Intellectual Crime is not only an offence, also a self-destructive weapon!
அதீதப் பொழுதுகளில் அறிவுத் திருட்டை அநாயசப் பார்வையுடன் எந்தப் பரபரப்பும் இல்லாமல் கடந்து விடுகிறோம் என்பதில் எப்போதும் எனக்கொரு கவலை உண்டு. அந்தவகையில் இந்திய வரலாற்றை அறிவுத் திருட்டால் சுவீகரித்துக் கொண்ட ஆரியர்கள், தங்களை அறியாமலே ஒரு சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட செய்தியைக் காலக் கரையான் இத்தனைக் வருடங்களாக அரித்துவந்திருக்கிறது. பெருமாளின் பத்து அவதாரங்களை தசாவதாரம் என்ற டெர்மினாலஜியால் குறித்தார்கள். பாகவத புராணமோ அவருக்கு மேலும் சில அவதாரங்கள் இருப்பதாக சான்று பகர்ந்தது.
அந்நிலையில் சில வட-இந்தியர்கள் புத்தரும் விஷ்ணு அவதாரமாக தோன்றியவர் என்று புளுகு மூட்டினார்கள். அதன்மூலம் வைதீக மதத்தோடு பௌத்த கொள்கைகளை ஒன்றிணைக்க முனைந்தார்கள். அவ்வாறு ஒன்றிணைக்கையில் இலாவகமாக புத்தர் பரப்புரை செய்த வைதீக எதிர்ப்பு – ஜாதி ஒழிப்பு போன்ற கலன்களை கழட்டியெறிந்து, உயிர்க்கொலை எதிர்ப்பான ஜீவகாருண்யத்தை மட்டும் ஏகமனதோடு ஏற்றுக் கொண்டது, ஆரியம். அன்றிலிருந்து இன்றுவரை ஆரியந்தான் பௌத்தத்தைப் பிளவுபடுத்தியது என்ற சர்ச்சைப் பேச்சுக்கள் எல்லா சமயத்தாராலும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்ன?
வேத நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கும் பிஹார் மாநிலமே, முந்தைய காலத்தில் பௌத்த விகாரங்கள் நிறைந்ததால் விஹார் என்றழைக்கப்பட்டு கால வெள்ளத்தில் நாசுழற்சியால் பிஹார் என்றானது என அறிவோம். வேத நாகரிகத் தொட்டிலையே விரலுக்குள் வைத்தாட்டிய பௌத்தத்தை அத்தனை எளிதில் சாய்த்துவிட்டதா ஆரியம்? இல்லை. இருக்கவே முடியாது. 7-ம் அறிவு திரைப்படத்தில் வரும் போதிதர்மர் எப்படி வஞ்சத்தால் வீழ்ந்தாரோ, அதே நயவஞ்சகத்தாலும்; அதே அளவற்ற அன்பினாலும் தன் பிறந்ததேசமாகிய இந்தியாவினின்று பௌத்தம் பெயர்ந்துபோனது. நம்ப முடிகிறதா? தமிழகமெங்கும் அதிக சிலைகள் அறிஞர் அண்ணாவிற்கு இருக்கிறது. இந்தியா முழுக்க அதிக சிலைகள் அம்பேத்கருக்கு இருக்கிறதாம்.
உலக அளவில் அதிக விக்ரஹங்கள், உருவ வழிபாட்டையே எதிர்த்த மகான் புத்தருக்கு இருக்கிறதாம். முரணாக இருக்கிறதல்லவா? தன் வாழ்நாளின் இறுதி அத்தியாயத்தை கடக்கும்வரை ஓய்வறியாமல் உபதேசம் செய்துவந்தார் புத்தபிரான். அவரின் மறைவிற்குப் பிறகு, இன்றைக்குள்ள அதே கேவலவாத அரசியல் புத்த பிக்குகளின் வாயிலாகவும், விதி செய்த சதியினாலும் சிருஷ்டிக்கலானது. புத்தமதப் பின்பற்றுநனான அசோகச் சக்கரவர்த்தி, அந்நிய தேசங்கள் வரை புத்தமத துறவிகளை நன்நிமித்தமாக அனுப்பிவைத்தான். அசோகன் நிறுவிய சர்வகாலசாலையில் சீன, கிரேக்க தேசத்துப் புரவலர்கள் படித்தவந்தனர்.
