டிக்ரி எல்லையில் அமைந்திருக்கும் நானாகட் குடிசைப் பகுதியின் குறுகிய சாலை வழியாக வரிசை மாறாமல் டிரேக்டர்கள் வந்த வண்ணம் இருந்தன. அத்தியாவசியப் பொருட்களான சோப், சாக்ஸ் சிலநேரங்களில் கையோடுப் பறித்து வந்த ஜூஸியான ஆரஞ்சுப் பழங்களையும் அந்த டிராக்டர்கள் தெருநெடுகிலும் விநோயுகித்தன. விஷேசமாக அவை பஞ்சாபி மெட்டுக்களை அலர விட்டு, விழாக் கோலத்துடன் அந்தத் தெருவையே மக்கள் பிரேவசத்தால் அலங்கரித்திருந்தன!
இந்தக் கூச்சலுக்கு மத்தியில் கமல்ஜீத் சிங் என்ற இளைஞர், புத்தகத்தையே வெறித்துப் பார்த்தபடி தலைகுனிந்து நின்றது சுற்றியிருந்த சலசலப்புக்கு முற்றும் விகாரமாயிருந்தது. பஞ்சாப்பைச் சார்ந்த 23 வயது விவசாயியான கமலுக்கு படிப்பு மீதோ, புத்தகத்தின் மீதோ துளியும் நாட்டம் கிடையாது. ஆனால் பாஞ்சாபியப் புரட்சிக் கவிஞர் பாஸ் அவர்களின் கவிதைத் தொகுப்பைக் கையில் ஏந்தியிருக்கும் கமல்ஜீத் சொல்கிறார், “என் வாழ்நாளில் இவ்வளவு நுட்பாக நான் எப்போதும் புத்தகம் படித்ததில்லை. கல்லூரித் தேர்வைக் கூடத் துண்டச் சீட்டுகளைப் பார்த்து எழுதித்தான் தேரினேன். ஆனால் எங்கள் உரிமையை மீட்டுக்கொண்டுவர, நாங்கள் ஏன் இங்கே தள்ளப்பட்டோம் என்று படிக்க வேண்டும். இது இறுதிகட்டப் போரட்டம்” என வெற்றிப் புன்னகைத் ததும்பப் பேச்சை நிறுத்தினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சீக்கிய விவசாயப் பெருமக்கள் நிகழ்த்தி வரும் அறப்போராட்டம், தேசத்தின் ஒவ்வொரு மூலையிலுமிருந்து பல்லாயிர இளைஞர்களை தன்பால் வசீகரித்துள்ளது. ‘தீவிரவாதி’, ‘காலிஸ்தான் பிரிவினைவாதி’ போன்ற போலி முகமுடிகளால் சீக்கியப் பெருங்குடிகள் சிக்கித் தவிக்கும்போது புத்தகங்களின் வழியாக முன்னோர் விட்டுச் சென்ற அறிவுக் கருவூலங்களை பதியமிட தொடங்கியுள்ளனர் அச்சமுதாய இளைஞர்கள்.
நானாக் குடிசை நூலகத்தை பராமரித்து வரும் குர்பிரீத் சிங் கூறுகையில்,” இளைஞர்கள் பெரும்பாலும் பகத் சிங்கின் வீர-தீர வரலாற்றை விரும்பி வாசிக்கின்றனர். கூடவே குறைத்து அறியப்பட்ட கலகக்காரர்களான சிவ் வெர்மா, கர்தார் சிங் சராபா போன்றோரையும் படித்து போராட்ட எண்ணத்திற்கு தீனிப் போடுகின்றனர். சிலர் ராம் உதாசி எழுதிய கவிதைகளையும், லெனின் மற்றும் மார்க்ஸின் எழுத்துக்களையும் நேரம் செலவிட்டு தேடிப் படிக்கின்றனர். சமீபத்திலொரு சட்ட மாணவன் சீக்கிய வரலாற்றுப் புத்தகத்தை வாங்கிச் செல்கையில் தன் வரலாற்றையே தான் முழுதும் அறியவில்லையென வெட்கிக் தலை கவிழ்ந்தான்” என்று அனுபவம் பகிர்ந்தார். அனைத்திந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடந்து வரும் டிக்ரி, சிங்கூ, காஜிப்பூர் பகுதிகளில் ‘ஷாகீத் பகத் சிங்’ என்ற பெயரில் மும்முனை நூலகத்தை நிறுவியுள்ளது. அமைப்பாளர் அமீன் கூறுகையில், “மக்கள் எழுத்துப் பசியில் வாடுகின்றனர். பணம் கொடுத்துப் புத்தகம் வாங்க முடியாத பலர், இரவல் எடுத்துச் சென்று தன் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்கின்றனர். இன்னும் சிலர் படம் பார்ப்பதற்கும் உரையாடலைக் கேட்பதற்குமே வருகின்றனர்” என்றார். இதனால் ஈர்க்கப்பட்ட சிலர் மேலும் 6 நூலகங்களை டிக்ரி எல்லையிலும், இரண்டை காஜிப்பூரிலும் தற்காலிகமாக நிறுவியுள்ளனர்.
