தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நூற்பாவின் அறிமுக செய்தியிலேயே இன்றளவும் அறிவியல் எட்டாத செய்திகள் இருப்பின் இன்னும் சில நூற்பாக்களை அள்ளி வீசினால், அறிவியல் எனும் கடலை அமிழ்தினும் இனிதான தமிழ் மூழ்கடித்து விடாதா?
“தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா”, “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்கொரு குணமுண்டு” போன்ற பண்பாட்டுப் பெருமைகளைப் பொதுவாக நான் ஏற்பது இல்லை. மனதோடு சொல்லிப் பார்த்துச் சிலாகிப்பதோடு சரி. ஏன் என்றால் அதற்குக் கூறப்படும் காரணங்கள் நான் கொண்டாட ஏதுவாக இல்லையெனச் சொல்லிக்கொள்வது உண்டு.
இல்லையெனில் முன்னோர்களின் பெருமையை வரவேற்கும் அதே சமயம் அவர்களின் பாவ மூட்டைகளைச் சுமக்க வலு குன்றியுள்ளேன் என்று உணர்ந்து கொள்வதுமுண்டு. ஆனால் கணீரென அறைந்தாற் போல், ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்த அந்தக் கணம் அத்தனைப் பாசாங்கான பாங்கும் சுக்குநூறானது. தமிழில் இன்றளவும் நாம் அகழ்ந்துள்ள மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம். இந்நூலாசிரியரின் வயதைத் தாராளவாதியான வெள்ளை வாரணாரின் கருத்துப்படி பார்த்தால், 3520 ஆண்டுகள் இருக்கும்.
மறுபுறம் வைதீக விஷமக்காரரான வையாபுரிப் பிள்ளையைத் துணைக்கு அழைத்துக் கொண்டாலும் குறைந்தது 1700 வருடங்கள் பழமையானவர் தொல்காப்பியர். இன்றைய காலகட்டத்தில் நேற்று வெளியான ஆய்வு முடிவை இன்று காலை வெளியாகும் மற்றொரு முடிவு மறுத்தளிக்கிறது. இல்லை, திரிபு கூறுகிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன் ஒருவன் சொன்னது இன்றைய நவீன ஆராய்ச்சிகள் மூலம் துல்லியமாகத் தெளிவாகிறது என்றால் எத்தனை அபாரமான மனிதனவன்! நேற்றைய தினம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான கட்டுரை ஒன்றில் கூகுள் நிறுவன ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியிருந்தது.
செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி மேற்கொண்ட அந்த உணர்வாராய்ச்சி முடிவு கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சூத்திரத்தோடு ஒத்திருந்தது உணரவொன்னா வியப்பளிக்கிறது. வாய்மொழியும் எழுத்துமொழியும் புரியாத பொழுதெல்லாம் உணர்ச்சியும் மெய்ப்பாடுமே உலக மாந்தர்களை ஓர்குடைக்குள் இணைக்கிறது. கிட்டத்தட்ட 144 நாடுகளைச் சார்ந்த 60 லட்சம் காணொளிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கூகுள் நிறுவனம், உலகளாவிய மாந்தர்களிடையே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சுமார் 16 மெய்ப்பாடுகள் ஒரே வண்ணம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
பேராசிரியரான டாக்டர். ஆலன் கூறும்போது,” அன்றாட வாழ்வில் மக்களின் சமூக பாவனைகள் பலவிதக் கோணங்களில் மாறுபடுகிறது. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அளவிலான மெய்ப்பாட்டு ஆராய்ச்சி இதுவே. பல்வேறுபட்ட சமூக சூழல்களில், சிக்கல்களில் மனித முகம் எவ்வாறெல்லாம் மாறுபடுகிறது என்பதிலிருந்து ஆராய்ச்சியைத் தொடங்கினோம். அதன் மூலம் கலாச்சாரக் கலப்பு மனித உணர்ச்சிகளில் எவ்வாறெல்லாம் ஊடுருவியிருக்கிறது என்று விஞ்ஞானம் கணித்ததை விட உயர்வாகவும் சிக்கலாகவும் ஆக்கியிருக்கிறது இவ்வாராய்ச்சி” என்கிறார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உணர்வியல் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து வருகிறார்.
