நிவேதிகா அக்கா சொல்லித்தான் ஆர்.பாலகிருஷ்ணன் சார் எழுதின ‘சிறகுக்குள் வானம்’ வாசிச்சேன். கொள்ளைநோயின் காரணமாக ஊரடங்கு அமல்செய்த ஆரம்பகாலம் அது. அந்நூல் அப்போதுதான் மின்வடிவம் பெற்று கிண்டிலில் பதிவேற்றப்பட்டது என ‘தமிழ் நெடுஞ்சாலையில்’ வரும் சிறகுக்குள் வானம் கட்டுரையில் அவரே சொன்னபோது, மீண்டும் அந்த நனவோடையில் மிதந்தது மனம்.
முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து, முதன்முதலில் தமிழிலியே தேர்வு எழுதி குடிமைப் பணியில் சேர்ந்த அவர் மாபெரும் உந்து சக்தியாக தெரிந்தார். நானும் தமிழிலக்கியம் படிப்பதாலோ என்னவோ, மனதோடு மிக நெருக்கமாக ஒட்டிக் கொண்டார். உடனே முகநூலில் தேடி நண்பர் அழைப்புக் கொடுத்தேன்.
ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் கூடுதலாக கொஞ்சம் சுயமுன்னேற்ற எழுத்து என்று என் வறட்சியான புரிதலால், மிகச் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது என விரைவிலேயே உணர்த்தினார். சிந்துவெளி ஆய்வில் இவர் கையாண்ட பெயரியல் கோட்பாடுதான் எவ்வளவு முக்கியமானது!
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இவர் செய்த பணி, அங்கு மேற்கொண்ட ஆய்வுகள், ஐராவதம் அய்யாவுடனான தொடர்பு, தமிழியம் – அரசியல் – நண்பியல் – ஆராய்ச்சியியல் என இவரின் நட்பு வட்டம்தான் எவ்வளவு பரந்தது என்று சிலாகித்து நிற்கிறேன்.
ஏதோ போகின்ற போக்கில் காமராசர் சொன்ன நான்கைந்து வார்த்தைகளை உறுதியாக்கிக் கொண்டு, ஒருமுறைதானே என்று மேம்போக்கில் முயலாமல், நன்கு படித்து முதன்முயற்சியிலேயே வென்றதெல்லாம் யூ.பி.எஸ்.சி. போர்டுக்கே தன்னம்பிக்கைத் தரும் செயல்.
தன் – அனுபவக் கட்டுரைகளை வாசிக்கும் போது, நம்மைத் தொடர்புப்படுத்தும் ஏதேனும் ஒரு நூல் அங்கு சிக்கினால் தான், மனம் இலயத்துப் படிக்க முடியும். அவ்வகையில் பல இடங்களில், பாலா சாரோடு என்னைப் பொறுத்திப் பார்க்க முடிந்தது.
நான் என்றைக்குமே இளங்கலையில் தமிழ் படிப்பேன் என்று எண்ணிப்பார்த்தது இல்லை. குடும்பச் சூழலை மனதில் வைத்து கல்லூரி படிப்பே இல்லையென்று உறுதியோடு இருந்தேன். அதனால் +2வில் எடுத்த 1040 மதிப்பெண்ணும், குறிப்பாக தமிழில் பெற்ற மாநிலத் தர மதிப்பெண்ணும் (198) பெரிதாக என்னை மகிழ்ச்சிப் படுத்தவில்லை.
எங்குமே சேராமல் போனாலும், இறுதியில் தமிழாவது படிக்கலாம் என்றுதான் உள்நுழைந்தேன். அதுவும் பேரூர் தமிழ்க் கல்லூரியில் அட்மிசன் முடிந்த 3 நாட்களுக்குப் பிறகுதான், நேரில் சென்று பதிந்தேன்.
பாலா சார் எழுதிய ‘கற்றது தமிழ்: தமிழ் எம்.ஏ’ கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பொறாமைக் கொள்ளத் தகும் ஓராயிரம் கண்ணிவெடிகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.
இதற்குச் சற்றும் சளைத்ததல்ல ‘உள்ளேன் ஐயா ’ கட்டுரை. தனக்கும் தமிழ்க்குடிமகன் ஐயாவிற்கும் உண்டான உறவைப் பற்றி எழுதுகையில், இப்படியொரு மாணவ – ஆசிரியர் உறவுக்கு அல்லவா இத்தனை நாளாக நான் ஏங்கித் தவிக்கிறேன் என்று ஏக்கக் கண்ணீர் விடுத்தேன். ஒரு தமிழ் மாணவனாக நான் இன்றும் எதிர்ப்பார்ப்பது இதைதான்.
