உலகக் கவிதை வரலாற்றில் ஆகச்சிறந்த கவிஞர்கள் பட்டியலில் என்றும் நிலைத்திருப்பவர் பாப்லோ நெரூடா. சிலி நாட்டில் பிறந்து, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து, கம்யூனிஸ்ட்-ஆக மாறி, கவிதையில் கரைந்து, மர்மமாக மறைந்த முழுமுதல் ஆச்சரியம் அவர். தன் 20-ம் வயதில் அவர் வெளியிட்ட ‘இருபது காதல் கவிதைகளும் நிராசைப் பாடல் ஒன்றும்’ என்ற நூல், அவர்தன் வாணாளில் சிலியில் மட்டும் 20 இலட்சம் பிரதிகள் விற்று, அந்நாட்டின் தேசிய புத்தகம் போல் ஆனது.
அந்த நிராசைப் பாடலுக்கு தமிழில் மட்டும் அரை டஜன் மொழிபெயர்ப்புகள் இருப்பதாக 16 ஆண்டுகளுக்கு முன்பே சலபதி சொல்கிறார். 1980-களிலேயே ‘துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்’ என்ற இந்நூல் மொழிபெயர்த்து முற்றுப்பெற்றிருந்தாலும் பல ஆண்டுகளாக கைப்பிரதியாகவே இருந்துவந்தது. நூல் வடிவம் பிடிக்க சில ஐந்தாண்டுகள் ஆனபோதும், கவிதையின் சாரமோ – உணர்வின் ஒத்திசைவோ மொழிபெயர்ப்பின் நேர்த்தியோ துளியும் குறையவில்லை.
இந்நூலுக்கு அவர் எழுதியிருக்கும் அறிமுகவுரை மிக நுட்பமானது. சலபதிக்கு முன்னரே சில மொழி பெயர்புகள் எழுதப்பட்டிருப்பினும் அவரை அவை ஏன் திருப்திபடுத்தவில்லை என இந்நூலின் முன்னுரை திறமாக வாதிடுகிறது.
//Since என்ற சொல் ‘பின்னாக’ என்றும் ‘என்பதனால்’ என்றும் பொருள்படும். You are like nobody since I love you – ‘என் காதலி என்பதனால் யாரும் உனக்கு ஈடாக மாட்டார்கள்’ என்று பொருள் தரும் அருமையான இந்த வரியை ‘நான் உன்னைக் காதலித்ததிலிருந்து நீ யாரைப் போலவும் இல்லை’ என்று ஒரு கவிக்கோ மொழிபெயர்த்திருக்கிறார்.// என்ற பத்தியில் தட்டையான மொழிப்புலமை, கவிதையில் எவ்விதமான சேதாரங்களை உண்டுபண்ணுகிறது எனப் பேசுகிறார். //
‘Cry’ என்பது ‘அழுகை’ என்பதைவிடப் பெரிதும் ‘கத்துதல், அலறல், அழைப்புக் குரல்’ என்றே பொருள்தரும். You will answer me to the last cry என்பதில் ‘அழுகை’ என்பது பொருத்தமற்றது. ‘அழைப்பு’ என்பதே அதிகமும் பொருந்தும். // என்பதில் Weep, Sob, Cry – போன்றவற்றின் மெல்லிய வித்தியாசங்கள், கவிதை மொழிபெயர்த்தலில் என்னென்ன பாடுபடுகிறதென உச்சுக்கொட்டுகிறார். இதற்கெல்லாம் மேலொரு படி சென்று,
//I have a telegram From the Miners Union And she whom I love (I won’t tell you her name) Is waiting for me at Bucalemu என்பதை,
எனக்கு ஒரு தந்தி வந்துள்ளது, சுரங்கத் தொழிலாளர் சங்கத்திலிருந்து. நான் காதலிக்கும் அவளோ (நான் அவள் பெயரை உங்களுக்குச் சொல்லமாட்டேன்) பக்காலெமுவில் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். என்று பசுவய்யா மொழி பெயர்த்துள்ளார். ஆனால் ‘சுரங்கத் தொழிலாளர் சங்கத்திலிருந்து / எனக்கு ஒரு தந்தி வந்துள்ளது’ என்பதே பொருத்தமானது.
