ஏனுங்க எஸ்.பி.வேலுமணி சார், வணக்கமுங்க!
குசும்புகளுடன் கோயம்புத்தூர்க்காரன் எழுதுவது,
`நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக’ன்னு நீங்க வீடியோ மூலமா தொடங்கிவச்ச ரெயின் வாட்டர் சேலஞ்ச், பட்டிதொட்டியெல்லாம் வைரலாகிட்டு வருதுங்க. அதுலயும் வெள்ளியங்கிரி மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் நொய்யல் ஆத்துநீர கரையோர சனம், அம்புட்டு பகுமானமா சேமிக்கத் தொடங்கிடுச்சுனா பாருங்க! சிலர் வீட்ல மழைநீர் சேமிக்கிறாங்க; சிலர் வீட்டையே மழைநீரில் இருந்துதான் சேமிக்கிறாங்க. என்ன அந்தச் சாகசத்துலதான், அங்க இங்கனு உயிர்ச் சேதம் ஆகிப்போச்சாக்குங்க!
இருந்தாலும், இத்தனை நாளாய் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க வழிதெரியாம முழிபிதுங்கிப் போயிருந்த சமூக ஆர்வலர்களுக்குப் புத்துணர்வு ஊட்டினது என்னமோ உங்க பேச்சுதானுங்களே!
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி அதிக மழைப் பொழிவைப் பதிவு செய்திருந்தாலும், கொங்கு மண்டல வால்பாறைதான் அதிக பாதிப்பை அனுபவிச்சிருக்கு. மழை வந்தா மண்ணு சரியும், பாறை உருளும், வெள்ளம் வழியும்னுகூடத் தெரியாத வால்பாறை பழங்குடி சனம் பாவம் என்ன பண்ணுங்க? இதுக்கு குஞ்சப்பன் மகள் சுந்தரி, அதான் இரண்டரை வயசு சுந்தரி மட்டும் விதிவிலக்கா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ல் விஷன் தமிழ்நாடு 2023-ன்னு ஒரு பத்து முக்கியத் தொலைநோக்குத் திட்டங்களை அறிவிச்சாங்களே, அதுலகூட ஒன்பதாவது திட்டம் “தமிழ்நாட்டில் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ள 13 மாவட்டங்களில் இயற்கைப் பேரிடர்களைத் தடுக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்குவது தொலைநோக்கு ஆவணம் 2023-ன் பணியாகும்”னு சொல்லியிருந்தாங்களே!
ஹாம் அதானுங்க! அந்தத் திட்டம் இப்ப எப்படி இருக்குங்கோ?
இந்த மாதிரி நல்ல திட்டங்களை ஞாயம் பேசாமல், அரசும் முன்னின்று செய்துபோட்டுச்சுன்னா, தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காதுங்களே!?
போன வருஷம் ஜூலை மாசம், கோவையின் 100 வருஷ வரலாற்றில் பார்க்காத பருவ மழையைப் பார்த்து சனம் வியந்துச்சுன்னு சொல்றதவிட, இரண்டு சக்கர வண்டியில சர்வ சாதாரணமா வந்து ஒவ்வொரு நீர்த்தேக்கமா ஆய்வுசெஞ்ச எஸ்.பி.வேலுமணியை மம்மானியமா பார்த்து வியந்தாங்கன்னு சொல்றது பொருத்தமுங்க.
அவ்வளவு மழை அடிச்சும், ஒழுங்கா தூர்வாரி முன்னெச்சரிக்கையா ஏதும் பண்ணாததால, உங்க தொகுதிக்குப் போற வழியில் உள்ள செல்வபுரம் குளம் நிரம்பி வெள்ள அபாயச் சூழலில் இருந்ததும், உக்கடம் குளத்துக்கு ஷட்டர் திறந்துவிட முடியாம குப்பை கலந்து கால்வாய் அடைச்சுப் போனதும் மக்கள் பார்த்த உண்மைதானுங்களே!
ஒருவேளை நீங்க, “சென்ற ஆண்டு கோடைக்காலத்தை நினைவில்வைத்து பருவ மழையைச் சேமிக்கும் பணியை மேற்கொண்டேன்”னு சொன்னீங்கன்னா, 4-5 நாள்களில் குடிநீர் விநியோகம் செஞ்சு வந்த கோவைப் பகுதி, கோடைக்காலத்துல மட்டும் 10-11 நாள் கழிச்சு விநியோகம் பண்றத எப்படி எடுத்துக்குறதுங்க?
அது சரி! இந்த ஜூலை மாசம் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க வேணும்னு மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தினாங்களே, அதுகூட மறந்திருப்பீங்களா என்ன?
ஆகஸ்ட் மாசம் வந்தாலே, நினைவுக்கு வருவது ஆகஸ்ட் ஆஃபர்தான்! ‘கேட்காமலே கொட்டும் இந்த மழை, கோவை வரலாற்றிலேயே ஆகஸ்டில் பெய்த அதி தீவிர மழை’ன்னு கணக்கிடப்படுது. ஆனாலும் போன வருஷம் மாதிரி ஆத்து நீர் வழித்தட ஆக்கிரமிப்பும், முறையா தூர்வாராமையுமே கொங்கு மண்டலம் அனுபவிக்கிற அக்கப்போருக்குக் காரணம் காட்டப்படுதுங்க. இந்தச் சூழலில் நீங்க சொல்லும் மழைநீர் சேகரிப்புலாம் எப்படிங்க சாத்தியமாகும்? ஏன்னா! மழையில் இருந்து தப்பிக்கிறதே பெரிய வேலையாச்சுங்களே!
