சுருக்கம் : உபத்திரம் உண்டாக்கும் ரணங்களுக்கு சர்வ ரோக நிவாரணியாக இருந்து களிம்பு பூசும் கன்னியின் தேவை என்னவென்று இதன்மூலம் விளக்கப்படுகிறது.
குறிச்சொற்கள் : காதல், விண்ணப்பம், பி.எச்டி ரணங்கள்.
அன்பே¹,
இப்பூமியில் ஆயிரமாயிரம் வேலைகள் இருந்தும் நான் மட்டும் பி.எச்டி படிக்க எண்ணி தலைப்பட்டது ஏனோ என்று யோசித்துப் பார்க்கிறேன். எத்தனை முரண்டு பிடித்து யோசித்தாலும் இதிலிருந்து நீங்குவதற்கான உபாயம் தென்படவில்லை.
கீர்த்தி பெற்ற உபாத்தியாயர்களிடம் கேட்டும் பயனில்லை என்பதால், விபரீத முடிவொன்று எடுக்க தலைப்படுகிறேன். சம்பிரதாயம், மரியாதை, கௌரவம் எல்லாம் அன்பும் அன்பும் சந்திக்கும் இடத்தில் மறைந்து விடுகின்றனவாம்². ஆகையால் நான் உன்னை காதலிக்க உத்தேசித்திருக்கிறேன். ஏன் என்னை மட்டும் என்று நீ கேட்கலாம்..
‘இயற்கையிலேயே மனிதன் தன்னை அறியாமல் பிறர் மீது காதல் கொள்வது அவன் இயல்பில் உள்ளது. ஆனால் அதை யாரோ ஒருவர் மீதோ, குறிப்பிட்ட சிலர் மீதோ கொள்ளாமல் ஒட்டுமொத்த மனித இனத்தின் மீதும் அன்பு செலுத்தபவராக நீங்கள் மாறினால் மனிதாபிமானம் கொண்ட தரும சிந்தனை உடையவராக நீங்கள் காட்சியளிப்பீர்கள்’ என்று ஃபிரான்சிஸ் பேக்கனார் சொன்னார்³. ஆனால் தருமபாலர், மனித மேதை, யோகி என்றெல்லாம் உசுப்பேற்றித்தான் பிஎச்டி குலாமில் நம்மைச் சிக்குண்டு உழலச் செய்தனர்.
ஆகவே அன்பே முடியுமா முடியாதா என்று உடனடியாகச் சொல்லி, அடுத்த வேலைநாளுக்குள் பதில் அனுப்பு. இந்நரகத்தில் இருந்து விரைவில் விடுவிப்பாயாக.
இங்ஙனம்
Deadline-களுக்கு மத்தியில்
உனதன்பு இதயத்தை ஆய்ந்தவன்
அடிக்குறிப்புகள்
1. நிச்சயப் பொருளை உணர்த்தும் தேற்றேகாரம் . ஆகவே உறுதிப்பாட்டில் சந்தேகம் வேண்டாம்.
2. பார்க்க : சாமிநாதையர் உ. வே., என் சரித்திரம், காலச்சுவடு பதிப்பகம், 2023 ப. 645
3. காண்க : ‘காதல்’, ஃபிரான்சிஸ் பேக்கன். தமிழ் மொழிபெயர்ப்புக்கு ‘உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்: (மொ-ஆ) இஸ்க்ரா, கிழக்குப் பதிப்பகம்.