அடைப்புக் குறிக்குள் உள்ள வரியை ‘அவள் பெயரை நான் சொல்ல மாட்டேன்’ என்பது போதுமானது. ‘உங்களுக்கு’ என்பது மிகை. (இங்கு இடைப்பிறவரலாக ஒரு செய்தி.* தோன்றா எழுவாய் என்பது தமிழின் மிகப்பெரிய பலம். ஆங்கிலத்திற்கு இது இல்லை) // * உண்மையில் இதுதான் மிகத் தேவையான விஷயம்.
மொழிபெயர்ப்புகளில் தோன்றா எழுவாய் சமாச்சாரம் பலருக்குத் தெரிவதேயில்லை – அல்லது தெரியாமலே பயன்படுத்துகின்றனர் – அல்லது தெரிந்தும் உதாசீனப் படுத்துகிறார்கள். “எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப” எனும் தொல்காப்பிய நூற்பா, தோன்றா எழுவாயை அறிமுகப்படுத்தும். கண்ணா என்ன பண்ற? என்ற கேள்விக்கு, தூங்குறேன் என்ற பதிலிலேயே ‘நான்’ தூங்குறேன் என்ற எழுவாயும் அடங்கியிருக்கிறது.
இதை மொழிபெயர்ப்பில் (குறிப்பாக கவிதை போன்ற வார்த்தை நுணுக்க மொழிபெயர்ப்பில்) உற்றுநோக்கி பயன்படுத்துவது எவ்வளவு அவசியமானது. இப்படி தொடர் தொடராக, பல இடங்களை மேற்கோளிட்டு அவர் எழுதியிருக்கும் முன்னுரை மட்டுமே தனி நூலாகும் திறம்பெற்றது. இது போன்று இன்னும் சில கட்டுரைகளைத் தொகுத்து மொழிபெயர்ப்பியல் சார்ந்து கையேடு ஒன்றை சலபதி தயாரிக்க வேண்டும். இதற்குமேல் மேம்போக்கான பேச்சை நெரூடா அனுமதிக்க மாட்டார்.
கவிதை – 1
“இந்த அந்திமாலையைக் கூட நாம் இழந்துவிட்டோம். … அப்போது நீ எங்கே இருந்தாய்? வேறு யார் உன்னோடு இருந்தது? அவன் என்ன சொன்னான்? துயருறும்போதும், நீ எங்கோ இருக்கிறாய் என உணரும்போதும் காதல் என்னை ஏன் முழுமையாக ஆட்கொள்கிறது? …” “Where were you then? Who else was there? Saying what? Why will the whole of love come on me suddenly When I have Sad and feel you are far away?” இத்தனைத் தோய்ந்து போனக் குரலில் ஒலிக்கும் ஒரு கையறுநிலைப் பாடலை தமிழில் தவிர்த்து, நெரூடா மொழியில்தான் கேட்கிறேன்.
கவிதை – 2
Every Day you play எனும் கவிதை இயற்கையில் ஒன்றிய காதலை ஆராதனை செய்கிறது. “எவளும் உனக்கு நிகரில்லை, நீ என் காதலி என்பதனால்… நீ தோன்றுவதற்கு முன்னர் எப்படியிருந்தாய் என நினைத்துப்பார்க்க முயல்கிறேன் ” என்பதில் தொடங்கி, “மலைகளிலிருந்து இன்ப மலர்கள், நீலப் பூக்கள், கரும் ஹேசல் மலர்கள், முரட்டுக் கூடை நிறைய முத்தங்களுடன் நான் வருவேன். செர்ரி மரங்களோடு வசந்தம் என்ன செய்கிறதோ அதை உன்னிடம் செய்ய நான் விரும்புகிறேன்.” “I will bring you happy flowers from the mountains, bluebells, dark hazels, and rustic baskets of kisses. I want to do with you what spring does with the cherry trees.” என இக்கவிதை முடியும்போது காதலின் மென்மையை ‘மலரினும் மெல்லியது காமம்’ என்ற வள்ளுவ வரிகளால் வருடுகிறது. மனதை இலேசாக்குகிறது. அன்பு திகட்டுகிறது. காற்றில் பறக்க சிறகுகள் கொடுக்கிறது.