பஞ்சாப் பல்கலைக்கழக அரசியல் அறிவுத்துறைப் பேராசிரியர் அசுதோஷ் குமார் கூறுகையில்,” போராட்டக் களத்தில் நூலகங்களை ஏற்படுத்துவதன் மூலம் நடுத்தர வர்கத்தினரை மிக ஏதுவாக உள்ளீர்க்கலாம். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினரின் போராட்டம் என்ற போலிக் கம்பளத்தை மறைத்து பஞ்சாபிய உணர்வை தட்டியெழுப்பி ஒரு தேசியப் போராட்டமாக மாற்றும் சாமர்த்தியம் இருக்கிறது” என்றார். இம்மாதிரியாக போராட்டக் களத்தில் நூலகம் அமைப்பது முதன்முறை அல்ல. 2019-ம் ஆண்டுக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் போலீஸ் நடத்திய தடியடியில் தொடங்கியது, இந்தக் கலாச்சாரம். அமைதி முறையில் போராடி வந்த மாணவர்களைத் துப்பாக்கி முனையால் மிரட்டி, லத்தி அடியால் விரட்டியடித்த காவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தை குருதிபடிய குரோதம் செய்தனர். அப்போது துளியும் கலங்காமல் நடைபாதையில் அமர்ந்த இருவர், “புரட்சி செய்ய படி” என்ற நூலை போலீஸ் அராஜகத்தை ஒழிக்கும்படி படித்துக் கொண்டிருந்தனர். அருந்ததி ராய் உட்பட ஆகச்சிறந்த எழுத்தாளர் பலர் தங்கள் நூலை தானம் செய்தனர். இந்தத் தற்காலிக நூலகம் புற்றீசல் போல போராட்டம் நடந்த ஷாகின் பாக், ஹஷ் ரானி பகுதிகளில் படையெடுத்துப் பரவியது. பின்னர் கொல்கத்தா, குஜராத் வரை இந்தக் காளான் கலாச்சாரம் வேர்விட்டது என்றால் பொய்யல்ல.
“உண்மையில் இங்கிருக்கும் மக்களுக்கு அவர்கள் எழுப்பும் கோஷத்திற்கும், வைக்கும் கோரிக்கைக்கும் அர்த்தம் தெரியுமா என்ன?” ஆசாத் என்ற வார்த்தையை முன்வைக்கும் இளைஞர்களுக்கு அதன் அர்த்தம் முழுதும் தெரிந்திருக்கிறதா? ஒருவேளை இல்லையென்றால் அதன் பொருளை புத்தகத்தைத் தவிர வேறு யாராலும் தெளிவுபட சொல்லமுடியாது.
களப்பணியாளர் ஆசிப், பாத்திமா ஷேக் சாவித்திரிபாய் பூலே நூலகத்தை ஷாகின்பாக் பகுதியில் நிறுவ காரணமாக அமைந்தது அவருள் எழுந்த ஒரு கேள்விதான். “உண்மையில் இங்கிருக்கும் மக்களுக்கு அவர்கள் எழுப்பும் கோஷத்திற்கும், வைக்கும் கோரிக்கைக்கும் அர்த்தம் தெரியுமா என்ன?” ஆசாத் என்ற வார்த்தையை முன்வைக்கும் இளைஞர்களுக்கு அதன் அர்த்தம் முழுதும் தெரிந்திருக்கிறதா? ஒருவேளை இல்லையென்றால் அதன் பொருளை புத்தகத்தைத் தவிர வேறு யாராலும் தெளிவுபட சொல்லமுடியாது. எனவே என் 15-கும் மேற்பட்ட புத்தகங்களை எடுத்துவந்து கடைவிரித்தேன். ஃபேஸ்புக்கில் புத்தக தானம் கேட்டு பதிவு செய்தேன். காட்டுத்தீயாகப் பரவி சுமார் 2500-கும் மேற்ப்பட்டப் புத்தகங்களைத் தற்போதுவரை சேமித்துள்ளேன். புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை விட இந்திய அரசியலமைப்பு புத்தகத்திற்கே அதிக வரவேற்பும் தேவையும் இருக்கிறது.
