காலச்சுவடு பதிப்பகத்தால் 2006-ல் பொ. வேல்சாமி எழுத்தில் வெளியான நூல் : பொற்காலங்களும் இருண்ட காலங்களும். இதுநாள் வரை ஒன்பது பதிப்புகளைக் கடந்தும் செம்மையான விற்பனையில் இன்னும் முன்னணியில் நிற்கிறது.
பொ. வேல்சாமி அவர்களைப் பற்றி பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை துணைப் பேராசிரியர் திரு. கோகுல் கிருஷ்ணன் அவர்கள் சொன்ன பிறகுதான் அறிய வந்தேன். இவர் ஏற்கனவே பல அரிய ஆளுமைகளைப் பற்றி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லி வந்திருக்கிறார். சலபதி, ப. சரவணன், சிவத்தம்பி, கைலாசபதி போன்ற நெடிய பட்டியலை நான் அடையாளம் கண்டதும் இவர் கண்ணாடிகளின் ஊடாகத்தான். அவ்வகையில் பொ. வேல்சாமி அய்யாவின் உரைகள் சிலவற்றை கேட்டு ரசித்த மயக்கத்தில், திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் இந்நூலை வாங்கியிருந்தேன்.
இந்நூலின் முன்னுரையில் “பொ. வேல்சாமியின் அடிப்படை இயல்பு, கிடைக்கும் எந்த ஒரு சான்றையும் தனிப்படுத்திப் பார்ப்பதில்லை என்பதாகும். வரலாற்றின் விரிந்த வெளியில், முழுப்பரப்பில் வைத்துப் பார்க்கும் முழுமைப் பார்வை இவருடையது. தமிழக வரலாறு என்னும் பெரும்பரப்புக்கு ஏதாவது பங்களிப்பு செய்யும் கண்ணோட்டம் எல்லாக் கட்டுரைகளிலும் ஊடாடிச் செல்கின்றது” எனும் பெருமாள் முருகனின் வார்த்தைகளில் துளியும் பொய்யில்லை. முதலிரு கட்டுரைகளில் தமிழகத்தின் இருண்ட காலம் எனக் குறிப்பிடப்படும் களப்பிரர் காலத்தின் சொல்லப்படாத, விதந்து ஒதுக்கப்பட்ட பார்வைகளை தக்க சான்றுகளோடும்; தர்க்கத்தோடும் முன்வைக்கிறார்.
இந்தியப் பாரம்பரியத்தில் அவைதீக மரபின் பண்பாட்டு வரலாற்றை, வைதீக விஷமத்தை குறிப்பிட்டுச் சொல்லிமுடிக்கிறார். தமிழ் இலக்கியத்தில் பதியிலார் குறித்த கட்டுரையில் விலைப் பெண்டிர் குறித்தான பார்வை சிலிர்க்க வைக்கிறது. தாசிகளுக்கு உண்டான உரிமை கூட இல்லறப் பெண்டிருக்கு இல்லாமை – சங்க இலக்கியத்தில் கணிகையர் – தலைவி பாடுதிறம் பற்றிய ஒப்பாய்வுகள் வேற்றுதிசையிலிருந்து கிளம்பிய பார்வையாய் நம்மைத் திகைக்க வைக்கிறது. ‘மாமாவும் மருமகனும்’ என்ற கட்டுரை வ.உ.சி பாரதியை ‘மாமா’ என விளித்து எழுதியதை புத்தொளிக்கு கொண்டுவருவதன் ஊடாய், இருவரின் செல்வநிலையும் பேசிச் செல்கிறது.
