மான்செஸ்டர்,
ஜூன் 21, 1865.
மனம் நிறைந்த ஜென்னி,
நான் தனிமையில் வாடுவதால் உனக்கு மீண்டும் எழுதுகிறேன். உன்னோடு பேசுவது எப்போதும் தொல்லை தருவதாகவே இருக்கிறது. இதைப் பற்றி ஒரு புரிதல் இல்லாமலும் – இதை விளக்கமுடியாமலும் – என்னால் விளங்கிக் கொள்ள முடியாமலும் மீண்டும் உனக்கே எழுதுகிறேன்.
ஒரு நொடிப் பிரிவும் மிக முக்கியமானது. சில பொழுதுகள் பிரிவுகள் இல்லாமல் விடிவதால்தான் அசலுக்கும் போலிக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிவிடுகிறேன். தூரவெளியில் நின்று பார்த்தால் கோபுரம் கூட கட்டைவிரலுக்குள் அடங்கிவிடும். நெருங்கிச் சென்று தொட்டுப் பார்த்தால் துரும்பும் தூவானம் அளவுக்கு நீளும். ஜென்னி, உடலை வருத்தும் சிறு செய்கைக் கூட அதன் மீதான பார்வை மாறும்போது ரணங்கள் குறைக்கிறது.
தூரத்தின் காரணமாய் சிறிய வடிவங்கொள்ளும் பூதாகர வலிகள் – அருகாமையின் தந்திரம் தடைப்பட்டு பெரும் வலியாய் உருப்பெறுகின்றன. கிட்டத்தட்ட என் காதலும் அப்படித்தான். வெறும் கனவில் மட்டுந்தான் என்னால் உன்னை இழக்கமுடியும் ஜென்னி. எனக்கு நன்றாகத் தெரியும், இந்தச் சூரியனும் மழையும் சதா தாவரங்களை வளர்க்கத்தானே நம் காலத்தை கடத்தி வருகின்றன.
நீ இல்லாத தருணத்திலா, உன் மீதான காதலை நான் உணரவேண்டும்? என் ஒட்டுமொத்த ஆன்ம சக்தியின் அணுத்திரளாய் – என் ஒருங்குப்பட்ட இருதயத்தின் ஒலிக்குறிப்பாய் நீ ஒளிந்திருக்கும் இக்காதலை இப்போதே உணர்த்த வேண்டுமா என்ன? இந்தக் காதல் என்னை மீண்டும் மனிதனாக உணர்த்துகிறது, ஜென்னி. ஏன் சொல்கிறேன் என்றால் இந்தத் தீராத வேட்கை – பன்முகத்தன்மை – நவீனக் கல்வி – எதிலும் குற்றங் குறை சொல்லும் நவீன கால முறைகள் இவையெல்லாம் மனிதனை மேலும் மேலும் சிறியவனாக்கி, பலவீனப்படுத்தி புலுங்கித்தவிக்கவே படைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் காதல் – எந்தக் காதல்? ஃப்யூவர்பாக் வகையறா மேல் கொண்ட காதலா? – இல்லை; சதை மேல் கொண்ட காதலா? – இல்லை; பாட்டாளி வர்க்கம் மேல் நான் கொண்ட காதலா? – இல்லை. என் மனம் நிறைந்த உன்மேல் நான் கொண்ட முழுமுதலான காதல், என்னை மீண்டும் மீண்டும் மனிதனாக்குகிறது, ஜென்னி.
இந்தப் பூமியில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள். சிலர் அதில் அபரிமிதமான அழகு. ஆனால் என் வாழ்வின் உன்னத நொடிகளை மீண்டும் பதியமிடும் அதே முகத்தை – அதே அம்சம் பொருந்திய சுருங்கிய கண்ணங்களை நான் எங்கு தேடி, எப்போது கண்டடைவேன்? என் தீராத வலிகளும் ஈடாகாத ரணங்களும் உன் முகத்தில்தானே முக்திபெறும். உன் சர்க்கரை முகத்தை முத்திமிடும் பொழுதே, என் மொத்த வேதனையும் சுக்குநூறாய் உடையாதா..
என் மனம் நிறைந்தவளே, போய் வருகிறேன். உன்னையும் குழந்தைகளையும் பல ஆயிரம் முறை முத்தமிடுகிறேன்.
உன்,
கார்ல்.