19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலரா மற்றும் பெரியம்மை நோயினால் தஞ்சை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1884இல் மட்டும் 21,000 பேர் உயிரிழந்தனர். 1897 மட்டும் 1898 காலரா தாக்கத்தில் முக்கியமான ஆண்டுகள்.
மதராஸ் மாகாணத்தின் வேறெந்தப் பகுதியைக் காட்டிலும் தஞ்சையில்தான் நோய்த்தாக்கம் அதிகம் இருந்தது என அம்மாவட்ட சுகாதாரத் துறை கமிஷ்னர் ஆய்வறிக்கை எழுதியுள்ளார். 1897-98ஆம் ஆண்டு மாகாணத்திலேயே உட்சபட்சமாக தஞ்சையில் மட்டும் 28,000 பேர் உயிரிழந்தனர். இதற்கான காரணத்தை பிரிட்டிஷ் அதிகாரிகள் தேடிப்பிடித்துள்ளனர்.
காலரா நீரினால் பரவும் நோய். இவ்வாண்டு (1897) தாக்கம் அதிகரிக்க காரணம் என்னவென்று ஆய்ந்தபோது கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமகமே காரணம் என்று அறியப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்திலும் சிதம்பரத்திலும் மார்கழி விழா நீராடல் நோன்பு, டிசம்பர் மாத வாக்கில் நிகழ்ந்தது. இதில் கலந்துகொண்டு நீராடியவர்களே காலரா நோயை தாம் செல்லும் வழியெல்லாம் பரப்பியதாகக் கண்டறியப்பட்டது.
இதைப் படித்தவுடன் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா பெருக்கத்திற்கு குறிப்பிட்ட மதத்தினரின் தில்லி கூடுகையே காரணமென்று பிம்பம்படுத்திப் பார்க்கப்பட்டது நினைவிற்கு வருகிறது. மதமென்னும் நோயை, நோய்ப் பெருக்கத்திற்கான காரணமென்று பார்த்தால், 19ஆம் நூற்றாண்டிலேயே அதைச் செய்தவர்கள் யாரென்றும் பேசவேண்டியிருக்கும்.
தரவு : Madras District Gazetteers, Tanjore Volume 1, F.R. Hemingway, 1906.