spot_img
Sunday, December 22, 2024

நூற்றாண்டுக் காலக் குழப்பம் : பாரதியின் கடைசி நாட்கள்

‘பாரதி தமது நூல்களை நாற்பது புத்தகங்களாய் அச்சிடப் போகிறார். ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் பிரதி அச்சடிப்பார். இந்நான்கு லக்ஷம் புத்தகங்களும் தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும் அதிக விரைவாகவும் விலைப்பட்டுப் போகுமென்பதில் சிறிதேனும் சந்தேகத்துக்கு இடமில்லை’ என்று ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ மிகுந்த நம்பிக்கையோடு ஒரு விளம்பரத்தை 1921இல் வெளியிட்டது.
ஆனால் பாரதியின் அந்தக் கனவு கடைசிவரை நிறைவேறவில்லை. அவர் எழுதிய பாதி நூல்கள்கூட அச்சாகவில்லை. அவரது முப்பெரும் படைப்புகளான கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் ஆகியவற்றின் செம்மையான பதிப்பை பாரதி கண்ணாறக்கூடக் காணவில்லை. அதற்குள் தீ அவரைத் தின்றுவிட்டது. இதன் சாத்தியத்தைக் காண சுதந்திரம் அடைந்தும் பல ஆண்டுகள் நாம் காத்துக்கிடந்தோம். உலகிலேயே நாட்டுடைமையாக்கப்பட்ட முதல் படைப்பாளி மகாகவி சுப்பிரமணிய பாரதிதான்.

இன்று அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது; மணிமண்டபம் இருக்கிறது; அவரைக் கொண்டாட லட்சக்கணக்கான பாரதி ஆர்வலர்கள் இருக்கிறார்கள். பாரதியை ராஜமரியாதை கொடுத்து வணங்குகிறோம்.

ஆனால் பாரதி வாழ்ந்த காலம் அப்படிப்பட்டதல்ல. அவரது இறுதி ஊர்வலத்தில் வெறும் 11 பேர் கலந்துகொண்டார்கள். தம்பி நெல்லையப்பருக்கும் எட்டையபுரம் ஜமீனுக்கும் புத்தகம் பதிப்பிக்க பணம் வேண்டி பலமுறை கடிதம் எழுதியது நம்மைக் கண்ணீர் சிந்தவைக்கும்.

இப்படி ரத்தமும் சதையுமாய் வாழ்ந்த பாரதி குறித்து எண்ணற்ற ஆய்வு முடிவுகள் வெளிவந்தாலும் நினைவு நூற்றாண்டைக் கடந்த பின்னும், அவரது நினைவு நாள் எது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. பாரதி இறந்தது செப்டம்பர் 11ஆம் தேதியா 12ஆம் தேதியா? பலவிதமான பதில்கள் கிடைக்கின்றன. சிலர் இன்னும் யானை மிதித்துதான் பாரதி இறந்தார் என நம்புகிறார்கள். மகாகவியின் மரணத்தைச் சுற்றி ஏன் இத்தனை குழப்பங்கள்?

இந்தச் சிக்கல்களைக் கால நிரல்படி தொடக்கத்திலிருந்து அணுகுவோம். 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடயத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் பாரதி. 1920 டிசம்பரில் ‘சுதேசமித்திரனில்’ மீண்டும் உதவி ஆசிரியராய் வேலைக்குச் சேர்கிறார். இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கையில் தன் புத்தகங்களை பதிப்பிக்கவும்; அதற்கு பணம் புரட்டவும் பல முயற்சிகள் மேற்கொண்டபடி இருந்தார்.

அப்போது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போய் அங்குள்ள யானைக்குப் பழம் வாங்கிக் கொடுத்து, விளையாட்டாய் சில வார்த்தைகள் பேசிவிட்டு வருவது பாரதியின் வழக்கம். சம்பவம் நடந்த அன்றும் அப்படித்தான். யானைக்கு என்ன ஆனதோ, துதிக்கையால் பாரதியை கீழே தள்ளிவிட்டது. யானையின் நான்கு கால்களுக்கும் இடையில் பாரதி விழுந்துவிட்டார்.

பாரதியின் மேல் உதட்டிலும் மண்டையிலும் பலமான காயம் என்று அவர் மகள் சகுந்தலா பதிவு செய்கிறார். ஆனால் இது நடந்த காலக்கட்டம் பற்றி அவரெதுவும் சொல்லவில்லை. வ.ராமசாமி, ‘இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாரதியார் இறந்துபோனார்’ என்றும்; ரா.அ. பத்மநாபன், ‘யானைச் சம்பவம் ஜூன் மாதத்தில்’ நடந்திருக்கலாம் என்றும்; சீனி. விசுவநாதன், ‘யானையால் தாக்குண்ட அதிர்ச்சி சம்பவம் 1921 ஜூன் மாதத்தில் நிகழ்ந்திருக்கலாம்’ என்றும் குறிப்பாகச் சொல்வதால் 1921 ஜூன் மாதத்திலேயே பாரதி யானையால் தாக்குண்டது ஊர்ஜிதம் ஆகிறது.

