The beauty of the world lies in the diversity of its people.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ‘பிரதமர்’ பதவியேற்ற பின் இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் கும்பலாகச் சேர்ந்து இஸ்லாமியர்களைத் தாக்கி, “ஜெய் ஶி ராம்” கோஷம் எழுப்பச் சொல்லும் கொடூரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மதவாத அரசியலை முன்னெடுத்து அரசு செயல்படுத்துவதாக சிறுபாண்மை மதத்தவர்கள் ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பழம்பெரும் சிறப்பு வாய்ந்த திருக்கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னன் ஒருவனின் நினைவாக அனுதினமும் மாலை 5 மணிக்குச் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அதுவும் ஏறத்தாழ 230 வருடங்கள் அந்த சிறப்பு வைபவம் தடைபடாமல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.
‘சீலத்தவர் போற்றும் மேலைச் சிதம்பரமாம் மிக்கப் புகழ் பேரூர்’ என்பது பிறவாநெறித் தளமான பேரூரைப் பறைசாற்றும் புகழ்மொழி. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் முற்காலச் சோழர்களில் ஒருவனான கரிகாலனால் கட்டப்பட்டதே பேரூர் பட்டீசுவரர் ஆலயம். சைவ சமயக் குரவர்கள் நால்வருள் தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடப்பெற்ற திருத்தளமாக இக்கோயில் விளங்குகிறது. இந்தத் திருக்கோவிலின் வரலாற்றை கட்சியப்ப முனிவர், தம் ‘பேரூர் புராணம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இத்தகு மேன்மை வாய்ந்த கோயிலில் தான் முஸ்லீம் மன்னனின் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
“மைசூர் புலி” என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தான், 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பகுதியை ஆண்டுவந்தான். போரில் முதன் முதலாக ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியவனும் இந்த மன்னன் தான். இதைப் பிற்காலத்தில் ஆய்வு நடத்தி, திருத்தியமைத்து பிரிட்டன் பயன்படுத்தியது என்றாலும் ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான் என்பதே திண்ணம்.
இலண்டன் அருகே உள்ள ரோடண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்து மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமே வியந்துள்ளார். கோவையில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் ஏறத்தாழ 13 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது. அந்நாளில் அந்தக் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக விளங்கியவர் திப்பு சுல்தானின் நெருங்கிய நண்பர் ஆவார். திப்பு தன் திக்குவிஜயத்தை கோழிக்கோட்டின் மீது 1790 ஆம் ஆண்டு செலுத்த எண்ணினான்.
அந்தச் சமயத்தில் திப்புவின் மகன் ஹைதர் அலி (ஷகெஷா ஹைதர் அலி, திப்புவின் தந்தை ஹைதர் அலி என்று குழம்பிவிட வேண்டாம்) இன்றைய ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு கோரியில் படித்து வந்ததால், கோழிக்கோட்டிற்கு படையெடுத்து செல்லும் முன் தன் மகனைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அறங்காவலரிடம் வேண்டுதல் வைக்கிறார். அப்போது அந்த அறங்காவலர் குறுக்கிட்டு, “நீங்கள் போரிடும் முன்னதாக இங்கிருந்து 3 மைல் தூரத்தில் உள்ள பேரூரில் பட்டீசுவரர் ஆலயம் ஒன்றுள்ளது, அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்லுங்கள். மிகவும் சக்திவாய்ந்த கடவுள் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்”, என்று கூறுகிறார்.
திப்பு தன் சிறுவயதிலேயே ஆன்மிக கல்வி நாடியதால், எம்மதமும் சம்மதமே என்ற மனோபாவம் கொண்டவராகவே வாழ்ந்து வந்தார். இருந்தும் நான் ஒரு முஸ்லீம் மன்னன், என்னை எப்படி அனுமதிப்பார்கள் என்று திப்பு பின்வாங்க, தான் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை புரிவதாகவும், தங்கள் வருகை மட்டுமே போதும் என்றும் அறங்காவலர் நம்பிக்கை அளிக்கிறார்.
சரியென்று மாலை ஐந்து மணிக்கு தரிசனம் செய்ய திட்டத்தை ஊர்ஜிதப் படுத்தினர். கோயிலுக்கு வெளியே உள்ள கொடிமரத்திலிருந்து கருவறை வரைக்கும் தீவட்டி வெளிச்சத்திலேயே வெளியிலிருந்து சிவனை தரிசத்து போருக்கு சென்றான், திப்பு சுல்தான். போரில் மாபெரும் வெற்றிப் பெற்றதால் பாலக்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டி, அந்த வெற்றிக் களிப்போடு அந்த ஊரை கோவை மக்களுக்கு நிவந்தமாக அளித்தான். அவ்வாறு நிவந்தம் பெற்ற 84 சிப்பந்திகளில் இப்போது 37 சிப்பந்திகள் தான் கோயில் ஊழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திப்பு சுல்தான் மாலை ஐந்து மணிக்கு வந்து பூஜை செய்ததை நினைவிற் கொண்டு அன்றிலிருந்து இன்று வரை ‘சாயரட்சை’ என்று அழைக்கப்படும் சாயங்கால பூஜை அதே நேரத்தில் நடைபெற்று வருகிறது. கோயில் கொடிமரத்தை சுற்றியுள்ள பிரகாரத்தை மூன்று முறை தீவட்டியுடன் சுற்றி, மீண்டும் கருவறை சென்று சிவபெருமானுக்கு பூக்களால் அர்ச்சனை செய்துவிட்டு, கோயில் வாயிலில் மூன்று முறை கீழ்நோக்கியவாறு அந்தத் தீவட்டியை காண்பிப்பர். அதற்கென நியமிக்கப்பட்ட ஊழியர்கள் ‘தீவட்டி சலாம்’ எனப்படும் அந்த பூஜையை பரம்பரைப் பரம்பரையாக செய்து வருகின்றனர். அரபு மொழியில் சலாம் என்றால் வணக்கம் என்று பொருள். இறைவனை திப்பு சுல்தான் வணங்கியதன் பொருட்டு இப்பெயர் வழங்கிவரல் ஆயிற்று.
எத்தனையோ கோயில்கள் முஸ்லீம் மன்னர்களால் சூறையாடப்பட்டாலும், இந்து – முஸ்லீம் என்றாலே எதிர்-எதிர் துருவம் என்று பார்க்கப்பட்டாலும், இந்த நிகழ்வில் எந்த தடுமாற்றமும் இல்லை என்று கூறுகிறார் மேற்குறிப்பிட்ட 38 ஊழியங்களுள் நாதஸ்வரம் வாசிக்கும் குடும்பத்தைச் சார்ந்த முதியவர் வேறெங்கும் வழக்கில் இல்லாத இத்தகுச் சிறப்பு மிக்க நிகழ்வு, இந்து முஸ்லீம் சண்டையைத் தூண்டி விட்டு அதனால் ஆதாயம் அடையும் அரசியல் கட்சிகளையெல்லாம் “தீவட்டி” ஏந்தி எரிக்க சொல்வது போல் அமைகிறது. வாழ்க மனிதம், வாழ்க இறைவம்.