கொல்கத்தா பார்க் வீதியில் உள்ள அலியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ரியாஸ் முகமது சொல்லும்போது, “போராட்டக்காரர்களுக்குள் ஒற்றுமை வந்தவிட்ட பிறகு ஏதும் செய்வதற்கில்லை. முன்னாள் அரசு அதிகாரிகளும் மாணவர்களும் கலந்துரையாட பாலம் அமைக்கிறது நூலகம்” என்றார். கல்லூரிப் பேராசிரியர் நௌசீன் பாபா கான்,” சமூகவியல், மனித உரிமை, சட்டம், தத்துவம் தொடர்பான புத்தகங்களை பெருமளவில் கொடையாளிகள் தந்து சேர்கின்றனர். குடியுரிமைச் சட்டத் திருத்தம் பற்றி உருது மொழியில் எழுதிய நூலைப் பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர்” என்கிறார். கொல்கத்தா பார்க் சர்க்கஸ் நூலகத்திற்கு 60 புத்தகம் கொடையளித்த ஜின்டல் குளோபல் சட்டப் பள்ளி இணைப் பேராசிரியர் ஓய்ஷிக் சிர்கார், “வாசிப்பு பழக்கமே ஒற்றுமைக் குணம் வளர உரம் போடுகிறது. போராட்ட களத்தில் உள்ள நூலகம், பொதுவான நூலகப் பாங்கை உடைத்து சுக்குநூறாக்கிறது. இங்கு தான் படித்ததை ஆலோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், கலந்துரையாடுகிறார்கள். அக்டோபர் புரட்சி, சிப்கோ இயக்கம் போன்ற பெருந்திரள் படிப்பினை இயக்கமான இது மக்களை ஒன்றிணைத்து முன்னேற வைக்கிறது” என்றார்.
நவம்பர் 26-ம் தேதி தலைநகர் நோக்கிச் சென்ற விவாயிகள் மீது தண்ணீர் அடித்து விரட்டப்பட்ட செய்தியைக் கேட்ட போது, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஹிமான்ஷு த்வா இணையவழி வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். ” களத்திற்குச் சென்று, தண்ணீர் பீரங்கியால் உடல் நனைக்கப்பட்ட வயது முதிர்ந்த விவசாயிகளை கண்டபோது கண் கலங்கிவிட்டேன்” என்று நினைவு கூறுகிறார். நாடு முழுதுமிருந்து நன்கொடை பெறப்படும் புத்தகங்கள் ஹிமான்ஷு வீட்டு முகவரிக்குத்தான் முதலில் வருகின்றன. தன்னொரு நாளை நகரத்தில் உள்ள ஒவ்வொரு கள நூலகத்திற்கு சென்று புத்தகம் சேர்ப்பதிலும், அதிகக் கிராக்கி இருக்கும் புத்தகத்தை வெவ்வேறு நூலகத்திற்கு கொண்டுச் சேர்க்கவும் செலவிடுகிறார்.
“பதிப்பகத்தித்தாரும் நூலாசிரியரும் தனிப்பட்டோரும் சேர்ந்து ஒரு வாரத்திற்கு குறைந்தது 12 புத்தகங்களையாவது அனுப்பிவிடுவர்” என்றவர் கைவிரித்து கூறுகையில் பொறாமை எண்ணம் பீறிட்டு எழுகிறது. பார்க் சர்க்கஸ் நூலகப் புத்தகங்களை சென்ற ஆண்டு கரை சேர்ந்த ஆம்பன் புயல் தின்று தீர்த்துவிட்டபோதும், முயற்சி துவளாமல் நிரந்தர நூலகம் அமைக்க வலு சேர்த்து வருகிறார் ஆசிப். இறுதியாக, “சுற்றுப்புறத்தில் உள்ள பலர் முதன்முறை வாசகர்களாகவே இங்கு வருகிறார்கள். முன்னொரு பெண்மணி, தன் சொந்தக் குழந்தையாலே புரட்சியாளராக இருப்பதற்கு நையாண்டி செய்யப்பட்டக் கோலத்துடன் இங்கு வந்தார் . அத்தகைய வாசகர்களையே நான் மீட்டுக் கொண்டு வர விரும்புகிறேன்” என்கையில் அவர் கண்ணில் ஒளி மிளிர்ந்தது.
ஹிமான்ஸி தவான் ஆங்கிலத்தில் எழுதிய “RISE OF THE POP-UP PROTEST LIBRARY” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.