கவிதை 3
இத்தொகுப்பின் உயிர் இக்கவிதை. “துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம். நான் அவளை நேசித்தேன். சில சமயம் அவளும் என்னை நேசித்தாள். இன்று போன்ற இரவுகளில் அவளை நான் அணைத்திருந்தேன். எல்லையற்ற வானத்தின்கீழ் மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன். அவள் என்னை நேசித்தாள். சில சமயம் நானும் அவளை நேசித்தேன். கரிய பெரிய அவள் விழிகளை எப்படி நேசிக்காமலிருக்க இயலும்? அவள் இல்லை என்பதை நினைக்கும்போது, அவள் இழப்பை நான் உணரும்போது துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம். பேரிரவு அவள் இல்லாமையால் இன்னும் பெருகுவது கேட்கையில் புல்வெளிமீது பனி விழுவதுபோல் கவிதைகள் உள்ளத்தின் மீது படிகின்றன.“ தன் இருபது வயதில், நெல் மணிகளைப் போல் சிறுக சிறுக சேகரித்த சொற்கோவில் இந்த நிராசைப் பாடல். நெரூடாவுடன் நாமும் நெக்குருகிப் போகிறோம்
. “முன்புபோலவே, அதே இரவு அதே மரங்களை வெண்மையாக்கிக் கொண்டிருக்கிறது. அன்றிருந்த நாம் முன்பு போலில்லை.” இனிமேல்வரும் வரிகளை சலபதி அல்ல, எவராலும் உண்மைக்கு நேர்த்தியில் அப்படியே கிடத்திவிட முடியாது. ஆங்கிலத்தில் அள்ளி தருகிறேன். “Another’s. She will be another’s. As she was before my kisses. Her voice, her bright body. Her infinite eyes. I am no longer in love with her, that’s certain, but maybe I love her. Love is so short, forgetting is so long. Because through nights like this one I held her in my arms my soul is not satisfied that it has lost her. Though this be the last pain she makes me suffer and these the last verses that I write for her.” இந்த வரிகளின் அனுபவத்தின் ஊடாக அலைவதற்கே, மீண்டும் ஒரு காதல் தோல்வி ஏற்க நம் மனதை திடப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் சில. முற்றும் காதலில் தோய்ந்து இரண்டறக் கலந்தால் ஒழிய, “உன்னை அணைப்பதற்காக உன்னை விரும்புவதற்காக உன்னைப் பெறுவதற்காக நான் பிறவி எடுத்துள்ளதுபோல் உன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எனக்குத் தருவதற்கென நீ பிறவி எடுத்துள்ளாய்!” என்ற வரிகளை ஒரு கவிஞனால் எழுதிவிட முடியாது. விளிப்பாடல்கள்: Ode என்றழைக்கும் விளிப்பாடல் மரபை மேட்டிமைத் தனத்திலிருந்து சதா ஜடப்பொருட்கள் வைத்துப் பாடினார். தாக்காளியை விளித்து நெரூடா பாடியது மிக பிரசித்திப் பெற்றது. அப்பாடல் நெடுக, சிலியின் வண்ணமயமான வரலாற்றை வரைந்திருக்கிறார். உடைகளுக்கு எழுதிய விளிப்பாடல், கவிஞர் மேத்தா எழுதிய ‘வாழை தன் வரலாறு கூறுதல்’, ‘செருப்புடன் ஒரு பேட்டியை’ கண்முன் நிறுத்துகிறது. “No book has been able To wrap me in paper, To fill me up With typography With heavenly imprints” என்று புத்தகப் பிரியத்திலிருந்து அந்நியப்படும் மற்றொரு விளிப்பாடல், ஒருவர் ஏன் புத்தகங்களை வெறுக்க வேண்டும் என்ற அபிலாஷையை பூர்த்திசெய்கிறது.
