர்கள் மூலமாகச் சேர்த்து நிவாரணம் அளித்தார்.
என்னதான் அந்தத் தொகையை இன்னும் கெய்லன் வார்ட் எட்டவில்லை என்றாலும், 5 கோடி ரூபாய்க்கும் மேல் தான் சேகரித்திருப்பதாகக் கூறுகிறார். இதைக் கண்காணிப்பதற்கு என்றே பணிப்பெண் ஒருவரை நியமித்திருக்கிறார். அந்தப் பெண், “ஒவ்வொரு நிமிடமும், பத்து முறையான வெரிபைட் புளு டிக் பெற்ற பயனர்களிடமிருந்து கெய்லனுக்கு நிவாரணத் தொகை வருகின்றன. கெய்லனின் புகைப்படத்தைப் பெறுவதற்கு $10 போதுமானதாக இருந்தாலும், $5000 (₹3.5 லட்சம்) வரை அனுப்பும் தனிநபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்” என்றார்.
கெய்லன் முனைப்புடன் செய்வதற்கும் ஒரு காரணம் உண்டு. 2018-ம் ஆண்டு வட கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட சிறு தீவிபத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது முதலில் அவர் எதிர்பார்த்தது உதவி கொடுக்கும் இரு கைகளைத்தான். ஆனால், ஆஸ்திரேலியாவில் 8.4 மில்லியன் ஹெக்டேர் நிலம் பற்றி எரிகிறது. “இதற்கு முன்னால் நான் சிக்கிய விபத்தை எல்லாம் ஒப்பிடவே முடியாது” எனும் கெய்லன் தானே உதவிக்கரம் ஆகிவிட்டார்.
இந்தத் திட்டம் குறித்து கெய்லன் குறிப்பிடுகையில், “நான் ஏற்கெனவே என்னுடைய புகைப் படங்களை விற்றுத்தான் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறேன். இதனால், எனக்கு கணிசமான ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. ஆனால், நிவாரணத்துக்காக எனது படத்தை விற்கிறேன் என்றதும், எப்போதுமில்லாத அளவு அதிக வரவேற்பு கிடைத்தது!” என்றார். கெய்லனின் இந்தச் செயல் பாலியல் தொழிலாளர்கள் பலரை ஈர்த்துள்ளது. அவர்களும் ஆஸ்திரேலிய நிவாரணத்துக்காகத் தங்கள் புகைப்படங்களை விற்க முன்வந்துள்ளனர். அப்படி ஈர்க்கப்பட்டவர்களில் வான்கூவர் நகரில் பாலியல் தொழில் செய்துவரும் ஒருவர், “மக்கள் நிவாரணம் அளிக்க, இந்த யோசனை உந்துதலாக இருக்கும். நானும் கெய்லனின் திட்டம் மூலமாக ஒரே நாளில் $1000 (₹70,000) சேர்த்துள்ளேன். பெரும்பாலும் முன்பின் தெரியாதவர்கள்தான் அதிகம் கொடையளித்துள்ளனர்” என்று கூறுகிறார்.
பலர் இதை வரவேற்க, சிலர் விமர்சித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். தனக்கு இதில் ஏற்பட்ட மிகப்பெரிய அடியாகத் தன் இன்ஸ்டாகிராம் கணக்கு அழிக்கப்பட்டதை நினைவுகூர்கிறார் அந்தப் பெண். “60,000 பின்தொடர்பாளர்கள் மூலம் இத்தனை பெரிய தொகையை நான் சேமிக்க உதவியாக இருந்த கணக்கு அழிந்துவிட்டது. மேலும், எத்தனை முறை முயன்றாலும் புதியதொரு கணக்கை என்னால் தொடங்கவே முடியவில்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார். “பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபடுவோர்களை அனைவரும் விசித்திரமாகத் தான் பார்ப்பார்கள். ஆனால், அதைச் சரியான தேவைக்குப் பயன்படுத்தினால், யாரையும்விட நாங்கள் கீழானவர்கள் அல்ல என்ற உணர்வு ஏற்படும். பெயர் தெரியாத அனைவருக்கும் நான் ஆடையில்லாமல்தான் அறிமுகமாகிறேன். பரவாயில்லை சூப்பர் ஹீரோக்கள் எப்போதும் உடம்பை மறைக்கும் துணியோடுதான் உலவ வேண்டுமா என்ன?” எனக் கூறியுள்ளார்.