ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச அங்கீகாரத்திற்குப் பிறகு, அதன் நிஜ நாயகன் சந்துருவின் மேல் பெரிய அபிப்ராயம் ஏற்பட்டது. என் பள்ளி பருவத்தில் பெரிய படிப்பு வட்ட நண்பர்கள் இல்லாததாலும், அரசியல் படிக்கும் குடும்பப் பிண்ணனி இல்லாததாலும் சந்துரு போன்ற சமூகத்தின் நிஜ நாயகர்களை அவர்தம் வாழ்நாளிலேயே அடையாளம் காண்பது எனக்கு பெரும் சிரமமே.
ஒருவேளை ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் சந்துரு அறிமுகம் ஆகாமலே போயிருந்தால், பாரதியாரை அவர்கால சமூகம் புறக்கணித்தது போல்; மு. அருணாசலத்தை இதுவரை அறிந்திடாத தமிழ்ச்சமூகம் போல் இன்னும் சரியாக நூற்றாண்டு கழித்து கொண்டாடப்படும் செல்வராகவன் திரைப்படம் போல் பல ஆண்டுகள் கழித்தே இவரை அடையாளம் கண்டிருப்பேன். இப்படியொரு மகத்தான மனிதரை அறிமுகம் செய்ததற்கு தா. செ. ஞானவேலுக்கு மிகப்பெரிய நன்றி நவில வேண்டும்! ஆனால் அத்துடன் ஒரு பெரிய குறையை செல்லமாகப் பதிவு செய்ய வேண்டும்!
“சந்துருவின் வாழ்வியல் நடப்பை பதிவு செய்ய அவர்தன் சுயசரிதைப் புத்தகத்தைத் தவிர வேறெந்த மூலமும் மனநிறைவு அளிக்காது”
வியர்த்தொழுகும் முகத்தோடு இளநிலைப் பட்டப் படிப்பு முடித்த கையுடன் கலைஞருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்ட எதிர்ப்புக் கூட்டத்திலிருந்து இளம் சந்துரு கிளம்புகிறார். இளநிலை முடித்தபின் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார்.
புத்தகத்தின் முதலிரு அத்தியாயங்கள் திமுக’வின் தொடக்கக் கால தவறுகளைச் சுட்டிக்காட்டியபடி சுறுசுறுப்பாக நகர்கிறது. இந்தப் போராட்டதின் விளைவாக நீதிமன்றத்திற்கும் – காவல் நிலையத்திற்குமாக அலைந்து திரிந்தபோது தன் சட்ட அறிவை மெல்ல மெல்ல விசாலமாக்குகிறார். பின்னர் கிடைத்த சில அறிமுகங்களாலும் அண்ணனின் அறிவுரையாலும் சட்டக் கல்லூரி பிரவேசம் அரங்கேறுகிறது.
இதற்குப் பின் சந்துருவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் மிக மிக அரிதாகவே பதிவு செய்யப்படுகின்றன. சட்டம் படித்தபோதும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உடனான தொடர்பு துண்டிக்கப்படாததால் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் சில நேரம் காவலர்களின் வேட்டைக்கு இரையாகத் தேடப்படுகிறார். இரண்டு மாதங்கள் அஞ்ஞான வாசம் சென்றாலும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் சுட்டிப்பிள்ளை சந்துரு!
கடந்த காலத்தில் எழுப்பட்ட ஸ்டாலின் மிசா கைதியா என்ற கேள்வியை தாமே முன்னிறுத்தி, ஆம் என்பதாக பல சான்றியங்களை முன்வைக்கிறார். மிஸா கைதிகளை நேர்காணல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்றபின், மூத்த தலைவர் ஹரிபட்டைச் சந்திக்க கேக் வாங்கிச் செல்கிறார். அதற்கு ஜெயிலர் மறுக்கவே, “வேண்டுமானால் உங்களுக்கும் கேக் ஒன்று வாங்கி வருகிறேன். இப்படி அல்பத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்” என ஜெயிலரிடம் சொல்வதாக அங்கங்கு சிரிக்க வைக்கிறார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வரும் முதல் காட்சியில், வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு சூர்யா பேரிகேட்டை தாண்டுவது போல் ஒரு ஷாட் இருக்கும். செயல்முறை நாடக பாணியாக இருந்தாலும் அவர் இவ்வாறு செய்தவர்தான் என்று இயக்குநரும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
இவர்தன் ஜூனியர் வழக்குறைஞர் எடுத்து வாதாடிய கஜுரேலின் மனித உரிமை வழக்கின் முக்கியகரமான விசாரணை அன்று நிகழவிருந்தது. தன் ஜூனியர் போராட்டதில் கொடிபிடிக்க சந்துரு அவ்வழக்கில் ஆஜராகிறார். இதனால் கஜுரேலின் நாடு கடத்தல் திட்டமும் – அவரின் என்கவுண்டர் திட்டமும் முறியடிக்கப்பட்டது.