இதனால் உயிர் போகவில்லை என்றாலும் பாரதியின் உடல்நிலை மோசமாகிவிட்டது. இது குறித்து ‘என் தந்தை பாரதி’ என்ற நூலில், ‘என் தந்தையார் தமக்குகந்த தொழிலான பத்திரிகைக்கு வியாசம் எழுதுவதிலும், பாட்டுக்கள் புனைவதிலும், நண்பர்களுடன் சல்லாபம், கடற்கரைக் கூட்டங்கள், நிபுணர்களுடன் சங்கீத ஆராய்ச்சி முதலியவற்றாலும் சிறிது மனச்சாந்தி பெற்றவராய் கூடியவரை உற்சாகத்தோடு இருந்து வந்தார். ஆனால் யானையினால் தள்ளப்பட்டு நோயில் வீழ்ந்தபின், அவரது உடல்நிலை அத்தனை திருப்திகரமானதாக இல்லை’ என்று சகுந்தலா சொல்கிறார்.

பாரதி குச்சி ஊன்றி, தாடியில்லாமல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை நாம் இன்றும் காண்கிறோம். இது யானை தாக்கிய பிறகு எடுத்த புகைப்படம் என்று சகுந்தலா மெய்ப்பிக்கிறார்.

யானையால் தாக்குண்ட சம்பவம் குறித்து ‘கோயில் யானை’ என்றொரு நாடகத்தை கொஞ்ச நாட்களில் பாரதி எழுதுகிறார். அந்த நாடகம் பற்றி ‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலில் கனகலிங்கம் மனமுருகி எழுதிய வார்த்தைகள் பின்வருமாறு:

‘தம்மைக் கீழே தள்ளிய கோவில் யானையைக் குறித்துப் பாரதியார் ‘சுதேசமித்திர’னில் ‘கோவில் யானை’ என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை எழுதினார். அந்த நிகழ்ச்சி ‘சுதேசமித்திர’னில் செய்தியாக வெளிவந்தபோது வாசிக்க மனம் பொறாத நான், பாரதியாரின் கட்டுரையைப் படித்து பரவசமானேன்.’

ஆக யானை தாக்கியதிலிருந்து ஒருவாறாய் உடல் நலம் தேறி, அன்றாட அலுவலுக்குள் பாரதி சென்றுவிட்டார். முதல் சிக்கல் இங்கேயே தீர்ந்துவிட்டது. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள பேரா. ய.மணிகண்டன் எழுதிய ‘பாரதியின் இறுதிக் காலம் : கோவில் யானை சொல்லும் கதை’ என்ற நூலை வாசிக்கலாம்.

அதே ஆண்டு (1921) செப்டெம்பர் தொடக்கத்தில் பாரதியின் உடல் நிலை பாதிப்படைந்தது. தீவிரமான வயிற்றுப்போக்கு. இந்தச் செய்தி பாரதியின் நண்பர்கள் பலருக்கும் உடனே தெரியவில்லை. பரலி சு. நெல்லையப்பருக்கும்கூட 11ஆம் தேதி பகலில்தான் தெரியவந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. உடனே லக்ஷ்மண அய்யர் என்றொரு நண்பரை அழைத்துக்கொண்டு பாரதியைப் பார்க்கச் சென்றார்.

பாரதியின் கடைசி நாள் பற்றிய நம்பகமான செய்திகள் மூன்று பேரிடம் இருந்து கிடைக்கின்றன. ஒன்று அவர் மகள் சகுந்தலா பாரதி; இரண்டு அவர் நண்பர் நீலகண்ட பிரம்மச்சாரி; மூன்று அவரால் தம்பி என்றழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர்.

‘என் தந்தை’ நூலில் சகுந்தலா சொல்லும் பாரதியின் இறுதிநாள் இப்படித்தான் இருந்தது.

‘ஆயரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி – சாயங்காலம் விளக்கேற்றும் நேரம். ‘இன்றிரவு தப்பினால்தான் பிழைப்பார்’ – அதாவது இனிமேல் நம்பிக்கை இல்லையென்று வைத்தியர் சொல்லிவிட்டார். எது நேருமோவெனக் கிலிபிடித்த மனதுடன், என் தந்தை படுத்திருக்கும் அறைவாயிலில் உட்கார்ந்திருந்தேன்.

‘சில நாட்களாகவே என் தந்தையார் மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். மிகுந்த சிரமத்துடன் காட்டாயப்படுத்தித்தான் மருந்து கொடுக்க வேண்டியிருந்தது…. நான் மருந்தென்று நினைத்து பக்கத்தில் இருந்த பார்லி தண்ணீரை அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ என் கையிலுள்ள கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்தார். ‘நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா! கஞ்சி’ என்று சொல்லி கண்ணை மூடிவிட்டார். எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. பின்னர் தூங்கிவிட்டேன் போலும்.’

