வில்லியம் ஜோன்ஸ் தன் அன்றாட நடைமுறை ஒழுங்கினை நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் பதிவு செய்துள்ளார். ஜோன்ஸின் மொழியார்வமும் கீழைத்தேயவியல் படிப்பினை மீதுள்ள ஆசை கடந்த அவாவும் அவர் அன்றாட செயல்முறையில் ஜொலிக்கும் படி வெளிப்படுகிறது. பொதுவாகவே தன் ஒவ்வொரு மணி நேரத்தையும் கணக்கிட்டு செலவு செய்பவர், ஜோன்ஸ் (ரூபா குப்தா).
இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள வெளிநாட்டினர் சிரமம் மேற்கொண்டு படித்துள்ளனர். இதற்கான மாற்று ஏற்பாடுகளையும் முன்மொழிந்துள்ளனர். அவற்றைப் பின்வரும் பதிவில் நீட்டித்து எழுதுகிறேன். இப்பதிவில் ஜோன்ஸின் Routine மட்டும்!
o சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரம் முன்பாகவே துயில் எழுதல்.
o மூன்று மைல் தூரம் வில்லியம் கோட்டை வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல்.
o அங்கிருந்து வழக்காடு மன்றத்திற்குப் பல்லக்கில் செல்லுதல்.
o அங்குக் குளிர்ந்த நீரில் நீராடி, உடை அலங்காரம் செய்துகொண்டு, காலை உணவை முடித்துக்கொண்டு ஏழு மணிக்கு முன்பே தயார்நிலையில் சம்ஸ்கிருதப் பண்டிதருக்குக் காத்துக்கொண்டிருத்தல்.
o சரியாக ஒருமணிநேரம் கழித்து பாரசீக மற்றும் அரேபிய ஆசிரியர்கள் ஒருநாள் விட்டு ஒருவராக வந்து அவ்வம்மொழிகளைப் பயிற்றுவித்தல்.
o ஒன்பது மணிக்கு பிரமாணப் பத்திரங்களோடு வழக்குரைஞர்கள் வந்து ஜோன்ஸை நாடுதல்.
o 5 மணிநேர நீதிமன்ற வேலைகளுக்குப் பின், 3 மணிக்கு வேற்றுடை மாற்றிக்கொண்டு உணவுமேசைக்குச் செல்லுதல்.
o சூரியன் மறையும்வரை நண்பர்கள் அளிக்கு விருந்தில் கலந்துகொண்டு உரையாடி மகிழ்தல்.
o அந்திக்குப் பிறகு ஆனாவுடன் (மனைவி) கூடி ஒருசேரப் படித்தல்.
o இரவு 10 மணிக்கு தூங்கச் செல்லுதல்.
இப்படி வாழ்ந்த ஜோன்ஸின் மொழியியல் சாதனைகள் அளவிடற்கரியது. 47 வயதில் உயிர் துறக்கும் முன் 28 மொழிகளைக் கற்றறிந்திருந்தார். பாரசிக மொழிக்கு இலக்கண நூல் எழுதினார். மேலும் பல, அடுத்தடுத்த பதிவுகளில்.