அதே திரைப்படத்தில் நீதிமன்ற வளாகத்தில் குட்டிக் குழந்தைகள் ஓடி விளையாடுவதை மிக நுணுக்கமாக இயக்குநர் பதிவு செய்திருப்பார். இது தொடர்பான செய்திகள், ‘பேற்று இல்லை எனினும் இருக்குது இன்பம்’ எனும் பகுதியில் வெளியாகி உள்ளன. குழந்தைத் தத்தெடுப்பு தொடர்பான வழக்குகளில் இவரின் தீர்ப்பே முன்னோடியாக இருக்கின்றன. இவை சந்துருவை ஒரு நீதிமானாக மட்டுமல்லாமல், பெரும் உயிரிரக்கவாதியாக உருவகப்படுத்துவது உசிதம்.
புத்தகத்தில் அவர் எழுதிய ஒரு சிறு பகுதி,
“அச்சமயத்தில் நீதிமன்றக் கதவுகள் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்கு வந்த பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களோடு வந்த குழந்தைகள் நீதிமன்ற அறையிலேயே ஓடி விளையாடின. சாட்சிகள் நாற்காலியில் அமர்ந்து கொண்டே சாட்சியம் அளிக்கலாம். வழக்குரைஞர்களுப் வழக்குக்கு உட்பட்ட கேள்விகளைத் தவிர, இதற கேள்விகள் கேட்பதைத் தடுத்து நிறுத்தினேன். சில வழக்குகளில் கணவன் மனைவிக்கு இடையே குழந்தையை யார் வைத்துக்கொள்வது என்பதில் போட்டி இருக்குமானால், குழந்தைகளின் விருப்பத்தையும் தெரித்து கொள்வதற்கு ஏதுவாக அன்று மதியமே என்னுடைய தனி அறைக்கு குழந்தைகளை வரவழைத்து விசாரித்து அக்குழந்தைகளின் விருப்பத்தையும் பதிவு செய்து கொள்வேன்.
புத்தகத்தின் பெரும்பாண்மை பகுதி இவரின் சொந்த வாழ்வியல் குறிப்பினால் நகராமல், அவர் வாதாடிய – கேட்டறிந்த – தீர்ப்பளித்த வழக்குகளால் நகர்கிறது. வழக்கின் வகைமை அறிந்து தனித் தனி அத்தியாயங்களாய் பிரித்திருக்கிறார். சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் – சமகால அரசியல் – வரலாறு படிப்பவர்களுக்கும் இப்புத்தகம் பெரிய விருந்து என்பதில் துளி ஐயமில்லை.
இந்தப் புத்தகத்தின் பெரிய பாசிடிவ்-ஆன விஷயமே, தான் சார்ந்த துறை என்று எந்தவொரு இடத்திலும் சந்துரு நீதித்துறையை ஏற்றிக்கூற வில்லை. அதன் கையாளாகாத தனத்தையும் – இயலாமையையும் – வஞ்சனையையும் அத்தனை இடங்களில் விரிவாகப் பேசி இருக்கிறார்.
ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை அடிப்படை உரிமையாக இருக்கும்போது, பொதுக்கூட்டத்திற்கு ஏன் காவல் துறை அனுமதி பெற வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை என அவர் முன்னிறுத்தும் கேள்வி நம்மை ஆழ யோசிக்க வைக்கிறது.
இவரை நீதிபதியாக பரிந்துரைப்பதற்கு முன் ஒரு முறை தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி வீட்டிற்கு அழைத்ததும், அங்கு இவரின் சாதிப் பெயரைக் கேட்டதும் மிக வெளிப்படையாக இடம்பெற்றுள்ளன. “28 வருடங்களாக வக்கீலாக இருக்கிறேன். அதில் 7 வருடங்கள் சீனியர் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளேன். நூற்றுக்கணக்கான வழக்குகளை இம்மன்றத்தில் நடத்தியிருக்கிறேன்.
அவற்றில் பலதும் சட்ட சஞ்சிகையில் வெளிவந்துள்ளன. என்னுடைய ஆண்டு வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. என்னுடைய தகுதி, திறமை அடிப்படையில் என் பெயர் பரிந்துரைக்கப்பட்டால் சந்தோஷப்படுவேன். இப்பதவி பெறுவதற்கு சாதிதான் முக்கியக் காரணம் என்றால் எனக்கு அப்பதவி தேவை இல்லை” எனும் கணத்தில் சந்துரு உயர்ந்துவிடுகிறார்.