அசோகனின் இந்த இரண்டு போக்குமே புத்த மதத்தின் அழிவிற்கு அச்சாணியாக இருந்தது என்பது வரலாற்று விந்தை. ஆம். அமைதி விரும்பி அசோகனின் நாட்டுச் சேனைகள் போருக்கே செல்லாததால், சண்டை செய்ய மறந்துபோயினர். இதை விளக்க ஒரு கதை சொல்கிறேன்.. இதே சமகாலத்தில் சீனாவை ஆண்ட சின் வம்சத்தினரின் வழிவழியாக வந்த ஷீ ஹிவாங் டி என்ற மன்னன் அவனுக்கு முந்தைய வரலாற்றை எல்லாம் ஒருபொட்டு இல்லாமல் அழித்தானாம்; கன்பூசியஸ் தத்துவங்களை சுவடு தெரியாமல் எறித்தானாம்; அதைத் தடுக்க விரும்புவோர் சடலங்களை மண்ணுக்குள் புதைத்தானாம்..
ஏன்? சீன வரலாறு அவனிலிருந்தே தொடங்கவேண்டும் என்று விரும்பினான் அவன். அவன் ஆசைக்கிணங்க சீன தேசமும் சின் வம்சத்தினரின் பெயரிலிருந்தே உதித்தது. (சின் – சீனா) இதை ஏன் சொல்கிறேன் என்றால், சீன தேசத்திற்கே பெயர் கொடுத்த வம்சம் ஷீ ஹுவாங் டி இறந்த பின்னர் நாசமாகிப்போனது. சீன வரலாற்றிலேயே மிகச் சொற்ப காலம் அரசாண்ட வம்சம் சின் வம்சத்தினர் தான். காரணமும் சின் வம்சத்தினர் தான்! அசோகனின் சண்டை செய்ய மறந்த மௌரிய சாம்ராஜ்யம், சீக்கிரமே அந்நியப் படையெடுப்பால் பாழடைந்துப் போனது. ஆனால் அதுவிட்ட வித்து நீர்த்துப்போகவில்லை.
கிட்டத்தட்ட கி.மு. 4-1 ஆம் நூற்றாண்டு வரை கிரேக்க, பாக்திரிய, ஹியூன, துருக்கிய படையெடுப்பால் ரத்தக்களரியானது வட மேற்கு இந்தியா. அதில் கி.மு. ஒன்றில் ஏற்பட்ட குஷாணப் படையெடுப்பு இங்குக் கருதத்தக்கது. குஷானர்கள் கிரேக்க – துருக்கிய பகுதியினின்று வந்தவரென்றும்; மங்கோலிய இனத்தவரென்றும் ஒரு வாதம் உள்ளது. எப்படியிருப்பினும் அவர்கள் அந்நியப் பிரதேசத்தினின்றும் இந்திய வாயிலுக்குள் பிரவேசித்தார்கள் என்பது திண்ணம்.
கிரேக்கம் வரை அசோகன் அனுப்பிய வித்து வேலைசெய்யத் தொடங்கி முளை விட்டு விருட்சமான விடைதான் குஷாணப் படையெடுப்பு. ஆம். குஷாணர்கள் பௌத்த மதத்தை பின்பற்றினார்கள். புத்தர் மீது அதீத அன்பு செலுத்தினார்கள். கனிஷ்க மன்னன் பௌத்த மதத்தையும் – ஜொராஜ்டிர மதத்தையும் இருவேறாக பார்க்கவில்லை. சரி.. சம்பவம் இப்படியே நீண்டுகொண்டிருந்தால், பௌத்தத்தை பௌத்தமே அழித்த கதை எப்போ வரும்?
வருணனையும் பின்னொட்டுக் கதையும் சேர்க்காமல், நேரே சம்பவத்திற்கு வருவோம். கிரேக்க நாகரிகமும் திராவிட நாகரிகம் போன்றே தொன்மையானது, பழமையானது என்பதைத்தாண்டி சிற்பல ஒற்றுமைகள் ஒளிந்துள்ளன. இரண்டும் கிராம நாகரிகமாக இருந்தது; இரண்டும் ஆரியப் படையெடுப்பிற்கு உட்பட்டது; பின் நகர நாகரிகத்திற்கு ஆட்பட்டது; புராண பின்னணி கொண்டது; கலை – இலக்கிய சிறப்புப் பெற்றது. இப்படிப்பட்ட பிண்ணனியில் வந்த குஷாணர்கள், பௌத்தத்தை பௌத்தமாகவே ஏற்றுக்கொள்ளாமல்..
