தமிழர்களின் வரலாறு, தமிழின் பழைமைப் பெருமிதம் என்றெல்லாம் பேசும் நம் சமூகத்தில் அவற்றுக்கான சான்றுகளாகத் திகழும் நினைவிடங்களைப் பாதுகாப்பதில் இருக்கும் அலட்சியம் மிகவும் கவலைகொள்ள வேண்டியது. காதலின் சின்னம் என்று தாஜ்மஹாலைப் போற்றும் நம்மவர்கள் நம்மிடையே இருக்கும் நட்பின் சின்னமான நினைவிடம் ஒன்றை வீணடித்து வருகிறார்கள். அந்த இடம் கபிலர் குன்று.
கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டான். சேரர்களையும் சோழர்களையும் நடுநடுங்க வைத்த மன்னன் இந்த வேள்பாரி.
பறம்பு மலை, இன்றைய நாளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து சிங்கம்புணரியில் உள்ளது. வெறும் 300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டின் மன்னன் மூவேந்தர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்ட காரணம், போர்த் திறம் மட்டுமன்று கொடைத்திறமும்தான். `முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி’ என்று கடையெழு வள்ளல்களில் ஒருவன். தன்னலமற்ற கொடைக்கு மட்டுமல்ல; ஒப்புயர்வற்ற நட்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவன் பாரி.
சங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். சங்கத்தமிழ் பாடல்களில் கபிலரின் பங்கு அளப்பரியது. குறிப்பாகக் குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடி வந்தார் கபிலர். இந்நிலையில் மூவேந்தர்களும் சூட்சுமமாக வஞ்சித்து பாரியைக் கொலை செய்தனர்.
பாரிக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள் இருந்தனர். பாரி தவறியதும், இவ்விரு மகள்களையும் திருக்கோவிலூரைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தார் கபிலர். தன் தோழன் இறந்தபின்னும் அவன் குழந்தைகளை, தன் வாரிசாக எண்ணிச் செய்யவேண்டிய கடமைகளை முறை தவறாது செய்தார்.
தன் தோழன் பாரியின் பிரிவு கபிலரை மிகவும் உறுத்தியது. அதனால் தென்பெண்ணை ஆற்றில் உள்ள சிறு குன்றின் மீது வடதிசை நோக்கி அமர்ந்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார். இதை `வடக்கிருத்தல்’ என்பர். இந்தக் குன்று இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது.
“பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது
ஒருங்குவரல் விடாஅது ‘ஒழிக’ எனக்கூறி,
…..
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!”
புறநானூற்று (236) கையறுநிலைப் பாடல்
“நீ இறந்த போது, உன்னோடு என்னையும் வரவிடாது `இங்கேயே இரு’ எனச் சொல்லிச் சென்றாய். உனக்கு நான் நெருங்கிய நண்பன் இல்லையா? இங்கிருந்தது போலவே அங்கேயும் நான் உன்னுடன் வாழும் நிலையை எனக்கு இனியேனும் தருவாயாக!” என்று தாம் உயிர்நீக்கும் செய்தியை கபிலர் பாடியுள்ளார். சிறந்த நட்பிற்கு உதாரணமாக இவ்விருவரும் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட கபிலர் உயிர்நீத்த குன்றின் மேல் சிறு கோயிலும் கட்டி பிற்காலத்தில் வழிபட்டுள்ளனர் மக்கள்.
இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வீரட்டானேசுவரர் கோயில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் `கபிலக்கல்’ என்று இக்குன்றின் கதை விளக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட பாணியைக் கொண்டு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
1966-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின் கீழ் அண்மையில் இந்தக் குன்று சேர்க்கப்பட்டது.
சரி, நட்பின் சின்னமான இந்தக் கோயில் தற்போது எப்படி இருக்கிறது என்று பார்க்கச் சென்ற நமக்குப் பேரதிர்ச்சி! வறண்டு போன தென் பெண்ணையாற்றின் மணற்பரப்பில் ஆளரவமின்றி தனித்திருந்தது. அருகில் சென்றோம், கை – கால்கள் உடைந்தபடி மண்ணில் விழுந்த விநாயகர் சிலை நம்மை வரவேற்றது. குன்றைச் சுற்றி மதுபாட்டில்களும் மாமிச எலும்பும் அலங்கரித்தன.
செங்கற்களால் ஆன குறுகலான படிகள் மேலே செல்வதற்கு எழுப்பப்பட்டிருந்தன. கோயிலின் மேலே நான்கு பகுதிகளிலும் கடவுளர் சிற்பங்களும் கருவறையில் சிவலிங்கமும் பராமரிப்பு இன்றி வைக்கப்பட்டிருந்தன. படிக்கட்டு முதல் கருவறை வரை தங்களின் பெயரைக் கரியினால் கிறுக்கிவைத்து அலங்கோலப் படுத்தியுள்ளனர் `குடிமகன்கள்’. அருகிலிருந்த பாறை எங்கும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், சிகரெட் குப்பைகளுமாக நிறைந்து காணப்பட்டன.
தமிழக தொல்லியல் துறை வைத்திருந்த பதாகை, `இந்த இடத்தைச் சேதப்படுத்துவோருக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்’ என்று எச்சரிக்கிறது.
அந்த ஊரைச்சேர்ந்த ஒருவரிடம் பேசினோம்.
“இந்தக் குன்றுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று செயல்படுகிறது. குடிமகன்களின் புகலிடமாகத் திகழ்வதே இந்தக் குன்றுதான். இதை யாரும் பராமரிக்காததால், கேட்பாரின்றி இவர்களும் `ஆட்டம்’ போடுகின்றனர்” என்றார்.
தன் நண்பனுக்காக உயிர் துறந்த கபிலரின் நினைவிடம் சிறப்பு பெறுவது எப்போது? இத்தகைய வரலாற்று நினைவிடங்களின் அழிவு எதிர்காலத்தில் வரலாற்று அழிவுக்கும் வழிவகுக்கும். எனவே, தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பழந்தமிழர் பாரம்பர்ய அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும்.