spot_img
Monday, December 23, 2024

`நான் மட்டும் இல்லை என்றால்… மூன்றாம் உலகப்போர்தான்!’

நேட்டோ 31-வது உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது. லண்டனின் வாட்ஃபோர்டு (Watford) நகரில் நடக்கும் இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 29 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரை அடுத்து 1949-ல் கையொப்பமான இந்த நேட்டோ ஒப்பந்தம் வெற்றிகரமாக 70 ஆண்டை நிறைவு செய்துள்ளது. சமீப காலமாக, நேட்டோ நாடுகளுக்கு இடையே எழுந்து வரும் உட்பூசல்களுக்கு இந்த மாநாடு முற்றுப்புள்ளியாகும் என அரசியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர். அதனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை லண்டன் வந்தடைந்த டிரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலகத் தலைவர்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது. நேட்டோ ஒப்பந்தத்தின் படி, உறுப்பினரான ஒருநாடு எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் மற்ற அனைவரும் அவருக்கு உறுதுணையாக போர் உதவி செய்ய வேண்டும். இந்த முக்கிய விதியே பெரும் தலைவலிக்கும் வழிவகுத்துள்ளது.

அமெரிக்காவின் தன்னிச்சையான செயல் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது. சிரியாவில் அமெரிக்கப் படைகள் பின்வாங்குவதற்கு முன் நேட்டோவை அணுகாததால், நேட்டோ அமைப்பு “மூளைச்சாவு” அடைந்துவிட்டது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் (Emmanuel Macron) குற்றம்சாட்டினார். மேலும் டிரம்ப் இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்தால், இந்த அமைப்பு முழுவதுமாகக் கலைந்துவிடும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden)எச்சரித்துள்ளார். 29 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் சில நாடுகள் மட்டுமே பாதுகாப்பிற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பணத்தை அளித்துள்ளனர். இவ்வாறு பல விவாதங்களுடன் இந்த மாநாடு கூடியது.

மாநாட்டின் முதல் நாளான நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முடிச்சுகளைக் களைந்துள்ளார். பிரான்ஸ் அதிபரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தவர், “வெறுமனே உங்களால் அப்படிச் சொல்லிவிட முடியாது. எங்கள் எல்லோரையும் விட பிரான்ஸிற்குத்தான் நேட்டோ அவசியம் தேவைப்படுகிறது. உண்மையில் அமெரிக்காதான் நேட்டோவால் குறைந்த லாபம் அடையும் நாடு” என்றார். மேலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி மூலம் பாரம் சுமத்தியுள்ள பிரான்ஸ் மேலவைக் குறித்து பேசும்போது, “அமெரிக்க நிறுவனங்கள் மீது யாரும் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்த முடியாது. பிரான்ஸ் பொருள்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மீது அமெரிக்கர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவோம்” என்றார்.

பிரட்டனின் பொதுத் தேர்தல் பற்றிக் குறிப்பிடுகையில், “தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் திறமை வாய்ந்தவர். எனினும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவிற்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை” என்றார். சீனாவுடன் வர்த்தகம் செய்வதன் தொடர்பான கேள்விக்கு, “சீனாவுடன் நல்ல ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்த வேண்டும். வெகுவிரைவில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவோம்” என்றார்.

தொடர்ந்து, “நேட்டோ நிச்சயம் ரஷ்யாவுடன் ஆயுதக் கட்டுப்பாடு குறித்து பேச வேண்டும். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான தொடர்பு நல்ல நிலையில் நீடித்து வருகிறது. அவர் நிச்சயம் அணு ஆய்வு ஒப்பந்தத்தை மனதில் வைத்திருப்பார். நான் மட்டும் அமெரிக்க அதிபராக இல்லை என்றால் நிச்சயம் நாம் அனைவரும் மூன்றாம் உலகப் போரின் மத்தியில்தான் இருந்திருப்போம்” என்றார்.

இஸ்க்ரா
இஸ்க்ரா
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.

தொடர்புள்ள கட்டுரைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

சமீபத்திய பதிவுகள்