பெரியாருக்கும் அண்ணாவுக்கும். தி.க.விற்கும் தி.மு.க விற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருந்தது. பெரியாரோ அவரது கழகமோ துக்க நாட்களைக் கடைப்பிடிக்கச் சொல்வார்களே தவிர, மாற்று கொண்டாட்ட நாட்களைத் திட்டவட்டமாகச் சொல்ல மாட்டார்கள். தீபாவளியைக் கொண்டாடாதே என்பார்கள். பிறகு எதைக் கொண்டாடுவது என்பதற்கு பதில் சொல்லமாட்டார்கள். ‘மனித மனம் வெறும் சோற்றுப் பிண்டம் அல்ல. அது சக மனிதர்களுடன் கூடிக் குதூகலமாய் இருக்க விரும்புகிறது. இதைப் பயன்படுத்தியே வருணாசிரமவாதிகள் திருவிழாக்களை உருவாக்கினார்கள். அவற்றின் மூலம் தங்கள் சித்தாந்தத்தை நிலைநிறுத்தினார்கள்’ என்று அருணன் குறிப்பிடுகிறார்.
வருணாசிரம விழாக்களைப் புறக்கணிப்பது மட்டுமல்லாது. அதே விழாக்களை வருணாசிரம எதிர்ப்பு விழாக்களாக மாற்றுவதன் மூலமாகவோ அல்லது மாற்று விழாக்களை முன்மொழிவதன் மூலமாகவோ முற்போக்குச் சக்திகள் செயல்படவேண்டும். இதை உணர்ந்திருந்தார் அண்ணா.
அன்றைய சென்னை மாகாணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகள் பேசுவோரைக் கொண்டிருந்தது. இதனால் அரசு செயல்பாடு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு இயல்பாகவே தாய்மொழி வளர்ச்சியில் அவரவர் நாட்டம் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ.சி., தமிழரசுக் கழகம் என்கிற துணை அமைப்பைத் துவங்கி, 1947ஆம் ஆண்டு பொங்கல் நாளை ‘தமிழர் திருநாள்’ எனத் தமிழகம் முழுக்க முதன் முதலாகக் கொண்டாடியது. அன்று சென்னையில் விழா கோலாகலமாக நடைபெற்றது. திரு.வி.க விழாவைத் துவக்கி வைக்க, தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமை தாங்கினார். பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, த. செங்கல்வராயன். டி. டி. கிருஷ்ணாமாச்சாரியார், டாக்டர் ப. சுப்பராயன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள். ம.பொ.சி. நிறைவுரை ஆற்றினார்.
இந்த விழாவைப் பொறுத்த வரையில் திராவிடர் கழகம், தமிழரசுக் கழகத்தோடு ஒத்துழைக்க முன்வரவில்லையென்றாலும் “திராவிடர் திருநாள்” என்று அதன் பல்வேறு கிளைகள் மாற்றுப் பெயர் கொடுத்து இந்த விழாவை அந்த ஆண்டில்தான் தமிழரசுக் கழகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கொண்டாடின என்கிறார் ம.பொ.சி. ஆனால் ஒரு போட்டி விழாவாக இதை நடத்தியிருக்கிறார்களே தவிர ஒரு திட்டவட்டமான மாற்று விழாவாக நடத்தினார்கள் என்று கூற முடியாது. தொடர்ந்து ஒரு மாற்றுப் பண்பாட்டு நிகழ்வாக இதை நடத்தினார்கள் என்றும் கூற முடியாது.
பேரறிஞர் அண்ணாதுரையின் பார்வையில் பொங்கல் விழா:
இங்கேதான் அண்ணா வேறுபட்டார். தி.மு.க. தொடங்கிய பின்னர் வந்த முதல் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தார் என தி.மு.க. தலைமைக் கழக வெளியீடாகிய “தி.மு.க. வரலாறு” கூறுகிறது.
“பொங்கல் விழா அறுவடை விழா. உழவர்தம் விழா. மகிழ்ச்சி விழா. இவ்விழாவினைக் கிளைக் கழகங்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று திமுக தலைமை நிலையப் பிரசாரக் குழுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் 12.01.50ல் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கொடியேற்றி, ஊர்வலம் நடத்தி, கூட்டம் கூட்டி ஏழைகளுக்கு உணவளித்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.”
இதற்குப் பிறகு ஆண்டுதோறும் பொங்கல் விழாவைத் தி.மு.க கொண்டாடியது. தீபாவளிக்கு ஒரு மாற்று மக்கள் விழாவாகவே இதை முன்னிறுத்தியது. பொங்கல் விழாவை உழவர் விழாவாகக் கொண்டாடி, திராவிடர் விழா எனச் சொல்லி, பின்னர் தமிழர் விழா என்று வந்து நின்றது. வருணாசிரமம் சார்ந்த விழாக்களிலிருந்து மக்களை விடுவிக்க மாற்று விழாக்கள் தேவை என்று திட்டவட்டமான சிந்தனையைக் கொண்டிருந்தார் அண்ணா. பொங்கல் விழா மட்டுமல்ல மே தினத்தையும் கொண்டாட ஆரம்பித்தது தி.மு.க.
மக்களுக்கு மாற்று விழாக்கள் பரிந்துரைக்கப்பட்டது அதிமுக்கியமான நடவடிக்கை. நிலத்தில் மண்டிக் கிடக்கும் காட்டுச் செடிகளை அழித்தால் மட்டும் போதாதே. புது நாற்றும் நட வேண்டும் என்பதை அண்ணா உணர்ந்திருந்தார்.
எனது முதுகலை ஆய்வேட்டில் இருந்து சிறிய பகுதி.
நன்றி : ஆறு. இராமநாதன், அருணன்