பல இடங்கள் நம்மை சிந்திக்கவும் – நம் சிந்தனைப் போக்கை மாற்றி அமைக்கவும் வழிவகை செய்கின்றன. மார்க்ஸிஸ்ட் கட்சி இவரை தூக்கி எறிந்த காரணமும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
நீதிபதி ஆனதும் ‘உளமாற’ என்று உறுதியெடுத்துக் கொண்டுதாகட்டும்; எனக்கு செங்கோல் ஏந்திய ஊழியர்கள் தேவை இல்லை என்று நடைமுறைப் படுத்தியதாகட்டும்; ‘மை லார்ட்’ என்பதற்கு பதிலாக ‘சார்’ என்று விளிக்கச் சொல்வதாகட்டும்; தன் நீதிமன்றக் கதவில் ‘இங்கு தெய்வங்கள் ஏதும் இல்லை. பூக்கள் வேண்டாம். இங்கு யாருக்கும் பசி இல்லை. இனிப்பு வேண்டாம். இங்கு யாருக்கும் குளிரவில்லை. சால்வை வேண்டாம்.’ என்று ஒட்டியதாகட்டும்; எனக்கு 5 காவலர்களை பாதுகாப்புக்கு நியமித்திருக்கிறீர்கள். இதேபோல் 60 நீதிபதிகளுக்கு மொத்தமாய் 300 காவலர்கள். இவர்களைப் பயன்படுத்தி தென் சென்னையின் பாதுகாப்பை ஏன் உறுதி செய்யக்கூடாது என்று கறாராய் மறுத்ததாகட்டும்;
புத்தாண்டு பரிசு என கையூட்டை ஏந்தி வந்து, உயர்நீதி மன்ற நீதிபதி வீட்டை படையெடுக்கும் மாவட்ட நீதிபதி – வழக்குரைஞர்களை டோஸ் விடும் விதமாய், ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று யாருக்கும் அனுமதி இல்லை’ என மறுத்ததாகட்டும்; மனித உரிமை வழக்குகளை வைகோ போன்ற பெரிய மனிதர்களிடத்தும் – ராஜாக்கண்ணு போன்ற எளிய மனிதர்களிடத்தும் பணமில்லாமல் வாதாடியதாக்கட்டும்; ஒரு மாதத்தில் 1200-க்கு மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு, நாளொன்றுக்கு சராசரியாய் 40 தீர்ப்புகள் என ஆறே முக்கால் வருஷத்தில் 96000 தீர்ப்புகளை ஓய்வு அசதி பார்க்காமல், பொது – சிறப்பு விடுமுறை பார்க்காமல், அலுவலக நேரம் பார்க்காமல் ஓடி ஓடி உழைத்து நீதித்துறைக்குப் பெருமை சேர்த்த சந்துருவிற்கு இணை சந்துருவே!
இத்தகைய மகத்தான செய்திகளை உள்ளடக்கியதாய் அருஞ்சொல்லின் முதல் வெளியீடு மிகப் பிரம்மாண்டமாய் வெளிவந்துள்ளது, நனிச் சிறப்பு. அருஞ்சொல்லின் ரெகுலர் வாசகர் என்பதில் நானுமிதில் பெருமை கொள்கிறேன். எனினும் அங்குங்கு உள்ள அச்சுப் பிழைகளை அடுத்தப் பதிப்பில் சரிசெய்ய வேண்டும். சமஸ்’கு நன்றியும் வாழ்த்துக்களும்.
சந்துருவின் தனிப்பட்ட வாழ்க்கைச் செய்திகள் மிக அருகியிருப்பது வருத்தமளிக்கிறது. அவரின் நேர மேலாண்மை, அவரின் சிந்தனைத் தொட்டி ஊற்று, அவரின் செயலுக்கு – குடும்பத்தினர் ஆற்றிய பதில் – எதிர் வினைகள் என்னவென்று அறிய எளியனுக்கே உண்டான அல்ப ஆசை எட்டிப்பார்க்கிறது.
ஓய்வுப் பெற்ற தினத்தில் அரசு தனக்களித்த காரை நீதிமன்றத்திலேயே ஒப்படைத்துவிட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயலில் புறப்பட்டு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன் வீட்டுற்குச் செல்கையில் அவரைக் காண அங்குக் கூடியிருந்த பெருந்திரள் கூட்டத்திற்குள் முண்டியடித்து, 6 ஐ.ஏ.எஸ் ஆபீசர்களை தள்ளிவிட்டோடி ஒரு பூங்கொத்தை கையில் கொடுத்து – சிரிப்பை உதட்டில் உதித்து – எல்லாவற்றிற்கும் நன்றி சந்துரு என்று சொல்வதாய் ஒரு கனவு கண்டுமுடித்த கையோடு இப்புத்தகம் என்னைப் பிரிகிறது.
நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதால், கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் எவரும் எந்நேரமும் வந்து இப்புத்தகத்தை இரவல் பெற்றுக்கொள்ளலாம். முழுமையாகப் படித்த ஒருவர் எவரும், தன்னிடம் ஒரு பிரதி வைத்துக்கொள்ளவே ஆசைப்படுவதால் அருஞ்சொல்லின் வியாபாரம் பாதிப்படையாது!