கோயம்புத்தூர் மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 253 சாலை விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. அதில், 68 பேர் உயிரிழந்ததாகத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின், சாலை விபத்து ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. வளர்ந்துவரும் நெரிசல்மிக்க இந்திய நகரங்களில் 23-வது இடத்தைப் பெற்றிருக்கிறது கோவை . இந்நிலையில் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் பெறவேண்டிய இப்பகுதியில்தான், பாலம் கட்டுமானப் பணிகள் மந்தமாக நடைபெற்றுவருகின்றன.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே இரண்டடுக்குப் பாலம் அமைக்கப்படும் என்று 2010-ல் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்மொழிந்தார். பலகட்ட இடர்பாடுகளுக்குப் பின், திட்டத்தை முழுவதுமாக மாற்றி 2017-ம் ஆண்டு நவம்பரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக ஓரடுக்குப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார். 195 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம், தற்போது சரியான திட்டமிடல் இல்லாததால் கேட்பாரற்றுக் கிடக்கிறது.
100 அடி சாலையில் 5-வது வீதியில் தொடங்கி ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல்வரை நீளும் இரண்டாவது அடுக்குப் பாலமானது, முந்தைய பாலத்தின் மேலே செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இது தரையிலிருந்து 110 அடி வரை செங்குத்தாகக் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தைக் கோவை மக்கள் `சூசைடு பாய்ன்ட்’ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
முதல் அடுக்குப் பாலம் திறந்தும் பயனில்லாமல் இருக்கிறது. இரண்டாம் அடுக்குப் பாலம்,செங்குத்தாகப் பயமூட்டும் விதத்தில் இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் பாலங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் தகுந்தாற்போல் இல்லாதிருப்பது கவலையளிப்பதாகத் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறுகையில், “இரண்டாவது அடுக்குப் பாலம் நிச்சயம் 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அபாயகரமாகவே இருக்கும். சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும் சறுக்கிக்கொண்டே தரைமட்டம் வரை தவறிவிழும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. சரியான திட்டமிடல் இல்லாததால், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ளது” என்றார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கட்டப்படும் இப்பாலத்தால்தான் வாகன நெரிசலே தற்போது ஏற்படுகிறது. அதிகப்படியான புழுதி வீசுவதால், மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. 110 அடிக்குச் செங்குத்தா பாலம் கட்டினா, யார்தான் பயப்படமாட்டார்கள் எனப் புலம்புகிறார்கள் கோவை மக்கள்.
சமூகச் செயற்பாட்டாளர் தியாகராஜன், “இந்தப் பாலத்தின் மூலம் அரசியல் ஆதாயம் மட்டுமே அடைய முடியும். போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் நோக்கில், தேவையான அகலமுடையதாகக் கட்டப்பட வேண்டிய இந்தப் பாலத்தை, சில தனியார் வணிக நிறுவனங்களுடனும் தனியார் முதலாளிகளுடனும் கூட்டுவைத்துக்கொண்டு அவர்கள் பாதிக்காதவண்ணம் கட்டப்பட்டதால் குளறுபடியான திட்டமாகவே பார்க்கப்படுகிறது.” என்றார்.
“பாலம் கட்ட நீண்ட காலமாகும் எனத் தெரிந்தும், எங்களுக்கென்று எந்த சர்வீஸ் ரோடும் அமைத்துத் தரவில்லை” என்ற கவலையில் இருக்கிறார்கள் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் 60 சதவிகித வேலைகள் முடிந்ததாகக் கூறினாலும், பல பணிகள் இன்னும் கிடப்பிலேயே உள்ளன. குறிப்பிட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாற்று வழியில் செல்லும் பேருந்துகள் போக்குவரத்து சிக்கலில் மாட்டாத வண்ணம் சாலையைச் சீரமைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறார்கள், பேருந்து ஓட்டுநர்கள்.
கோவை – திருச்சி சாலை இடையே அரசு மருத்துவமனை, சுங்கம் என முக்கிய சில இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்ய 3.15 கிலோ மீட்டரில் 253 கோடி ரூபாய் செலவில் கடந்த மார்ச் மாதம் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ரெயின்போ பகுதியில் தொடங்கி பங்குச்சந்தைவரை நீளும் இந்தப் பாலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
“சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் 6 ஆண்டுகளாக அரைகுறையாகக் காட்சியளிக்கிறது, பழைய மேம்பாலம். 70 சதவிகித பணிகள் முடிந்தபின்னும் சர்வீஸ் ரோடு அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலில் அரசு தரப்பிலிருந்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறாததால், பால வேலைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் பொதுமக்கள் 6 ஆண்டுகளாகப் பெரிதும் அவதிப்படுகின்றனர்” என்று கூடுதல் தகவலளித்தார், எம்.எல்.ஏ கார்த்திக்.
கோவையில் முறையாகப் பாலங்கள் அமைக்கப்பட்டால், கிட்டத்தட்ட 70 சதவிகித நெரிசலைக் கட்டுப்படுத்தலாம். அதேசமயம், சரியாகச் சேவை ரோடு அமைக்காததால் இயல்பை மீறிய போக்குவரத்து நெரிசலைச் சாதாரண நேரங்களிலும் காண முடிகிறது. அதையும் கோவை மாநகராட்சி, விரைவில் சரிசெய்ய வேண்டும்.
கோவை மாநகருக்குப் பேருந்துப் போக்குவரத்து 1921-லேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தென் தமிழகத்தின் மான்செஸ்டர் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த மெட்ரோபாலிட்டன் சிட்டி, வளர்ச்சி காணவேண்டியது அவசியம். அது தக்க வழிமுறைகளில் மேற்கொள்ள வேண்டுமென்பது அதனினும் அவசியமாகிறது.