காலந்தோறும் ஏற்படும் கொள்கை மாற்றத்தாலும்; பார்வை மாற்றத்தாலும்; பச்சோந்தி புத்தியாலும் தான் எழுதிய நூலையே கைவிடும் கதைகளை ‘மறைமலையடிகள் எழுதி மறைத்துவிட்ட இருநூல்கள்’ என்ற கட்டுரை பேசுகிறது. இதில் பொ.வே. முன்வைக்கும் அரசியல் மிக முக்கியமானது. இதன் தொடர்ச்சியாகவே ‘வள்ளலார் அருட்பா × மருட்பா’ போர் பற்றியான கட்டுரைகளை நாம் இனங்காணவேண்டி வரும். நல்லவேளையாக ப. சரவணன் எழுதிய ‘நவீன நோக்கில் வள்ளலார்’ , ‘அருட்பா × மருட்பா’ புத்தகங்களை வாங்கி ஸ்டாக்கில் வைத்துள்ளேன். ‘தலித் சிந்தனைகளின் முன்னோடி : அயோத்திதாசர்’ எனும் கட்டுரை பொ. வேல்சாமி பேசிய பொழிவின் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (ஏற்பாடு: அயோத்திதாசர் ஆய்வு மையம் & விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, 2005)
இந்த நூலின் தலையாயப் பகுதி எனச் சொல்லத் தகும், ஆய்வு நுணுக்கம் நிறைந்த கட்டுரை இது. அயோத்திதாசர் பற்றி பொதுவான சில செய்திகளை முன்னடுக்கிவிட்டு, அயோத்திதாசர் பார்ப்பனர் பார்வையை ஒப்பீட்டளவில் பேச அயோத்திதாசர் : பாரதியார் வியூகங்களை பல சந்தர்ப்பங்களில் முன்வைத்து எடுத்துச் செல்கிறார். ‘ஐந்திரனே – இந்திரன்’ என்று அங்கங்கு அயோத்திதாசர் உதிர்த்துச் செல்லும் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்குப் பின்னால் பலநூறு பி.எச்டி ஆய்வுக் கருதுகோள்கள் முடங்கிக் கிடப்பது வெள்ளிடைமலை. அயோத்திதாசர் பற்றிய பார்வைகளை மேலும் விசாலாமாக்க நீலம் பதிப்பகமும் ஸ்டாலின் ராஜாங்கமும் அண்மையில் வெளிக்கொணர்ந்திருக்கும் ‘வைத்தியர் அயோத்திதாசர்’, ‘பண்டிதர் 175’ நூல்களின் இன்றியமையாமை புலப்படும்.
‘உண்மை வரலாற்றுக்கு ஒரு தொடக்கப்புள்ளி, அபத்தங்களை மறுக்கும் அறிவியல் ஆய்வு’ ஆகிய இரு கட்டுரைகளும் தமிழின் தொன்மையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் பின்புத்தி ஆய்வாளர்களை நேரிடையாக சாடுகிறது. தமிழரிஞர்களுக்கு அறிவியல் பார்வை வேண்டுவதன் அவசியம் இதில் பேசப்பட்டுள்ளது. லெமூரியா பற்றிய புரட்டுக் கதைகள் கிழித்தெரியப்பட்டுள்ளன.
எஸ்.ரா’வின் நெடுங்குருதி விமர்சனம், சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி குறித்தான விமர்சனங்கள் காலத்தில் பின்தங்கிய கட்டுரையென அறிமுகப்படுத்தப் பட்டாலும் இன்றும் இந்தப் பார்வை தேவைப்படுகிறது. “கல்கியின் இந்துத்துவப் பார்வை” கட்டுரையே இன்று வெகுவான இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு பொன்னியின் செல்வன் நாவலின் பார்ப்பன விஷமத்தனப் பார்வைக்கு வித்தாக இருந்திருக்கும்.
ஆக மொத்தம் 25 கட்டுரைகளை உள்ளடக்கி, சுவாரஸ்யம் குன்றாமல் அனார்க்கிச நடையில் எழுதித் தீட்டப்பட்ட அருமையான ஆய்வுக் கோவை இந்நூல். தமிழார்வம் கொண்டவர்களும், நவீனப் பார்வையில் உள்ளம் கொண்டவர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், இளநிலை ஆய்வாளர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் : பொற்காலங்களும் இருண்ட காலங்களும்.
நூல் விலை : ரூ. 295.