காலத்தின் குரல் நூல் குறித்து Manthiramoorthi Alagu அவர்கள், வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம்.Vaasipom.. குழுவில் எழுதிய அனுபவப் பதிவு
காலத்தின் குரல் – எழுத்தாளர் இஸ்க்ரா (தமிழில்)கிழக்கு பதிப்பகம்முதல் பதிப்பு டிசம்பர் 2022பக்கங்கள் 208 விலை ரூ 240
வரலாற்றில் 22 ஆளுமைகள் ஆற்றிய முக்கியமான உரைகளைக் குறித்த நூல் இது. நூலைக் குறித்த அறிமுகத்தில் கீழ்கண்ட செய்தி இருக்கிறது.
//உலக வரலாற்றை உருமாற்றிய உன்னதமான சொற்பொழிவுகள்
அம்பேத்கர், காந்தி, நேரு, மார்டின் லூதர்கிங், ஐன்ஸ்டைன், காஸ்ட்ரோ, கென்னடி, சர்ச்சில் என்று வரலாற்றின் போக்கை மாற்றி அமைத்த மகத்தான தலைவர்களின் மிகச்சிறந்த உரைகள் அடங்கிய தொகுப்பு இது. ஒவ்வொரு உரையும் நமக்குள் கரையும். நம் இதயத்தில் தங்கும். புதிய கோணங்களில் சிந்திக்கவும், புதிய உத்வேகத்தோடு போராடவும் நம்மை உந்தித் தள்ளும். சாதி, நிறம், பாலினம், வர்க்கம் என்று பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஆற்றல் இதில் உள்ள ஒவ்வொரு குரலுக்கும் உண்டு. இது காலத்தின் குரல் மட்டுமல்ல. காலத்தைக் கடந்து உயிர்ப்போடு திரண்டு நிற்கும் மனிதத்தின் குரலும் கூட. //
உண்மை.
மேலே உள்ள ஆளுமைகளைத் தவிர ஆபிரகாம் லிங்கன், சூசன் பி அந்தோணி, முதலாம் எலிசபெத், சுபாஷ் சந்திர போஸ், மால்கம் எக்ஸ், ஸ்டாலின், கர்சன் பிரபு, நெல்சன் மண்டேலா, சரோஜினிநாயுடு, லெனின், எம்மலின் பான்கர்ஸ்ட், சேகுவாரா, வர்ஜீனியா உல்ஃப் ஆகியோரின் முக்கிய உரைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
பல்வேறு ஆளுமைகளின் முக்கியமான உரைகளை தமிழில் இஸ்க்ரா அருமையான முறையில் மொழிபெயர்த்திருக்கிறார். நூலில் சில ஆளுமைகளைக் குறித்து மட்டுமே அவர்களைக் குறித்த கட்டுரைகளில் அறிமுகக் குறிப்புகள் காணப்படுகின்றன. மற்றவர்களைக் குறித்தும் ஒரு சிறிய குறிப்பைச் சேர்த்து இருக்கலாம்.
ஓர் உரையானது எப்படி அவையில் வைக்கப்பட வேண்டும்? கூட்டத்தை அறிந்து பேசுவது எப்படி? மக்களின் மனதிலே பதிய வைக்கும் படியாக கருத்துக்களை எப்படி வெளிப்படுத்துவது? தலைவர்களின் ஆத்மார்த்தமான உள் கிடக்கைகள் அவர்களது உரைகளில் எவ்வளவு அழகாக வெளிப்படுகின்றன ? போன்ற பலவற்றையும் இந்தச் சிறப்பான உரைகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
நூலில் உள்ள ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளில் சிலரது உரைகளில் உள்ள சில வரிகளை மட்டும் ஆங்காங்கே தொட்டுப் பார்க்கலாம்.
****************
1. மார்ட்டின் லூதர் கிங்:( 1929- 1968)
இத்தனை மனக்குமுறலுக்கு மத்தியிலும் இடர்பாடுகளுக்கு இடையிலும் எனக்கு ஒரு கனவு இருக்கிறது தோழர்களே!