தங்களுக்கேற்ற சில திரிபுகளை முடிந்துகொண்டனர். அவற்றிலொன்று கிரேக்கருக்கே உண்டான சிற்பக் கலை வெளிப்பாடு. பண்டைய கிரேக்கர்கள் சிற்பம் செய்வதில் வல்லவர்களாகவும், விருப்புக் கொண்டவர்களாகவும் திகழ்ந்தார்கள். அது அவர்கள் வணங்கிய புத்தருக்கும் ஆகிவந்திருக்கக் கூடும். முதலில் புத்தருக்கு முன்பான போதி சத்துவர்களுக்கு விக்ரஹம் செய்தும்; பின்னர் புத்தருக்கு விக்ரஹம் செய்தும் வழிபட்டனர். உருவ வழிபாடுத் தொடங்கி, கொள்கை விளக்கம் வரை புத்தமதப் பின்பற்றுநர்களுக்கு நிறைய முரண் எழத் தொடங்கின. பரம பௌத்தர்களால் இவ்வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அமையதியில்லா அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பூதமாக வெடித்துச் சிதறிய பௌத்தத்தை இரண்டு பாத்திரங்களுக்குள் அடக்கிவிடலாம். ஒன்று மஹாயானம்(பெருவழி); மற்றொன்று ஹீனயானம்(சிறுவழி). உண்மையில் புத்தர் கொள்கைகளை ஏற்று, பீகாரிலேயே தங்கியிருந்த பிக்குகளை பெருவழி பின்பற்றுநர் என்று அழைப்பதே உசிதமாக இருந்திருக்கும். ஆனால் வைதீக தில்லுமுல்லு இங்குதான் தொடங்குகிறது. புத்தரின் பாதையினின்றும் தவறி, வைதீக வலைக்குள் சிக்கிய அற்ப பிரிவே மஹாயானம் என்ற பெருவழிப் பெயரால் அழைக்கப்படலாயிற்று. அதற்கு உதவி செய்தோர் இருவர்.
இந்திய ஆரியரும், கிரேக்க குஷாணர்களும். இருவரும் மஹாயானப் பிரிவையே ஆதரித்தனர். இந்தியாவைப் பொறுத்த மட்டில் குஷாண அரசு ஆரிய ஆட்சிமுறையையே பின்பற்றியது. அதனால்தானென்னவோ 300 ஆண்டுகள் இச்சாம்ராஜ்யம் நீடித்திருந்தது. பணபலம், பொருட்பலம், அதிகாரப்பலம் ஆக அனைத்தும் கைவசமிருந்த ஆரியர்கள் மஹாயானப் பிரிவை முதலில் ஆதரிப்பது போன்று அரவணைத்து, பின்னர் வைதீக மரபிற்குள் சுவீகரித்துக் கொண்டனர். பலருக்கு எழும் கேள்வி ஒன்றுண்டு.. பௌத்தம் ஏன் தென்னிந்தியாவில் பரவவில்லை? மஹாயானம், ஹீனயானமாக பிரிந்த பௌத்தம் வட-இந்தியாவில் ஒன்றாக, தென்னிந்தியாவில் ஒன்றாக பயணித்தது.
புத்த கொள்கை பின்புற்றநர்களான ஹீனாஸ் வடக்கிலேயே இருந்துவிட, மஹாயானாஸ் வைதீகப் போர்வை போர்த்திக் கொண்டு தென் இந்தியாவிற்கு வந்ததால், அடையாளங் காண முடியாமல்.. பௌத்த மதத்தை வைதீக மரபிற்குட்பட்டதாகவே எண்ணி தென்னிந்தியர்கள் ஏமாற்றப்பட்டார்கள். ஆக எல்லாம் சேர்த்து கொண்டுகூட்டிப் பார்த்தால், பௌத்த மதமானது பௌத்த மத பின்பற்றுநர்களாலேயே விஷம் ஊட்டி அழிக்கப்பட்டதென அறியமுடிகிறது.
ஆரியம் அழித்த வரலாறுகளில் ஒன்று, பௌத்தத்தை பௌத்தமே அழித்தது என்பதை மறைத்து, பௌத்தத்தை ஆரியம் மட்டுமே அழித்தது என்ற பாசாங்கு போர்வை. முத்தாய்ப்பாக ஒன்றைச் சொல்லிக்கொண்டு விடைபெறலாம். பௌத்தத்தை அழிக்கக் கூட ஆரியம் இன்னும் வளரவேண்டும். பௌத்த மதத்தை அழிக்க வேறெந்த மதமும் நாகரிகமடையவில்லை. சோகமென்றாலும் பெருமை கொண்டு சொல்லலாம், பௌத்தனை அழித்தது பௌத்தனே!