The biographies of the writers who have written the history’s biography have not been written well since yet
அதுவும் தமிழில் அத்தகைய சூழல் இதுவரை ஏற்படவேயில்லை. நினைவு குறிப்புகளோ, டயரி குறிப்புகளோ, கிசுகிசுப்புகளோ அங்கங்கு தென்பட்டாலும் பெரும்பாலும் அவை புனைவு எழுத்தாளர்களை வட்டமிட்டே மொய்த்துக் கொண்டிருந்தன. சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்த ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலும் அந்த வகையறாக்குள் வருவதுதான். பிரமிள் வாழ்க்கையை ஆவணப்படமாக சித்திரித்து தயாரிக்கும் வெற்றிமாறின் அறிவிப்பும் இதே சங்கதிதான்.
சாகித்திய அகாதமி விருதுகளுக்கு மட்டுமல்ல, பொதுசன வாசிப்புக்குமே நான் – ஃபிக்ஷன் புத்தகங்கள் மீது ஒரு ஒவ்வாமை உண்டு. ஆய்வு புலங்களில் இயங்குவோருக்கு அதற்கும் மீறிய மரியாதை உண்டு (!) பெரும்பாலும் வரலாறு, சமூகவியல், சூழலியல் சார்ந்த படைப்புகள் பட்டமேற் படிப்பு வாசிப்பு போன்றதான ஒரு மாயை இருக்கிறது.
தமிழில் அந்தப் போக்கை பா.ராகவன், மருதன், முகில் போன்ற எழுத்தாளர்கள் மாற்றியமைத்தார்கள். வரலாற்றின் கடின நடையை காய்ச்சிக் கூழாக்கி கரண்டியில் கொடுத்தார்கள். நான் -ஃபிக்ஷன் வகையறாக்களை விருப்பிக் கற்க போதித்தார்கள்.
அந்த வகையில்தான் ரொமிலா தாப்பர் : ஓர் எளிய அறிமுகம் என்ற நூலும் மருதன் எழுத்தில் வெளிவந்தது. “வரலாறு கறுப்பு வெள்ளையல்ல. இந்த இரண்டுக்கும் இடையில் ஓர் உலகமே இருக்கிறது. ஒரு வரலாற்றாசிரியர் இயங்க வேண்டியது அங்கிருந்துதான்” என்று சொல்லும் ரொமிலா தாப்பரின் வரலாறு குறித்த பார்வை மிக முக்கியமானது.
“ஒரு வரலாற்றாசிரியருக்கு வரலாறு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வரலாறுகளின் வரலாறும் முக்கியம்.” இது நூறு சதம் உண்மையான கருத்துங்கூட. தொடக்கத்தில் ஜேம்ஸ் மில் முதலானோர் இந்திய வரலாற்றை, “இந்து காலம் – முஸ்லீம் காலம் – பிரிட்டிஷ் காலம்” என்றே வகைப்படுத்தியிருந்தனர். தேசியவாதப் பார்வை ஊடுருவிய போது அண்டைய ஐரோப்பிய தேச வரலாற்றைப் போல அது, “பண்டைய காலம் – மத்திய காலம் – நவீன காலம்” என பரிணாமம் அடைந்தது.
இதையும் ஏற்றுக்க கொள்ள மறுத்த ரொமிலா, பண்டைய இந்தியா (Ancient India) என்றால் அதன் கால நிர்ணயம் என்ன? குறிப்பிட்டுச் சொல்லும்படி அத்தனை எளிதானதா பண்டைய வரலாறு, என ஆழ யோசித்தார். அதன் விளைவே, ‘முற்கால இந்தியா’ (Early India). இப்படி ஒவ்வொரு சொல்லிலும் உரையாடிவரும் வரலாற்றாளர்களின் ஒவ்வொரு செல்லும் ஒரு பக்கச் சார்பினை கொண்டிருக்கும்.
நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்’ வரலாற்றிற்கும் – நொபொரு கராஷிமாவின் ‘வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகத்திற்கும்’ வித்தியாசம் உண்டு. மீண்டுமொருமுறை ரொமிலாவின் சொற்களைக் கடன் வாங்கி சொல்வதென்றால், அந்த வித்தியாசங்களை எல்லாம் களைவதற்கு, “ஒரு வரலாற்றாசிரியருக்கு வரலாறு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வரலாறுகளின் வரலாறும் முக்கியம்.” அந்த வரலாற்றை எழுதியவரின் வரலாறு முக்கியம்.
இதையொரு பெருநூல் கனவாக தொடங்கிய மருதன் அவர்கள் காலத்தின் தேவை கருதி எளிய நூலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்.
21 ஆண்டுகள் ஜே.என்.யூவில் பணியாற்றிய பேராசிரியர் ஒருவருக்கு, அதற்குப் பின்பும் சமீப காலம் வரை மதிப்புறு பேராசிரியராய் இயங்கிய ஒருவருக்கு, அந்நிறுவனம் பாரதிய ஜனதா ஆட்சியில் ஜூலை 2019-ல், ‘உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை அனுப்பிவையுங்கள். அதை எங்கள் குழு பரிசீலனை செய்து பார்த்துவிட்டு, நீங்கள் இங்கே தொடர்ந்து பதவி வகிக்கலாமா என்பதை முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கும்’ என்று கடிதம் அனுப்பும் அவசியம் என்ன?
அப்படி என்னதான் செய்தார் ரொமிலா?
‘பாடப் புத்தகத்தைத் திருத்தும் போக்கு தொடங்கி பாபர் மசூதி இடிப்பு வரை; வகுப்புவாதம் தொடங்கி வெறுப்பு அரசியல் வரை; ஜேஎன்யு தாக்குதல் தொடங்கி ஜனநாயக விரோதக் கோட்பாடுவரை இந்துத்துவ அரசியலைத் தொடர்ச்சியாக எதிர்த்து நிற்கும் ஓர் அறிவுஜீவியாக ரொமிலா தாப்பர் திகழ்கிறார்’ என்று அறிமுகம் செய்கிறார் மருதம். வரலாற்றில் எந்த மாதிரியான அணுகுமுறைகளை ரொமிலா கையாண்டு வந்திருக்கிறார் என்பதை மிகக் குறுகிய நூலாயினும் தேவைக்கேற்ப புரியவைக்கிறார், மருதன்.
அங்கங்கு ரொமிலாவின் சில மாஸ்டர் பீஸை அள்ளித் தெளிக்கவும் குறைபடவில்லை.
//ஒரு நிகழ்வை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது அது தொடர்பான அனைத்து தரவுகளையும் நாம் திரட்டியெடுக்க வேண்டும். நமக்குத் தேவையான ஓர் ஆதாரம் கிடைத்தவுடன் தேடலை நிறுத்திவிடக் கூடாது. சாத்தியமாகக்கூடிய எல்லாத் திசைகளிலும் தேடலை விரிவுபடுத்திக்கொண்டே போக வேண்டும். நாம் வந்தடைய விரும்பும் முடிவுக்குச் சாதகமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை மட்டும் ஆதாரமாக உயர்த்திக் காட்டும் அரைகுறை அணுகுமுறை தவறான புரிதலுக்கே வழிவகுக்கும்.//
இது முனைவர் பட்ட மாணவர்களுக்கு ரொமிலா பயிற்றுவிக்கும் ஆய்வியல் அறிமுகப் பாடம்.