ஒரு நாள் இந்த தேசம் எழுச்சி பெறும். அப்போது இந்த மதத்தின் அடிப்படைக் கொள்கையால், மனிதர்கள் எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டனர் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் பெயர் போன மிசிசிபி மாகாணத்தில் கூட சுதந்திரகீதம் பாடுவதாக எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
என் நான்கு சிறு குழந்தைகளும் நிறத்தின் பால் அல்லாமல் அவர்தம் குணத்தின் பால் மதிப்பிடும் மிகக் கண்ணியமான தேசத்தில் ஒரு நாள் வாழ்வார்கள் என்று ஒரு கனவு இருக்கிறது எனக்கு!
ஜார்ஜியாவின் செங்குன்றத்தில் முன்னாள் அடிமைகளின் புதல்வர்களும், முன்னாள் முதலாளிகளின் புதல்வர்களும் ஒற்றுமையாகக் கைகுலுக்கிச் சகோதரத்துவத்தின் பால் சரிசமமாக உட்கார்ந்து இருப்பார்கள் என எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஆம். கனவு இருக்கிறது எனக்கு.
***************
2. ஃபிடல் காஸ்ட்ரோ ( 1926 – 2016)
நாங்கள் கியூபர்கள். கியூபனாக இருப்பது எங்கள் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது பெரும் தேசத் துரோகம். எங்கள் தேசத்தின் வரலாற்றில் நாங்கள் பெருமை கொள்கிறோம். விடுதலை, நீதி, மனித உரிமை போன்ற பதங்களைப் பள்ளிக்கூடத்தில் இருந்தே நாங்கள் பயின்று வந்திருக்கிறோம். எங்கள் வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் மரியாதை செலுத்த உரிமை பெற்றிருக்கிறோம்.
என் தரப்பு வாதத்தை நான் இத்தோடு முடித்துக் கொள்கிறேன். என்னை விடுதலை செய்யுங்கள் என்று வழக்கறிஞரைப் போல நான் கெஞ்ச மாட்டேன். என் மேல் குற்றம் சுமத்துங்கள். பரவாயில்லை. வரலாறு என்னை விடுதலை செய்யும்!
******************
3. மால்கம் எக்ஸ் (1925 – 1965)
இவரது இயற்பெயர் மால்கம் லிட்டில். மால்கம் என்பது அவருடைய எஜமானனின் பெயர். அவரது அடிமை என்பதைக் குறிக்கவே மால்கம் லிட்டில் என்று தான் அழைக்கப்படுவதாக உணர்ந்ததும் மால்கம் எக்ஸ் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
வேரை வெறுத்துவிட்டு மரத்தைப் பிடிக்கிறது என்று ஒருவரால் சொல்ல முடியுமா? அதுபோல உங்கள் பூர்வீகத்தை மறந்து விட்டு உங்களை நேசிப்பது என்பது நடக்காத காரியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் சொல்கிறேன். ஆப்பிரிக்காவை வெறுத்த பின்னர் ஒருவரால் தன் சுயத்தில் பற்றுக் கொண்டு வாழ முடியாது.
நமது நிறமே நமக்குச் சங்கிலி ஆனது. நம்மை முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து நின்றது. அங்குமிங்கும் நகர முடியாமல் தடைப்படுத்தி வைக்கும் சிறைச்சாலையாய் மாறியது. இத்தனை தடைகளும் நிறத்தால் விளைந்தது எனத் திடமாய் நம்பினோம்.
எந்த விதத்திலும் நான் இனவெறியோடு செயல்படவில்லை. பிரிவினையின் எந்த ரூபத்தையும் நான் வரவேற்கவில்லை. எல்லோரிடமும் சகோதரத்துவத்துடன் வாழ ஆசைப்படுகிறேன்.
**********************
4. மகாத்மா காந்தி ( 1869- 1948)
1942- இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்திய பொழுது ஆற்றிய உரை
உலக வரலாற்றிலேயே சுதந்திரத்திற்காக அரங்கேறிய நேர்த்தியான ஜனநாயகப் போராட்டம் நம்முடையதுதான். அகிம்சை வழியில் நாம் அடையப்போகும் இந்த ஜனநாயகம் சரிசமமான விடுதலையை நமது எல்லோருக்கும் வழங்கும். என் வாழ்வில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் போது, நான் யார் மீதும் வெறுப்புக் கொள்ளாதவனாய் இருப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
முகத்தோற்றத்தைக் கண்டு எளிதில் ஏமாறக்கூடிய மனிதன் என்று என்னைச் சிலர் சொல்கிறார்கள். நான் அந்த அளவுக்கு ஏமாளி அல்ல. இருந்தாலும் இந்த விமர்சனங்களால் நான் காயப்படுவதில்லை. ஏமாற்றுக்காரன் என்பதை விட ஏமாளியாய் இருப்பது நல்லது.