கணத்தில் இது என்னுடைய அனுபவக் கட்டுரையா, அல்ல தமிழ் நெடுஞ்சாலை அறிமுகக் கட்டுரையா என குழம்பிப் போய் மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.
தன்னைத் தமிழாகவும் தன் வாழ்வை நெடுஞ்சாலையாகவும் உருவகப் படுத்திக் கொண்டு, பாலா சார் எழுதியிருக்கும் இந்த 40 கட்டுரைகளும் வேறெந்த பயணத்திலும் கிடைக்காத அனுபவப் பொக்கிஷங்கள்.
இது வெறுமனே தமிழருக்காக தமிழர் எழுதிய ஆற்றுப்படை நூல் என்றோ, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய சுயவர்ணனை குறிப்பு என்றோ கடுகளவும் எண்ணிவிட முடியாது. இதற்கு முன் ப. ஶி. ராகவன் எழுதிய ‘நேரு முதல் நேற்று வரை’ என்ற நூல் வாசித்திருக்கிறேன். ஒருவாறாக அந்நூல் பணி அனுபவம் என்ற கட்டுக்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் பலமடங்கு விரிந்திருக்கும் இந்தத் ‘தமிழ் நெடுஞ்சாலையை’ எந்த வேலிக்குள் விலங்கு மாட்டி பொத்தி வைக்க?
மிச்சமிருக்கும் ஓராண்டு கால முதுகலைப் பட்டத்தை முடித்ததும் முனைவர் பட்ட ஆய்விற்காக மத்திய பல்கலைக்கழகம் செல்லலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகம் சேர்வதற்கு முன்பே யோசித்து வைத்திருந்தேன்.
அப்போதிலிருந்தே, கண்ணில் படும் ஒவ்வொன்றையும் ஆய்வுத் தலைப்பாக பார்த்தேன். பொ. வேல்சாமி அய்யா எழுதிய ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’ நூல் படித்துவிட்டு பேசாம இதை ஆய்வு செய்யலாமா, அதை ஆய்வு செய்யலாமா என்று விடுதி அறையில் உள்ள நண்பர்களிடம் புலம்பித் தவித்த இரவுகளும் உண்டு.
மற்றொரு நாள் ஆ.சி அய்யா படித்தால், வேறு சில தலைப்புகள் தோன்றும். சலபதி படித்தால் பித்துப் பிடிக்கும். அதன் தொடர்ச்சியாய் சமூகப் புழங்குதளத்தில் மானுடவியல் சார் ஆய்வாக, தொல்காப்பியத்தையும் – பழங்குடி மக்களையும் முடிச்சுப் போடும் ஒரு கருதுகோளை ‘தமிளி என்கிற மைல்கல்’ கட்டுரை முன்வைத்தது. மிக வியப்பாக இருந்தது.
இந்த மனிதர் கூட, தான் முதுகலை முடித்த காலந்தொட்டு, எல்லாவற்றையும் ஆய்வுக் கருதுகோளாகப் பார்த்திருக்கிறாரே என்று வியந்துபோகையில் ‘மதிப்புறு முனைவர்’ கட்டுரையில் இதற்கான பதிலைத் தருகிறார்.
இளங்கலையிலும் முதுகலையிலும் முதல் மதிப்பெண் பெற்ற இவரை, எம்.பில் பட்ட ஆய்விற்குப் பதிய பேராசிரியர் முத்து சண்முகம் அழைத்திருந்தார். ஆனால் முன்பொரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி, “முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்ய மாட்டேன்” என விடாப்பிடியாக தானெடுத்த கொள்கையில் நின்றார்.
மேலும், “நான் தமிழை விட்டு விலக மாட்டேன். வேறு வேலைக்காகப் போனாலும், வேறு தொழில் எதுவும் தொடங்கினாலும் உறுதியாக ஆய்வுகள் செய்வேன். அது துறை சாராத என் சுயேச்சையான ஆய்வாக இருக்கும்” என்று அவர் சொல்லியதன் சாரம் புரிந்தது.
இவர் செய்த ஆய்வுகள் பல்துறை சார்ந்தவை. ஒரு சட்டகத்துள் அடைத்து வைக்க முடியாதவை என 2003-ல் ரொமிலா தாப்பரும் சொல்லியிருக்கிறார்.