“இளம் பூச்சியைப் பிடிப்பதற்கு நச்சு வலை விரிக்கும் சிலந்தி நூல்களை நான் வெறுக்கிறேன்” நெரூடா பல நாடுகளில் தூதராகப் பணியாற்றியிருக்கிறார். பயண விரும்பி. நிறைய மணற்பரப்புகளில் சுற்றித் திரிந்த பாதங்களுக்கு பொறுமையாக பங்கங்களைப் புரட்டி வரலாறு படிக்க பொறுமை இருக்குமா? என் கவிதைகள் கவிதைகளைத் தின்பதில்லை எனச் சொல்லும் அவரின் கவிதை ஊற்று, புத்தகங்களில் இல்லை வாழ்க்கையில் இருக்கிறது. அதனால்தான் பாடுகிறார், “புத்தகமே, காலணியில் புழுதி படிய சாலைகளில் நான் நடப்பேன். உன் நூலகத்திற்கு நீ திருப்பிப்போ. நான் தெருவில் இறங்கப்போகிறேன். வாழ்க்கையை நான் வாழ்க்கையிலிருந்தே கற்றுக்கொண்டேன். காதலை ஒரு முத்தத்திலிருந்து கற்றேன்..” So Many Names கவிதையில் பாரதியின் ஞான உபதேச வாடை வீசுகிறது. “தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?” ஒரு கவிஞனின் அவஸ்தையை ‘நினைவு’ எனும் கவிதையில் யாசிக்கும் தொனியில் பாடுவது, அத்தனை இரக்கங்கொள்ள வைக்கிறது.
“ நான் அனைத்தையும் நினைவில் வைத்திருக்க வேண்டியதாயுள்ளது. புல்லின் இதழ்களையும் சீரற்ற நிகழ்ச்சிகளின் தொடரையும் அங்குலம் அங்குலமாக வீடுகளையும் ரயில் வண்டியின் நீண்ட தண்டவாளத்தையும் துன்பத்தின் கோடு விழுந்த முகத்தையும் நான் நினைவில் கொள்ள வேண்டியதாயுள்ளது. ஒரு ரோஜா செடியை நான் தவறாகப் புரிந்துகொண்டாலோ, முயலுடன் இரவைக் குழப்பிக்கொண்டாலோ, என் நினைவில் ஒரு சுவர் முழுவதுமாக நொறுங்கிவிட்டாலோ, காற்றையும் நீராவியையும் மண்ணையும் இலைகளையும் முடியையும் செங்கற்களையும் என்னைக் குத்திக் கிழிக்கும் முட்களையும் தப்பித்தலின் விரைவையும்கூட நான் மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கும். கவிஞன் மீது கருணை காட்டுங்கள்.”
இத்தனையும் எழுதித் தீர்த்த நெரூடா, தன் முதல் கவிதை அனுபவம் பற்றி இப்படியொரு வரி எழுதுகிறார். “ஒன்றுமே அறியாதவனின் தூய அறிவைப் போன்றதுமான மங்கலான முதல் வரியை நான் எழுதினேன்.” ஆம். அந்த வரிகள்தான் நம் நெஞ்சோடு நின்றவை. காற்றுக்காகக் காத்திருக்கும் இருண்ட மேகங்களைப் போல, தேக்கி வைக்கப்பட்டிருக்கும் உள்ளார்ந்த உணர்ச்சிகள் இவர் வார்த்தைபட உடைந்துபோகும். கண்ணீர் விட்டு கரைந்துபோகும். மனதைத் தூய்மைப்படுத்தி மெல்ல றெக்கை பொறுத்தி பறக்கவைப்பார். என்றென்றைக்கும் நெரூடாவின் வரிகள், நம் நெஞ்சை மயிலிறகு கொண்டு வருடியபடி இருக்கும்.