இதற்கடுத்த சில மணி நேரங்களில் பாரதி இறந்துபோயிருந்தார். இறந்த நேரம் 1.30 என உடனிருந்த நீலகண்ட பிரம்மச்சாரியும்; 2.00 என பரலி சு. நெல்லையப்பரும் அரைமணி நேரம் முன்பின்னாகச் சொன்னாலும் தேதியில் குழப்பமில்லை. 11ஆம் தேதி கடந்து, செப்டெம்பர் 12 நள்ளிரவு 1.30-க்கும் 2.00-க்கும் இடையில்தான் பாரதி இறந்துபோனார். குழப்பம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.

14-09-1921 தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ இதழில் ரா.கனகலிங்கம் எழுதிய அனுதாபச் செய்தியொன்றில், ‘சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணிக்கு எனது குருவாகிய ஶீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் இம்மண்ணுலகைவிட்டு விண்ணுலகம் அடைந்தார்’ என்று எழுதுகிறார். உண்மையில் இங்கு அவர் சொன்னது வேறு, புரிந்து கொள்ளப்பட்டது வேறு. 11ஆம் தேதி இரவுக்கும் 12ஆம் தேதி பிறப்புக்கும் இடையே நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன.

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் வெகு சொற்பம். நெருங்கிய பலருக்கும் சில நாட்களுக்குப் பிறகுதான் கடிதம் மூலமாகவோ, நாளிதழ் மூலமாகவோ செய்தி தெரிந்தது. அதனால் அச்சில் பதிவான ஞாயிறு இரவு 1 மணி என்பதே செப்டெம்பர் 11ஆம் தேதி என்று ஊரறிய உணர்த்தப்பட்டது. பாரதியின் இறந்த நாள் பற்றி அவரது வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் சொல்வதைப் பார்த்தால் வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளக் கூடும்.

1944இல் வ.ராமசாமி எழுதிய ‘மகாகவி பாரதி’ என்ற நூலில் 11ம் தேதி என்றே குறிப்பிடுகிறார். பாரதியின் மனைவி செல்லம்மாவும் 11ம் தேதி என்றே தன் நூலில் பதிவு செய்கிறார். ஆக்கூர் அனந்தாச்சாரிகூட செப்டெம்பர் 11ஆம் தேதி 01.30 என எழுதுகிறார். 21ஆம் நூற்றாண்டிலும் தா.பாண்டியனின் ‘பாரதி அரசியல்’ நூல்; பட்டத்தி மைந்தனின் ‘பாரதியார்’ என்ற நூல் 11ஆம் தேதி என்றே குறிப்பு தருகின்றன.

சமூகத்திலும் பாரதியின் நினைவு நாள் 11ஆம் தேதியென்றே பதிவாகியிருந்ததற்கு மேலும் ஒரு சான்று இருக்கிறது. மணிக்கொடி (1933) தினமணி (1934) ஆகிய இதழ்களும் பாரதி நினைவைப் போற்றும் வகையில் செப்டெம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்டவை.

பாரதியின் மகள் தங்கம்மாள் எழுதிய ‘அமரன் கதையிலும்’, மண்டயம் ஶ்ரீநிவாசச்சாரியின் மூத்த புதல்வி யதுகிரி அம்மாள் எழுதிய ‘பாரதி சில நினைவுகள்’ என்ற நூலிலும் இறந்த தேதி பற்றிய குறிப்புகள் இல்லை.

12ஆம் தேதியென்று அறுதியிட்டு எழுதியவர்களுள் ரா.அ.பத்மநாபனை முன்னோடியாகச் சொல்லலாம். 1957இல் வெளியான ‘சித்திர பாரதி’ என்ற தன் நூலில் இதைப் பதிவு செய்கிறார். இந்நூலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் சென்னை மாநகராட்சி அளித்த பாரதியின் இறப்புச் சான்றிதழின் படம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் 12ஆம் தேதியென்றே அரசாங்க முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது.

மயிலை தருமபுர ஆதீனக் கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் பேரா. சுப்புரத்தினம் கால் நூற்றாண்டுக்கு மேலாக இதுகுறித்துப் போராடி வருகிறார். அவரின் அரிய முயற்சியால் எட்டையபுரம் பாரதி நினைவு மண்டபத்தின் கல்வெட்டு 11இல் இருந்து 12ஆம் தேதியாக, கடந்த 2014ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

அதனால் பள்ளிக்கூடப் புத்தகங்களில் இருந்து போட்டித்தேர்வுக்கு படிப்பவர்கள் வரை, தவறான நாளையே மனனம் செய்து போற்றி வருகிறார்கள். அரசும் தவறான நாளில் பாரதிக்கு மரியாதைச் செலுத்தி வருகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. சித்ராவும் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை ஒன்று அனுப்பினார். ஓராண்டு ஆகியும் எந்த பதிலும் இல்லை.

செப்டெம்பர் 11ஆம் தேதி இரவு 1.30 என்ற செய்தி பல குழப்பங்களை அடைந்து, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, பாரதி இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் தவறாகவே அணுசரிகப்படுவது அமரத்துவம் எய்திய மகாகவிஞனுக்குப் பெருமை சேர்க்கும் செயலாக இருக்கமுடியாது அல்லவா?

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்