‘ஒருமுறை செய்தால் போராட்டம். பலமுறை செய்தால் வாடிக்கை’. அதுபோல தானுங்க, ஒருமுறை பொய்த்தால் ஏமாற்றம். பலமுறை பருவம் தப்பி வந்தால், அதுவே வாடிக்கை! வாடிக்கையாளர் வந்த பின்னாடி நிவாரணம் தர்றதெல்லாம் அக்கட்டால போற ஓணான எடுத்து வேட்டிக்குள்ள போடுற மாதிரிங்!
அமைச்சர் ஜெயக்குமாரும் நீங்களும், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்திச்சு தமிழக முதலமைச்சரின் பெயருல ஆந்திரா அரசிடம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்ததா சொன்னீங்க. தமிழக அரசின் கோரிக்கையை ஏத்துக்கிட்டு ஶ்ரீஷைலம் அணையிலிருந்து ஆந்திர அரசும் தண்ணீர் திறந்தது.
பருவ மாறுபாடுகளால 45 நாள்களாகப் பொய்த்து வந்த மழை, தாமதமாதான் ஆந்திராவை வந்து சேர்ந்துச்சு. இங்கேயே தண்ணீர் இம்புட்டு இருக்குற நேரத்துல, ஆந்திராவுல மீந்த உபரி நீருக்குத் தானாகச் சென்று கோரிக்கை வைத்த நீங்க, கோடைக்காலத்துல கேரள அரசு வேண்டுமென்றே கொடுத்த 20 லட்ச லிட்டர் நீரை மறுத்ததேனுங்க?
உலகிலேயே இரண்டாவது சுவையான நீரான சிறுவாணியை சூயஸிடம் (suez) ஒப்படைச்சுப்புட்டு, உங்க இலாக்காவுல இருக்க நகர்ப்புற மற்றும் கிராமப்புற நீர் வழங்கலை என்ன செய்ய போறீங்களாக்கும்?
“எந்த மகள் வந்தாலும், என்னுடைய பேரூர் பெரியமகள் (நொய்யல்) வந்தால்தான் என் வயிறு நிறையும்”னு நாட்டுப்புற வழக்கில் காவிரி சொல்வதை ஸ்மார்ட் சிட்டி கனவில் கரைச்சுப் போட்டீங்களே!
நொய்யல் இன்னைக்கு தூசுபடிஞ்ச அதன் வழித்தடங்களை எல்லாம், புரட்டிப்போட்டு முன்னுக்குப் போகுது. அதை ஆக்கிரமிச்சிருக்கும் தனியார் கல்லூரி வளாகங்களையும் நீங்கள் ஆய்வுபடுத்துனா தேவல, இல்லீங்களா?
நீங்க சொன்ன மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அரசே முன்னின்று நடத்திய கோலத்தை, சமூக ஆர்வலர்களும் பதிவு செஞ்சிருக்காங்க.
“நொய்யலுக்கு நுரைதள்ளினால் சாக்கடைக் கழிவு இல்லை, சாயக்கழிவுதான் அப்படிங்கிறத அறியவே பல ஆண்டுகள் தேவைப்பட்ட நமக்கு, இது பருவ மழை இல்லை; நம்மாழ்வார் சொன்ன பருவம் பொய்த்துப்போன புயல் மழை என்பதை அறிய இன்னும் எத்தனை ஆண்டுகள் வேணுமாம்?
ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த க்ரெட்டா தன்பெர்க் என்ற 16 வயதுச் சிறுமி போராடும் ‘அவசர காலநிலை’ பத்துன விழிப்பு உணர்வெல்லாம் இங்க இனியாச்சு வருங்களா?
மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்மட்டம் 100-க்கு 95 அடி உசந்திருக்க, வால்பாறை சோலையார் அணையின் நீர்மட்டம் 160-க்கு 159.12 அடியைத் தொட்டிருக்க, ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டமோ 105 அடிக்கு 90.64 அடியயை அடைஞ்சிருக்க, திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையும் 90 அடிக்கு 73.76 அடி நிரம்பி வழிய காத்துக்கிடக்குதுங்க!
இதை எல்லாம் பார்க்கையில, எப்படியும் ஓரிரு தொடர் மழையில அணை நிறைஞ்சு, நீர் வெளியேறுங்கிறது ஊர்ஜிதம். அது ஒட்டுக்கா கடல்ல கலக்காம கால்வாய் வழியே உள்ளூர்ப் பாசனத்துக்கும், குறு நீர்நிலைகளுக்கும் போறதுக்கான வழி ஏற்பாடு பண்ணியிருக்கீங்களா” என்று கேள்வி எழுப்பும் ரெயின்மேன் சக்திவேலுக்கு எஸ்.பி-யின் பதில் என்னவாக இருக்கும்?
`தலைக்கு மேல வெள்ளம் வந்த அப்பறம், சாண் போனா என்ன, முழம் போனா என்ன’ என வியாக்கியானம் பேச மக்கள் இருக்காங்க, அரசு அதிகாரிங்க வீடியோவோட நிக்காம, நாட்டுக்காகவும் கொஞ்சம் நிக்கலாங்களே!
ஏனுங்க எஸ்.பி. வேலுமணி சார், ‘நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக..’ “ஒட்டுக்கா” உழைக்கலாமே!