நான் உங்களுக்கு ஒரு சிறிய மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன். அதை இருதயத்தில் ஊன்றி வைத்து ஒவ்வொரு மூச்சிலும் வெளிப்படுத்துங்கள். செய் அல்லது செத்துமடி என்பதுதான் அந்த மந்திரம். இந்தியாவை சுதந்திரம் அடைய வைக்கும் போராட்டத்தில் வென்று காட்ட வேண்டும். இல்லையென்றால் செத்து மடிய வேண்டும். காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் இந்தியா அடிமைப்படுவதைக் காணச் சகிக்காமல் இந்தப் போராட்டத்தில் முழுமூச்சாய் கலந்து கொள்ள வேண்டும். அதுவே உங்கள் கொள்கையாய் இருக்க வேண்டும்.
*****************
5. சே குவேரா ( 1928 – 1967)
கியூபா நாடானது பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சுதந்திரம் பெற்ற பிறகு புரட்சிகர மருத்துவம் பற்றி ஆழச் சிந்தித்தவர் சேகுவேரா.
எல்லோரையும் போல வாழ்வில் வெற்றி பெற வேண்டும். புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு விஞ்ஞானியாக வளர வேண்டும் என்று கனவு கண்டேன். எல்லோரையும் போல் நான் இந்த சமுதாயம் பெற்றெடுத்த பிள்ளையாக அச்சுப் பிசகாமல் அப்படியே இருந்தேன்.
சிலவிதச் சூழ்நிலைகளால் எனது பட்டப்படிப்பிற்குப் பிறகு அமெரிக்கா முழுமையும் சுற்றும்படி நேர்ந்தது. ஒட்டுமொத்த அமெரிக்காவிற்கும் அறிமுகமானேன். முதலில் மாணவனாகவும், பின்னர் மருத்துவராகவும் நான் கண்ட காட்சிகள் பஞ்சம், பசி, நோய் பற்றிய ஆழமான தாக்கத்தை உண்டாக்கின. பொருளாதாரத்தில் நலிந்து போய் பெற்ற குழந்தையைக் காப்பாற்ற முடியாத பெற்றோர்களையும், தொடர்ச்சியான பஞ்சத்தால் தன் குழந்தை இறந்து போவதையும் சாதாரண விபத்தாகக் கடந்து போகும் அமெரிக்கத் தாழ்குடி சமூகத்தின் சராசரித் தந்தைகளையும் பார்த்தேன். அந்தக் கணத்தில் ஒன்று முடிவு செய்தேன். புகழ்பெற்ற விஞ்ஞானியாக மருத்துவ உலகில் சாதிப்பதைப் போல நான் அடைய வேண்டிய லட்சியம் மற்றொன்று இருக்கிறது. நலிந்து போய் வாடும் எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்!
தொழிலாளர்கள், விவசாயிகளிடம் சென்று நாங்கள் இங்குதான் இருக்கிறோம். உங்கள் மீது கருணை பொழியத்தான் வருகை தந்தோம். எங்கள் அறிவியலை உங்களுக்குக் கற்றுத் தந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி சீர்கெட்ட கலாச்சாரத்தை இனங்காட்டி, உங்கள் அறியாமையைப் போக்க வந்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்லக் கூடாது. மாறாக ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மையில், மக்கள் என்ற ஞானப் பெட்டகத்திடம் கற்றுக்கொள்ளும் மனோபாவத்துடன் பவ்வியமாக நெருங்க வேண்டும்.
*********************
இவ்வாறாக முன்பே சொன்னது போல 22 ஆளுமைகளின் சிறப்பாக தமிழ் உரைகள் நூலில் உள்ளன. வரலாற்றில், அரசியலில், சமூக முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.