//இதிகாசத்திலுள்ள தகவல்களை எப்படி ஆராய வேண்டும்? அனுமன் சீதையைக் காணச் செல்லும்போது கணையாழியை அடையாளத்துக்கு எடுத்துச் செல்கிறார். பொது ஆண்டு 2 அல்லது 3-ம் நூற்றாண்டுக்கு முன்பு ‘சிக்னெட் ரிங்’ இந்தியாவுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. இந்தோ கிரேக்கர்களிடமிருந்தே அது இங்கே வந்தது. அப்படியானால் இந்தப் பிரதியை 2-ம் நூற்றாண்டுக்கு முன்பு கொண்டுசெல்ல முடியாது என்று சொல்ல முடியும் அல்லவா? ஹெச்.டி. சங்காலியா என்னும் புகழ்பெற்ற தொல்லியலாளர் இதை உறுதி செய்வதைச் சுட்டிக்காட்டுகிறார் ரொமிலா. ஒரு பிரதியின் காலத்தை யூகிப்பதற்கு அதிலுள்ள தகவல்கள் உதவிக்கு வருகின்றன.//
என்று கால நிர்ணயம் பற்றி ரொமிலா பேசும்போது, ஏ.ஆர். வேங்கடாசலபதி எழுதிய ஒரு கட்டுரைச் செய்தி நினைவுக்கு வருகிறது. “திரைகடலோடித் திரவியம் தேடிவந்த வெள்ளையரோடு இந்திய மண்ணுக்குப் பல புதிய பொருள்களும் தொழில்நுட்பமும் உடன்வந் தன. இன்று அன்றாடப் பொருள்களாகிவிட்டவற்றுள் பல, சென்ற சில நூற்றாண்டுகளுக்குள்தான் தமிழகத்துக்குள் நுழைந்தன என்று சொன் னால் நம்புவது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். நிலக்கடலையும், அதிலிருந்து பெறப்படும் கடலை எண்ணெயும், உருளைக்கிழங்கும். மிளகாயும் இத்தகைய புதுப்பொருள்களே. இதைக் கவனத்தில் கொண்டால், வரலாற்று நாவல் எழுதும் ஜெயமோகனின் விஷ்ணு புரச் சத்திரத்தில், ஐரோப்பியர் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிளகாய் உண்ணும் காலவழு ஏற்பட்டிராது.”
இப்படியாக ரொமிலாவின் ஆய்வுலகப் பார்வையை தெரிந்தோ தெரியாமலோ பலரின் கண்ணாடி சட்டகத்துள் இன்று நாம் காணலாம்.
அத்தோடு நின்றுவிடாமல், ரொமிலாவின் புத்தகத்தை அணுகுவதிலிருக்கும் Starting Syndrome-யையும் பழுதுபார்த்து எளிமையாக்குகிறார், மருதன்.
ஏ.எல். பாஷம், ஆர்.சி மஞ்சும்தார், டி.டி. கோசாம்பி ஆகியோரிடத்து ரொமிலா கொண்டிருந்த உறவுமுறைப் பற்றியும் என்.சி.ஈ.ஆர்.டி-ல் புத்தகம் எழுத வந்த கதையினையும் மேலாக தொட்டுச் சென்றிருக்கிறார். ஜே.என்.யூ. வரலாற்றுத் துறையின் வரலாற்றுப் போக்கையே மாற்றியமைத்த பெரும் பங்கு இவருக்கு உண்டு.
நீலகண்ட சாஸ்திரி, பி.ஏ. கிருஷ்ணன், நாகசாமி, கே.கே.பிள்ளை, மா.இராசமாணிக்கனார், அமர்நாத் ராமகிருஷ்ணா, ஆர். பாலச்சந்திரன் போன்ற எண்ணிலடங்கா ஆய்வாளர் (பி.ஏ. கிருஷ்ணன் கழித்து) குறித்தும் ஒரு கையடக்க அறிமுக நூல் வெளியாகும் பட்சத்தில் நச்சுப்பாதை அறிந்து நடைபயில எதுவாக இருப்பதோடு, மிகச் சிறந்த மனிதர்களை வாழுங் காலத்திலேயே இனங்கண்டு அணைத்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
அனைரும் எளிதில் வாசிக்கக் கூடிய, வாசிக்க வேண்டிய புத்தகம்.
நன்றி : இந்த மின்னூலை கேட்டப் பொழுதிலேயே அன்புப் பரிசளித்த பூ.கொ. சரவணன் அண்ணாவிற்கு கிரேட் கிரேட் நன்றி.