நேச்சர் என்ற இதழில் வெளியான இவ்வாய்வின் மூலக் கட்டுரையில், ” உலக நாடுகளை 12 பாகங்களாகப் பகுத்துக் கொண்டதில், 70% மக்களுடைய ஒருமித்த சம்பவங்களின் மெய்ப்பாடு ஒத்திருந்ததைக் காண முடிகிறது. சொல்வதென்றால், சிரிப்பூட்டும் காணொளிகளைக் காணும் பார்வையாளர்கள் நகைச்சுவையை வெளிப்படுத்துவர்; வானவேடிக்கை காண்பவர்கள் மருட்கை வெளிப்படுத்துவர்; தற்காப்புக் கலைகளைக் காணுகிறபோது பெருமிதச் சுவையும், வன்முறைக் காட்சிகளைக் காணுகிற போது அச்ச மெய்ப்பாடும், விளையாட்டுக் காணொளியோ – இசைக் கச்சேரியோ காணும்போது உவகைச் சுவையும் வெளிப்படுத்தல் காண்கிறோம்” என்று முடிபொருங்கப் பதிப்பித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் ஆய்வு முடிவை இவ்வளவில் நிறுத்தி வைத்து நிரல் பட ஒரு சமன்பாட்டுக்கு வருவோம். தொல்காப்பிய பொருளதிகாரத்தின் ஆறாம் ஓத்தாக விளங்கும் மெய்ப்பாட்டியலின் முதல் சூத்திரம் இதுதான். “பண்ணைத் தோன்றிய எண் நான்கு பொருளும் கண்ணிய புறனே நால் நான்கு என்ப” விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறே மெய்ப்பாடு ஆகும் என்பது இதற்குப் பொருள். அதாவது உணர்ச்சி இரண்டு வகைப்படும். சான்றாக, சுந்தரா டிராவல்ஸ் என்ற திரைப்படத்தில் சிரிப்பு வெடிப் போட்ட காட்சி ஒன்றை மேற்கோள் காட்டலாம்.
முரளிக்கும் வடிவேலுவிற்கும் சண்டை முத்திப்போக போலீஸ் வீட்டிற்குள் நினைவிழந்து சென்று விடுவர். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பொல்லாதச் சேட்டையெல்லாம் செய்து வீட்டைத் துவம்சம் செய்துவிடுவர். அப்போதுதான் வினுச் சக்கரவர்த்தி வீடென்பதையே உணர்வார்கள். உடனே முரளி-வடிவேலு கோஸ்டியை வினுச்சக்கரவர்த்தி துரத்த, வயிறு வலிக்கும் காட்சிகள் இன்ப வற்புறுத்தலோடு கண் பார்வையில் ஏற்றப்படும்.
பெட்ரூமில் நுழைந்த வடிவேலு ஆடாமல் அசையாமல் சிலைபோல நிற்க, மூக்கிற்குள் குச்சி விட்டு ஆட்டும் முரளி வலையில் சிக்கிக்கொண்டு தும்மலைப் போட்டுத் தள்ளுவார். இங்குதான் நான் மெய்ப்பாடு வகுப்பு எடுக்க விரும்புகிறேன். தும்மல் என்பது உள்ளார்ந்த வேதியியல் வெடிப்பு. இதுவே குறிப்பு எனப்படும். ஆனால் அசட்டு சத்தம் போட்டு, உடல் குலுங்கி புற உடலில் மாற்றந் தெரிய வெளிப்பட்டு வருகையால் அதுவே மெய்ப்பாடு ஆகிறது (மெய் – உடல்; மெய் படுதல் – மெய்ப்பாடு) ஒருவாறாக இப்போ புரிகிறது அல்லவா? இன்னும் இல்லையா.
பொறுங்க! பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவிற்குப் பாம்பென்றால் பயமென்று ஒவ்வொரு மனித மரபணுவும் கற்றுவைத்துள்ளது. சிலருக்குப் பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே உள்ளுக்குள் ஒரு குரோத எண்ணம் அச்சமென்னும் போர்வைப் போர்த்தி வருமில்லையா? அது குறிப்பு. அதுவே கண்ணோடு கண்ணாக நேரடியாகப் பாம்பைப் பார்க்கும் போது உடல் நொடித்து; இதயம் வெடித்து ஓடிப்போவோமே அது மெய்ப்பாடு! இதைத்தான் தொல்காப்பியர் சொல்கிறார், “உள்ளத்தில் தோன்றும் குறிப்போடு = 32.. புறத்தே தோன்றும் மெய்ப்பாடு மட்டுமென்று கருதினால் நானாக்கு = (4*4) அதாவது 16.”
ஷ்ஷ்ஷ்ப்பா.. 3000 ஆண்டுகளுக்கு முன்னால், ஏதோவொரு இனமழிந்துபோன மரத்தடியில் வேலைக்கெட்ட இந்த மனுஷன் எழுதின இந்தச் சூத்திரம் சொல்லும் செய்தியைத் தான் உலகின் மிக முன்னணி டெக் நிறுவனமான, கூகுள் இயந்திரக் கைப் பொறுத்திய செயற்கை நுண்ணறிவின் உதவியோடு கண்டுபிடித்துவிட்டேன் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நூற்பாவின் அறிமுகச் செய்தியிலேயே இன்றளவும் அறிவியல் எட்டாதச் செய்திகள் இருப்பின், இன்னும் சில நூற்பாக்களை அள்ளி வீசினால் அறிவியல் எனும் கடலை அமிழ்தினும் இனிதான தமிழ் மூழ்கடித்து விடாதா?