‘அணிநடை எருமை’ கட்டுரையும் ‘ஹரப்பா முதல் ஆடுகளம் வரை’ கட்டுரையும் இனி எவரேனும் எழுத முடியுமா என வியக்கிறேன். சங்க இலக்கிய நூலில் புறநானூறே அதிக வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது என எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கையில், ‘பகடைகள் உருள்கின்றன’ கட்டுரையில் அகநானூறு வைத்தே ஒட்டகத்தை ஒண்டி ஆளாக சிந்துவெளி நாகரிகத்திற்கு இழுத்து, அதை தமிழோடு கட்டிப் போடுகிறார். சிலிர்க்கிறேன் பாலா சார். இனி வர்ணனைகளையும் வரலாறாகப் பார்க்க வேண்டும்.
‘பெயரில் என்ன இல்லை’ என்ற கட்டுரை வழியாக, பெயரியல் ஆய்வில் பாலா சார் நுழைந்த பாதையை அவதானிக்கிறேன். ஒரு தமிழ் மாணவன் ‘தமிழ் மாணவன்’ என்ற எல்லைக்குள்ளேயே உறங்கக் கூடாதென்பதற்கு இனி சான்றுகாட்ட ஒரு ஆள் உண்டு.
‘தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்’ என்ற கட்டுரை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தை அறிமுகம் செய்கிற விதம் அலாதியானது. அறிவியல் துறை மாணவர்களைப் போல் இன்டெர்ன்ஷிப் என்ற பதம் தமிழ் மாணவர்களுக்கு உரித்தானது அல்ல. அவர்களை ஏன் இத்தகைய நூலகங்களுக்கோ – ஆராய்ச்சியாளர்களுக்கோ இன்டெர்ன்’களாக அனுப்பி வைக்கக் கூடாது?
தமிழ் நெடுஞ்சாலை தொடரை விகடனுக்காக அவர் எழுதியபோது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பாக ‘சங்கச் சுரங்கம்’ தொடர் பொழிவிலும் அவர் பேசியிருந்ததால், சங்கத் தமிழ் வாசனை இயல்புக்கு மீறி வீசுகிறது.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன நிவேதிகா அக்காவின் புகைப்படத்தை, இந்நூலின் 38வது கட்டுரையில் பார்த்த அந்தக் கணம், உடனே அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “தம்பி. உன்னைப் பார்க்கும் போது பூ.கொ. சரவணன் அண்ணா ஞாபகம் வருது” என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிய அவர், என்மீது குறைந்த காலத்திலேயே நிறைந்த அன்பு கொண்டிருந்தார். விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில், நான் சேகரித்த முத்துக்களில் ஒன்று இவர்.
என் முதல் புத்தகத்தை எழுதும்போதுங் கூட தன்னம்பிக்கைக்காக சில பத்திகளை பாலா சாரின் நூலிலிருந்து எடுத்தாண்டிருந்தேன். நூல் வெளியானதும் அவருக்கு முகநூலில் அதைத் தெரியப்படுத்திவிட்டு, அவர் ரிப்ளை செய்ததையே, நாள் முழுக்க நினைத்துப் பெருமை கொண்டேன்.
எந்தவொரு நூலின் அறிமுகத்திலும் இத்தனை சுயச் செய்திகளை நான் நிரப்பியதில்லை. ஆனால் தமிழ் நெடுஞ்சாலை என்னோடு பேசியது. என் நண்பர்களோடு ஆலோசிக்க முடியாமல் போன – அவர்கள் அயற்சி கொண்ட பக்கங்களை எல்லாம் என்னோடு பகிர்ந்தது. பாலா சாரின் தொடர் உத்வேகமும் – அவரைச் சுற்றியுள்ள நல விரும்பிகளும் பொறாமை கொள்ள வைத்ததோடு – புன்னகைப் பூக்க வைக்கின்றனர். எழுத்தாளர் ராம் தங்கம் அண்ணாவின் பாஷையில் சொல்வதென்றால், ‘வாழ்ந்தா..’ வகையறாத்தான் பாலா சாரும்.
ட்ராட்ஸ்கி மருது சாரின் ஓவியங்கள் மிகப் பிரமாதமாய் வந்துள்ளன. இந்நூல் என்றென்றைக்கும் ஆற்றுப்படையாக எனக்கு வழிகாட்டும்.